“'தமிழ்க் கவிதைகளில் புண்ணாக்கு' என்று எனக்குத் தலைப்புத் தரப்பட்டிருக்கிறது. இது ஓர் ஆழமான தலைப்பு. ஏறக்குறைய ஓர் ஆய்வு நூலுக்கான தலைப்பு என்று சொல்லலாம். என்னால் முடிந்தவரை தமிழ்க் கவிதைகளில் புண்ணாக்குப் பற்றிக் குறிப்பிடப்பட்ட தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இத் தலைப்பிலான ஒரு முன்னோடி அறிமுகமாக இதை எடுத்துக் கொள்ளுமாறு இங்கு ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கும் எனது பேராசிரிய நண்பர்களையும் உங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
'தமிழ்க் கவிதைப் புண்ணாக்கு' என்று எனக்குத் தலைப்புத் தராதிருந்தமைக்காக மாநாடு நடத்தும் நண்பர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.”
கடைசி வசனத்தைப் பேராசிரியர் சொன்ன போது சபையிலிருந்து 'கொல்'லென்ற சிரிப்புச் சத்தம் எழுந்தது. அவரது அடுத்த வார்த்தைக்கிடையில் பலர் கசமுசாவெனப் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
“இந்த மாநாட்டின் ஆய்வரங்குக்கான தலைப்புகளை எனது அன்புக்கும் நெஞ்சார்ந்த நேசத்துக்கும் உரியவரும் எனது உள்ளத்தில் உறைந்திருக்கும் முன்னாள் முதுநிலை விரிவுரையாளருமான செவ்வண்ணன் அவர்கள் வழங்கியிருக்கிறார். அவரைப் போன்ற உயரிய தமிழ் அறிஞர்களால் என்னைப் போன்ற பல நூறு கல்விமான்கள் நாட்டில் உருவானார்கள். இவ்வாறான தமிழ் வளர்க்கும் மாநாடுகளில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.”
'பெரிய புண்ணாக்கைச் சின்னப் புண்ணாக்குப் புகழ்ந்து தள்ளுது. அடுத்த சோதினை இருக்குமாக்கும்' என்று சபையில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் மற்றவன் காதில் குசுகுசுத்தான்.
“முதலில் புண்ணாக்கு என்பது என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். புண்ணாக்கு என்பதன் சரியான வடிவம் பிண்ணாக்கு என்பதாகும். பிண்ணாக்கை நமது புண்ணாக்குகள் பேசிப்பேசி புண்ணாக்காக மாற்றி விட்டார்கள்.
எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பின் எஞ்சும் சக்கைப் பொருள் புண்ணாக்கு எனப்படும். புண்ணாக்கு மூன்று வகைப்படுகிறது. தேங்காய்ப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவையே அவை மூன்றுமாம். தேங்காய், கடலை, எள்ளு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெயும் கடலையிலிருந்து கடலை எண்ணெயும் எள்ளிலிருந்து நல்லெண்ணையும் பெறப்படுகிறது. இவற்றின் சக்கையாக எஞ்சுவது புண்ணாக்கு. பொதுவாக புண்ணாக்கு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சங்க கால, சங்கமருவிய கால, பல்லவர் கால இலக்கியங்களில் புண்ணாக்குக் கிடையாது. அதாவது நமது பழந் தமிழ் இலக்கியங்களில் ஓர் இடத்திலாவது புண்ணாக்கு என்ற பதத்தை நமது புலவர்கள் யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுரைக்காகவும் உரைக்காகவும் பல இலக்கியங்களைக் கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு தேடினேன். கிடைக்கவேயில்லை. கண்ணில் விட்டது எந்த எண்ணெய் என்று கேட்க வேண்டாம்.” (சபையில் மறுபடி சிரிப்பு)
“பாரதிக்குப் பிறகு பலர் புண்ணாக்கைப் பாடியிருக்கிறார்கள். சற்றுத் தெளிவாக அதைச் சொல்ல வேண்டுமாயின் முன் நவீனத்துவ, பின் நவீனத்துவ காலக் கவிதைகளில் ஏராளமாகப் புண்ணாக்குக் கிடைக்கிறது. மரபுக் கவிதைகளில் புண்ணாக்கு விரவிக் கிடப்பதாக பலரும் அவ்வப்போது எழுதும் கட்டுரைகளில் படித்து வந்திருக்கிறேன்.
ஓர் ஆய்வுக் கட்டுரையையோ ஒரு உரையையோ நான் தயார் செய்ய அமர்ந்தால் நான் நொறுக்குத் தீனி உண்பது வழக்கம். இந்த உரைக்காக நான் தயாராகும் வேளை எனது சின்ன மகனிடம் ஒரு பருப்பு வடை வாங்கி வருமாறு கடைக்கு அனுப்பினேன். வடையை உண்பதற்காக அதைச் சுற்றியிருந்த தாளைப் பிரித்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தத் தாளில் புண்ணாக்குப் பற்றிக் கவிதை வரிகள் இரண்டிருந்தன. அது ஒரு சஞ்சிகையில் கிழிக்கப்பட்ட தாள். தாறுமாறாக அந்தத் தாள் கிழிக்கப்பட்டிருந்ததால் அதன் அடுத்த துண்டு கடையில் இருக்கலாம் என நினைத்து அவசர அவசரமாகக் கடைக்குச் சென்று விசாரித்தேன். எனது மகன் வடை வாங்கிய அடுத்த நிமிடத்தில் இன்னொரு நபருக்கு இரண்டு வடைகள் சுற்றிக் கொடுத்ததாகக் கடைக்காரர் சொன்னார். அவர் பதில் சொன்ன போது 'இரண்டு' என்ற சொல்லில் அழுத்திச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.
ஒரு பேராசிரியரான எனக்கு வால் கிடைத்தால் போதாதா? அத்துண்டை எடுத்துப் பார்வையைச் செலுத்தினேன். அதில் பின்வரும் சொற்கள் இருந்தன. புலவர் பேத்தை, மகன் நீ, கடனைத் திருப்பிக் கேட்டு, வறுமையில் உழன்ற ஆகிய சொற்களுடன் 'எதிரி வந்தால் புண்ணாக்கு - கதிரில் குருவி சுண்ணாக்கு' என்ற கவிதை வரிகளும் இருந்தன.
கவிஞர் காத்து வாயனைப் போல் புலவர் பேத்தை வாயன் என்று ஒருவர் இருந்திருக்கிறார். வறுமையில் வாடிய புலவர் யாரிடமோ கடன் பட்டிருக்கிறார். கடனைத் திருப்பிக் கேட்க வந்தவனைத் தாக்குமாறு புலவர் மகனைக் கேட்டுக் கொள்கிறார். அதாவது இந்த இடத்தில் புண்ணாக்கு என்பது புண்படுத்து என்கிற அர்த்தத்தில் வருவதை நாம் காண்கிறோம். புலவர்கள் ஒரு சொல்லில் பல பொருள் கோடுவார்கள். எனவே 'எதிரி வந்தால் புண்ணாக்கு' என்ற அர்த்தத்தில் புலவர் சொல்லியிருக்கிறார். இந்தக் கவியடியை யுத்தம் நடக்கும் போது நாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டவும் பயன்படுத்தலாம் என்பது வெள்ளிடை மலை.
இந்தக் கவியடியை மற்றொரு நாட்டுடன் யுத்தம் புரியும் எந்தவொரு நாட்டு மக்களும் பயன்படுத்த முடியும் என்பதால் கவிஞர் சர்வதேச தரத்தைத் தொட்டு விடுகிறார். அதேவேளை இச்சொல் மற்றொரு பொருளையும் குறிக்கிறது என்பதை மேல் நாட்டார் அறிய வருகையில் அவர்கள் தமிழ் மொழியின் மேன்மை குறித்துச் சிலிர்ப்படைய நேரிடும் என்பது நமக்கெல்லாம் நிறைந்த பெருமையாகும். அதே போல பிற நாட்டார் புண்ணாக்குப் பற்றி அறிந்து கொள்ளவும் வழியேற்படும்.
அடுத்த வரி நமக்கு அவசியம் இல்லையெனினும் அதன் மூலம் நாம் புரிந்து கொள்வது யாதெனில் விளைந்திருக்கும் வேளாண்மைக் கதிரில் குருவிகள் உட்கார்ந்தால் அத்தனையையும் கொறித்து விட்டுப் போய்விடும். குருவிகள் எப்போதும் வயலுக்குப் பாட்டம் பாட்டமாகவே வரும். அப்படி குருவிகள் வரும் போது சுண்ணக் கல் எடுத்து வீசு என்பதையே 'சுண்ணாக்கு' என்பதன் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார். அதற்கு ஏன் சுண்ணாக்கு என்று சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. புலவர்கள் அப்படித்தான். கவிதைக்கு ஏற்றவாறு தமிழைப் பயன்படுத்துவார்கள்.
இந்தக் கவிஞர் வாழ்ந்த காலப் பகுதி நமக்குத் தெரியவில்லை. இருந்தும் இவரது கவிதையின் மூலம் இவர் வயல் சார்ந்ததும் சுண்ணக் கல் அதிகமாகக் கிடைக்கக் கூடியதுமான பிரதேசத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகின்றது. சுண்ணக் கல்லால் குருவி துரத்தும் படி புலவர் சொல்லுவதைக் கொண்டு விவசாயத்துக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாத காலத்தில் அவர் வாழ்ந்திருக்கலாம் என்பது எனது முடிபு. இது அறுதியானதல்ல என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
1949ல் ஒரு பெரு வெள்ளம் கிழக்கிலே ஏற்பட்டுப் பெரும் அழிவுகள் நடந்திருக்கின்றன. இந்தச் சம்பவம் ஒரு மழைக் காவியத்தில் முற்று முழுதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. மாசாலப் புலவர் இயற்றிய இந்தக் காவியம் வெளி உலகுக்குத் தெரியாமல் பலகாலம் இருந்து வந்துள்ளது. இப்புலவரைப் பற்றி முதலில் வெளிக் கொணர்ந்தவர் கவிஞர் வவ்வாலு அவர்கள். கவிஞர் வவ்வாலு மாசாலப் புலவர் பற்றிய வாய்மொழித் தகவல்களைக் கொண்டு ஒரு கட்டுரையை நீண்ட காலத்துக்கு முன்னர் எழுதியிருந்தார்.
பின்னாளில் கவிஞர் சன்னாசி அவர்கள் நடத்திய இலக்கிய விழாவில் இப்புலவரின் மழைக்காவியம் முழுதாக வெளியிடப்பட்டது. இக்காவியம் பாடியவர் மசாலாப் புலவர் அல்ல, மஸ்அலாப் புலவர் என்று கவிஞர் சன்னாசி தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதோடு காவிய நூலின் அட்டையிலும் மஸ்அலாப் புலவர் பாடியது என்றே குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறு நூல் வெளிவந்ததைத் தொடர்ந்து இரண்டு கவிஞர்களும் ஆள்மாறி ஆள் சஞ்சிகைகளில் சண்டையிடுவது வழக்கமாகிப் போனது சுவாரசியமான விடயம்.
மசாலா என்பதும் சரி, மஸ் அலா என்று சொல்வதும் சரி. இரண்டுமே ஒரு கருத்தைத்தான் குறிக்கிறது. எனவே எப்படி எழுதினாலும் சரியே என்பது கவிஞர் வவ்வாலு அவர்களது வாதம். சரியான சொல் மஸ்அலா என்பதுதான். அதை ஏன் மசாலா என்று எழுத வேண்டும்? இலக்கியம் என்பது கறி மசாலாவா அல்லது கொத்து மசாலாவா என்று என்று கவிஞர் சன்னாசி கேட்டதைத் தொடர்ந்து பிரச்சினை ஆரம்பமாகி விட்டது.
அவருக்கு இலக்கியம் பற்றி ஆய்வதற்கும் பேசுவதற்கும் இயலும் என்று ஏற்றுக் கொள்ளும் கவிஞர் சன்னாசி, வவ்வாலு ஒரு கவிஞரே அல்ல, வேண்டுமானால் கவிஞ்ச்சர் என்று சொல்லலாம் என்று சொல்ல, வவ்வாலுவோ, இவருக்கு மரபு இலக்கியத்தைத் தவிர இலக்கியத்தில் வேறு எதுவும் தெரியாது என்று எழுதினார். வவ்வாலுவைக் கவிஞ்ச்சர் என்று சொன்னது சரியாது என்று ஒரு சாராரும் பிழை என்று இன்னொரு சாராரும் இப்போது விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்குள் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. கருத்துச் சொல்லப் புகுந்தால் நானும் நாறிப் போகலாம்.
கவிஞர் சன்னாசி வெளியிட்ட மழைக்காவியத்தில் ஒரு பாட்டு வருகிறது. அதில் பின்வருமாறு புண்ணாக்குப் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு நகரத் தெருவெல்லாம் சீறியது வெள்ளம்
சீரான பல பொருட்கள் மிதந்து வரக் கண்டோம்
பருப்புவகை, பப்படமும் பால்மாவும் மற்றும்
பணியாரம் சிதைந்தது போல் புண்ணாக்கும் கண்டோம்.
புலவரின் மொழி மிக இலகுவானது. மிகத் தெளிவாக எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியது. அவரது காவியம் ஓசையுடனானது. வானொலி, தொலைக் காட்சி போன்ற நவீன சாதனங்கள் இல்லாத அந்தக் காலங்களில் பொழுது போக்காக மக்கள் இவ்வாறான காவியங்களைப் பாடி வந்திருக்கிறார்கள்.
ஏற்பட்ட வெள்ளத்தில் பல பொருட்கள் மிதந்து வந்ததைக் குறிப்பிடும் புலவர் சிதைந்த பணியாரம் போல புண்ணாக்குத் துண்டுகள் மிதந்து வந்தன என்று சொல்கிறார். அக்காலங்களில் செக்குகள் மூலம் எண்ணெய் உற்பத்தி செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு. அப்பிராந்தியத்தில் அதிக தென்னை மரங்கள் இருந்தன. மக்கள் தொகை இன்றையைப் போல் அதிகம் இல்லை. எனவே வீடுகளிலும் கூட எண்ணெய் தயாரித்திருந்க்கிறார்கள். புண்ணாக்குச் சாதாரணமாக எல்லாக் கடைகளிலும் விற்பனையில் இருந்திருக்க வேண்டும். இதனால்தான் நகரத்து வெள்ள நீரில் புண்ணாக்கு மிதந்து வந்திருக்கிறது.
1950க்கும் 1970க்குமிடையில் தமிழக் கவிதைக்குப் பங்களிப்பு நல்கிய புலவர்கள், கவிஞர்கள் பலர் உள்ளனர். இக்காலப் பிரிவில் தமிழ்க் கவியியற்றிய சில புலவர்களின் எழுத்துக்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஏனையோரின் பாடல்களில் கவிதைகளில் புண்ணாக்கு வந்திருப்பதை என்னால் காண முடியவில்லை. அப்படி இருப்பதாகக் காண்போர் எனக்குத் தெரியப்படுத்தி உதவினால் இத்தலைப்பில் நான் எழுத நினைத்திருக்கும் நூலுக்குப் பேருதவியாக அமையும்.
70களுக்குப் பின்னர் மரபுக்காரர்களுக்கும் புதுக்கவிதைக்காரர்களுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமாகிறது. பொருட் செறிவுடன் நூற்றுக்கு நூறு அதி உன்னதமான மரபுக் கவிதைகள் படைக்கப்படவில்லை என்ற போதும் ஓசை பிறழாமல் சந்தம் சறுக்காமல் அவை அமைந்திருந்தன என்பது நோக்கற்பாலது.
புதுக் கவிதை மீதான யுத்தத்தில் முதல் அஸ்திரத்தை எய்தவர்கள் மரபுக் கவிதையாளர்களே. புதுக் கவிதையானது கவிதையே அல்ல என்றும் தமிழுக்கு நேர்ந்துள்ள அவலம் என்றும் அவர்கள் கருதினார்கள். புதுக் கவிதையாளர்களில் அநேகர் இளைஞர்களாயிருந்தனர். இன்றே புரட்சி தோன்றி உலகம் உடனடி மாற்றம் பெற்று விடவேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் ஓர் அணி இன்னொரு அணியைத் தாக்குவதற்குப் புண்ணாக்கு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதை ஆங்காங்கு காண முடிகிறது.
வில் வளைக்கத் தெரியாதான் விறகு கொண்டு
வித்தை செய்ய விளையுமொரு வீண் வேலைபோல்
மல் யுத்தம் அறியாதான் எழுந்து நின்று
மாட்டுடைய வால் முறுக்கிக் காட்டினாற் போல்
புல் அனைய மேனியர்கள் போர்க்களத்தே
போய் நின்று புஜ பலத்தைக் காட்டுமாப்போல்
சொல்லணையக் கவி செய்யத் தெரியாக் கூட்டம்
சொதப்புகிற புதுக் கவிதை கவிதையாமோ?
இவ்வாறு கவிஞர் கஞ்சுகுடியான் புதுக் கவிதையைப் பொறுத்துக் கொள்ளாமற் பாடிய போது புதுக் கவிதையாளர்கள் பலர் வெகுண்டெழுந்தனர். கவிஞர் கஞ்சுகுடியானுக்குப் பதிலடியைப் புதுக் கவிதையிலேயே கொடுத்தார்கள். அதில் ஒரு கவிதைதான் நமது தலைப்புக்குள் வருகிறது.
காலாதிகாலமாகக்
கால் நீட்டி அமர்ந்து
புகழ் தமிழில்
நீங்கள்
புண்ணாக்குப் பிசைந்தீர்கள்
மானுட உயர்வுக்காய்
மணித் தமிழை
நாங்கள்
துப்பாக்கியாய் நீட்டத்
துணிந்தோம்
இந்தக் கவிதையை எழுதியவர் ஈழத்துப் பேன் அவர்கள். ஈழத்துப் பேன் அவர்கள் குறிப்பிட்ட அளவு கவிதைகளையே எழுதியிருக்கிறார். அக்கால கட்டத்தில் புதுக் கவிதை படைத்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர். பலரால் மறக்கப்பட்டவர்.
வெறும் அழகியலையும் பெண்களையும் பாடிக் கொண்டிருந்த மரபுக் கவிஞர்களை அவர் புண்ணாக்குப் பிசைந்தவர்கள் என்று காட்டமாய்ப் பதிலளித்தார். மரபுக் கவிதை, புதுக் கவிதைப் பிரச்சினையில் பல நூறு கவிதைகளில் புண்ணாக்கு இருந்தது. எல்லாக் கவிதைகளையும் எடுத்துக் காட்டுவது சாத்தியப்படாது என்பதால் ஒன்றை மட்டும் எடுத்தாண்டேன். இதே காலப் பிரிவில் படைக்கப்பட்ட பேச்சோசைக் கவிதைகளில் எனது அறிவுக்கு எட்டிய வரை புண்ணாக்கு இருந்தில்லை.
1990ம் ஆண்டுக்குப் பிறகான காலம் நவீன கவிதைகளின் காலமாகும். நவீன கவிதைகளில் ஆரம்பமாகி பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம் வரை வந்து இன்று நிலை கொண்டிருக்கிறது. கவிதை இனிமேல் எங்கு போகும் என்று திக்குமுக்காடிக் கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது. எல்லாக் காலங்களையும் விட நவீன கவிதைகளிலேயே புண்ணாக்குக் கவிதைகள் அதிகம். அப்படி அதிகமாக இருந்த போதும் இன்று ஓர் உதாரணத்தை மட்டுமே உங்கள் கவனத்துக்குத் தருகிறேன். வெளிவரவுள்ள எனது நூலில் கூடியவரை புண்ணாக்குக் கவிதை வரிகளையும் அதை எழுதியோர் பட்டியலையும் தர விழைகிறேன்.
நவீன கவிஞர்களில் கவிஞர் சால்வை வேந்தன், ஒரு முக்கியமான கவிஞராக ஒரு குழுவினரால் போற்றப்படுகிறார். அவரது கவிதைகளில் ஒன்றான 'திண்ணையில் பேண்ட கோழி' என்ற கவிதை இவ்வாறு ஆரம்பமாகிறது.
திண்ணை நடுவே
பேண்டு விட்டுப் போகிறாய் கோழி
புண்ணாக்குக் கரைசலைப் போல்
என்னை
அள்ளச் சொல்கிறாயா
உன்னை
அறுக்கச் சொல்கிறாயா
இந்தக் கவிதையில் கோழியின் மலம் புண்ணாக்குக் கரைசலைப் போல் இருப்பதாக உவமிக்கிறார் கவிஞர். இக்கவிஞருக்கு புண்ணாக்குப் பற்றி நன்கு அறிவு இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் நமக்குப் புரியக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறும் உன்னதமான உவமானங்களால் மெய் சிலிர்ப்போர் பலர் உள்ளனர் என்பதும் கவனத்துக்குரியது....”
000000
இந்த வேளையில் மணி ஒலிக்கிறது. அரங்கத் தலைவர், 'உங்களது நேரம் முடிந்து விட்டது' என்று பேராசிரியருக்குச் சொன்னார். பேராசிரியர் திரும்பி அரங்கின் நடுவில் அமர்ந்திருந்த தலைவரை ஒரு முறை கோபமாகப் பார்த்தார்.
பேராசிரியரின் கோபத்துக்குக் காரணம் இருக்கிறது. ஆய்வரங்குக்குத் தலைவராக இருக்கும் கலாநிதி, பேராசிரியரை விட வயதில் குறைந்தவர். பல்கலைக் கழகத்தில் பேராசியரிருக்கு ஜூனியராக இருந்தவர். தனது படிப்பில் முன்னேறி இன்று கலாநிதியாக உயர்ந்து விட்டார். பேராசியர் மூத்தவராக இருந்த போதும் அவருக்கு ஆய்வரங்குத் தலைமை வழங்கப்படாமல் வயதில் குறைந்தவரான கலாநிதிக்கு வழங்கப்பட்டதனால் கோபம் பேராசிரியருக்கு. அந்த உறுத்தலில் இருந்தவருக்கு மணி ஒலித்து நேர ஞாபகமூட்டப்பட்டது பிடிக்கவில்லை.
மணியையும் தலைவரின் குரலையும் பொருட்படுத்தாமல் பேராசிரியர் தனது உரையைத் தொடர்ந்தார்.
இதற்கிடையில் சினிமாப் பாடல்களும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும் என்று கருதுகிறேன். கடந்த கால சினிமாப் பாடல்கள் இலக்கியத் தரம் மிக்கவை என்பதில் சந்தேகம் கிடையாது. இப்போது வரும் சினிமாப் பாடல்கள் அநேகமானவை கேட்கச் சகிக்காதவைதாம். ஆனாலும் புதிய பாடல்களிலும் கூட நல்ல பாடல்கள் இருக்கவே செய்கின்றன.
“... நமது தலைப்புக்கு உட்பட்ட வகையில் ஒரு பாடல் இருக்கிறது. என் ராசாவின் மனசுல என்று ஒரு திரைப்படம். ராஜ்கிரண் நடிச்சது என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் வரும் கோஷ்டிப் பாடல் இது.
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்புக் கணக்கு
அட கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப என்னால மனக் கணக்கு
பேராசிரியர் தலைவரைத் திரும்பிப் பார்த்தபடி 'அட கிறுக்கு உனக்கு இருக்கு... இப்ப என்னால மனக் கணக்கு' என்ற வசனத்தை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொண்டிருக்கையில் தலைவர் மீண்டும் மணியை அடித்து, 'உங்களது நேரம் முடிந்து விட்டது...' என்றார்.
கோபத்துடன் தலைவரைப் பார்த்த பேராசிரியர் பேச்சை முடிக்காமல் தான் பேசக் கொண்டு வந்திருந்த துண்டு துணிகளை அள்ளிக் கொண்டு ஆசனத்தில் அமர்ந்தார்.
தலைவராயிருந்த கலாநிதி அடுத்த பேச்சாளரைத் தனது பேச்சை ஆரம்பிக்கப் பணித்தார். கையினால் தனக்கு முன்னாலிருந்த மைக்கைப் பொத்தியபடி பக்கத்தில் வந்து அமர்ந்த பேராசிரியரைத் திருப்பிப் பார்த்து 'நேரத்துக்கு முடிக்கவில்லையென்றால் கஷ்டம்' என்றார்.
ஏற்கனவே சூட்டில் இருந்த பேராசிரியர் தலைவருக்கு அருகில் கோபத்துடன் உடலைச் சாய்த்த வேகத்தில் தலைவர் மைக்கை மூடியிருந்த கையை எடுத்து விலக, பேராசிரியர் தலைவரைப் பார்த்துப் 'போடா புண்ணாக்கு!' என்றார்.
நன்றி - கலைமுகம்
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment