Friday, October 19, 2012

ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது...!



நேற்றுப் பிற்பகல்  வத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி நானும் எனது நண்பர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.

வத்தளை - கொழும்பு வீதிதான் விமான நிலைய வீதியும் என்பதாலும் பல கிளை வீதிகள் இணையும் பெருந்தெரு என்பதாலும் எப்போதுமே வாகன நெரிசல் இருக்கும் என்பது அத்தெருவால் பயணித்த எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.

மோட்டார் சைக்கிளை நான் ஓட்டிச் சென்றேன். நண்பர் பின்னால் அமர்ந்திருந்தார்.

வத்தளைச் சந்தியைத் தாண்டிய நெரிசலுக்குள் எமக்குப்  பின்னால் சைரன் சத்தம் கேட்டது. அது எந்தப் பக்கத்தால் கேட்கிறது என்பது முதலில் புரியவில்லை.

பின்னால் அமர்ந்திருந்த நண்பரோ, “அம்புலன்ஸ் ஒன்று பின்னால் வருகிறது... நீங்கள் வழி விடுங்கள்...” என்றார்.

அது ஒரு அம்பியுலன்ஸ் வண்டியின் சைரன் ஒலியாக எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்த போதும் ஒதுங்கி வழி விடுவது எல்லா வகையிலும் நல்லது என்று நினைத்து ஓரங்கட்டினேன்.

அச்த வாகன நெரிசலுக்குள் மெதுவாக வாகனங்கள் நகர்ந்த போதும் குறிப்பிட்ட அந்த வாகனம் கிட்டே வந்த போது அது ஒரு முக்கிஸ்தருக்கான பாதுகாப்பு வாகனம் என்பது தெரிந்தது.

கிட்டத்தட்ட பலாத்காரமாக வாகனங்களை ஓரங்கட்டச் சொல்லி அந்த சைரன் வாகனத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வழியெடுத்து நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வாகனத்துக்குப் பின்னால் மற்றொரு வாகனம். அதற்குள்தான் முக்கியஸ்தர் அமர்ந்திருக்க வேண்டும். அவரது வாகனத்தக்குப் பின்னால் இன்னொரு பாதுகாப்பு வாகனம். ஆக மூன்று வாகனங்கள்!

ஒருவாறு பிய்த்துப் பிடுங்கி அவை மூன்றும் தாண்டிச் சென்ற விதம் இங்கிதமானதாகவோ ஏற்றுக் கொள்ளும் விதமாகவோ இல்லை.

முக்கியஸ்தர் ஓர் அமைச்சராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் அவசரமாகச் சென்று பாணின் விலையையோ ஒரு லிற்றர் டீசல், பெற்றோலின் விலையையோ ஒரு ரூபாவாலாவது குறைக்கப் போகிறார் என்றால் பரவாயில்லை. எல்லோரும் வாகனத்தை பாதையோரம் நிறுத்தி விட்டு சல்யூட் அடிக்கலாம்.



அவர் ஒரு பாதுகாப்புத்தர முக்கியஸ்தராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இலங்கைக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடக்கும் யுத்தத்தை நிறுத்தப் போகிறார் என்றால் ஒதுங்கலாம். வாகனத்தை நிறுத்திக் கைதட்டி வாழ்த்துச் சொல்லலாம்.

இவையெதுவும் நிகழாத போது, மக்கள் தங்கள் அவசரத்தில் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க ஓடிக் கொண்டிருக்கையில் இவர்கள் அதைத்தாண்டிச் சென்று எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

காலாதிகாலமாக இப்படித் தாண்டிச் சென்றவர்கள் இந்த நாட்டு மக்களின் வறுமையைத் தீர்க்க முடிந்ததா?  அல்லது இந்த நாட்டை உலகின் அதிசிறந்த தேசமாக மாற்ற முடிந்ததா?

இல்லையென்றால் இவர்களுக்கு என்ன அவசரம்? எதைச் சாதிக்க இவர்கள் தெரு பிளந்து, மக்களை ஒதுக்கி ஓடுகிறார்கள்?

“இப்போதுதான் புலிப் பிரச்சினை நாட்டில் இல்லையே... இவர்கள் மீது பாய்வதற்குத் தற்கொலைதாரிகளும் கிடையாதே... இவர்களை ஏன் இத்தனை பாதுகாப்புடன் இவ்வளவு அவசரமாகக் கொண்டு செல்கிறார்கள்?”

- நண்பர் கேட்டார்!

நான் சொன்னேன்-

”சில வேளை இவர்கள் மக்கள் மீது பாய்ந்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்களாக்கும்!”

இதைக் கேட்டுச் சிரிக்க ஆரம்பித்த நண்பர் அவரிடமிருந்து பிரிந்து வரும் வரைக்கும் சிரித்துக் கொண்டேயிருந்தார்.

ஏன் அப்படிச் சிரித்தார் என்பது எனக்குப் புரியவே இல்லை!



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Lareena said...

மெய்தான்! நாடு இருக்கும் இருப்பில் மக்கள் தங்களின்மேல் பாய்ந்துவிடுவார்கள் என்ற பயம்தான் போலும்! :D

ASHROFF SHIHABDEEN said...

Face boof comments:

Diron Fernando நானும் பலமுறை ஏமாந்திருகிறேன்.. சைரன் சத்தம் கேட்டு அம்புலன்சில் ஐம்புலன்சும் அடங்கிக்கொண்டிருப்பர் எவரேனும் இருக்ககூடும் என்று பயந்து வழிவிட்டால் இந்தக் கும்பல் தான் அனாயாசமாக கடந்து போகும்...:D
October 19 at 11:34am

Razana Manaf ”சில வேளை இவர்கள் மக்கள் மீது பாய்ந்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்களாக்கும்!”
கடந்த பத்தாம் திகதி எனக்கும் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது சேர்.....!!!
October 19 at 11:58am

Mohamed Jawahir maybe, 1. It's a kind of mental disorder suffered by politicians 2. They want to so off how powerful they and an also, 3. if they so off only, people too will vote for them next time.. so it's a promotional campaign for their politics! - in another angle.
October 19 at 8:26pm

Rauf Hazeer இந்த கொடுமைக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துகளை சேர்க்கிற வேலையை செய்தால் நல்லதல்லவா !
October 20 at 9:26am

RoshaNi said...

முக்கியஸ்தர் ஓர் அமைச்சராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் அவசரமாகச் சென்று பாணின் விலையையோ ஒரு லிற்றர் டீசல், பெற்றோலின் விலையையோ ஒரு ரூபாவாலாவது குறைக்கப் போகிறார் என்றால் பரவாயில்லை. எல்லோரும் வாகனத்தை பாதையோரம் நிறுத்தி விட்டு சல்யூட் அடிக்கலாம்.

Sooppper sir!