Sunday, May 5, 2013

செம்மறி ஆடுகள்!இலங்கையில் இளம்பிள்ளைவாதம் என்கின்ற போலியோ வைத் தடுப்பதில் வெற்றி எய்தப்பட்டுள்ளதை அவ்வப்போது கிடைக்கும் தகவல்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே தினத்தில் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் சிறாருக்கும் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். சர்வதேச விமான நிலையங்களில்கூட இம் மருந்து வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து டாக்டர் (கவிஞர்) தாஸிம் அகமதுவைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது இம்மருந்து கொடுக்கப்பட்ட நாடுகளில் காலாவதியான மருந்துகள் பாவிக்கப் பட்ட இடங்கள் தவிர மற்றப்படி 99.5 சதவீத வெற்றிதான் என்று தெரிவித்தார். செய்தி சந்தோஷமளிக்கக் கூடியதுதான்.

இன்று இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காண்பது அரிதாகியிருக்கிறதே தவிர ஓரு காலையோ இரண்டு கால்களையுமோ இழந்தவர்களைக் காண்பதற்கு முடியுமாயிருக்கிறது. இதில் சிறுவர் முதற் கொண்டு முதியோர் வரை அடங்குகின்றனர். இவர்களது கால்களைக் கவர்ந்து சென்றவை நம் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாகப் புதைக்கப்பட்டிருக்கும் மிதி வெடிகள்.

போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட காலப் பிரிவில் மிதி வெடிகளை அகற்றுவதற்காக வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த குழுவில் ஒருவரைத் தற்செயலாக நான் சந்திக்க நேர்ந்தது. அனுவங்களைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்:- 'ஒவ்வொரு மிதி வெடியையும் அடையாளங் கண்டு அகற்றும் போதும் ஓர் உயிரைக் காப்பாற்றி விட்டதான அல்லது ஒருவரின் ஊனத்தை - அதனால் சம்பந்தப்பட்டவரது குடும்பத்தில் விளையும் துயரங்களை நான் தடுத்து விட்டேன் என்கிற ஆறுதலும் திருப்தியும் ஏற்படுகின்றன.' மகத்தான அதேவேளை ஆபத்தான அவர்களது சேவைக்காகப் பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.

அன்றைய தினம் முழுவதும் மிதி வெடிகளும் அது பற்றிய அபாய அறிவிப்புப் பலகைகளும் 'மிதி வெடிகள் உள்ளன' என்று மஞ்சள் நிறப் பட்டிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் இடங்களும் கால்களை இழந்த மனிதர்களும் நினைவில் சுழன்று கொண்டிருக்க அன்றிரவு எனது கவிஞன் விழித்துக் கொண்டான்.

போலியோச் சொட்டருந்தி
விளையாடச் சென்றவனைத்
தூக்கி வந்திருந்தார்கள்
கால் ஒன்றை இழந்திருந்தான்-
மிதி வெடியில்!

இலங்கையில் ஒரு காலத்தில் இந்திய அமைதிப்படை இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்ததே. விடுதலைப் புலிகளுட னான மோதலில் மிதி வெடி ஆபத்தை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. தங்களுக்குப் பரிச்சயம் அற்ற சூழலில் அவர்களில் பலர் கால்களை இழக்கும் நிலை ஏற்பட்ட போது அதைத் தவிர்ப்ப தற்காக ஒரு காரியம் செய்தார்கள். அதில் புத்திசாலித் தனமான இரட்டை நோக்கம் இருந்தது.

இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக செம்மறி ஆடுகள் வந்திறங்கின. ஒவ்வொரு இராணுவக் குழுவும் ஒரு செம்மறிக் கூட்டத்தை முன்னால் நடக்க விட்டுப் பின்னால் நடந்தது. முன்னால் செல்லும் ஆடுகள் கண்ணிவெடிகளில் அகப்பட்டால் அவை அக்குழுவினரின் அன்றைய உணவாக மாறியது. ஆடுகள் பொதுவா கவே துரத்தினால் கலைந்து வெவ்வேறு பக்கங்களில் தறி கெட்டு ஓடுவன. ஒன்றைச் சொல்ல வேறு ஒன்றைச் செய்பவனை 'எட செம்மறி' என்று அழைப்பதும் சொன்னதை உடனடியாகப் புரிந்து கொள்ளாதவனை 'இவன் ஒரு செம்மறியடா' என்று திட்டுவதும் யாழ்ப்பாணத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

திருமதி பார்பரா வோல்டர்ஸ் சர்வதேச தொலைக் காட்சிச் சேவையொன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஆப்கானிஸ்தானில் அரசியல் சிக்கல்கள் மும்முரமடைவதற்கு முன்னர் நிகழ்ச்சிகளுக்காகச் சென்று வந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் ஆண்களின் பின்னால் கிட்டததட்ட ஐந்து அடி இடைவெளியில் நடந்து வருவதை அவதானித்திருந்தார். தலிபான்கள் ஆட்சிக்கு வந்து பின்னர் அவர்களது ஆட்சியும் அதிகாரமும் தூக்கி வீசப்பட்டு இன்று அமெரிக்க ஆசீர்வாதத்துடனான அரசு ஆட்சியில் இருக்கிறது.

மிக அண்மையில் அங்கு சென்ற பார்பரா பெண்கள் ஆண்களுடன் சமமாக நடந்து வராமல் இன்னும் வழமை போல் பெண்கள் பின்னால் நடந்து வருவதை அவதானித்தார். சொல்லப் போனால் முன்னரை விட மேலும் சில அடிகள் பின்னால் ஆனால்  மகிழ்ச்சியுடன் நடந்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

ஒரு பெண்ணை அணுகி, 'ஒரு கட்டத்தில் ஆண்களுடன் சரிசமமாக நடந்து செல்லக் கோரிக் கொந்தளிப்பெல்லாம் நிகழ்ந்ததல்லவா..? இப்போது அதற்கு எந்தத் தடையும் இல்லாத போது ஏன் பழைய வழக்கத்தை மாற்றாமல் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அந்தப் பெண் பார்பராவை சில கணங்கள் நேராகப் பார்த்தவாறு புன்முறுவலுடன் சொன்னார்: 'கண்ணிவெடிகள்!;'

நீதி: ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு புத்திசாலித்தனமான பெண் இருக்கிறாள்!


03.08.2008
(தீர்க்க வர்ணம் - பத்தித் தொகுப்பிலிருந்து)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: