Friday, November 23, 2012

ஜமீலாக்களும் காஸாக்களும்!



சகோதரி மரியம் ஜமீலாவை நினைவு கூர்தலும் காஸாவுக்கான நமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலுக்குமான இந்த ஒன்று கூடலில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி ஒரு சிற்றுரை வழங்க அழைத்தழைக்காக மீள்பார்வை ஊடக மையத்துக்கு எனது அன்பு கனிந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நட்புப் பட்டியலில் உள்ள ஒரு சகோதரர் முகநூலில் ஒக்டோபர் 31ம் திகதி பின்னிரவில் சகோதரி மர்யம் ஜமீலா அவர்களின் வபாத் செய்தியை ‘மர்யம் ஜமீலா காலமானதாக அறியக்கிடைக்கிறது’ என்கிற விதத்தில் ஆங்கிலத்தில் இரண்டு வரிகளில் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தி உண்மையில் என்னுடைய உறவின் இழப்புச் செய்தியை எதிர்கொண்டதுபோல் ஓர் உணர்வை என்னில் ஏற்படுத்திற்று. என்னுள் பழைய நினைவுகள் சுழல ஆரம்பித்தன. முகநூலின் எனது பக்கத்தில் அவருடைய புகைப்படத்துடன் இணைத்து அவருடைய வபாத் செய்தியையும் அவரைப் பற்றிய சிறிய குறிப்பொன்றையும் இட்டேன். பிறகு அச்செய்தி பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

என்னுடைய 16 அல்லது 17 வயதில்தான் நான் சகோதரி மர்யம் ஜமீலாவைப் பற்றி அறிய வந்தேன். அந்த அறிமுகம் ‘அல்ஹஸனாத்’ சஞ்சிகை மூலமாகக் கிடைத்தது என்று நினைக்கிறேன். இன்றைய நவீன வசதிகள் இல்லாத அக்கால கட்டத்தில் ஓர் இளம் யூதப் பெண்மணி இஸ்லாம் நோக்கி அறிவியல் ரீதியாக ஆகர்ஷிக்கப்பட்டு வந்தது போன்ற தகவல்களை என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது ‘அல்ஹஸனாத்’சஞ்சிகைதான். அக்கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய உணர்வையும் அறிவையும் தெளிவையும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கிய பெரும் பணியை - உன்னதமான பணியை அந்தச் சஞ்சிகை செய்து வந்தது.

தஃலீமுல் குர்ஆன், அல்குர்ஆன், ஹதீஸ், அஹ்காமுஷ்ஷாபிஈ, மௌலூது கிதாபுகள், சாந்திமார்க்கம் என்ற பாட நூல் - ஆகியவற்றுடன் இலங்கை முஸ்லிம் பொதுமகனின் இஸ்லாம் வரையறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் சகோதரி மர்யம் ஜமீலா அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தமையானது முஸ்லிம் பொதுஜனத்துக்கு ஓர் ஆனந்தமான செய்தியாக இருந்தது. படித்தவர்கள், இஸ்லாத்தை மேலும் விஸ்தாரமாக அறிந்து கொள்வதற்கு அத்தகவல்  ஆவலைத் தந்தது. சாதாரண இஸ்லாமியன் தனது மார்க்கத்தையிட்டுப் பெருமை கொள்ளவும் மற்றொருவரோடு உரையாடுகையில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவுமான விடயமாக அது அமைந்திருந்தது.

தொலைத் தூரத் தொடர்புக்கு மாதக் கணக்கில் காத்திருந்த ஒரு காலப்பகுதியில், இஸ்லாமிய தஃவத்தின் வீச்சு வேகமாகச் சென்றடையாத ஒரு காலப்பகுதியில் இஸ்லாத்தின் மகத்துவத்தை அவர் தேடி அடைந்ததும் அவரது வருகையும் தஃவத்தின் பாதையில் ஒரு பாய்ச்சலாக அமைந்தது என்று குறிப்பிடுவதில் தவறு கிடையாது என்று நம்புகிறேன்.

இன்று உலகம் சுருண்டு கைக்குள் வந்து விட்ட நிலையில் தஃவத்தின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் பலநூறு ஜமீலாக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையைத் தேடியடைந்து, சரியான வழி இதுவே என்றுணர்ந்து வருகின்ற ஜமீலாக்களால் இஸ்லாத்தின் சிறப்பு புதிய எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்ற போது பரம்பரை ஜமீலாக்களால் மர்யம் ஜமீலாக்கள் அவமானப் படுத்தப்படுவதை நாம் கவலையுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தன்னைப் பெற்றோர் கற்க விடவில்லை என்பதற்காக, தான் விரும்பியபடி நடக்க சமூகம் அனுமதிக்கவில்லை என்பதற்காக அல்குர்ஆனையும் நபிகளாரையும் கேள்விக்குட்படுத்தும் ஜமீலாக்கள் சிலரை நாம் பார்க்கிறோம். தனது நியாயமான எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புத் தராத தனது குடும்பத்தையும் தனது உறவுகளையும் பழிவாங்குவதானால் இஸ்லாமிய வழிமுறைகளைக் கேவலப்படுத்துவதே சரியானது என்று பெண்களுக்கு இஸ்லாம் வகுத்துள்ள வழிமுறைகளை அலட்சியப்படுத்தும் ஜமீலாக்களையும் நாம் காண்கிறோம்.

இவ்வாறான அனுபவங்களை நாம் எதிர்நோக்கும் போது சகோதரி மர்யம் ஜமீலா முஸ்லிம் உம்மத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் எத்தகையதாக இருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்டமையும் மற்றும் அவர் எழுதிய கட்டுரைகள், நூல்கள் யாவும் நினைவு வருகிற போதும் அவருக்காக நமது கைகளை உயர்த்தி இறைஞ்சவே மனம் துடிக்கிறது.

சகோதரி மர்யம் ஜமீலா அவர்களது வபாத்தாகி ஒரு வாரத்துக்குப் பிறகு அவரைப் பற்றிய ஒரு சிறிய தகவலை இணையத்தில் ஒரு சகோதரர் பதிவிட்டிருந்தார்.

எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் எந்த நாட்டவராக இருந்தாலும் ஆண்களுக்கென இயல்பான சில குணவியல்புகளும் பெண்களுக்கென சில குணவியல்புகளும் உள்ளன.

பொதுவாக ஓர் ஆணின் மனைவியரிடையே சுமுக உறவு நிலவுவது கிடையாது. இது தமிழில் சக்களத்தி சண்டை என்று பயிலப்பட்டு வருகிறது. பொறாமை, விட்டுக் கொடுக்காமை, நான் முதல் - நீ அடுத்தது என்ற தூரப்படுத்தல், கணவனின் சொத்துக்களையும் வருமானத்தையும் பெறுவதில் ஒவ்வொருவருக்குமிடையில் நிலவும் ஒவ்வாமை போன்ற பல காரணங்களால் ஓர் ஆண்மகனின் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரிடையே கலகமும் பிரச்சினைகளும் ஏற்படுவதை நாம் கண்டு வந்திருக்கிறோம்.

சகோதரி மர்யம் ஜமீலா முகம்மத் யூஸூப்கான் சாஹிபின் இரண்டாவது தாரமாக வாழ்ந்திருந்தார். ஏற்கனவே திருமணம் செய்திருக்காத, தனக்கேற்ற ஓர் இளைஞனைத் திருமணம் செய்வதை விடவும் யூஸூப்கான் சாஹிபின் இரண்டாவது மனைவியாக வாழ்வது தனக்கும் தனது இஸ்லாமிய வாழ்வியலுக்கும் மிகவும் பொருத்தமானதும் சிறந்ததுமான தெரிவாக இருக்கும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். அப்படியானால் யூஸூப்கான் சாஹிபின் மனைவிக்கும் இவருக்குமிடையிலான உறவு எப்படியிருந்திருக்கும்?

இணையத்தில் சகோதரி மர்யம் ஜமீலாவின் வபாத்துக்குப் பின்னர் வந்த செய்தி அதைத்தான் சொல்கிறது. சுகவீனமுற்றிருந்த போது தனது கடைசி நாட்களில் தான் வபாத் ஆகினால் சகோதரி ஷப்கா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே தன்னை அடக்கம் செய்யுமாறு சகோதரி மர்யம் ஜமீலா சொன்னதாக அந்தச் செய்தி பேசியது. ஷப்கா யாரெனில் யூஸூப்கான் சாஹிபின் முதலாவது மனைவியாவார்.

ஒரே வீட்டின் மாடியில் சகோதரி மர்யம் ஜமீலாவும் பிள்ளைகளும் அவ்வீட்டின் கீழ்த் தளத்தில் சகோதரி ஷப்காவும் பிள்ளைகளுமாக இறுதி வரை மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்ததாகவும் பிள்ளைகளுக்கிடையில் எவ்விதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஒரே தாயின் பிள்ளைகளைப்போல் வாழ்ந்திருந்ததையும் அந்தத் தகவல் சொன்னது.

தனது கணவரின் முதலாவது மனைவியின் அடக்கஸ்தலத்துக்கு அருகே தன்னுடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த சகோதரி மர;யம் ஜமீலா எவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

சகோதரி மர்யம் ஜமீலாவின் அழகிய இந்த முன்மாதிரிதான் இன்றைய எனது சிற்றுரையின் முக்கிய புள்ளியாகவும் இருக்கிறது.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியதெல்லாம் சகோதரிகள் மர்யம் ஜமீலாவும் ஷப்காவும் கொண்டிருந்த ஒற்றுமையும் உறவும் பற்றியதே.

சகோதரி மர்யம் ஜமீலாவை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் அதே வேளை காஸாவுக்கான நமது ஒருமைப்பாட்டையும் இன்று இந்த நிகழ்வின் மூலம் நாம் வெளிப்படுத்துகின்றோம். இந்த ஒருமைப்பாடானது அமெரிக்காவில் பிறந்து பாக்கிஸ் தானுக்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஒரு கணவரின் இரண்டு மனைவிகளாக வாழ்ந்த இரு சகோதரிகளுக்குமிடையில் நிலவிய இறுகிய பாசத்துக்கொப்பானதே. அதே பாசத்தைப் போன்ற ஒரு ஒரு சகோதர வாஞ்சையுடனும் உடன்பிறப்பு உணர்வுடனும் நாங்கள் எமது சகோதர பூமியான பலஸ்தீனத்தையும் அங்கு வாழ்வுக்காகப் போராடிக் கொண்டி ருக்கும் எங்கள் உறவுகளையும் நினைவு படுத்துகிறோம்.

இந்த நினைவுகூர்தலானது இந்தச் சிறு மண்டபத்துள் நிகழ்ந்த போதும் இது ஆக்கிரமிப்பாளர்களின் அவதானத்துக்குட்படாது என்றோ ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்கும் நிகழ்வு என்றோ நாம் கருதிவிடக்கூடாது. இந்த நிகழ்வு இங்கே குழுமியிருக்கும் எங்களது கருத்தை வெளிப்படுத்துகைக்கான ஒற்றுமையைக் குறிக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நலவையும் கஷ்டத்தையும் நாம் ஒன்றிணைந்து உணர்கிறோம் என்பதையும் ஏனையோருக்கும் உணர்த்துகிறோம் என்பதையும் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.  இந்த நிகழ்வு பற்றிய தகவல் செய்திகளிலும் இணையத்திலும் பகிரப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம் உம்மத் குறித்த ஒருமைப்பாட்டுச் செயல்பாடு ஒன்று நடைபெறுவது முஸ்லிம்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியாக ஏனையோருக்கும் சென்றடைகிறது. இந்த நிகழ்வு முடிந்த பிறகும் செய்திகள் பத்திரிகைகளிலும் இணையத்திலும் வெளிவரும். ஆசிய பசுபிக் பிராந்திய ஸியோனிஸ வலையமைப்பு இந்தத் தகவலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பலஸ்தீனத்திலிருக்கும் காஸா குறித்து நாம் மிகவும் விசனப்படுகிறோம். எழுதுகிறோம், கூடிப் பேசுகிறோம். அவசியப்பட்டால் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகிறோம். காஸாவின் நிலைகுறித்து இன்றைய காலப் பகுதியில் தினமும் ஆகக் குறைந்தது ஒரு முறையாவது அவதானத்தைச் செலுத்தி ஓரளவு தகவல்களைப் பெறுகிறோம். அவலத்தில் வாழும் காஸாவுக்காக நாம் நமது தொழுகைகளில் பிரார்த்திக்கிறோம். தாங்குவதற்குச் சிரமமான செய்திகளை அங்கிருந்து அறியும் போதெல்லாம் நமது மனசு துடிக்கிறது. நம்மையறியாமல் நாம் இறைவனை இறைஞ்சுகிறோம்.

இன்றைய நிலவரத்தின்படி பலஸ்தீன காஸாவில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

ஆனாலும் தமது சொந்த நிலத்தில் வாழும் உரிமைக்கான போராட்டத்தை, இழந்த நிலத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை  அம்மக்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள்.


(மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், சகோ அஷஷெய்க் ரவூப் ஸெய்ன் மற்றும் நான்)

இந்த வேளையில் இன்னும் சில காஸாக்களைப் பற்றி நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.



1990ம் ஆண்டு நமது நாட்டின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட மக்களின் காஸாவைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. இவ்வாறு துரத்தப்பட்ட மக்கள் நாட்டின் பல இடங்களில் எந்தவித ஆதரவுமின்றி வாழ்ந்து வருகிறார;கள். அப்படி அம்மக்கள் வாழ்ந்து வரும் இடங்களும் என்னளவில் காஸாதான். அப்படியொரு காஸா கொழும்பு முகத்துவாரத்தில் இருக்கிறது. சொந்த வாழ்விடத்தை இழந்து வந்து குடியேறிய இவர்கள் வாக்குரிமையும் இல்லாமல் வாழும் மற்றொரு காஸா அது. இன்று வரை எந்த அரசியல்வாதிகளாலும் சமூக ஆர்வலர்களாலும் கண்டு கொள்ளப்படாத, ஊடகவியலாளர்களான பஷீர் அலி, பிரவ்ஸ் முகம்மத் ஆகியோரால்  வெளிக்கொணரப்பட்ட காஸா அது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நடமாடும் காஸா ஒன்று இருக்கிறது. அது ஒவ்வொரு வௌ;ளிக் கிழமையும் ஜூம்ஆப் பள்ளிவாசல்களின் நுழைவிடத்தில் பகல் 12.00 மணியிருந்து  பி.ப. 2.00 மணிவரை உருவாகி மறையும் காஸா. கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண்களும்  கைக்குழந்தைகளுடன் தாய்மாரும் உணவுக்கு வழியற்ற முதியோரும் கையேந்தி நிற்கும் காஸா. இந்த காஸா ரமளான் காலத்தில் ஸக்காத்தும் ஸதக்காவும் தேடி ஊர; ஊராகத் தெருத் தெருவாக அலைவதை நாம் காண்கிறோம்.

நமது கல்வித் துறை ஒரு காஸா. நமது முஸ்லிம் அரசியல் ஒரு காஸா. நமது சில சமூக நிறுவனங்கள் இன்னொரு காஸா. மார;க்க விடயங்களில் சண்டை பிடித்துக் கொள்கைப் போருக்காகப் பொதுத் தளங்களில் தூஷணம் பேசும் இளைஞர;களால் நிறைந்தது மற்றொரு காஸா. இப்படி ஒட்டு மொத்தமாக இலங்கை முஸ்லிம் சமூகமே ஒரு காஸாவாகத்தான் வாழ்க்கை நடாத்தி வருகிறது. பலஸ்தீனத்தின் காஸாவுக்கும் நமது காஸாவுக்குமுள்ள ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் அங்கு யூதன் முஸ்லிம்களைத் துன்புறுத்துகிறான். இங்கு நாங்களே எங்களுக்குள் பொருதிக் கொண்டிருக்கிறோம்.

பள்ளிவாசல்களில் கையேந்தி நிற்கும் தாய்க்குலம் பற்றி நான் நீண்ட காலமாக அவதானம் செலுத்தி வருகிறேன். சில சகோதரர்களோடு இது குறித்துக் கலந்துரையாடிய போது ‘பிரதர் யு ஆர் டொக்கிங் எபவுட் பவர்ட்டி எலிவேஷன்...!” என்று விட்டு வெகு சாதாரணமாக அதைக் கடந்து போனார்கள். நமது சமூகத்திலும் இப்போது படித்தவர்கள் எல்லோரும் அரச சார்பற்ற நிறுவனங்களில் மொழியில் பேசுவதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த ஏழைகளும் பெண்களும் நமது சமூகத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் தனியே ஒரு ஜாதி என்ற வரையறைக்குள் தள்ளிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விடுகிறோம்.

சற்று நுணுகிப் பார்த்தால் அநேகமான இந்தப் பெண்களின் பிரச்சினை காதி நீதிமன்றங்களிலிருந்து நமது திருமண முறைகள் வரை நீண்டு செல்கிறது. நீதித்துறையும் உலமாக்களும் சட்டவியலாளர்களும் இணைந்து முஸ்லிம் தனியார் திருமணச் சட்டத்தோடு பள்ளிவாசல் ரீதியான, அல்லது பிராந்திய ரீதியிலான பைத்துல்மால் நிதியை உருவாக்கி இணைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைப் பெருமளவு நிவர்த்திக்கலாமா என்பது குறித்தும் சிந்தித்துப் பார்க்கலாம்.

நள்ளிரவில் தனக்கும் தனது தாய்க்கும் தந்தைக்குமாக வனொலிகளில் பாட்டுப் போடக் கோரும் சகோதரிகள் பற்றியும் தொலைக்காட்சி நாடகங்களுக்குள் தங்களை இழந்து வரும் சகோதரிகள் பற்றியும் ஆங்காங்கு பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதைக் காண்கிறேன். நபிகளாரை அவமதித்து சினிமாப்படம் வருகிறது. முஸ்லிம்களை அவமதித்து சினிமாப்படம் வருகிறது. நாம் கொதித்து எழுகிறோம். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம். நமது கோபத்தை எதிர்ப்பை வெளிப்படுத்த அதுவும் ஒரு வழிமுறைதான். ஆனால் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதுடன் நமது கடமை முடிந்து விடுகிறதா என்று ஒரு கணம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கை வாழ் முஸ்லிம்களின் கலைகள் எவை? என்று ஒரு கேள்வியைக் கேட்டால் எஞ்சுவது கேள்வி மட்டுமே. ஏராளாமானோர் கவிதையும், கதையும் எழுதுகிறார்கள்தானே என்று பதில் வருமாக இருந்தால் அவை முஸ்லிம்களின் தனிக் கலையாகுமா என்ற மறு கேள்வி எழும். ஒவ்வொரு வீட்டிலும் நூல்களை வாசிப்பவர்கள் தொகை என்ன என்ற இன்னொரு கேள்வி வரும். சரி. தனிக்கலைதான் இல்லையென்றாலும் நமது வரையறைகளை மீறாமல் ஏனைய கலைகளைத் தனித்துவத்துடன் உருவாக்க முடியாதா? இந்தக் கேள்வியை நாம் எழுப்பும் போது உலகப்போக்குத் தெரிந்து கொள்ளாமல் தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் சாந்திமார்க்கப்புத்தக இஸ்லாத்தை நோக்கிப் பலர் ஓடிப்போகிறார்கள், பத்வா தேடுவதற்கு.

நவீன யுத்திகளைக் கொண்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப் படுத்தினால் அதே உத்திகளைக் கையாண்டு பதில் கொடுக்கும் வல்லமையைப் பெற்றவர்கள் இந்த காஸாவிலிருந்தும் ஏன் தோன்றக் கூடாது? இரவில் பாட்டுக்குக் கோரிக்கை விடுக்கும் சகோதரிகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கு முன்னால் தொடர்களுக்காகத் தவமிருக்கும் சகோதரிகளுக்கும் நாம் கொடுக்கும் மாற்றுக் கலை வடிவம் என்ன?

பலஸ்தீனின் காஸாவுக்குள் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழியும் இஸ்ரேலுக்கு எப்போதும் போல் கற்களை வீசிக் கொண்டிருக்காமல் அங்குள்ள போராளிகள் டெல் அவிவ் வரை ஏவுகணை அனுப்பிப் பதில் தருவதைக் கொண்டு இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேடை நாடகங்கள், ஒலிவடிவ நாடகங்கள் ஆகியன மக்களுக்குச் செய்தியைக் கொண்டு சேர்க்கவும் பிரச்சினைகளைப் பிரித்து விளக்கவும் கூடிய ஓர் அற்புதமான கலைவடிவம். ஆகக்குறைந்தது இவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கான வழிவகைகளைப் பற்றித்தானும் நாம் சிந்தித்தோமா என்றால் அதுவும் கிடையாது. வானொலியில் நாடகம் நடித்த பலர் இன்று உயிரோடு இல்லை. நமது பிரச்சினைகளை மையப்படுத்தி நாடகங்களை எழுதுவதற்கும் நடிப்பதற்கும் திறமையுள்ள பல இளைஞர் யுவதிகள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான வழிகாட்டலும் வாய்ப்பும் களமும் அவர்களுக்கு இல்லை.

அவ்வாறான ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும் கூட அதற்கு ஆதரவு தருவதற்கு யாரும் முன்வருவதாகவும் இல்லை. நமது பிரச்சினைகளைப் பேசுவதற்கும் நம்மீது நீட்டப்படும் விரல்களுக்குப் பதில் கொடுப்பதற்கும் நம்மிடமும் சரக்கு இருக்க வேண்டும். அதை எல்லா வடிவங்களுடாகவும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதான் ஒலிபரப்புவதற்கு அனுசரணை வழங்குவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். சமூகப் பிரச்சினை, பல்தேசிய நாட்டில் வாழும் நமது வாழ்வும் நடப்பும் எப்படியிருக்க வேண்டும் என்பது போன்ற தெளிவை வழங்குதல், இளைய கலைஞர்களை நமது வரம்புகளுக்கூடாக வளப்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்கு ஆதரவும் அனுசரணையும் தருவதற்கு யாரும் முன்வருவதாக இல்லை. அதானுக்கு அனுசரணை வழங்கினால் அந்த நன்மை தம்மை நேரடியாகச் சுவர்க்கத்துக்குள் இலகுவாக நுழைய வைத்துவிடும் என்றும் சமூகப் பிரச்சினை பேசுவதால், இஸ்லாமிய வரம்புக்குள் கலைகளை வளர்ப்பதாலெல்லாம் சுவர்க்கத்தை அடைய முடியாது என்றும் நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எல்லா காஸாக்களும் நமது கவனத்துக்கும் கவலைக்கும் உட்பட்வைதான். பலஸ்தீனத்தின் காஸா பற்றிய அதே கரிசனையை நமது காஸா மீதும் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக உழைப்பதற்கு அமைப்புகள் கடந்து, அரசியல் கடந்து, இயக்கங்கள் கடந்து ஒன்றாக வேண்டும். தனிக்குடித்தனம் தவறு அல்ல. ஆனால் பொதுப்படையான ஒரு நிகழ்வில் நாம் ஒன்றிணைவதைப் போல நமது காஸாவின் மீட்சிக்கான செயற்பாடுகளில் நாம் ஒன்றிணையாது போனால் - நமக்குள்ளேயே நாம் அற்ப விடயங்களுக்கு மோதிக் கொண்டு பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்தால் - நமது காஸாவை நம்மால் மீட்க முடியாது போகும். நாமும் முகவரி தொலைந்தவர்களாக மாறிவிடுவோம்.

இந்த ஒற்றுமை எப்படியாக இருக்க வேண்டும் என்பதை நாம் சகோதரி மர்யம் ஜமீலா  சகோதரி ஷப்காவுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தும் புரிந்து கொள்ள முடியும்.

சகோதரிகள் இருவருடன் பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடுந்தாக்குதலால் ஷஹீதுளாகிப்போன நமது உறவுகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் சுவர்க்கத்தை வழங்கப் பிரார்த்திப்போம்.

எனது உரையைப் பலஸ்தீனக் கவிஞன் தௌபீக் ஸையாதின் கவிதை வரிகளோடு நிறைவு செய்கிறேன்.

எனது தோள்களில்
துப்பாக்கியொன்றை
ஒரு போதும் நான் சுமந்ததில்லை
அதன் விசையை
ஒருபோதும் அழுத்தியதுமில்லை

என்னிடம் இருப்பதெல்லாம்
ஒரு புல்லாங்குழலிசை
எனது கனவுகளை வரைவதற்கான
ஒரு தூரிகை
ஒரு மைக்குப்பி என்பனவே

என்னிடம் இருப்பதெல்லாம்
அசையாத நம்பிக்கையும்
துயருற்ற எனது மக்களுக்கான காதலுமே!

(22.11.2012 அன்று மீள்பார்வை ஊடக மையம் கொழும்பு, தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடத்திய “சகோதரி மர்யம் ஜமீலாவை நினைவுகூர்தலும் காஸாவுக்கான ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலும்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் ஆற்றப்பட்ட உரை)
------------------------------------------------------------------------------------------------------------


நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய “மீள்பார்வை” பத்திரிகை ஆசிரியர் சகோ. சிராஜ் மஷ்ஹூர் அவர்கள்.


முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் மௌலவி அல்ஹாஜ் ஏ.எல்.எம். இப்றாஹிம் அவர்கள்


அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் அவரகள்


அஷ்ஷெய்க மிஹ்லார் எம். ரஷீத் அவர்களது கருத்துரையின் போது


அஷ்ஷெய்க் நஜா முகம்மது அவர்களது கருத்துரையின் போது


அஷ்ஷெய்க் இனாமுல்லாஹ் மஸீஹூத்தீன் அவர்களது கருத்துரையின் போது


இஸ்ரேலியரால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் - படக்காட்சியில்


நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சகோ. இன்ஸாப் ஸலாஹூத்தீன்


கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினர்


கலந்துகொண்டோரில் மறு பகுதியினர்


முழு அரங்கும் 

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Lareena said...

கட்டாயம் சொல்லப்பட வேண்டிய செய்திதான். கல்லும் கரையும் விதமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், "இங்குள்ள கற்கள்" இனியாவது கொஞ்சம் கசியக் கூடுமா எனப் பொருத்திருந்து பார்ப்போம்.

ASHROFF SHIHABDEEN said...

முகநூலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
------------------------------------
Razana Manaf

ஒரு சிறிய உரைக்குள் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியுள்ளீர்கள் நிச்சயம் ஒரு சல்யூட் போடத்தான் வேண்டும் உங்களுக்கு...சகோதரி ஜமீலாவின் வாழ்க்கையில் ஆரம்பித்து இன்று முஸ்லீம் சமூகத்துக்கு அவசியம் தேவைப்படும் தீர்வுகள் வரை ஆழமாக அலசியிருக்கும் விதம் அருமையாக உள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்றதும் அவசியமானதுமான ஒரு உரை.

Mubarak M Hassan

" இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நடமாடும் காஸா ஒன்று இருக்கிறது. அது ஒவ்வொரு வௌ;ளிக் கிழமையும் ஜூம்ஆப் பள்ளிவாசல்களின் நுழைவிடத்தில் பகல் 12.00 மணியிருந்து பி.ப. 2.00 மணிவரை உருவாகி மறையும் காஸா. கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண்களும் கைக்குழந்தைகளுடன் தாய்மாரும் உணவுக்கு வழியற்ற முதியோரும் கையேந்தி நிற்கும் காஸா. இந்த காஸா ரமளான் காலத்தில் ஸக்காத்தும் ஸதக்காவும் தேடி ஊர; ஊராகத் தெருத் தெருவாக அலைவதை நாம் காண்கிறோம்.

நமது கல்வித் துறை ஒரு காஸா. நமது முஸ்லிம் அரசியல் ஒரு காஸா. நமது சில சமூக நிறுவனங்கள் இன்னொரு காஸா. மார;க்க விடயங்களில் சண்டை பிடித்துக் கொள்கைப் போருக்காகப் பொதுத் தளங்களில் தூஷணம் பேசும் இளைஞர;களால் நிறைந்தது மற்றொரு காஸா. இப்படி ஒட்டு மொத்தமாக இலங்கை முஸ்லிம் சமூகமே ஒரு காஸாவாகத்தான் வாழ்க்கை நடாத்தி வருகிறது. "சர்வதேச நிலைமைகளை ஒரு மரணித்துனுடாக அலசி, இன்று இலங்கை சமுகம் என்ன லட்ஷணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதனை நாசுக்காக உணர்த்தும் வரிகள்...

Peer Mohamed

சிந்தனையை தூண்டக்கூடிய உரை
சிறப்பான உரை.

saffra said...

"பலஸ்தீனின் காஸாவுக்குள் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழியும் இஸ்ரேலுக்கு எப்போதும் போல் கற்களை வீசிக் கொண்டிருக்காமல் அங்குள்ள போராளிகள் டெல் அவிவ் வரை ஏவுகணை அனுப்பிப் பதில் தருவதைக் கொண்டு இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்." - Very true sir. Who will think this way.