Thursday, March 31, 2011

ஒற்றைத் துவாரமும் ஓராயிரம் தரிசனங்களும்

முதலில் பிள்ளையின் சோற்றுப் பாத்திரத்தை நாங்கள் எடுத்தோம்.

சோமாலியாவில் பட்டினி. உணவு உண்ணாமலேயே உயிர் வாழ இப்போதே படிக்க வேண்டாமா?

பிறகு பிள்ளையின் விளையாட்டுக்களை நாங்கள் கவர்ந்தோம். வளரும்போதே இந்தக் களியாட்டங்களை ஆயுதமாக்குவார்கள் என்றனர் உளவியலாளர்கள்.

அவனுடைய அப்பாவையும் அம்மாவையும் நாங்கள் கொன்றோம். சொந்தக்காலில் நிற்க அவன் கற்க வேண்டாமா?

பிறகு அவன் வாய்விட்டுக் கத்திய போது உறக்கம் கலைந்ததற்காக அவனுக்கெதிராக வழக்குத் தொடுத்தோம்.

மேலே நீங்கள் வாசித்தது ஒரு சிறிய கதை. அதாவது சிறு கதை. அது சிறிய கதைதானே தவிர சிறுகதையில்லை என்பவர்களுடன் நான் டூ விடுவேன்.

பி.கே.பாறக்கடவு என்ற பிரபல மலையாள எழுத்தாளர் தனது நவீன கதைகளை இவ்வாறுதான் எழுதுகிறார். காலத்துக்கு ஏற்ற முறை என்பது எனது கருத்து. தவிர அது பேசும் விடயம் எத்தனை ஆழமானது பாருங்கள். வல்லரசுகளின் வக்கிரப் போக்கை நாசூக்காக அது எடுத்துச் சொல்லும் லாவகம் ஒரு நல்ல கவிதையைப் படிப்பது போல் அல்லவா இருக்கிறது. வெறும் எட்டே வரிகளில் இந்தக் கதை ஒரு நூலில் அடங்கும் விடயங்களைப் பேசி விடுகிறது. இந்தக் கதையின் தலைப்பு ‘நீதி.’

இந்தமாதிரிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தமிழில் இந்த முயற்சிகள் மிகக்குறைவு. வெகுஜன சஞ்சிகைகளில் ஒரு பக்கக் கதைகள் சில வரத்தான் செய்கின்றன. ஆனால் மேலே நான் எடுத்தாண்டுள்ள கதையின் உள்ளுரம் அவற்றில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இவ்வாறான கதைகளைத் தேடிப்படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அண்மையில் ஓர் அறபு மொழிக்கதை எனக்குக் கிடைத்தது. ஆங்கில வடிவில் கிடைத்த அந்தக் கதையை இங்கு தமிழாக்கித் தருகிறேன். 1931ல் சிரியாவின் டமஸ்கஸில் பிறந்தவர் ஸகரிய்யா தாமிர். அந்த நாட்டின் சிறுகதை இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் அவர் எழுதிய ‘இரை’ என்ற கதை இது. இந்தக் கதைக்கூடாகவும் நமக்கு ஆயிரம் தரிசனங்கள் கிடைக்கின்றன.

மேகங்கள், இசை, ரோஜாக்கள், சிறிசுகளின் பொம்மைகள் யாவும் எரிக்கப்பட்டு விட்டன. ஆற்று நீரைத் தவிர ஒளிந்து கொள்வதற்கு எனக்கு வேறு இடமெதுவும் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஒரு வயதான மீனவன் வரும்வரை தனிமையாக, சமாளித்துக் கொண்டு அங்கு பல வருடங்கள் நான் வாழ்ந்தேன். அவன் திகைப்புடனும் கவலையுடனும் என்னைப் பார்த்தான். பின்னர், “நீ ஒரு மீனாக இருக்கும் என்று நினைத்தேன்;” என்று சொன்னான்.

மகிழ்ச்சியாயிருப்பதைப் போன்ற பாவனையுடன் “அந்தத் தவறை இழைத்து விடாதே. மனிதன் மீனை விடவும் சிறப்புக்கொண்டவனும் வியக்கத் தகுந்தவனுமாவான்” என்று சொன்னேன்.

மறைந்து கொண்டிருக்கும் சூரியனை வெறித்துப் பார்த்தபடி “பாவம் எனது பிள்ளைகள். இன்று அவர்கள் பசியுடன்தான் உறங்க வேண்டியிருக்கும்” என்றான் மீனவன்.

வெட்கத்தில் தலைகுனிந்தபடி அவனைப் பார்த்து, “நான் சொன்னதையெல்லாம் எப்படி நீ நம்பலாம்? நான் தமாஷ் பண்ணினேன். நான் ஒரு மீன்தான்” என்று சொன்னேன்.

“ஆனால் மீன் பேசாது” என்றான்.

நடுங்கும் குரலில், “கடல் எவ்வளவு செல்வத்தைக் கொண்டது என்பதை மறந்து விட்டாயா? அது எத்தனையோ வகையான மீன்களின் வாழிடம். நான் ஓர் மனிதர்களைப் போல் பேசக்கூடிய அதிசயமான மீன்” என்று அவனைப் பார்த்துச் சொன்னேன்.

“நீ உண்மையைத்தான் சொல்கிறாயா அல்லது மீண்டும் தமாஷ் பண்ணுகிறாயா?” என்று உற்சாகத்துடன் கேட்டான்.

“உனது கேள்வி அர்த்தமற்றது. நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்?” என்றேன்.

அதற்குப் பின் மீனவன் எதுவும் பேசவில்லை. என்னை எடுத்துக் கொண்டு மிகுந்த களைப்புடன் வீட்டுக்குச் சென்றான். அவனது மனைவி என்னைக் கத்தியால்; விதம் விதமான துண்டுகளாக வெட்டிக் கொதிக்கும் எண்ணெச் சட்டிக்குள் போட்டாள். நான் அழவோ உதவி கோரவோ இல்லை. நன்றாகப் பொரியும் வரை சட்டியில் கிடந்தேன். அதன் பிறகு மீனவனின் பிள்ளைகள் ஆவலுடன் என்னை உண்ண ஆரம்பித்தனர். சிறிது நேரத்துக்குப் பின்னர் எனக்குக் கவலை ஏற்பட்டது. முழுமையாக என்னைச் சாப்பிட்டு முடித்து விட்டு, எனது சதை ருசியாக இல்லை என்று அவர்கள் சொன்னதுதான் அதற்குக் காரணம்.

அடுத்த நாள் நான் பூமிக்குள் சென்று விடுவேன் என்று எண்ணிப் பார்க்கையில் எனது கவலை மேலும் அதிகரித்தது. அழுக்கும் இருளும் நிறைந்த இடத்தில் நான் வாழவேண்டியிருக்கும். என்றாவது ஒரு நாள் ஒரு மரத்தின் வேரினூடாகவோ ஒரு ரோஜாப் பூவினூடாகவோ நான் சூரியனைப் பார்க்கும் வரை.


(“இருக்கிறம்” சஞ்சிகையில் “அதற்குத் தக” எனும் தலைப்பின் கீழ் நான் எழுதி வரும் பத்திகளில் ஒன்று)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Muruganandan M.K. said...

அருமையான கதைகள் பகிர்வுக்கு நன்றி