Thursday, May 23, 2013

பாக்கிஸ்தான் போன பயங்கரவாதி!



எனது பெயர் முராத் குர்னாஸ். நான் ஜேர்மனியின் பிரமன் நகரைச் சேர்ந்தவன். எனது பெற்றோர் துருக்கிய வம்சாவழியினர். எனது தந்தையார் மேர்சிடஸ் தொழிற்சாலையில் கடமை புரிகிறார். நான் பிறந்து வளர்ந்து வாழ்வதெல்லாம் ஜேர்மனியில்தான்.

 2001ம் ஆண்டு நான் ஒரு துருக்கியப் பெண்ணைத் திருமணம் செய்தேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்த போதும் இஸ்லாம் பற்றிய போதிய அறிவு எனக்கு இருக்கவில்லை. எப்படித் தொழுவது என்று கூட எனக்குத் தெரியாது. இஸ்லாம் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற் பட்டது. ஏனெனில் தெரிந்து கொண்டால்தான் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழ முடியும். பிரமனில் உள்ள இஸ்லாமிய இயக் கத்தில் விசாரித்த போது அவர்கள் பாக்கிஸ்தானுக்குச் செல்லுமாறு எனக்குச் சிபார்சு செய்தார்கள். நான் பாக்கிஸ்தானுக்குச் செல்வதெனத் தீர்மானித்தேன். ஆனால் அதை எனது குடும்பத்தாரிடம் நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் நிச்சயமாகச் சொல்கி றேன்|எனது தாய் என்னை அனுமதித்திருக்கவே மாட்டார்.

இந்தப் பயணத்தை நான் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தப் பயங்கரம் நடந்தது. அமெரிக்க உலக வர்த்தக மையத் தாக்குதலைத்தான் சொல்கிறேன். உண்மையில் என்னை மிகவும் திகைப்படையச் செய்த சம்பவம் அது. உலக வர்த்தக மையத் தாக்குதலுக்கும் எனது பயணத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதால் நான் திட்டமிட்டபடி பாக்கிஸ்தான் நோக்கிப் புறப்பட் டேன். ஆனால் அப்போது அப்பயணத்தை நான் மேற்கொண்டிருக்கக் கூடாது என்பது இப்போதுதான் புரிகிறது.

அங்கு சில வாரங்கள் தங்கி எனது விடயங்களை முடித்துக் கொண்டு ஜேர்மனி திரும்புவதற்காக பஸ்ஸில் வந்து கொண்டிருந் தேன். பாதையில் ஒரு வழமையான பரிசோதனைத் தடை இருந்தது. அந்த இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. நான் அமர்ந்திருந்த ஆசனத் தருகே இருந்த யன்னல் கண்ணாடியைத் தட்டி 'இவன்தான்' என்று ஒரு பாக்கிஸ்தானியப் பொலிஸ்காரன் சொல்வது கேட்டது. பொலிஸார் என்னை பஸ்ஸிலிருந்து வெளியே இறக்கியெடுத்தனர். எப்படி இது நிகழ்ந்தது என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை. சில வேளை பாக்கிஸ்தானியருடைய உடல் தோலை விட எனது தோல் சற்று வெளிச்சமானதாக இருப்பதால் அவர்கள் என்னை வேறுபடுத்தி அடையாளப்படுத்தினார்கள் போலும்.

எனது பயணத்தைத் தடை செய்து என்னை அமெரிக்கப் படையினரிடம் பாக்கிஸ்தானியப் பொலீஸார் கையளித்தனர். இதற்குச் சன்மானமாக பாக்கிஸ்தானியப் பொலீஸாருக்கு அமெரிக்கத் துப்பாய்வுத் துறை 3000 டாலர்களைக் கொடுத்ததாக நான் அறிய வந்தேன். அமெரிக்கப் படையினர் என்னை விமானத்தில் ஆப்கானிஸ் தானின் கந்தஹார் நகரிலுள்ள அவர்களது தளத்துக்குக் கொண்டு வந்தார்கள். அங்கு ஏற்கனவே களச் சண்டையில் பிடிபட்டோருடன் என்னை அடைத்து வைத்தார்கள். எனக்கு அவர்கள் வழங்கிய இலக்கம் 53. நான் அடைக்கப்பட்டிருந்த சிறை குளிரினால் உடல் சில்லிடக் கூடிய இடமாக இருந்தது.

ஒரு நாள் இரவு ஓர் அலறல் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது. போர்வையொன்றால் முகம் மறைக்கப்பட்ட ஓர் இளைஞ னின் தலையில் ஒரு தடித்த கட்டையினால் அடித்துக் கொண்டிருந் தார்கள். அந்தக் கூக்குரலில்தான் நான் எழும்பியிருக்க வேண்டும். அவனது வயிற்றில் உதை விழுந்தது. சரியாக எண்ணிப் பார்த்தேன்| அவனைச் சுற்றி ஏழு அமெரிக்கப் படை வீரர்கள் சூழ்ந்து நின்று தாக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலை அந்த இளைஞன் இறந்து விட்டான்.

அவர்கள் தினமும் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். எனது உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சிச் சித்திரவதை செய்தார்கள். அவர்கள் பின்வரும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்கள். 'ஒஸாமா பின் லேடன் எங்கேயிருக்கிறார்? நீ அல்கயீதா இயக்கத்தைச் சேர்ந்தவனா அல்லது தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவனா?' அப்போதெல்லாம் 'நான் ஒஸாமா பின் லேடனைக் கண்டது கிடை யாது| அல்கயீதாவைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது' என்று பதில் கூறி வந்தேன். 'நான் புறப்பட்டு வந்ததிலிருந்து பாக்கிஸ்தானி லேயே இருந்தேன்' என்பதைத் தெளிவாக விளக்கிச் சொன்னேன்.


'நீங்கள் கேட்கும் எதைப் பற்றியும் நான் அறியாதவன். உங்க ளுக்கு அவசியமாயின் ஜேர்மனியில் எனது முகவரியைத் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்' என்று அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களோ பைத்தியம் பிடித்தவர்களைப் போலத் திரும்பத் திரும்ப அதே வினாக்களைத் தொடர்ந்து கேட்டுத் தாக்கினார்கள்.

எனது இரு கைகளையும் பின்னால் கட்டி விட்டு அதிலேயே இன்னொரு கட்டுப் போட்டு உயரத்தில் தொங்க விட்டார்கள். அதாவது பின்னால் கட்டப்பட்ட எனது கரங்களினாலேயே எனது உடற் பாரத்தைச் சில வேளை நாட் கணக்காக நான் தாங்க வேண்டி யிருந்தது எனக்கு நிகழ்ந்த பெருங் கொடூரமாகும். உடலுக்குக் குறுக் காகக் கட்டித் தொங்க விடப்பட் டிருந்த ஓர் இளைஞனை ஒரு நாள் கண்டேன். இன்னொரு முறை ஊதிப் பெருத்த நீல நிறமான ஓர் உருவத்தையும் நான் கண்டேன். உடலில் ஆங்காங்கு வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இருந்தன. அநேகமாக அது ஐஸ் கட்டிக ளில் வளர்த்தப் பட்டுக் கொல் லப்பட்ட ஓர் உடலாக இருக்கும் என்று நினைத்தேன்.



அவ்வப்போது நீருக் குள் அமிழ்த்தித் தலையில் தாக்குவார்கள். வயிற்றில் உதைப்பார்கள். நீருக்குள் வைத்து வயிற்றில் அடிக்கும் போது மூச்செடுக்க முடியாது. மூச்செடுத்தால் நீரையே சுவாசிக்க வேண்டி யிருக்கும். இந்தக் கொடுமைகளை எந்தச் சொற்களில் விளக்கிச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டு கால்க ளிலும் இரண்டு கைகளிலும் சங்கிலிகளால் கட்டி ஒரு விமானத்தைப் போல உயரத்தில் ஐந்து நாட்கள் தொங்க விடுவார்கள். ஐந்து அல்லது ஆறு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை கீழே இறக்கி வைத்தியரைக் கொண்டு உடலைப் பரிசோதிப்பார்கள். அவர் எனது கண்களையும் இதயத் துடிப்பையும் பரிசோதிப்பார். ஆபத்தான கட்டத்தில் நான் இல்லை என்று தீர்மானித்தாரானால் 'ஓ.கே' என்று சொல்லுவார்| மீண்டும் நான் தொங்க விடப்படுவேன். அதாவது அந்த டாக்டர் வருவது நான் வருந்துகிறேனா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு அல்ல| இன்னும் ஐந்து ஆறு மணித் துளிகள் என்னைத் தொங்க விடலாமா இல்லையா என்று சொல்வதற்குத்தான்.


ஆறுவாரங்கள் நீடித்த பலத்த சித்திரவதை களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் அமெரிக்கப் படைத் தளத்திலிருந்து எந்தச் சட்டங்களாலும் எட்ட முடியாத கியூபாவின் குவான்டனாமோ சிறைக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டேன்.

அங்கு ஒவ்வொரு சிறைக் கூடமும் வித்தியாச மானவையாக இருந்தன. சித்திரவதைகளும் வித்தியாசமானவையாகவே இருந்தன. நான் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளிச்சம் கிடையாது. தனிமைப் படுத்துவதன் மூலம் சித்திரவதை நடக்கும். அவர்கள் வைத்திருந்த இயந்திரங்கள் மூலம் நான் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அதிகக் குளிரை அல்லது அதிக வெப்பத்தைச் செலுத்தி வதைப்பார்கள்.

பல தினங்கள் உறங்க விடாமல் வைத்திருப்பது, கைதிகளை ஒரு விளையாட்டுப் பொருளைப் போல் பயன்படுத்திச் சிரிப்பது, தொடர்ந்து தொந்தரவு செய்வது, காற்று வராத இடத்தில் அடைத்து வைப்பது போன்ற ஆக்கினைகளையும் செய்தார்கள். நிமிர்ந்து இருக்க முடியாத, எழுந்து நடமாட முடியாத, சாதாரண ஒரு மனிதனின் நீளத்தை விடக் குறுகிய கம்பிக் கூண்டுக்குள் அடைத்து வைக்கப் படுவதன் மூலம் பாம்பு போல் சுருண்டுதான் கிடக்க முடியும். ஒரு மனிதனால் எவ்வளவு நேரத்துக்கு இவற்றைத் தாங்க முடியும்?  அநேகமான காலப்பகுதியை இக்கூண்டுகளுக்குள்தான் குவாண்ட னாமோ கைதிகள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமையானது கேட்ட வினாக்களையே அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பது. இக்கேள்விகளுக்கு ஓய்வு ஒழிச்சலேகிடையாது. இத்தனைக்கும் எனது கால்களைச் சுற்றிக் கம்பி வளையமிட்டுச் சங்கிலிகளால் பிணைத்து வேறு வைத்திருந்தார்கள்.

என்னுடனிருந்த கைதிகளில் அப்துர்ரஹ்மான் மறக்க முடியா தவர். அவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். உதைபந்தாட்டத்தில் மிகவும் நாட்டமுடைய அவர் கைதியாக வரும் போது என்னைப் போலவே அப்போதுதான் திருமணம் செய்திருந்தார். அவரைத் தினமும் கீழே போட்டு அடித்து நொருக்குவார்கள். அவரிடம் உள்ள சிறப்பு என்னவெனில் அவரை எப்படித் தாக்கினாலும் அவர் அழவோ சத்தமிடவோ மாட்டார். அவ்வா றான ஒரு மன உறுதியுள்ள மனி தனை நான் என் வாழ்நாளில் வேறு எங்கும் கண்டதில்லை. கடைசியில் அவரது முழங் கால் கள் இரண்டையும் அமெரிக்கப் படை டாக்டர்கள் வெட்டி அகற்றி விட்டனர். அதை விட வும் கொடுமை என்னவெனில் அகற்றப்பட்ட பின்னர் அவரது புண்க ளுக்கு அவர்கள் மருந்து இடவில்லை. இரண்டு கால்களும் சீழ் பிடித்த நிலையில் கைவிடப்பட்டுள்ள அவர் இன்னமும் குவான்டனாமோ சிறையில் இருந்து வருகிறார்.

தாக்கப்பட்டதன் காரணமாக இன்னொரு கைதியின் விரல் முறிக்கப் பட்டது. நீண்ட நாட்களாக அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. பின்னர் அந்த விரல் அப்படியே செயலிழந்து விட்டது. அதை அகற்றி விடுவதற்கு அமெரிக்கப் படை டாக்டர் களுக்கு அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் பரிதாபம் பாருங்கள். அவரது இரண்டு கைகளிலும் உள்ள இரண்டு கட்டை விரல்கள் தவிர அனைத்து விரல்களையும் அகற்றி விட்டார்கள்.

நான் விடுதலை செய்யப்பட்ட பின் பல விடயங்களை அறிய வந்தேன். அமெரிக்கப் படையின் துப்பாய்வுப் பிரிவு, நான் எந்தப் பயங்கரவாத இயக்கத்துடனும் சம்பந்தப்பட்டவன் அல்லன் என்ற முடிவுக்கு வந்திருந்தது. ஜெர்மனியின் உளவுப் பிரிவோ, பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் சம்பந்தமற்றவர் என்று அமெரிக்கா இன்னும் தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் அநேகமாக ஆறு அல்லது எட்டு வாரங்களுக்குள் நான் விடுதலை செய்யப்பட்டு விடுவேன் என்றும் ஜெர்மன் அரசுக்கு அறிவித்திருந்தது. ஆனால் மேற்படி குறிப்புகள் 2002ல் எழுதப்பட்டவை. இதன் பின்னர்  மூன்றரை வருடங்கள் நான் குவான்டனாமோவில் இருக்க வேண்டி வந்தது.

ஜேர்மனியின் சான்சலர் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த வேளை எனது விடயம் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்தே எனது விடுதலை சாத்தியமாகியிருக்கிறது. இந்த விபரங் களை எனது விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொண்ட அமெரிக்க வக்கீல் பெஹார் அஸ்மி எனக்குத் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2006ல் நான் விடுதலை செய்யப்பட்டேன். என்னை ஏற்றிக்கொண்டு செல்ல வந்த விமானத்தில் கூட விலங்குகளுடன்தான் என்னை அழைத்து வந்தார்கள். அந்த விமானம் ஜெர்மனுக்குரியது. என்னைச் சூழ அமெரிக்கப் படையினர் அமர்ந்திருந் தனர். நான் இறங்கிய பிறகே விலங்குகளை அவிழ்த்து விட்டார்கள்.

நான் பிடிக்கப்படும்போது எனது வயது பத்தொன் பது. விடுதலையான போது வயது 24. எனது மனைவி என்னை விவாகரத்துச் செய்து விட்டுச் சென்று விட் டாள். எனது சிறை நாட்கள் பற்றி 'எனது வாழ்வின் ஐந்து வருடங்கள்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறேன். அதில் இன்னும் விபரமாக எனக்கு நேர்ந்தவற்றை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.

விடுதலையாகி வந்து பாரிஸில் இறங்கிய போது அமெரிக்கப் படை அதிகாரி ஒருவர் ஒரு தாளை நீட்டிக் கையெழுத்துக் கேட்டார். அதை வாசித்துப் பார்த்த போது அல்கயீதாவோடு எனக்குத் தொடர்பு இருந்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது.

நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.

(ஒரு குடம் கண்ணீர் - நூலிலிருந்து)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

உள்ளத்தை ரணமாக்கும் வார்த்தைக்குள் அடங்காத சோகம். எத்தனையோ தரம் உங்கள் நூலை முழுமையாய்ப் படித்துவிட்டேன். ஒவ்வொரு தரமும் புதிதாய் வலிக்கிறது. அப்படி ஓர் அற்புத மொழி நடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது, மாஷா அல்லாஹ். நிச்சயமாய் அது ஒரு குடம் கண்ணீர் அல்ல. ஒரு கடல் கண்ணீர். :'(