Sunday, March 27, 2011

செரப்ரனிகா: சனசங்காரச் சகதி(மிக விரைவில் வெளிவரவுள்ள 25 உண்மைக் கதைகள் அடங்கிய நூலில் இடம் பெற்றுள்ள கதைகளில் ஒன்று இது.)

எனது பெயர் ஹஸன் நுஹானோவிக். பொஸ்னியாவைச் சேர்ந்தவன். வயது 38. இரண்டாம் உலகப் போரின் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த நெஞ்சு நடுங்கும் செரப்ரெனிகா படுகொலைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் படுகொலைகளில் எனது முழுக் குடும்பத்தையும் நான் இழந்தேன்.

செரப்ரெனிகா எங்களது சொந்த இடம் அல்ல. கிழக்கு பொஸ்னியாவில் இடம் விட்டு இடம் பெயர்ந்து நாங்கள் வாழ்ந்து வந்தோம். இவ்வகையில்தான் கடைசியாக நாங்கள் செரப் ரெனிக்காவுக்கு வந்து அகப்பட்டுக் கொண்டோம். கிழக்கு பொஸ்னி யாவில் 1992க்கும் 1995க்குமிடையில் பல மோசமான நிகழ்வுகள் நடந்தேறின. எந்தவித வெளித் தொடர்புகளுமற்ற நிலையிலேயே செரப்ரெனிக்காவில் அகதிகளாக வாழ்ந்து வந்தோம். அநேகமாகவும் நாங்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதே பொருத்தமானது.

இந்த நிலையில் 1993ம் ஆண்டு ஐ.நாடுகள் சபை கனேடிய இராணுவத்தை அமைதி காக்கும் படையாக அனுப்பி வைத்தது. ஆனால் அப்படி வந்தவர்களின் தொகை வெறும் 150 மாத்திரமே. நான் அவர்களது தளத்துக்குச் சென்று அவர்களுடன் உரையாடினேன். அவர் கள் என்னை மொழிபெயர்ப்பாளனாக நியமித் துக் கொண்டார்கள். பின்னர் கனேடியர்களுக் குப் பதிலாக டச்சுப் படையினர் அங்கு அனுப் பப்பட்டனர். அவர்களின் தொகை அறுநூறாக இருந்தது. சேர்பியர்களிடமிருந்து எங்களைக் காப்பது என்ற பெயரளவில்தான் அவர்கள் செயற்பட்டார்கள். சேர்பியப் படையினரோ முழு செரப்ரனிக்கா விலும் பரந்திருந்தார்கள். செரப்ரனிக்காவின் பரப்பளவு சில சதுரகிலோ மீற்றர்கள்தான். மூன்றரை வருடங்களாக அந்தக் குறுகிய நிலப்பரப்பே எங்கள் உலகமாக இருந்தது.

அது ஒரு துயரமான வாழ்க்கை. ஓடும் நீர் நிலையோ மின் சாரமோ அங்கு கிடையாது. இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஜூலை 1995ல் நடந்த மிகப் பெரும் மனிதக் கொலைகளை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? கடைசி மனிதப் பேரழிப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

நான் எதிர்பார்த்திருந்தது போலவே நடந்தது. ஐக்கிய நாடு களின் அமைதி காக்கும் படையினராக வந்திருந்த டச்சுப் படையினர் சேர்பியர்களுக்கு ஒரு கட்டத்தில் உதவுவார்கள் என்று நான் எதிர் பார்த்தேன். அவர்கள் சரியாக அதைத்தான் செய்தார்கள். டச்சுப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் ஒரு கட்டத்தில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், இளவயதினர் என்று வந்துகொண்டிருந் தார்கள். அவர்களில் சிலரை டச்சுப்படை உள்ளே வர அனுமதித்தது. பலரைப் புறக்கணித்தது. ஒரு கட்டத்தில் ஐ.நாடுகளின் தளப் பிரதேசத்துக்கு அப்பாலிருந்து உள்ளே வர முயன்றவர்களை நுழைய முடியாதவாறு டச்சுப் படை கதவுகளை இழுத்து மூடியது. தளத்துக்கு உள்ளே 5000 தொடக்கம் 6000 பேர் வரை இருந்தார்கள். வெளியே 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். தளத்துக்கு உள்ளே இருக்கும் வரை எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால் வெளியே இருந்த வர்களின் நிலைதான் அவலத்துக்குரியது. தளத்துக்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையும் அலறல்களையும் என்னால் கேட்க முடிந்தது.

உள்ளேயிருந்த யாரும் வெளியேற விரும்ப வில்லை. ஆனால் டச்சுப் படையினர் அவர்கள் அனைவரையும் பலி கொடுக்கத் துணிந்தனர். ஒலி வாங்கியொன்றை என்னிடம் கொடுத்து “இங்கிருக் கும் மக்களுக்கு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து தளத் திலிருந்து வெளியேறுமாறு சொல்” என்று என்னைப் பணித்தனர். உள்ளேயிருந்த பலருக்கு வெளியே காத்திருக்கும் பயங்கரம் தெரிந் திருக்கவில்லை. ‘இப்போது நமக்கு இந்த டச்சுக்காரர்தானே பொறுப்பு| ஆகவே நாம் வெளியேறலாம்’ என்று நம்பிக்கையோடு தான் அவர்கள் வெளியேறினார்கள்.

தளத்தின் வாயிலைத் தாண்டிய போது அங்கே டச்சுப் படை யினருக்கு அப்பால் சேர்பியப் படையினர் இவர்களுக்காகக் காத்திருந் தனர். சேர்பியப் படையினர் ஆண்களையும் சிறுவர்களையும் தாய்மார், சகோதரிகளிடமிருந்து வேறாகப் பிரித்தெடுத்தார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டவர்கள் உண்மையில் நாம் பாதுகாப் பான இடத்துக்குக் கொண்டு செல்லப்படப் போகிறோம் என்றே நினைத்திருந்தார்கள். டச்சுப் படையினர் தம்பாட்டில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில டச்சுப் படையினர் தளத்துக்குள் வந்து உள்ளேயிருந்தவர்களைப் பலாத்காரமாக வெளி யேற்றிக் கொண்டிருந்தார்கள்.

தளத்துக்கு உள்ளே எஞ்சியிருந்தது எனது குடும்பம் மட்டுமே. என்னால் முடிந்த வரை அவர்களை உள்ளே வைத்திருக்க நான் முயன் றேன். ஆனால் டச்சுப் படையைச் சேர்ந்த மூவர் எனது குடும்பத்தைப் பார்த்த படி “தளத்தை விட்டு இப்பொழுதே வெளியேறும்படி உனது குடும்பத்திடம் மொழி பெயர்த்துச் சொல்லு” என்று பணித்தார்கள்.

நான் உடைந்து அழுதேன். அந்த வேளை எனது மனோ நிலை எப்படியிருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள். எனது சகோதரனுக்கு 19 வயது. அவன் கதிரையில் அமர்ந்திருந்தான். ஆனால் வெளியே என்ன நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பது எனது பெற்றோருக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப் பட்டார்கள். அவ்வேளை அவர்களது மூத்த புதல்வனான நான் தளர்ந்து போகக் கூடாது என்று விரும்பினார்கள். நான் உயிருடன் இருந்தாலே போதும் என்ற நிலையில் அவர்கள் இருந்தனர்.

அவர்கள் வெளியேறி வாயிலை அடைந்ததும் “ஹஸன் நின்று கொள்... நீ நிற்கலாம்... உனது தம்பி எங்களுடன் இருப்பான்... கவலைப்படாதே...” என்று எனது பெற்றோர் சொன்னார்கள். நான் கதறி அழுதேன். “நானும் உங்களுடன் வருகிறேன்...” என்றேன். எனது சகோதரன் என்னைப் பார்த்துக் கதறி அழுதான். “நீ வரவேண்டாம்... நீ இருந்து கொள்...” என்று விட்டுச் சென்றான். அதுதான் நான் கடைசியாக அவர்களைப் பார்த்த சந்தர்ப்பமாகும்.

பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்று எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நான் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக சாத்தியப்பட்ட அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு கதைகளை ஒவ்வொருவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உடல்கள் எங்காவது புதைக்கப் பட்டிருக்கலாம். சேர்பியர்கள் சதுப்புப் பிரசேங்களில் குவியல் குவியலாக உடல்களைப் புதைத்திருக்கிறார்கள். தோண்டியெடுக்கப் பட்ட மனித உடல் எச்சங்கள் பலவற்றை நான் பார்த்தேன். சில இடங்களில் கால்கள், சில இடங்களில் தலைகள், உடல்கள் என்று வௌ;வேறாகப் புதைத்திருக்கிறார்கள். அடையாளம் காண்பது அவ்வளவு இலகுவானதாக இல்லை.

எனது பெரியப்பாவின் மகன் கொலை செய்யப்பட்டான். அவனது தலை கண்டுபிடிக்கப்பட்டது. அதை நானும் பார்த்தேன். ‘உங்களது மகனின் தலையைப் பார்த்தேன்’ என்று ஒரு தந்தையிடம் எவ்வாறு என்னால் சொல்ல முடியும்? இது மிகவும் கவலைக்குரியது. நானும் எனது குடும்பத்தாரின் விபரங்களைப் பெற்றுக் கொள்ள இன்னும்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உண்மையை மனந் திறந்து சொல்வதானால் இவற்றையெல்லாம் தாண்டி நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்குப் புரியவில்லை.

எனது தந்தையார் காடுகள் சம்பந் தப்பட்ட நிறுவனம் ஒன்றில் முகாமையாள ராகப் பணியாற்றியவர். இந்தப் பிரதேசத்தி லேயே மிகவும் அறியப்பட்ட ஒரு பிரமுகர். இதனால் பிரதேச மக்கள் எந்த ஒரு பொதுக் காரியமானாலும் தம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக அவரைத்தான் தேர்ந் தெடுப்பர்கள். இவ்வாறுதான் இணக்கப் பேச்சுவார்த்தையாளர் என்று சொல்லப் பட்ட மிலாடிக்குடன் அவர் பேசினார்.

உண்மையில் அவர்கள் இணக்கவாளர்கள் அல்லர். அவர்கள் இணக்கம் உண்டாக்கும் நிலையில் இருக்கவுமில்லை. மிலாடிக்குடன் எனது தந்தை பேச்சுவார்த்தை நடத்தும் ஒளிப்பதிவு இன்னுமிருக் கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் ‘ஐ.நாடுகளின் தளத்துக்குள்ளும் வெளியிலும் 25000 மக்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் சார் பாகப் பேசுகிறோம். எங்களை மனிதர்களாக நடத்துங்கள்’ என்று எனது தந்தையார் வேண்டுகோள் விடுப்பதும் ‘இம்மக்கள் அனைவ ரையும் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்வோம்’ என்று மிலாடிக் உத்தரவாதம் கொடுப்பதும் அந்த ஒளிப் பதிவில் தெளிவாக இருக்கிறது. செரப்ரனிக்கா பற்றி மக்கள் பேசும் போது ஜூலை 1995 பற்றி மட்டுமே பேசுகிறார்கள். உண்மையான செரப்ரனிகா என்பது ஐ.நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்றரை வருட காலத்தைக் கொண்டது.

ரட்கோ மிலாடிக் ஒரு பெரிய மனிதராக இன்னும் தொடர்வது என்னைப் பொறுத்த வரை வேடிக்கையான ஒன்று. 1995, 96, 97 களில் இது ஒரு பெரும் கேள்வியும் கூட. இப்போது இதுபற்றிப் பேசப்படுவ தெல்லாம் வெறும் பேச்சுக்களே. சில வேளை நடந்த பயங்கரங்களை நினைத்து அசைபோடுவேன். அப்போதெல்லாம் என்னுள் எழும் பெரும் கேள்வி என்னவெனில் இவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப் படாமல் இருக்கிறார்கள் என்பதுதான். நான் மிகவும் சலித்துப் போய் விட்டேன். அதனால் இவ்விடயத்தைத் தூக்கிக் கொண்டு அலைய முடியவில்லை. எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருக்கிறதல்லவா?

இந்தப் பாரிய படுகொலை நிகழ்வுகளை ஒரு பெரிய படமாக நீங்கள் பார்ப்பீர்களானால் எதிர்கால நலன் கருதிக் கைதுகள் நடக்க வேண்டும். தி ஹேக் நீதி மன்றில் - அம்மன்று அவர்களை இரண்டு பெரிய மீன்கள் என்றுதான் அழைக்க விரும்பும் - தடுப்புகளுக்குப் பின்னால் அவர்களை நிறுத்த வேண்டும். எனது கருத்துப்படி பெரிய மீன் முக்கியமானது. அதைவிடவும் சிறிய மீன் முக்கியமானது. மிலாடிக், கராட்ஸிக் இருவரும் மிக முக்கியமானவர்கள். பொஸ்னியா ஹேர்ஸகோவினாவின் ஒரு பிரஜை என்ற வகையில் சொல்கிறேன், போல்கன் பிராந்தியத்தின் அமைதி நிலைக்க வேண்டுமாயின் இவர் களைக் குறிவைப்பது அவசியம்.

இணைந்த நிறுவனங்களின் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஒன்று இங்கு இப்போது செய்யப்பட்டிருக்கிறது. என்னுடைய தாய் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். என்னுடைய தாய் செரப்ரனிக்காவின் அருகிலுள்ள நகரில் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது சேர்பியர்கள் அறுவர் அவரைக் கற்பழிக்க முயன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை அந்த வேளை அங்கிருந்த ஒரு சேர்பியரே எனக்குச் சொன்னார். தான் வைக்கப்பட்டிருந்த இடத்தி லிருந்த கண்ணாடியை உடைத்து அவர் தனது நரம்புகளை அறுத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த பிரதான பொலிஸ் அதிகாரி யார் என்று எனக்குத் தெரியும். அரச அதிகாரிகள், பொலிஸ், இராணுவம் யாரும் இதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. யாரையும் கைது செய்யவும் இல்லை. இந்தப் பிரதான பொலீஸ் அதிகாரி சரஜேவோவின் ஏதோ ஒரு பகுதியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உங்களால் இதைக் கற்பனை செய்ய முடிகிறதா? நானும் இங்கு வாழ்கிறேன். அந்தப் பொலீஸ் அதிகரியும் இங்கு வாழ்கிறார். ஒரு வேளை நான் அவரைப் பாதையில் சந்திக்க நேருமென்றால்... அநேகமாக நான் அவரிடம் சென்று கேட்கக் கூடும்... ‘நான் ஹஸன் நுஹானோவிக். நீர்தானே பத்து வருடங்களுக்கு முன்னர் ‘வ்ள செனிகா’ வில் பொலிஸ் அதிகாரியாக இருந்தவர். எனது தாயாரின் மரணம் பற்றி நீர் என்ன சொல்கிறீர்? என்ன நடக்கப் போகிறது?’ இம்மாதிரியான நிலையைத்தான் தற்போதைய இணைந்த நிறுவனங் களின் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சமரசம் செய்து வைக்கப் போகி றதா? இந்த விடயத்தைத்தான் நான் தொட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

உண்மையில் கராட்ஸிக் மற்றும் மிலாடிக் இருவரும் தேவைப் படுகிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு செய்வதற்கு ஏராளமான விடயங்கள் உள்ளன. சரஜேவோவிலும் ஒரு யுத்தக் குற்ற விசாரணைக்கான நீதி மன்றம் உண்டு. தி ஹேக்கிலும் உண்டு. இங்கே விசாரணை நடைபெறுவதே அதி சிறந்ததாக இருக்கும். அடுத்த ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு இந்த நாட்டில் நடந்தவற்றை வெளிச் சத்துக்குக் கொண்டுவர அது உதவும்.

அதே வேளை, பொஸ்னியாவை உலகம் மறந்து போய்விட்ட தாகத் தோணுகிறது எனக்கு. வேறு எங்காவது ஏதாவது நடந்து விட்டால் அதை நோக்கியே நமது கவனம் செலுத்தப்படும். அதை யிட்டே நாம் கவலைப்படுகிறோம். வளங்களையும் செயற்பாடுகளை யும் அதை நோக்கியே திருப்பி விடுகிறோம். உரிய நடவடிக்கைக்கான எல்லாம் இங்கே இருக்கவே செய்கின்றன.

எனது மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் பொஸ்னிய -சேர்பிய இராணுவத்தையே சாரும். ஆனால் இந்த விடயத்தில் சர்வதேச சமூகம், ஐ.நா. அமைதி காப்பாளர்கள், நியூ யோர்க்கிலுள்ள ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் பங்கு வெட்கப்படத்தக்கது. அவர்கள் சில செயற்பாடு களை முன்னெடுத்திருந்தால் பாரிய அளவு படுகொலைகளைத் தடுத் திருக்க முடியும். அவர்களும் பொறுப்பாளிகளே. நெதர்லாந்து தனி நபர்களைப் பாதுகாத்தது. எனக்குத் தவறிழைத்தார்கள் என்பதற்காக நான் தனிப்பட்டவர்களைக் குற்றஞ் சுமத்தவில்லை. அந்த நாடு அவர் களைப் பாதுகாத்ததைச் சொல்லுகிறேன். நான் அத்தகைய தனிநபர் களுக்கும் நாட்டுக்கும் எதிராகத்தான் வழக்குத் தொடர்கிறேன்.

நான் நடைபெற்ற விடயங்கள் அனைத்தையும் எனது நூலில் விளக்கியுள்ளேன். U.N. Falg: The International Community and Genocide in Serebrenica என்பது எனது நூலின் தலைப்பு. உண்மையில் ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் நேட்டோவும் இத்தாலி யிலுள்ள அதன் விமானங்களை அனுப்பியிருந்தால் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் இன்று உயிர் வாழ்ந்திருப்பார்கள். இதை எனது நூலில் நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். திட்டமிட்டிருந்தபடி ஆரம்பத்திலேயே விமானங்களை அனுப்பி சேர்பிய இராணுவத்தைப் பயமுறுத்தியிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். முழு சேர்பிய இராணுவத்தையும் அழித்து விடுவது என்று நான் சொல்ல வில்லை. எங்களைக் கொல்வதற்காக அலைந்து திரிந்த யுத்தத் தாங்கி களையாவது அழித்திருக்கலாம் என்றுதான் சொல்லுகிறேன். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இந்தத் துயரம் மிகுந்த பேரழிவு ஏற்பட்டிருக்காது.

நான் எனது நூலில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். அதே போல் பல கேள்விகளுக்கு விடையும் சொல்லியிருக்கிறேன். ஆதாரங்களைப் பல ஆவணங்களிலிருந்து நான் சுட்டிக் காட்டியிருக் கிறேன். நான் சொல்லும் ஆவணங்கள் ஐ.நா. வுடையவை. “மிக இரகசியமானது” என்று குறிப்பிடப்பட்டிருந்தவை. அவற்றை டேவிட் றோட் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளரிடமிருந்து நான் பெற்றுக் கொண்டேன். அவர் செரப்ரனிக்காவைப் பற்றி ‘End Game’ என்ற நூலை எழுதியவர். அவர் எனது நெருங்கிய நண்பர். தவிர செரப்ரனிக்காவைப் பற்றித் தீர விசாரித்து எழுதியவர்.

இன்று பத்து வருடங்களுக்குப் பிறகு உங்களால் டச்சுப்படை களத்தில் எப்படி இயங்கியிருந்தது என்று பார்க்க முடிகிறது. எனது கணிப்பில் இப்படுகொலைகளுக்கு அவர்களும் பொறுப்புதாரிகளே. நேட்டோ விமானங்கள் தயாராக இருந்த நிலையில் விமானத் தாக்குதல் அவசியமான நிலையில் ஐ.நாடுகள் விமானத் தாக்குதலை அனுமதிக்காத காரணத்துக்காக அவர்களும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களே. விமானத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதை உடனடியாகக் கைவிடும்படி ஐ.நாடுகள் கட்டளை பிறப் பித்ததாக ஓர் ஆவணம் சொல்கிறது. இரண்டு குண்டுகள் மாத்திரமே போடப்பட்டன. அவையுங்கூட இலக்குத் தவறி வீழ்ந்தன. பல ஆவணங்களின் தகவலின் படி நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளின்பேரிலேயே விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.

இதேவேளை இந்தப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்கள் ஏற்கனவே பல ஏற்பாடுகளைச் செய்திருந்ததாகப் பல தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. படுகொலைகளுக்கு ஒரு மாதத்துக்கு முந்தியே ஐ.நா அதிகாரிகள், பிரான்ஸின் இராணுவ ஜெனரல் ஒருவர், பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவர் மற்றும் மேற்கு நாடுகளின் அதிகாரிகள் கூட சேர்பிய இராணுவத்தின் மீது மேலதிகத் தாக்குதலை நடத்துவதில்லை என்று ஜெனரல் மிலாடிக்குக்கு உத்தரவாதம் அளித்ததாக அறிய முடிகிறது. அதே போல் கிழக்கு பொஸ்னியாவில் உள்ள சேர்பிய இராணுவம் சுற்றி வளைத்திருந்த செரப்ரனிக்கா போன்ற பிரதேசங்களைத் தாக்கும் போது சேர்பிய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்று நேட்டோ இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அறிய முடிகிறது.

நான் நேரில் பார்த்து அறிந்ததற்கு ஏற்பவும் ஆவணங்களின் படியும் இரண்டு டச்சு நாட்டு ஜெற் விமானங்கள் இரண்டு குண்டு களைப் போட்டிருக்கிறன்றன. அவையும் இலக்குத் தவறிப் போடப் பட்டன. சில வேளை அது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்| எனக்குத் தெரியாது. ஒரு தகவலின் படி அந்த இரண்டு குண்டுகளுமே இரண்டாம் உலக மகாயுத்த காலத்தவையாகும்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை உண்மையில் அகதி களுக்கான பொருட்களைக் கொண்டுவரும் போக்கு வரத்துக்கே பெரிதும் உதவியது. ஆனால் அவர்கள் செய்ததெல்லாம் கொல்லப் படுவதற்கு முன்னர் உணவளித்ததுதான். இதுதான் அமெரிக்கர்கள் அங்கு நேரடியாகத் தலையிடுவதற்கு முன்னர் செரப்ரனிக்காவில் நடந்தது.

குறிப்புகள் -

ரடோவன் கராட்ஸிக் 2008 ஜூலை 21ம் நாள் பெல்கிரேட் நகரில் கைது செய்யப்பட்;டார். மறைந்திருந்த அவ்வேளை மாற்று மருத்துவ நிபுணராகத் தன்னை அறிமுகப்படுத்தியிருந்த அவர், தனது பெயரை டாக்டர். ட்ரகன் டேவிட் டெபிக் எனப் பயன்படுத்தினார். கராட்ஸிக், உண்மையிலேயே மனோவியல் மற்றும் நரம்பியல் மருத்துவம் கற்றவர். ஆறு கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்ட கராட்ஸிக் அவற்றிற்காக விருதுகளையும் பெற்றவர்.

ரட்கோ ம்லாடிக் காணாமல் போனவராயிருக்கிறார். அவர் தோன்றிய போது தனது மனைவியுடனே இருந்ததாகச் சிலர் தெரிவித்திருக்கின்றனர். இரு பெண்களுடன் அவர் இருந்ததை ஒரு வீடியோவில் ஒளிப் பதிவு செய்து ஓர் ஊடகவியலாளர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பிய போதும் அது 2008ல் எடுக்கப்பட்டதா அல்லது உண்மையானதா என்ற வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. இதே வேளை அவருக்கு மூன்றாவது முறையும் இதயத் தாக்கு ஏற்பட்டு மரணமடைந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அவர் ஏழு வருடங்களாகக் காணாமல் போயிருப்பதால் இறந்து விட்டார் எனப் பிரகடனப்படுத்தும் படி ஜூன் 2010ல் அவரது குடும்பத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: