Wednesday, March 6, 2013

பொதுபலசேனாவில் ஓர் அங்கத்துவம்!



இலக்கியத்தைப் பிரதானப்படுத்தியும் சமூகவியல் மற்றும் தெளிவு பெறவேண்டிய விடயங்கள் குறித்துப் பேசுவதற்காகவும் பிரதான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு நானும் இன்னும் இரண்டு சகோதரர்களும் ஒரு கலந்துரையாடலை நடத்தினோம். இந்தக் கலந்துரையாடல் இரண்டு தினங்களில் நடைபெற்றன.

நாங்கள் கலந்துரையாடலில் கவனம் செலுத்திய ஓர் அம்சம் முஸ்லிம் பெண்களின் உடை பற்றியது. பர்தா, நிகாப், புர்கா, ஜில்பாப், ஹிஜாப் என்றெல்லாம் பேசப்படும் உடைகளில் இஸ்லாம் வரையறுக்கும் உடை எவ்வாறானது என்பது பற்றிய தெளிவான, பொதுமக்களை மையப்படுத்திய கலந்துரையாடலைப் பகிரங்கமாக நடத்த வேண்டும் என்று எண்ணினோம். இதற்குக் காரணம் இப்போது இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களில் ஒரு சாரார் முகம் மூடி அணிவதால் ஒரு சிக்கல் தோன்றும் என்று ஓர் உணர்வு எமக்கு இருந்தது.

மொத்த நிகழ்ச்சித் திட்டத்தையும் பற்றிக் கொஞ்சம் மூத்த புத்திஜீவிகளிடம் கலந்துரையாடிய போது அவர்கள் தயக்கம் காட்டினார்கள். 'இந்த விடயங்களை நீங்கள் பேச ஆரம்பித்தால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும்' என்றும் உங்களை 'நூதனவாதிகள்' என்றோ 'வழிதவறியோர்' என்றோ வசைபாடுவது மட்டுமன்றி சில வேளை 'உங்கள் மீது ஜிஹாத் செய்ய வேண்டும் என்றும் கூட ஒரு கூட்டம் கிளம்பும்' என்று எச்சரித்தார்கள்.

என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு நாம் முயன்ற போதும் நிகழ்வை நடத்துவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் எதிர்பார்த்த பிரச்சினை இன்று விஸ்வரூபமெடுத்து நம்முன்னால் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த விடயமாக மூத்த புத்தி ஜீவிகள் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய முஸ்லிம் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன.

இன்றைய முஸ்லிம் எதிர்ப்பு என்பது திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. சிறுபான்மை எதிர்ப்பு என்பது காலாகாலமாக இருந்து வருவதுதான். ஆனால் அந்த எதிர்ப்பும் வெறுப்பும் தூண்டிவிடப்பட ஒருவகையில் நாமும் காரணமாக இருந்திருக்கிறோமோ என்ற ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்புப் புறநகர் ஒன்றில் உள்ள சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பிரதான வீதிக்கு வந்த போது ஒரு சிறிய ட்ரக் வண்டி யூ டேர்ன் எடுத்தது. அந்த ட்ரக் வண்டி சந்தையில் நான் நின்றிருந்த போது இறைச்சிக் கடைக்கு முன்னால் நின்றிருந்தது. இறைச்சிக் கடையில் இறைச்சியை இறக்கி விட்டுப் பிரதான வீதிக்கு வந்து வேகமாக யூ டேர்ன் எடுத்த போது அந்த ட்ரக்கிலிருந்து இரத்தமும் நீரும் கலந்த ஒரு கலவை சலார் என பிரதான தெருவெங்கும் தெறித்துச் சிதறிற்று. அந்த நீர்க் கலவையின் அளவு குறைந்தது ஐந்து கலன்களாவது இருக்கும். இந்தக் காட்சி என்னை என்னவோ செய்தது.

எனது முஸ்லிம் நண்பர் ஒருவரின் வீட்டுக்கருகில் மற்றொரு முஸ்லிம் நபர் பெரியதொரு வீடுகட்டினார். அந்த வீட்டுக்கு அருகே ஒரு பெரும்பான்மை நண்பரின் வீடு. வீடுகட்டிய நபரின் தந்தை பிரதேசத்தின் மிகப் பழைய நபர். எல்லோருடனும் சகஜமாகப் பழகும் போக்குடையவர். புதிய வீட்டுக்கு முன்னால் தெரு இருந்தது. அருகேயிருந்த பெரும்பான்மை நண்பரின் வீட்டுக்கு அருகாமையிலும் ஒழுங்ககை இருந்தது. அதாவது கட்டப்பட்ட வீட்டுக்கு இரண்டு இடங்களால் நுழையலாம். மகன் வீட்டுக்குக் குடிவரும் தினத்துக்கு முன் தினம் தந்தையார் ஒரு மாட்டைக் கொண்டு வந்து அறுத்துப் பகிர்ந்தார். கழிவுகளை பெரும்பான்மை நபரின் வீட்டுக்கு அருகேயுள்ள ஒழுங்கையால் இழுத்து வீசினார். இரண்டு தினங்களாக அந்த ஒழுங்கையில் நாற்றம் அடிக்கத்தொடங்கியது. நாய்கள் எலும்புகளுக்குச் சண்டையிட்டன. அந்தப் பெரும்பான்மை நபர் இந்த விடயத்தையிட்டுக் கவலைப்பட்டு எனது நண்பரிடம் சொல்லியிருந்தார்.

பொதுபலசேனா பிரச்சினை கிளறிய ஆரம்பக் கட்டத்தில் ஒரு மதகுரு 'புதிது புதிதாகப் பள்ளிவாசல் கட்டும் இவர்கள் ஏன் கல்விக்கூடங்களைக் கட்டுவதில்லை... வறியவர்களுக்கு உதவாமல் 50, 100 என்று ஏன் மாடுகளை அறுக்கிறார்கள்' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்தக் குறிப்பை எனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்தேன். பலரும் ஒட்டியும் வெட்டியும் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்கள். அதில் ஒரு பதிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. 'குர்பான் கொடுப்பது முஸ்லிம்களது கடமை. அதை யாரும் தடுக்க முடியாது' என்றவாறு ஒரு கருத்துப் பதியப்பட்டிருந்தது. என்னைப் பொறுத்த அளவில் பல்லின நாடான இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கையில் - இந்த வார்த்தைகளைச் சொல்ல இரண்டே இரண்டு பேருக்கு மாத்திரம்தான் சக்தியுண்டு. ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதி. மற்றவர் இந்த நாட்டின் பிரதம நீதியரசர்.  ஆனால் இந்தக் கருத்தைப் பதிவிட்ட முஸ்லிம் சகோதரர் ஒரு சட்டத்தரணி என்பதுதான் துயரம்.

நாம் எவ்வாறான ஒரு தேசத்தில் வாழ்கிறோம் உன்ற உணர்வு இல்லாமல், நமது சகோதர இனத்தவர் என்ன நினைப்பார்கள் என்ற உணர்வு இல்லாமல் இப்படித்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பொதுபலசேனா முன்வைக்கும் விடயங்கள் பொய்யானவையாக பிழையானவையாகவும் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் சாதாரண முஸ்லிம் ஒருவனுக்குத் தெரியாத வஹாபி, ஸலபி பிரச்சினைகளை முன் வைத்து அவர்கள் பேசுவதன் மூலம் அமைப்பு ரீதியான, பிரிவுகள் ரீதியான உள்குத்துக்களால் ஆளை ஆள் காட்டிக் கொடுக்கும் முஸ்லிம்களாக நாம் மாறியிருக்கிறோம். இன்றைய நிலையில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இயக்க ரீதியான முரண்பாடுகளையும் பிரிவினையையும் ஆளை ஆள் வசைபாடுவதையும்தான் நான் பார்க்கிறேன்.



தங்களது இயக்க நலன்களுக்காக எந்த ஒரு ஷைத்தானுடனும் கைகோர்த்துக் கொண்டு தாமே சிறந்த அமைப்பு, தாமே சொர்க்கத்தை நோக்கிச் செல்பவர்கள் என்ற மயக்கத்தில் திளைத்திருப்பவர்கள் தாம் கைகோர்த்திருக்கும் ஷெய்த்தான் தன்னையும் சேர்த்தே புதைத்து விடும் என்பதை அறியாதது எல்லாவற்றையும் விட பெரிய சோகமும் வேடிக்கையுமாகும்.

சிங்கள உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் ஹலால் பிரச்சினை ஏதோ ஓர் இடத்தில் முடிவுக்கு வந்து விடும். ஆனால் தொடரப்போகும் துயரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது முடியாத கதையாக நீளும் சாத்தியம் இருக்கிறது.

இன்று ஆடை விடயத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதே சரி என்ற ஒரு போராட்ட மனோ நிலை பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. விட்டுக் கொடுப்பது அவமானத்துக்குரியது என்பதான ஒரு தோற்றம் மனங்களில் உருவாகி விட்டது.

உடலை மூடுவதற்கும் முகத்தை மூடுவதற்கும் போராடத் துணிந்து நிற்கும் நமது மனோநிலை மறைக்க மற்றொரு முந்தானையில்லாத ஏழைப் பெண்களைப் பற்றி ஒரு போதும் சிந்திப்பதேயில்லை. இப்படித்தான் இருக்கிறது நமது இஸ்லாம்.

அமைப்பு ரீதியாகப் பிரிந்து நின்று ஆளை ஆள் காட்டிக் கொடுப்பதற்கும் பரந்த தளங்களில் கேவலமான வார்த்தைகளால் விமர்சிப்பதற்கும் நாங்களே சரியானவர்கள் என்று மல்லுக் கட்டுவதற்கும் - பொது பலசேனாவில் ஓர் அங்கத்துவம் பெறுவதற்குமிடையில் பெரிய வித்தியாசம் இல்லை.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: