Thursday, January 24, 2013

கமல்ஹாஸன் சுட்ட படங்கள்


நடிப்புச் சிறப்பில் நகைச்சுவை நடிகர்களுக்கு அடுத்ததாகப் பிடித்த நடிகர்களுள் கமல்ஹாஸனும் ஒருவர். “உன்னைப்போல் ஒருவன்” பார்த்த பிறகு அவரைப் பற்றியிருந்த எல்லா மதிப்பீடுகளும் கரைந்து போயின. எல்லாக் கதாநாகர்களும் தீவிரவாதிகளை இறுதியில் தாங்களே முடித்து விடுவார்கள். அதையே அவரும் அப்படத்தில் செய்தார். அப்படத்தை வைத்துச் செய்யப்பட்ட விளம்பரங்களும் அலட்டல்களும் ஓர் ஒப்பற்ற காவியம் போன்ற மனப்பதிவை உண்டாக்கியிருந்தது. படத்தைப் பார்த்த பிறகுதான் இது ஓர் அப்பட்டமான மோசடி என்பது புரிந்தது. கிட்டத்தட்ட புஸ் என்று காத்துக் கூட வராத ஒரு வெடி. நினைத்துச் சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

இன்றைக்கு அவர்தான் மீடியாவி்ல் பேசு பொருள். அவரது படங்கள் வித்தியாசமானவைதாம். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவையும் கூட. ஒரு சிறுபான்மைச் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துப் படம் எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பது அவரது திறமைகளை மழுங்கடிக்கிறது. அர்ஜூனைப்போல, விஜயகாந்தைப்போல, விஜய் போல ஒரு வெத்து வேட்டு நிலைக்குத் தன்னை நகர்த்தி அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

இனி-

அவரது படங்கள் பற்றிய ஒரு இணையப் பதிவை இங்கு தருகிறேன்.

---------------------------------------------------------


நிகழ மறுத்த அற்புதம்


முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான்.

தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில படங்களின் ஊடாகவே அறிந்து கொள்ள முடிகிற ஒரு அவதானிப்பு என்னவெனில், கமல்ஹாஸனின் படங்களைத் தவிர்க்கவே முடியாது என்பதைத்தான். பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களைக் கவனிக்கும் யாராகினும், தமிழ்ப்படங்களில், கமலின் படங்கள் மிகவும் வித்யாசமானவை என்றும், தமிழ்ப் படங்களை, கமல்ஹாஸனின் படங்கள் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன என்றும் ஒரு முடிவுக்கு வருவதை வெகு எளிதாகக் காண முடியும். கமல்ஹாஸனுமே, தனது படங்கள் அப்படிப்பட்ட நோக்கில் எடுக்கப்படுபவைதான் என்று பல பேட்டிகளில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.

ரசிகர்களாகிய நாமுமே, கமல்ஹாஸனின் படங்களை ஒரு கலை நோக்குடனே பாவித்து வந்திருக்கிறோம். கமல் படங்கள் என்றால், அவை முற்றிலும் வணிக நோக்குடன் எடுக்கப்படாமல், ஓரளவுக்கேனும் மாற்று சினிமாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்னும் ஒரு தகவல், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் சினிமா ரசிகர்களிடையே பரப்பப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது. மீடியாவுமே இப்படித்தான் கமலின் படங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது.

ஆனால்….. (இது ஒரு பெரிய ‘ஆனால்’)…

இவை அத்தனைக்கும் கமல் தகுதியுடையவரா?

சுற்றி வளைக்காமல், நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டுவரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்.

இருங்கள். . . கமல் ரசிகர்கள் பொங்கியெழுமுன், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். எனது நோக்கம், கமலைப் பழிப்பதோ அல்லது அவர் மீது அவதூறு சுமத்துவதோ இல்லை. அதற்கு எனக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், சிலகாலமாகவே, தமிழ்த் திரையுலகில் காப்பி அடிப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், அதை முதன்முதலில் பெருவாரியாக ஆரம்பித்து வைத்த நபரைப் பற்றி எழுதினால்தான் பொருத்தம் என்பதால், இக்கட்டுரையை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் மூல காரணம்.

இன்னொரு காரணம் – சில வாரங்கள் முன், ராவணன் வெளிவந்த சமயம், மணிரத்னத்தைத் தமிழ் வலையுலகம் போட்டுத் தாளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் – மணிரத்னம் உலகப் படங்களைச் சுடுகிறார் என்பது. அது உண்மைதான். ஆனால், கமல் அளவு காப்பியடித்தது யாரும் இல்லை என்பதே உண்மை. ஆகவேதான் இக்கட்டுரை.

நான் அவசரப்பட்டு இதைக் கூறவில்லை. இதோ கட்டுரையின் முக்கிய பாகத்தில் அந்த ஆதாரங்களைப் பார்க்கலாம்.

ராஜபார்வை – கமலின் முக்கியப் படமாகக் கருதப்படுகிறது. அவரது நூறாவது படமும் கூட. கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, தரமான படங்களைக் கமல் கொடுக்க ஆரம்பித்ததற்கு இது ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது. படத்தின் கதை, ஒரு குருட்டு வயலினிஸ்ட் பற்றியது. அவனுக்கு அறிமுகமாகும் ஒரு துடிப்பான பெண், அவனது வாழ்க்கையில் கொண்டுவரும் மகிழ்ச்சி.. இப்படிச் செல்கிறது கதை. மிகப்பலரால் பாராட்டப்பெற்ற ஒரு படம் இது.

சரி. இப்பொழுது, Butterflies are Free (1972) என்ற படத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். டான் பேக்கர் என்பவன், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் வாழும், பிறவியிலேயே பார்வையிழந்த நபர். அவனது வீட்டு ஓனரின் மகள், அவனது வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஊட்டி, அதன்பின் அவனைப் பிரிந்து சென்றுவிடுகிறாள். அதன்பின், அவனுக்கு அறிமுகமாகும் மற்றொரு பெண், அவன் குருடன் என்றே அறிந்துகொள்ளாமல், அவனுடன் பழகுகிறாள். தனது சிகரெட்டின் சாம்பலை மேஜை மீது அவன் உதிர்க்கும் ஒரு தருணத்தில் தான் அவன் குருடன் என்று அறிந்துகொள்கிறாள். அதன்பின் இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த டான் பேக்கர், ஒரு இசைக்கலைஞனாக ஆக முயற்சிப்பதுதான்.

இரண்டு படங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் கூட, ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டதுதான் ராஜபார்வை என்று புரிந்துகொள்ள முடியும். இதில் வேறு, ராஜபார்வையின் ‘கதை’ என்று கமலின் பெயர் இருக்கும்.



அதேபோல், ‘The Graduate’ (1967) படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் கிளைமேக்ஸை, ராஜபார்வையின் கிளைமேக்ஸுடன் சற்றே ஒப்பிட்டால்கூட, மிக எளிதாக, ராஜபார்வையின் க்ளைமேக்ஸ் காப்பியடிக்கப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம்.

இதில் ஆரம்பித்த கமலின் காப்பி சரித்திரம், எப்படித் தொடர்கிறது என்று பார்க்கலாம்.

எனக்குள் ஒருவன் – கமல்ஹாஸனின் குரு என்று அவராலேயே குறிப்பிடப்பெறுபவர் , கே. பாலசந்தர். இவருக்கு, ’இயக்குநர் சிகரம்’ என்று ஒரு பட்டம் இருப்பது தெரிந்ததே. ஆனால், இந்த பாலசந்தர், இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ரித்விக் கட்டக்கின் ‘மேகே தக்க தாரா’ படத்தை மொத்தமாக அட்டைக்காப்பி அடித்து, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தை எடுத்து, படத்தின் அத்தனை புகழையும் தனக்கே உரியதாகக் காட்டிக்கொண்டது பல நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இதைப்பற்றிய எனது பழைய பதிவைப் படித்துப் பாருங்கள்.

பாலசந்தர் தயாரிக்க, கமல் நடித்த படமே ‘எனக்குள் ஒருவன்’. படத்தின் கதை: சென்னையில் வாழ்ந்துவரும் ஒரு டிஸ்கோ நடனக்கலைஞனுக்கு, திடீரென பூர்வஜென்ம நினைவு வந்துவிடுகிறது. அதனையடுத்து, பூர்வஜென்மத்தில் தான் வாழ்ந்த இடத்துக்குச் சென்று, தனது பூர்வஜென்ம வாழ்க்கையில் சம்மந்தப்பட்டிருப்பவர்களிடம் பேசி, தனது மரணத்துக்குக் காரணமானவர்களை வெளிப்படுத்துவதே இதன் கதை.

இப்போது, ’The Reincarnation of Peter Proud (1975)’ என்ற ஆங்கிலப்படம். இதிலும், ஹீரோவுக்கு போனஜென்ம நினைவுகள் பொங்கி வருவதால், அந்த நிகழ்வுகள் நடந்த இடத்துக்கு அவன் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் ஒரு பெண்ணின் போன ஜென்மக் கணவன் தான் இந்தப் பீட்டர் ப்ரௌட் என்பது தெரிகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படம்.

இதுதான் எனக்குள் ஒருவனின் கதை என்பது மேலே கொடுத்துள்ள சுருக்கத்தைப் படித்தாலேயே தெரியும்.

இந்திரன் சந்திரன் – கமல் நடித்த நகைச்சுவைப் படம். மேயராக ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு சாதாரண ஆளின் கதை.

’Moon Over Parador (1988)’ என்ற ஆங்கிலப்படத்தின் கதையைக் கவனியுங்கள். ஒரு ஊரில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜாக், அந்த ஊரின் ஜனாதிபதி திடீரென்று இறந்துவிடுவதால், அந்த ஜனாதிபதியின் முக்கிய அடியாளால் அழைக்கப்பட்டு, ஜனாதிபதி போல் வேடம் போட்டு, அதன்பின் மக்களாலேயே நம்பப்பட்டு, இறந்த ஜனாதிபதியின் மனைவியே இவனை நம்பும் அளவு போய், அதன்பின் இந்த சிக்கலிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதே படம்.

இந்திரன் சந்திரன், இந்த மூன் ஓவர் பேரடார் படத்தின் காப்பியா இல்லையா?

அதிலும், இந்த இரு படங்கள் வெளிவந்த ஆண்டுகளைக் கவனியுங்கள். சுடச்சுட காப்பியடிக்கப்பட்டது தெரியவரும்.

வெற்றிவிழா – இந்த விஷயம், நமது நண்பர்கள் பலபேருக்குத் தெரிந்திருக்கும்.. ‘Bourne Identity’ நாவலே தமிழில் வெற்றிவிழாவாக மாறியது.

குணா – இன்றும், கமலின் ரசிகர்களால் மறக்கவியலாத படம் இது. அவ்வளவு அருமையான படம். ஒரு மனநலன் குன்றிய நபர், தனக்கு இன்னொருவரால் கற்பிக்கப்பட்ட ‘அபிராமி’ என்ற கற்பனைப் பெயரின்மீது பைத்தியமாகி, பின் ஒரு பெண்ணை, அபிராமி என்றே நினைத்து, கடத்தி, பின் இருவரும் இறந்துபோவது,குணாவின் கதை.

உலக சினிமா ரசிகர்களுக்கு, பெத்ரோ அல்மதோவார் (Pedro Almodóvar) பற்றித் தெரிந்திருக்கும். மறக்கவியலாத பல அருமையான படங்களை இயக்கியவர். தற்கால உலக சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்.

இவர், 1990ல் இயக்கிய ஒரு ஸ்பானிஷ் படமே, ‘Tie me up tie me down !’. இதன் கதை, வேறொன்றுமில்லை. ’மரீனா’ என்ற ஒரு நடிகை மீது பைத்தியமாக இருக்கும் ரிக்கி என்ற மனநலம் குன்றிய இளைஞன், அவளைக் கடத்தி, சிறை வைத்து, அவளைத் திருமணம் செய்வதற்காகவே இவ்வாறு கடத்தியதாகச் சொல்ல, முதலில் அவனை வெறுத்து, அவனிடமிருந்து தப்பித்து, அதன்பின் அவனால் கவரப்பட்டு, காதலில் விழுந்து, பின் இருவரும் இணைவதே கதை.

குணா – Tie me up tie me down ! படத்தின் அப்பட்டமான காப்பி என்பது இப்போது புரிகிறதா?

மகளிர் மட்டும் – இது, கமல்ஹாஸன் தயாரித்த படம். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கம். ஜொள்ளு மேலதிகாரியால் பாதிக்கப்படும் மூன்று பெண்களைப் பற்றிய கதை.

சரி. அருமையான படம்தான். இப்போது, ‘Nine to Five (1980)’ என்ற படத்தின் கதையைப் பார்ப்போம். தங்களது ஜொள்ளு மேலதிகாரியால் பாதிக்கப்படும் மூன்று பெண்களின் கதை தான் இது. அடடே ! மேலே மகளிர் மட்டும் படத்தின் கதைச் சுருக்கத்தையே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப்போகிறதே !! (ஆச்சரியக்குறி).

நம்மவர் – இன்றும், கமலின் ரசிகர்கள், அவரை அழைக்கும் பெயர்களில் ஒன்றாகவே மாறிப்போன படம் இது. ரவுடிகள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வாத்தியாராக வரும் ஒரு ஆள், அந்த மாணவர்களை மாற்றியமைப்பதே கதை.

To Sir with Love (1967)’ படத்தைப் பார்ப்போம். இது, மிகப் பிரபலமான ஹாலிவுட் கறுப்பின நடிகர் சிட்னி பாய்ட்டியர் (பல இன்னல்களைக் கடந்து வந்து சூப்பர் ஸ்டார் ஆனவர்) நடித்தது. சில ரவுடி மாணவர்கள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வரும் ஒரு வாத்தியாரின் மீது கோபம் கொள்ளும் மாணவர்கள், எதிர்வினை புரிவதும், இதனால் பாதிக்கப்படும் வாத்தியார், தனது பிரத்யேக வழிமுறைகளினால் அவர்களை வழிக்குக் கொணர்வதே கதை. வாத்தியார், மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் படலம் கூட இதில் உண்டு. (கேன்சர் மட்டும் கமலின் கைவண்ணம்).

சதி லீலாவதி – நகைச்சுவை நடிப்பில் கமல் முத்திரை பதித்த படம். கதை என்ன? மனைவி குண்டாக, கவர்ச்சியற்று இருப்பதால், இன்னொரு பெண்ணுடன் பழகும் ஒருவனை, அவனது நண்பன் திருத்துவதே கதை.

She – Devil (1989)’ என்ற படம், இதே கதையோடு வந்திருக்கிறது. கதை? ரூத் என்பவள், ஒரு மிகக்குண்டான பெண். தனது கணவன் பாப்பை அன்புடன் கவனித்துக் கொள்பவள். ஆனால், பாப்புக்கு மனைவி குண்டாக இருப்பது பிடிக்கவில்லை. எனவே, தான் சந்திக்கும் ஒரு எழுத்தாளினியோடு காதல் வசப்பட்டு, அவளுடனே போய்விடுகிறான். மனது நொறுங்கும் அந்த மனைவி, திட்டம் போட்டு பாப்பைத் திருத்துவதே கதை. ஆனால் இதில், நண்பன் கதாபாத்திரம் இல்லை. மூலப்படத்தில் மனைவி செய்த விஷயங்களை, தனக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கமல் நடித்தார்.

அவ்வை சண்முகி – இப்படம், Mrs. doubtfire படத்தின் தழுவல் என்பதுதான் பலரின் எண்ணம். ஆனால், இது ‘Tootsie (1982)’ படத்தின் அட்டைக்காப்பி என்பது, ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறேன். முடிந்தால் டூட்ஸியின் கதையை, மேலே க்ளிக்கிப் படிக்கவும். படத்தைப் பார்த்தால், இன்னும் உத்தமம்.

பஞ்ச தந்திரம் – ஐந்து நண்பர்கள். இடையே ஒரு விலைமாது. குழப்பங்கள்.

இப்போது, ’Very bad things (1988)’ என்ற படம். ஃபிஷர், தனது நான்கு நண்பர்களுடன், திருமணத்துக்கு முந்தைய பேச்சிலர் பார்ட்டியை, லாஸ் வேகாஸில் கொண்டாடுகிறான். அப்போது, போதையில், அங்கு நடனமாடும் பெண்ணைக் கொன்றுவிடுகிறான். இதனை மறைத்து, ஹோட்டல் ரூமில் ஒளித்து வைக்கப்படும் பிணத்தை, அவனது நண்பன் பாய்ட் டிஸ்போஸ் செய்து, அதன்பின் நடக்கும் குழப்பங்களையும் சமாளிக்கிறான். இந்த நண்பர்களில் சிலருக்கு ஏற்படும் நடுக்கத்தால், மெல்ல மெல்ல விஷயம் வெளியே கசிகிறது. ஆனால், ஃபிஷர், ஹோட்டலில் ஒரு விலைமாதுவுடன் ஏற்பட்ட கசமுசாவாக ஒரு பொய்யை ஜோடித்து, அதன்மூலம் கதையைத் திசைதிருப்புகிறான். பின் நடக்கும் குழப்பங்களே கதை.

இது காப்பியா இல்லையா?

தெனாலி – இது, ‘What about Bob’ படத்தின் காப்பி. பாப் என்பவன், பல ஃபோபியாக்களைத் தனக்குள் வைத்திருக்கும் ஒரு பயந்தாங்குள்ளி. லியோ என்ற மருத்துவரிடம் வருகிறான். ஆனால், அப்போது, அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிடுகிறார். பாப்பை லியோவிடம் அனுப்பியது, லியோவின் போட்டி மருத்துவர் ஃபென்ஸ்டர்வால்ட்.

சுற்றுலா சென்ற இடத்துக்கு, பாப், தனது மருத்துவரைத் தேடி வர, கடுப்பாகும் லியோ, பாப்பை ஒரு பஸ்ஸில் ஏற்றி அனுப்ப முயல்கிறார். போகும் பாப், மறுபடி மறுநாள் அங்கேயே வந்துவிடுகிறான். லியோவின் குடும்பத்துக்கு பாப்பை மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால், லியோ பாப்பை வெறுக்கிறார். லியோ கொடுக்கும் தொலைக்காட்சிப் பேட்டியில் கூட, பாப் குறுக்கே வந்துவிடுவதால், பாப்பே பேசிப் பிரபலமாகிவிட, லியோவின் கடுப்பு எகிறுகிறது. அவனை இழுத்துக்கொண்டு ஒரு பைத்தியக்கார விடுதிக்குச் செல்லும் லியோ, அங்கேயே அவனை விட்டுவிட்டு வந்துவிடுகிறார். ஆனால், மறுநாள் அங்கிருந்து அவனை அழைக்கும் நிர்வாகிகள், பாப் சொல்லிய நகைச்சுவைக் கதைகளால் கவரப்பட்டு, அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லி, விடுவித்துவிடுகின்றனர். கடுப்பாகும் லியோ, பாப்பை குண்டுக்கட்டாகக் கடத்தி, காட்டில் விட்டுவிட்டு வர, அதிலிருந்தும் மீண்டுவிடுகிறான் பாப். கடைசியில், லியோவின் ஈகோ, பாப்பினால் எப்படித் திருத்தப்படுகிறது என்பதே கதை. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, தெனாலி இந்த ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி.

அன்பே சிவம் – இதுவும், பல பேருக்குத் தெரிந்திருக்கும். ‘Planes, Trains and Automobiles’ என்ற ஆங்கிலப்படத்தின் புத்திசாலித்தனமான காப்பி. புத்திசாலித்தனம் என்று ஏன் சொன்னேன் எனில், மேல் பார்வைக்கு, இது அப்படித் தெரியாது. ஆனால், ஊன்றிக் கவனித்தால், காப்பியடித்தது தெரியும்.

ஹே ராம் – கமலின் மிகச்சிறந்த படமாக இன்றும் சொல்லப்படும் படம் இது (ஆனால், இப்படத்திலும், வழக்கப்படி தனது இந்துத்துவ ஈடுபாட்டையும், முஸ்லிம் வெறுப்பையும் கமல் வெளிப்படுத்தியிருப்பார் என்பது வேறு விஷயம்).

‘Barabbas (1961)’ என்று ஒரு படம். இது, ஒரு பைபிள் கதை. ஏசுவைச் சிறைபிடிக்கும் அரசு, ஏசு அல்லது பரப்பாஸ் என்ற கைதி – இருவரில் ஒருவரைத்தான் விடுவிக்க முடியும் என்று சொல்ல, மக்கள் தேர்ந்தெடுப்பது பாரப்பாஸை. விளைவாக, ஏசு சிலுவையில் அறையப்படுகிறார். ஏசுவுக்குப் பதிலாகத் தான் ஏன் விடுவிக்கப்பட்டோம் என்ற கேள்வி, பாரப்பாஸை, படம் முழுக்க அலைக்கழிக்கிறது.

இதில், பாரப்பாஸ் ஒரு குருட்டுப் பிச்சைக்காரியை எதிர்கொள்ளும் காட்சி, ஹேராமில் அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டதைக் காணலாம். மட்டுமில்லாமல், சற்றே யோசித்துப்பார்த்தால், காந்திக்குப் பதில் ஏசு, பாரப்பாஸுக்குப் பதில் ராம் என்ற ஒற்றுமையைப் புரிந்துகொள்ளலாம்.

மற்றபடி, நாயகன், தேவர் மகன் (காட்ஃபாதர்), விருமாண்டி (திரைக்கதை உத்தி – ரஷோமோன் & படத்தின் தீம் – Life of David gale) போன்ற படங்களைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இந்த காப்பியடித்த பட்டியலைப் பார்த்தால், கமல் ஒரிஜினலாக நடித்த படங்கள் மிகக்குறைவே என்பது தெரிகிறது. அவரது ஒரிஜினல் கதைகளுக்கு, தசாவதாரம் போன்ற குப்பைகளை உதாரணமாகக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.

இப்பொழுதும் சொல்கிறேன். கமல் எண்பதுகளில் ரஜினியுடன் போட்டிபோட்டு மசாலாப்படங்களில் நடித்தபோது, நான் அவருக்கு ரசிகன் தான். ஆனால், அவர் காப்பியடிக்க ஆரம்பித்து, அதைப்பற்றி நான் தெரிந்துகொண்டவுடன், அவர் மேல் ஒருவித அசூயை ஏற்பட்டுவிட்டது. இந்த அசூயை ஏனெனில், plagiarism என்பது மன்னிக்க முடியாத குற்றம். தன்னை ஒரு அறிவுஜீவியாக, பெரியாரின் வழித்தோன்றலாகக் காண்பித்துக் கொள்ளும் ஒரு மனிதர், இப்படி சரமாரியாகப் பிற படங்களைச் சுட்டுப் படங்கள் எடுத்து, அதனை இவரே சொந்தமாகச் செய்ததுபோல் ஜம்பம் அடித்து (இதில் ஆஸ்கர் ஆஸ்கர் என்ற கூக்குரல் வேறு) விளம்பரப்படுத்துவதைக் கண்டிப்பாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.

இன்னொரு விஷயம்: பொதுவாக, S.A ராஜ்குமார், தேவா போன்றோர், பிற படங்களின் பாடல்களைக் காப்பியடித்தால், நாம் அவர்களுக்கு அளிக்கும் பட்டம் என்ன? ’ஜெராக்ஸ்’ என்பது. ஆனால், மணிரத்னம், கமல்ஹாஸன் போன்றோர் அதையே செய்தால், அதனை Inspiration என்று பூசி மெழுகும் வேலையையும் நாம் தான் செய்கிறோம். இல்லையா?

கட்டுரை நீண்டுவிட்டதால், இத்துடன் முடிக்கிறேன். மீண்டும், நேரம் கிடைத்தால், தொடருவோம்.

பி.கு 1– என்னதான் காப்பியடிப்பதைப் பற்றி நான் எழுதினாலும், நான் ரஜினி ரசிகன்; ஆகவே கமலைத் திட்டுகிறேன்.. கமல் நடிப்புக் கடவுள்.. இத்யாதி ரீதியிலான பின்னூட்டங்கள் வரத்தான் போகின்றன என்பது தெரியும். இருந்தாலும், கமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் இந்தக் காப்பியடிக்கும் வேலையைச் சொல்லாமல் இருப்பது சரியாக இருக்காது என்பதனாலேயே இதனை எழுதினேன்

பி.கு 2 – இக்கட்டுரைக்குப் பெரிதும் உதவிய தளம் – Sen’s Spot. இந்தத் தளத்தில், விடியோ காட்சிகளுடன் ஆதாரங்கள் உள்ளன. நான் கமல் அல்ல என்பதால், ஒரிஜினல் பதிவை இங்கே வெளியிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை
--------------------------------------------------

நன்றி - கருந்தேள்.காம்.
-------------------------------------------------

இந்தப் படங்களைத் தமிழ் உலகுக்கு ஏற்றமாதிரித் தருவதற்கும் ஒரு திறமை வேண்டும். அது கமல்ஹாஸனிடம் இருக்கிறது.





இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

அப்போ, கமல்ஹாஸனின் "மேல்மாடி"யில் "சொந்தச் சரக்கே" இல்லைங்கிறீங்க? அனேகமாய் எல்ல்ல்ல்லாமே "உல்ட்டா"ங்கிறீங்க? :D :D