வருடங்கள் காத்திருந்தோம்
நீ
வருவாய் என்று..
அந்த நாளை
ஆனந்தித்திருக்க
ஆவலுடனிருந்தேன்...
ஆவலுடனிருந்தோம்...
அவர்கள்
உன்னைக் கொன்று வி்ட்டார்கள்...
இலங்கையைக் கவலை தின்கிறது
நான் கதறுகிறேன்..
இப்படியொரு பிற்பகலைச்
சந்திக்க
சாகும் வரை எனக்குச் சம்மதமில்லை!
பாலுண்ணும் வயதில்
உன்னைப் பாலூட்டச் சொன்னது
யார் பிழை?
உன்
பாண் துண்டுக்காக
நீ பாலூட்டினாய்...
நீ சென்ற போது இருந்த
நாடு இப்போது இல்லை!
புதிய கட்டடங்கள், அழகு பாதைகள்
புதிய சட்டங்கள்..
எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன
உனது வீடு மட்டும்
அப்படியே இருக்கிறது
ஓலைக் கூரையோடு -
நிறைவேறாத உனது கனவு போல!
நீ
இங்கே வறுமையிலேயே
செத்துப் போயிருக்கலாம்...
கண்காணா தேசத்தில்
கழுத்தைக் கொடுத்ததை விட!
நம்மிடமும் வசதியுள்ளவர்கள்
இருக்கிறார்கள்...
என்ன செய்ய
உன் கையில் இறந்து போன
குழந்தையின் பெற்றோர் மனசுதான்
அவர்களுக்கும்!
எல்லா இனங்களையும் கொண்ட
அதியுயர் சபை
நாடாளுமன்றம்
உனக்காக ஒரு நிமிடம்
தன் மூச்சை நிறுத்திற்று...
நபிகள் பிறந்த தேசத்தில்
பிறந்தவர்களுக்குக்
கருணை தவறிப் போயிற்று!
ஆனாலும் நீயிருப்பாய்
எங்கள் மனதில் -
நீ மரணத்தைத் தழுவிய தேசத்தை
ஒரு கருப்புப் புள்ளியாய்
ஞாபகப்படுத்திக் கொண்டு..
நமது மாறாத சமூகத்தின்
வறுமையின்
அடையாளமாய்...
கதறுவது நானல்ல -
வறுமை!
எனது கண்களில் வழிவது
கண்ணீரல்ல -
என்னைப் பிழிந்த சாரம்!
அழுவது
உனது தாயும் உறவும்
மட்டுல்ல -
நாங்கள் எல்லோரும்!
கருணையுள்ள இலங்கை!
இரக்கமுள்ள உலகம்!
நீ இழைத்த குற்றத்தை
ஓர் அமெரிக்கப் பெண் இழைத்திருந்தால்?
என்ன செய்ய...
ஏழையாகப் பிறந்து விட்டாய்!
திருகோணமலைக்குக் கூட
தனியே போகத் தெரியாதவள்
நீ...
நீயும் ஒரு குழந்தைதானே..
நீயா கொலை செய்தாய்?
இல்லை...
அவர்கள் உன்னைக்
கொன்று விட்டார்கள்!
(ரிஸானா நபீக் சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண். வறுமைப்பட்ட குடும்பத்தின் தலைப் பிள்ளை. வேலை செய்த வீட்டில் கைக்குழந்தைக்கு புட்டிப் பால் ஊட்டக் குழந்தையின் தாயால் பணிக்கப்பட்டார். பாலருந்திய குழந்தை பால் புரையேறி இறந்து விட்டது. குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் இவரது மரண தண்டனை ரத்தாகும் என்ற முடிவோடு ஏறக்குறைய 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். வயது குறைந்த இவரது வயதை அதிகரித்துத் தொழிலுக்காக அனுப்பிய இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர். உலகளாவிய ரீதியிலும் இலங்கை ஜனாதிபதியாலும் அரசியல்வாதிகளாலும் இவரது மன்னிப்புக்காக வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இறந்த குழந்தையின் பெற்றோர் மன்னிக்க முன்வராத காரணத்தால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டார்.)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
8 comments:
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து சுவனபதவியை வழங்குவானாக....
>பாலுண்ணும் வயதில்
உன்னைப் பாலூட்டச் சொன்னது
யார் பிழை?
உன்
பாண் துண்டுக்காக
நீ பாலூட்டினாய்..
---
வலிக்கிறது இவரது மரணம்.
சகோதரி றிஸானா அவர்களுக்கானக மரண தண்டனை குறித்த ஒரு முஸ்லிமின் நிலைப்பாடு…………………………………………..
சகோதரி றிஸானா அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடக்கம் பல வகையான கருத்துப்பரிமாற்றங்கள் பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அனேக நண்பர்கள் சவுதி அரசு மீதும் அதன் சார்ந்த ஷரீயா நீதிமன்றம் மீதும் தமது ஆவேசத்தை கொட்டித்தீர்க்க முற்படுகன்றனர். எவ்விடியமாக இருந்தாலும் அதை முறையாக அனுகவேண்டும் எனும் இஸ்லாத்தின் ஆரோக்கியமான சிந்தனையை அநேகர் கவனிப்பதில்லை. எடுத்த எடுப்பில் கருத்துகளை கொட்டி தீர்க்க்க் விடுவது என்பது மரபாகிவிட்டது, இஸ்லாத்தின் பார்’வையில் மிகப் பெரும் குற்றமாக ஆகிவிடும் என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.
சகோதரி றிஸானா மீது நிறைவேற்றப்பட்ட தண்டனையானது சவுதியின் ஷரீயா நீதிமன்றத்தின் தீர்பாகும் (இஸ்லாமிய நீதிமன்றம்) குறித்த நீதிமன்றம் எடுத்த எடுப்பில் தீர்ப்பளிக்கவில்லை. பல கட்ட விசாரணைகளுக்கு பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது. சாட்சியங்களும் சந்தர்பங்களும் சகோதரி மீது குற்றம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவே தீர்ப்பு வெளியானது.. குறித்த தண்டனைக்காக மரணதண்டனை விதிக்க்ப்பட்டது. இன்று எம்மில் அதிகமானவர்களுக்கு இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்,அதன் கோட்பாடுகள், விதிமுறைகள் தெறிவதில்லை. இஸ்லாமிய சட்டப்படி மரணதண்டனை இரத்தாக வேண்டுமாயின் அதன் அதிகாரம் சவுதி அரசின் கைகளிளே, அல்லது ஷரீயா நிதிமன்றதிக்கே எவ்வித அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த மரணமான சிசுவின் இரத்த உறவினர்கள் மண்ணித்தால் மாத்திரமே மண்ணிப்பு நிபந்தனைகளின் அடிப்படையளில் வழங்கப்படும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பு…….இப்போது நாம் யாரை எதை விமர்சணம் செய்கிறேம்? இஸ்லாத்தின் தண்டனையையா? அல்லது எதை என்பதை தெளிவாக அடயாளம் காண வேண்டும். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிடுவதற்கு சவுதி மன்னருக்கே அதிகாரமில்லை என்பது அந்நாட்டின் மற்றுமெறு பலமான சட்டம் என்பதையுளும் மறந்துவிடக் கூடாது.
இருப்பினும் சவுதி அரசு குறித்த விமர்சணம் இவ்வாறாதக இருப்பது மிக நன்று, அதாவது மஹ்ரம் என்று செல்லக் கூடிய (ஆண்துணையின்றி) பணிப்பெண்களை எந்த அடிப்படையில் அனுமதிக்கின்ரீர்கள்? இதற்கு ஷரீஅதில் அனுமதியுண்டா? என்பதுவே அந்த விமர்சணம், இது தவிர சகோதரிக்கு வழங்கப்பட்ட தீர்பை குறை காணுவது இஸ்லாமிய சட்டத்தை குறைகாணுவதாக அமைந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறித்த தண்டனைணை இவ்வாறு நோக்குவது சிறந்த்து.
வழங்கப்பட்ட தண்டகனயில் வழங்குனர்கள் தவறிழைத்திருந்தால் அல்லாஹ் போதுமானவன், இல்லை தண்டனை சரியாக இருந்தால் அது பாவமண்ணிப்பாகவும் சகோதரியின் சுவனவாயளுக்கான முதல் படியாக இருக்கும். என்பதுவே ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்க முடியும். என்பதை கவனத்தில் கொண்டு நல்ல விமர்சணம் செய்வோம் அல்லது இச்சப்பவம் எடுத்துறைக்கும் படிப்பினைகள், இதன் உள்ளார்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொள்வேம், அதற்காக முயச்சிகள் செய்வேம்.
குறிப்பாக இஸ்லாத்தின் குற்றவியல் கோட்பாடுகள், அதன் தண்டனைகளை விமர்சணம் செய்கின்ற மாற்றுமத நண்பர்களுக்கு பெரும் சாதகமாக எமது குரல்கள் இருந்துவிடக் கூடாது என்பதுடன் அன்மைக்காலமாக எமது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பெரும்பான்மையின் அழுத்தமும், இஸ்லாத்தைப்பற்றிய தப்பெண்ணமும் முத்தியிருங்கும் இந்நிலையில் எமது நடவடிக்கைகள் பெருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வேம். அல்லாஹ்வே அறிந்தவன். நன்றி ஆபுஹீஸாம் அஸ்ஸிறாஜி
//குறித்த மரணமான சிசுவின் இரத்த உறவினர்கள் மண்ணித்தால் மாத்திரமே மண்ணிப்பு நிபந்தனைகளின் அடிப்படையளில் வழங்கப்படும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பு…//
நடந்தது கொலையாக இருந்தால்தான் மேற்கண்ட முறைமை செல்லுபடியாகும். நடந்தது ஒரு கொலைதான் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை, அத்தகைய மருத்துவ அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, முறைப்படி நிரூபிக்கப்படாத குற்றத்துக்கு, வெறுமனே வற்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாய் வைத்து வழங்கப்பட்ட மரணதண்டனை அநீதியானதே!
அல்லாஹ் நீதியாளன். அவன் அநியாயக்காரர்களை ஒருபோதும் நேசிப்பதில்லை. இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை அறமே/விழுமியமே நீதியை நிலைநாட்டுவதுதான். இங்கு ஷரீஆ என்ற பெயரில் நடத்தப்பட்ட ரிஸானாவின் கொலை மிகத்தெளிவான அநியாயமாகும்.
நடந்தது ஓர் அநியாயம் என்பதைச் சொல்வதற்கு சாதரணப் பொது அறிவே போதுமானதாக இருக்க, தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காக, கோத்திர வெறிபிடித்த சவூதியின் பக்கசார்பான காட்டுச் சட்டத்தை "ஷரீஆ சட்டம்" என்று படாத பாடுபட்டு நிறுவ முயலும் ஒருசில முல்லாக்களின் பேச்சைக் கண்மூடித்தனமாக நம்பி, இதுதான் "இஸ்லாமிய ஷரீஆ சட்டம்" என்றும் அதை விமர்சிக்கக்கூடாது என்றும் ஆளுக்காள் ஃபத்வாக்கள் வழங்க முனைவது வெட்கக்கேடாது.
உம்மத்தன் வஸத் என்று அல்குர்ஆன் வர்ணிக்கும் நடுநிலைச் சமுதாயத்தில், யார் செய்தாலும் தவறு தவறுதான் என்று சொல்லும் நெஞ்சத் துணிவும் நேர்மைத் திறனும் அற்றுப்போனது மிகக் கேவலமானது.
தயவுசெய்து, சவூதியின் சட்டத்தை சவூதி நாட்டுச் சட்டம் என்று சொல்லுங்கள், ஏற்கின்றோம். மாறாக, சவூதிச் சட்டத்தை, 'நீதியையும் நேர்மையையும் அறத்தையுமே உயிர்நாடியாகக் கொண்ட ஷரீஆ சட்டம்' என்று சொல்லி தயவுசெய்து இஸ்லாத்தின் மானத்தை வாங்காதீர்கள்!
கவிதை வரிகளை ஒரே மூச்சாய்ப் படிக்க முடியவில்லை. நீர்த்திரை விழிகளை மறைக்கிறது. தொண்டைக்குள் எதுவோ அடைத்துக் கொள்கிறது. நெஞ்சத்தின் கனம் குறைவதாய் இல்லை. என்றாலும்...
மீண்டும் மீண்டும் படிக்கிறேன், நான்.
சகோதரியே ரிஸானா, அவர்கள் உன்னைக் கொன்றுவிட்டார்கள்தான். ஆனால், நம்மவர்கள் சிலர் "எசமான விசுவாசம் காட்ட", உனக்கு நடந்துவிட்ட அநியாயத்தை நியாயப்படுத்தி உன் ஆன்மாவை மீண்டும் மீண்டும் கொலைசெய்த வண்ணமே இருக்கிறார்களடி. அதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லையடி.
"உன்
பாண் துண்டுக்காக
நீ பாலூட்டினாய்...
இங்கே சிலர்
சவூதிக்காரன் வீசும்
எலும்புத் துண்டுக்காய்
உன் ஆன்மாவைச் சிதைத்து
இஸ்லாத்தை விற்கிறார்களடி
சவூதியின் காட்டுச்சட்டம்
ஷரீஆச் சட்டமாமே
அட! கேப்பைக் கூழில் நெய் வடிகிறது என்றாலும்
நாக்கை நீட்டி நக்குவதற்கு
ஒரு கூட்டம்!"
முகநூல் கருத்து - 1
Fairooz Mahath
வலிக்கிறது...மிகக் கடுமையாக வலிக்கிறது
என் மனைவி பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே
இந்த செய்தியை அறிந்தேன்...அவர்களுடன் கூட பேச முடியவில்லை.
மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.....
அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்பதற்கு முரணாக அல்ல.
அந்த மண்ணில் அல்லாஹ்வின் சட்டம் மனித வாழ்வின் சில பகுதிகளில் மாத்திரமாவது நடைமுறையிலுள்ளது என்பது போற்றத்தக்க விடயம் தான்...
ஆனாலும்..... தீர்ப்பு சரியானதா என்று மனதுக்குள் ஆயிரம் கேள்விப் புயல்கள்..
- 30000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியவாதிகள் ( ரிஸானா போன்றோரும் கிரிமினல் போதைவஸ்து குற்றஞ் சாட்டப் பட்டோரும் இதில் அடங்கவில்லை ) விசாரணையோ முறையான குற்றச்சாட்டோ இன்றி வருடக் கணக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில்.....
- ஒரு கைதி தனக்கு அநீதியாக 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தபோது ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்று கூறியதற்காக தண்டனையை 7 வருடங்களாக்கிய நீதிபதி கூட உள்ள ஒரு நாட்டில்....
- அரச குமாரர்கள் நீதிக்கப்பால் எல்லாப் பாவங்களையும் யூ டியூப் ஆதாரமே வைத்து அரங்கேற்றும் ஒரு நாட்டில்...
இந்தச் சிறுமியின் தண்டனை மூலம் இறை தீர்ப்பின் நீதித்தண்மையை அந்த நாடு உலகுக்கு எடுத்துச் சொல்ல முடிகிறது என்றால்.... மனம் கேட்க மறுக்கிறது.
முகநூல் கருத்து - 2
Zinoofa Ansar
உடம்பின் அனைத்துசெல்களின் உணர்வுகளும் அழுகின்றது...ஏழ்மை அவளைக்கொல்ல வில்லை..மன்னிப்பில்லா வன்னெஞ்சகள் அவளைக்கொன்றது..இரக்கத்தின் ஈரங்கள் காய்ந்து போன அவர்களையும் மன்னிக்கா ஒரு காலம் வாராது போகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்.????வல்ல இறைவன் அவளை பொருந்திக்கொள்வானாக!!அவளை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை அனந்தரக்கொள்ளச்செய்வானாக!!ஆமீன்
முகநூல் கருத்து - 3
Sugan Kanagasabai
திடீரென வந்த எண்ணைவளத்தின் புதுப்பணம் அவர்களை உலகத்தின் மேலானவர்களாக இயங்கவைக்கிறது . மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்களில் டிரான்சிற் எடுப்பதற்காக காத்திருக்கும்போது எல்லோரும் அனுபவித்திருப்போம் ,அவர்கள் கீழ்த்தரமாக எம்மை மதிப்பதை ,நடத்துவதை , ஒரு வெள்ளைக்காரனுக்கு வழங்கும் கூழைக்கும்பிடு ! நமக்கு வழங்கும் அவமானமானப்படுத்தல்கள் .., வேலைக்காரர்களை அவர்கள் எப்படி நடாத்துவார்கள் ,ஆணியும் சித்திரவதையும்தான் ! மிகமோசமான சித்திரவதையாளர்களாக அரபுலகம் மாறிவிட்டது .
Post a Comment