Monday, May 6, 2013

அஸாத் சாலியுடன் உடன்பட முடியாது!சகோதரர் அஸாத் சாலியின் உடல் நிலை மோசமாக இருப்பதாக வெளிவரும் செய்திகள் நம்மைப் பெருங் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

“செய், அல்லது செத்து மடி” என்ற போக்குக் கொண்ட,நியாயத்தையும் உண்மையையும் வெளிப்படையாகப் பேசும் தைரியமும் துணிச்சலும் உள்ள ஓர் அரசியல்வாதியாக மட்டுமன்றி சிறுபான்மை என்ற காரணத்துக்காக முஸ்லிம்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுவதைக்
கண்டிக்கும் ஒருவராகவும் அவர் விஸவரூபம் எடுத்திருக்கிறார்.

முஸ்லிம்களாக இருந்தாலென்ன, நாங்கள் இந்த நாட்டின் பெருமைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நேற்றுவரை விகற்பங்கள் ஏதுமின்றி, ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றோம் -  இன்றும் வாழ்ந்து வருகிறோம் என்பதைக் குரலுயர்த்திப் பேசும் அவரது தைரியமும் மனோ உறுதியும் பாராட்டத் தக்கது.

ஒற்றுமை தவிர வேறு எந்த எண்ணங்களுமின்றி வாழ்ந்து வரும் எம்மீது இன ரீதியாக, சமய ரீதியாகக் குழப்பங்களை நியாயமற்ற விதத்தில் ஏற்படுத்து வோருக்கெதிரான கோபத்தைக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்து இளைஞர்களில் ஒரு சாராரின் சீற்றத்தின் வடிகாலாக அவர் இயங்கினார் என்பது அவருக்கு ஒரு தனி மரியாதையைத் தற்போது தோற்றுவித்துக்
கொடுத்துள்ளது.

ஜெனரல் பொன்சேகா, இலங்கைச் சிறுபான்மையினர் வந்தேறு குடிகள் என்ற அடிப்படையி்ல் கனடியச் சஞ்சிகைக்குத் தெரிவித்த கருத்துக்காக அவருக்கு ஆதரவளிக்க முடியாது என்று, தான் நீண்ட காலமாக இருந்து வந்த கட்சியை உதறியவர் அஸாத் சாலி. தம்புள்ளைப் பள்ளிவாசலில் தொடங்கி முஸ்லிம்களுக்கெதிரான செயல்பாட்டில் பெரும்பான்மையின் ஒரு பிரிவினர்
ஈடுபட ஆரம்பித்ததும் தனது நியாயத்தை நாட்டுத் தலைவருக்குத் தெரிவித்தார். அது கணக்கில் கொள்ளப்படாத போது அந்த உறவையும் அறுத்துக் கொண்டார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட போது கட்சி முஸ்லிம்களுக்கெதிரான பெரும்பான்மை - குறிப்பாக பிக்குகளின் நடவடிக்கை பற்றி மக்களின் கோபத்தை தேர்தல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது. அரசு இவ்விடயத்தில் பாராமுகமாக இருக்கிறது என்பதைத் தேர்தல் மேடைகளில் மிகக் காரசாரமாகச் சுட்டிக்
காட்டியவர்களில் ஒருவர் அஸாத் சாலி. தேர்தல் முடிந்ததும் எந்த அரசைக் கட்சி சாடியதோ அதே கட்சியுடன் இணைய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் கட்சித் தலைமை தள்ளப்பட்ட போது கட்சியையும் தலைமையையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

அரசியரோடு சேர்த்துப் பார்த்தாலும் அரசியலைத் தவிர்த்துப் பார்த்தாலும் அஸாத் சாலியின் சமூக உணர்வு மெச்சத்தக்கது. ஆனால் அது அவரது அரசியல் கணக்குக்கே சென்று சேரும் என்பதால் அரசியல் கணக்காகவே யாவும் பார்க்கப்படும்.

எந்த அரசாக இருந்த போதும் அது தன் நலனுக்காக எந்தப் பேயுடனும் பிசாசுடனும் கைகோத்துக் கொள்ளும் என்பது அரசியலில் அரிசுவடிப் பாடம். இதைத் தெரிந்து கொள்ளாதவராக அஸாத் சாலி இருந்திருக்க மாட்டார்.

ஆகக்குறைந்தது 30 வீதமாவது ஜனநாயகத்தையும் தர்மத்தையும் பேணும் இடத்திலல்லாமல் வேறு இடங்களில் அவற்றை உரத்த குரலில் பேசுவதானது, நிர்வாணிகள் திரியும் ஊரில் ஆடையுடுத்திச் செல்வதற்கு ஒப்பாகும். இந்த விடயம்தான் நம்மவர் பலருக்குப் புரியாத, புரிந்தாலும் தம்மை எதிர்ப்போர் மீது ஒரு கோபத்தை வெளிக்காட்ட உணர்ச்சிகளுக்கு
இடமளிக்கின்ற நிலையாகும்.

கடந்த காலங்களில் உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் அரசியல் கொலைகள், ஜனநாயகக் குரல்களை நசுக்குதல் போன்றவற்றிலிருந்து மட்டுமன்றி கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றிலிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. ஆனால் வரலாற்றிலிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்வதில் தவறுகளை விட்டு விடுவதுதான் துர்ப்பாக்கியமாக இருந்து வருகிறது.

இரண்டாவது சிறுபான்மையினராக வாழும் நாம் நமது எல்லாவிதச் செயற்பாடுகளிலும் “ஹிக்மத்”தைக் கைக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறும் உணர்ச்சிகளுக்கு எப்போதெல்லாம் அடிமைப் படுகிறோமோ அப்போதெல்லாம் ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் என்று அர்த்தம். இவ்வாறு நான் சொல்வது பலருக்கு எரிச்சலையும் சினத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் என்றைக்கும் அதுதான் உண்மை!

ஹிக்மத்தைப் பயன்படுத்தாத எமது எந்தக் குரலும் எந்தப் போராட்டமும் எந்த எதிர்ப்பும் “ஒரு ரோஹின்யாவை” கண் முன்னே சந்திக்கச் செய்யும் செயற்பாடாகவே இருக்கும். அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்காமல் குப்புறப் படுப்பது என்பது இந்த வார்த்தையின்  அர்த்தமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அஸாத் சாலியின் பலத்த எதிர்ப்புக் குரல் சமூகத்தில் பலருக்குத் திருப்தியை, சந்தோஷத்தை, நிம்மதியைக் கொடுத்துத்தானிருக்கிறது. ஆனால் அதற்காக அஷாத் சாலி செலுத்தும் விலை மிகப் பெரியது. அதற்காக வருந்தப் போவது அவரது குடும்பத்தினர்தாம்!

தான் கைது செய்யப்பட்டது நியாயமற்றது என்பதற்காக உண்ணாமல் குடிக்காமல் அவர் பிடிவாதம் பிடிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பொது வாழ்வு என்று இறங்கி விட்டால் இவற்றையெல்லாம் சந்தித்தே ஆக வேண்டும். அதற்காக அவர் தன்னை வருத்திக் கொள்வது அவரது பிள்ளைகள், மனைவி, உறவினர் மட்டுமன்றி அவர் மீது
நம்பிக்கையும் அன்பும் கொண்டிருக்கும் சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கும் செயலாகும். எனவே அவர் மேற்கொள்ளும் உண்ணாமைப் போராட்டத்துடன்
நம்மால் உடன்பட முடியாமல் இருக்கிறது.

சமூகத்துக்காகக் குரல் கொடுக்கிறார் என்பதற்காக இன்று அவரின் பின்னால் நின்று உற்சாகமளிப்பவர்களும் மகிழ்பவர்களும் அவருக்கு ஏதாவது நிகழுமெனில் (அல்லாஹ்  காப்பாற்றுவானாக)ஒரு பாத்திஹாவோடு மறந்து போய்விடுவார்கள்.

இதைத்தான் சகோதரர் அஸாத் சாலி உணர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாகும். அவருடன் இணைந்து செயற்படும் சகோதரர்கள், அவரது நெருக்கமான நட்புக்குப் பாத்திரமானவர்கள் அவருடன் பேசி முதலில் அவரை ஆகாரம் உட்கொள்ள வைக்கும் முயற்சியைச் செய்ய வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் ஓர் அரசியல்வாதி என்ற வகையில் சமூகத்துக்காக என்று எதைச் செய்தாலும் அது அரசியலாகவே பார்க்கப்படும். அவரது போராட்டம் சத்தியமானதுதான். நேர்மையானதுதான். குற்றங்களைச் செய்தார் என்று சொல்லப்படுகிறதே தவிர, என்ன குற்றங்கள் என்று இதுவரை
சொல்லப்படவில்லை.

தடுத்து வைக்கட்டும். காவல் செய்யட்டும். விசாரணை செய்யட்டும். நீதி மன்று ஒரு தீர்ப்புச் சொல்லட்டும். மக்கள் மன்றிலும் இறைவனின் மன்றிலும் அவருக்குச் சரியான தீர்ப்பு ஒன்று காத்திருக்கிறது அல்லவா?

எந்தச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்தாரோ எந்தச் சமூகத்தின் நன்மைக்காகப் போராடினாரோ அந்தச் சமூகத்துக்காக அவர் வாழவேண்டாமா?

இதை யாராவது அவருக்கு எத்தி வையுங்கள். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Mohamed Razmi said...

நல்ல பதிவு. ஆசாத் சாலி என்ற அரசியல்வாதியின் கடந்த காலம், தற்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு பரப்புரைகள் சமூக ஊடகங்களில் உலா வரும் காலம் இது. அவரோடு பல காலம் பழகியவன் என்ற முறையில் அ நியாயத்துக்கு எதிராக போராடும் குணம் அவரோடு கூடப் பிறந்தது. அவரது இஹ்லாஸ் பற்றிய புலனாய்வு தேவையற்றது. அது தான் இப்போது பேஸ்புக் போன்ற தளங்களை ஆக்கிரமித்துள்ளது!

இன்ஷா அல்லாஹ் இக்கட்டான இந்த நிலையிலிருந்து அவர் மீண்டு வரும் போது முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய பாதையை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த 'ப்ரேக்' ஐ அவர் நேர்முக மனப்பாங்குடன் அணுகி தனது அரசியல் பாதையை சமூகத்துக்காக அமைத்துக் கொள்ளல் வேண்டும் அது காத்திரமானதாகவும், சமூகப் பெறுமானங்களை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். இது தான் என்னுடைய துஆ!

Shaifa Begum said...

உண்மையில் நல்ல ஒரு விடயத்தை சொன்னீங்க சேர்....... இதையே தான் நானும் நினைத்தேன்.. உண்ணாமல் அருந்தாமல் இருந்து தன்னை வருத்திக் கொள்வதைவிட.... உண்டு குடித்து போராடிப் பார்க்கலாமே... இந்த விடயத்தில் என்னாலும் உடன்பட முடியாமல் தான் இருந்தது....
மற்ற தலைவர்களோடு ஒப்பிடும் போது.. வீரியமான பேச்சினால்.. முஸ்லிம் மக்கள் ஒரு சாராரின் மனதைக் கவர்ந்தவர் .நம்பிக்கையை துளிர்விடச் செய்தவர் ,என்றவகையில்.. தொடர்ந்தம் தாம் சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் இருந்தால்.. தான் முதலில் நல்ல நிலையில் இருக்க வேண்டுமே..... நீங்கள் சொன்ன மாதிரி இதனை அவருக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் உணர்த்த வேண்டும்......எத்தி வைக்க வேண்டும்.
அரசியல்வாதிகளின் உள்நோக்கம“் எது என்று தெரியாவிட்டாலும்..வெளிப்படையாகவே அரசியல் கைதியாகிப் போய் மௌனம் காக்கும் தலைவர்களிடையே இவர் எவ்வளவோ மேல்.......எது எப்படியோ அவர் விடுதலை பெற நாமும் பிராத்திப்போம்..
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பதை அவரும் உணரட்டும்................

Shaifa Maleek