Wednesday, March 30, 2011

உனது வர்ணம்

மு.பொன்னம்பலம் அவர்கள் ‘தீர்க்க வர்ணம்’ நூலுக்கு வழங்கிய மதிப்புரை


இன்று பலர் தமிழில் பத்தி எழுத்துக்களில் ஈடுபடுவதை நான் கண்டிருக்கிறேன். அவை அநேகமாக, வாசகனை வாசிக்கத் தூண்டுவ திலிருந்து வழுவிப்போய் வெற்றுச் சுயவிளம்பரங்களாகவோ அல்லது இன்றைய ரியூற்றறிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கும் உப்புச் சப்பற்ற ரிய+ட்ஸ் கட்டுக்களாகவோ இருப்பதையே கண்டிருக்கிறேன். இதில் ஈடுபடும் எவருமே ஈர்ப்புடைய கலைப் பாங்கான வேலையாக அதைச் செய்யச் சிரமம் எடுத்துக் கொள்வதில்லை என்றே கூறலாம். இல்லை, அப்படியும் கூறமுடியாது. அவர்கள் எடுத்துக்கொண்ட சிரமத்தின் வெளிப்பாடுதான் அவர்கள் தரும் பத்தி ஆக்கங்கள், அதில் கலைப் பாங்கான செய்நேர்த்தி இல்லையெனில் அதற்கு அவர்கள் என் செய்வர்? மலடியைப் பிடித்துப் பிள்ளையைப் பெறு என்று சொல்லுகின்ற அபத்த மான ஒன்றை நாம் கோரக்கூடாது.

இப்பின்னணியில்தான் அஷ்ரஃப் சிஹாப்தீனின் பத்தி எழுத்துக் களின் தொகுப்பு - தீர்க்க வர்ணம் - என் பார்வைக்குக் கிட்டியது. பத்தி எழுத்து என்பது எப்படி வெற்றுத் தகவல் தரும் ஒன்றாக மட்டுமல்லாது வாசகரை வாராவாரம் படிக்க வைக்கும் ஈர்ப்புடைய கலைத் தூண்டல் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு தரமான வாசகன் நினைப்பானேயாகில் அந்த நினைவுக்குக் குந்தகம் நேராது ‘தீர்க்க வர்ணம்’ இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இதற்குக் காரணம், இதன் ஆசிரியர் சிறந்த கவிஞராகவும் பலதரப்பட்ட விஷயங் களோடு பரிச்சயமுடைய எழுத்தாளுமை உடையவராகவும் இருப்பது தான் போலும்.

எதிர்வினைகளோடு சேர்த்து 69 விஷயங்களை உள்ளடக்கிய தாகவுள்ள இத்தொகுப்பின் முதல் பத்தியான ‘வால் அளவு’, ஆசிரிய ரின் முதல் கவிதை நூலின் வெளியீடு பற்றியும் அதன் ஒரு பிரதி அவரு டைய சகோதரியின் மகனால் (சிறுவன்) எவ்வாறு எவ்வகையில் சமைய லறையில் ‘பேணப்பட்டது’ என்பது பற்றியும் மிகுந்த நகைச்சுவையோடு கூறி நிற்க, ‘வை.சேர்’ என்ற இறுதிப் பத்தி ‘வை.சேர்’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட பண்பாளரும் கிழக்கில் நாவல், சிறுகதை, நாடகம் என்று எழுதிய படைப்பாளருமான வை. அஹ்மத் கண்ணிவெடியால் இறந்து போனது பற்றிக் கூறித் துன்பியலாய் முடிகிறது.

நான் எப்பொழுதும் ஒரு நூலை வாசி;த்தால் - குறிப்பாக சிறுகதை, கவிதை, கட்டுரைகள், விமர்சனங்கள் - அதன் ஆரம்பப் பகுதியைப் படித்து விட்டுத் திடீரென இறுதிப் படைப்புக்குச் செல்வதுண்டு. தீர்க்க வர்ணத்தையும் அப்படித்தான் பாரத்தேன். முதல் ஆக்கமான ‘வால் அளவை’ப் படித்து விட்டுத் திடீரென ‘வை. சேரை’ப் படித்த போது எங்கோ அடியிலிருந்தெழுந்து கவியும் மெல்லதிர்வு என்னில்! வாழ்க்கை யின் இன்பம், துன்பம் என்கின்ற இருமுகங்கள். இந்த இருநிலைப்பட்ட பொருதலுக்கிடையே இவற்றின் கலவையான வாழ்க்கையின் தொட ரோட்டம் தீர்க்க வர்ணம் மூலம் எமக்குத் தரிசனமாகிறது. இதைத் தரிசிக்க வைப்பவர் தரமான கலை இலக்கியவாதியாக இருப்பதால் பல கலை இலக்கியச் செய்திகள் மூலமாகவே இதைக் கலாப+ர்வமாகச் செயற் படுத்துகிறார் எனலாம்.

‘மறக்க முடியாத மரபுக் கவிதைகள்’ என்ற பத்தியைப் படித்த போது நான் பல முஸ்லிம் கவிஞர்களை அறியாதிருந்தது தெரிய வந்தது. மற்றும் ‘என்னுயிர்க் கண்ணம்மா’, ‘வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்’ ஆகிய பத்திகளைப் படித்த போதுதான் ஏ.ஜி.எம். ஸதக்கா என்ற சிறந்த கவிஞரையும் வாழைச்சேனை அமர் என்ற சிறந்த சிறுகதை ஆசிரிய ரையும் தெரிய வந்தது எனக்கு உறுத்தலாகவே இருந்தது. மேலும் பல வகையான கதைகள் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பக்கிரி கதை, வக்கீல் கதைகள், சீசன் சிறுகதைகள், அறுசொற் கதைகள், பொலீஸார் கதைகள், தபாற்காரர் கதைகள் என்று வாசகரைச் சிரிக்க வைக்கும் கதை கள் அநேகம். இதே போல் ‘வில்லங்க வினாக்கள்’ என்ற பத்தியைப் படித்தால் விலா எலும்பு அதிரவும் சிரிக்கலாம்.

இவற்றின் மத்தியில் உலகக் கலைஞர்களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளனர். புன்னகையின் சூரியன் (மாயா ஏஞ்சலோ), டாக்காவின் வெளிச்சம் (ஷம்ஸ_ர் ரஹ்மான்), புலவன் வார்த்தை பொய்யா (கறுப்பினக் கவிஞர்கள்), இந்தத் தேகத்தைப்போல் வருத்தமில்லை (ஹரல்ட் சோனி லடூ), கண்ணீர்க் கோடுகள் (நஜி அல் அலி) என்பவை இதற்கு உதாரணம்.. இவர்களைப் போலவே உள்@ர்க் கலைஞர்களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளனர். நாகூர்க் கனி, மீராவோடையூரான், வை.சேர், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் ஆகியோர் இதற்குச் சான்று. இவர்கள் மத்தியில் நமக்குள் இருக்கும் அரைகுறை வேக்காட்டு இலக்கியகாரர் (பாதி உலகம்) நெஞ்சம் விரியா இலக்கியச் சுயநலமிகள் (குறுக்குத் தெரு) இன்னும் காழ்ப்புணர்வில் வேகும் கலை இலக்கியக் கர்த்தாக்கள் (பொன்குஞ்சுகளும் பொறாமைக் குஞ்சுகளும்) என்று பலர் நம்முன்னே புட்டுப் புட்டு வைக்கப்படுகின்றனர். இந்த வகையறாக்களிலிருந்து தமிழ் நாட்டுப் ‘பெரிய’ எழுத்தாளர் சுஜாதா கூடத் தப்பவில்லை என்பது நமது ‘குஞ்சு’களுக்கு ஆறுதல் தருவதாக அமையலாம்.

இவர்கள் மத்தியில் ‘அதிமேதாவி’ எழுத்தாளர்களாகத் தம்மைக் கற்பனை செய்து கொண்டு இயங்கும் சிறுகுழுவினர் பற்றிய பத்தியில் (விழலுக்கிறைத்தல்) அவர்கள் தொடர்பாக ஆசிரியர் ‘மூன்று துயரங்கள்’ என்று முன்வைத்துள்ளவை கட்டாயம் இன்றைய சகல இளந் தலைமுறையினரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். விஷயமறிந்தவர்கள் இதைப் படிக்கும் போது அவர்கள் இதழ்க் கடையில் முறுவல் வழியலாம். இவ்வாறே ‘இலவச இறக்கைகள்’ என்ற பத்தியும் இன்று சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் என்று வைப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாகும்.

தீர்க்க வர்ணத்தின் இப்பொதுப் பின்னணியை முன்வைத்து இரண்டொரு ஆக்கங்களைக் கூர்ந்த பார்வைக்குட்படுத்துவது ஆரோக் கியமானதாகும். அதன் மூலம் ஓர் ஆளுமையுள்ள இலக்கியவாதியின் கையில் பத்தி எழுத்தென்பது எத்தகைய பன்முகத் தன்மைகளை எய்து கிறது என்பதைக் காணலாம்.

பல்வகைக் குணக் கலவைகளை வெளிக்காட்டும் இப்பத்திகள் சில என்னை லயிக்கவைத்துள்ளன. சில அதிர்ச்சியைத் தந்தவையாய் அமைந்தன. சில இன்துயரைக் கவியவைத்தன. ‘கவிதை வாசல்’ என்ற பத்தி உண்மையில் மகிழ்ச்சி கலந்த வியப்பையே ஏற்படுத்திற்று. இப் பத்தியை விளங்கிக் கொள்ள ஆசிரியர் கூற்றையே தருகிறேன்.

“அண்மையில் வாசித்த இலக்கியச் சிற்றேட்டில் ஓர் அம்சத்தில் அடங்கியிருந்த இரண்டு வரிகள் என் கவனத்தை ஈர்த்தன. ‘வேப்ப மரத்தடியில் சந்தித்தோம். அது இனிப்பானது. கரும்புத் தோட்டத்தில் பிரிந்தோம். அது கசப்பானது.’ இந்த இரண்டு வரிகளும் கவித்துவ மானவை. இவ்விரண்டு வரிகளையும் நான்காகப் பிரித்துப் போட்டால் புதுக் கவிதையாக மாறிவிடும். இந்த வரிகளை இன்னும் சற்று வித்தியாச மாகச் சொல்வதானால் இவ்வாறும் எழுதிக் கொள்ளலாம்.

வேம்படியில் இனித்தன
நமது சந்திப்புக்கள்
கரும்புச் சோலைக்குள்ளும் கசந்தது
நம் பிரிவு

என்று வெளிக்காட்டிய ஆசிரியர் இன்னொரு அருமையான ஓசை யிழைந்து வரும் கவிதையாக அதைப் பின்வருமாறு எழுதினார்.

கசக்கும் வேம்பின் காலடியே நம்
கண்கள் கலந்ததடி - அக்
காலம் இனித்ததடி
கரும்புத் தோப்பில் கனவு கலைந்தது
கசந்து போனதடி - வாழ்க்கை
கவலை நிறைந்ததடி

இத்தோடு அவர் நிற்கவில்லை. சீர், தளை பிழைக்காத வெண்பா விலும் இவ்வரிகளை இழைய விட்டதே அழகு! அந்த வெண்பா பின்வரு மாறு பேசிற்று.

விரும்பி விழிமலர்ந்தோம் வேம்படியில் அன்பால்
அரும்பி இனித்ததுவே காதல் - கரும்புவிளை
தோட்டத்தில் நின்று துயருடன்பின் நாம் பிரிந்தோம்
வாட்டக் கசக்கிறதே வாழ்வு!

மேலும் அவர் அதை இன்றைய புதுக்கவிதை வடிவிலும் தரப் பின்னிற்கவில்லை. அதை நான் இங்கு விரிவஞ்சித் தரவில்லை. வாசகரே அதைப் படிக்குமாறு விட்டு விடுகிறேன். இங்கே நாம் கவனிக்க வேண்டி யது ஓர் ஆற்றலுள்ள கலைஞன் ஒரு நிகழ்வுக்கு எத்தனை வடிவங்களை ஏற்றிக் காண்பிக்கிறான் என்பதே. மேலும் மரபுக் கவிதையில் ஆசிரியருக் குள்ள ஆளுமைதான் போலும் எம்மை ‘அவ்வை வழி’ சென்று இன்புற வும் வைத்துள்ளது. தமிழில் இத்தகைய பத்திகள் அபூர்வமானவை.

‘சிறு கதைகள்’ பத்தியில் ஆசிரியர் ‘மினிக் கதைகள்’ எழுதும் சாந்தன் போன்றோர் பாவிக்கும் சொற்செட்டுப் பற்றிப் பாராட்டிச் சொல் கிறார். அது எமக்கும் உடன்பாடான ஒன்றே. ஆனால் ‘காலத்தின் பயன் பாடு கருதிச் சிறுகதைகளைச் சின்னஞ்சிறு கதைகளாக எழுதும் நிலை எதிர்காலத்தே ஏற்பட்டு விடலாம்’ என்றும் ஆசிரியர் அபிப்பிராயம் தெரி விக்கிறார். எழுபதுகளில் சாந்தன் இத்தகைய கதைகளை எழுதிய போது பல்கலைக் கழகப் பேராசிரியர்மார் மினிச் சிறுகதை யுகம் வந்து விட்டதாக எழுதினர். பின்னர் அது தொடரப்படாது நாவல்கள் வந்த போது நாவல்கள் யுகம் வந்துவிட்டதாகவும் கூறினர். இக்காலத்தில் நாம் இவற்றின் வரலாற்றுத் தேவை என்னவென்றும் இவை வரலாற்றுத் தேவையின்பாற் பட்டவையா அல்லது ஒரு படைப்பாளியின் தரிசனப் பார்வையின்பாற்பட்ட வையா என்று கேள்வி எழுப்பிய போது (மல்லிகையில்) மௌனமாயினர். இக்காலங்களில் அற்புதமான மினிக் கதைகளை கவிதை நயத்தோடு எழுதிய Alexander Solzhenitsyn மாபெரும் நாவல்களான The Gulag Archipelgo மற்றும் Cancer Ward ஆகியவற்றை எழுதினார். இது எப்படி? உள் முகிழ்க்கும் ஓசைகளை நோக்கிய செவிமடுப்பாலா?

இதை நாம் இங்கே கூறியதற்குக் காரணம் உண்டு. இங்கே ஆசிரியர் பல்வகையான போக்குடைய கதைகளை அறிமுகப்படுத்தி எம்மைச் சிரிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார். ஆனால் இவரால் எழுதப்பட்டுள்ள உண்மைக் கதைகள் இக்கதைகளையெல்லாம் ஓரந் தள்ளி மேலெழுகின்றன. அது எவ்வாறு சாத்தியமாயிற்று? இங்கேதான் ஒருவனின் உள்முகிழ்க்கும் ஓசையின் செவிமடுப்பு நிகழ்கிறது. இதை நிரூபிப்பது போல் ‘மீரா(ளா)வோடையூரான்’ என்ற பத்தி நிற்கிறது. இது ஓடையூரான் என அறியப்பட்ட எஸ்.எம். தலிபா பற்றிய, அவரோடு ஆசிரியருக்கிருந்த உறவு பற்றிய நினைவுகூரல். இவர் அதிக தூரம் நடக்க முடியாதவர். சிறு வயதிலேயே போலியோ நோயால் ஒரு கால் பாதிக் கப்பட்டவர். அதனால் நடக்கும் போது அக்காலின் முழங்கால் பகுதியில் கையூன்றி ஊன்றியே நடப்பார். அவர் அண்மையில் இறந்து போனார். நண்பர் ஒருவர் அச்செய்தியை அறிவித்தார். விசாரித்தபோது இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரது காலில் பாம்பு தீண்டி வைத் தியசாலையில் இருந்து மரணமானதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்பத்தியை முடிக்கும் போது ‘நான் எந்தக் காலில் என்று கேட்கவில்லை’ என்ற ஆசிரியரின் வார்த்தைப் பிரயோகங்களைப் படித்த போது, என் உள்ளங் காலில் உப்பு வைத்துச் சுட்ட மாதிரி ஓர் துயர் எழுந்து உச்சி வரை சென்று என் உடல் முழுவதும் வழிவது போல் இருந்தது. இது ஒரு உண்மைக் கதை (Faction). ஆனால் முக்கி முக்கிக் கற்பனை பண்ணி எழுதப்பட்ட கதைகளையெல்லாம்  (Fiction) வெகு லேசாக ஓரந் தள்ளி விட்டு முன் செல்கிறது. இது எவ்வாறு நிகழ்கிறது? இது ஒவ்வொருவரின் சிந்தனைக்கு விடப்படுகிறது.

அடுத்ததாக, உலகக் கலைஞர்களை அறிமுகப்படுத்துவதும் இதில் இடம்பெற்றுள்ளதுபற்றி நான் ஏற்கனவே கூறினேன். இதில் ‘புலவன் வார்த்தை பொய்யா’ என்ற தலைப்பில் கறுப்பினக் கவிஞர்களை அறி முகப்படுத்திய பத்தியைப் படித்த போது அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. காரணம், என்னோடும் இப்பத்தி உரசிக் கொண்டு நின்றதே. ஆனால் இதை ஆசிரியர் அறிந்திருக்க நியாயமில்லை. எய்மீ சீசெயர (Aime Ceasaire) என்பவரால் பிரபலப்படுத்தப்பட்ட ‘நீக்ரோவியம்’ (Negritude) என்ற இத்தகைய கவிதைகள் நம்மவர்கள் அறிந்திருக்க வேண்டியவையே. இதற்குள் ஆச்சரியம் விளைவித்தது, பெஞ்சமின் ஸபானியா Benjamin Zephaniah) என்ற எனக்குப் பழக்கமான கவிஞரின் அறிமுகம். இவரே நான் லண்டனில் வெளியிட்ட எனது A Country Entrapped(பொறியில் அகப்பட்ட தேசம்) என்ற ஆங்கிலக் கவிதை நூலைA Fantastic Poemஎன்று பாராட்டி விமர்சித்தவர். இந்நூலில் அவர் பற்றிக் குறிக்கப்பட்டிருப்;பதை நான் கண்டது ஒரு சந்தர்ப்ப விபத்தா? அப்படியெனில் எல்லாமே சந்தர்ப்ப விபத்துத்தான். அதாவது பேரறிவின் இயக்கத்தில் எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புபட்டுக் கதையாடல் புரியும் பெரும் சந்தர்ப்ப விபத்துத்தான். இது மட்டுமல்ல, ‘பிறையும் பிச்சைக்காரர்களும்’ என்ற தலைப்பில் இத்தொகுப்பில் இடம்பெறும் பத்தி, மீண்டும் என் உணர்வுகளைக் கிளறி விட்டது என்றால் திரும்பவும் சந்தர்ப்ப விபத்தென்பதா அல்லது நாம் ஏலவே கூறியது போல ஏகமாய் நிற்கும் ஒன்றின் சிந்தனையே சகலரிலும் பட்டுத் தெறிப்பதால் இந்த ஒருமையுறல் நிகழ்ந்து எம்மை வியக்க வைக்கிறது என்பதா? இப்பத்தியில் ஆசிரியர் ‘பொன்னரிவாள்’ என்று பிறையைப் புரட்சிக் கமால் கூறியதை நினைவூட்டி விட்டு இன்னொரு கவிஞர் ‘முக்காற் பகுதியும் மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் தங்கக் காசு போன்றது இளம் பிறை’ என்று கூற என்னுள் ஏதோ அருட்டி விடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ‘இளம் பிறையே, உனது ஏழ்மை குறித்து வருந்தாதே. உனக்குள்தான் பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்’ என்று மகாகவி அல்லாமா இக்பால் கூறியதை ஆசிரியர் ஞாபகப்படுத்திய போது நான் பிறை பற்றி 60களில் எழுதிய வரிகள் என்னுள் ஓடின.

கூத்தன் புனைந்துள்ள கூனல் பிறையாளின்
கீற்று நகை பின்னர் கிளர விருக்கின்ற
கும்பப் பொலிவைக் குறிக்கும் இளவட்டம்
பூநூலின் வெள்ளைப் பொருக்காய்த் தெரிகிறது

என்ற இக்கவிதை வரிகள் இக்பாலின் கவிதையோடு இணக்கம் கொண்டவையாக உள்ளன.

இறுதியாக, இதில் சொல்லி முடிப்பதற்குப் பொருத்தமானதாக இருப்பது ‘தேசம் இழந்தவர்கள்’ என்ற பத்தி. யுத்தத்தின் காரணமாக ஈராக்கிலிருந்து வெளியேறியவனுக்கு தன் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலை. ஷியா, சுன்னி என்று தமக்குள்ளே பிரிவுபட்ட நிலை, அந்நிய ஆக்கிரமிப்பு, யுத்தம் ஆகியவையெல்லாம் சேர்ந்து தேசாந்திரியாக அலைய வைக்கிறது அவனை. இலங்கையிலும் இதே நிலைதான். தமிழனோ, முஸ்லிமோ ‘தம் தேசத்தை’, தாம் குடியிருந்த நிலங்களை இழந்து வேற்றிடங்களில் வந்து குந்திக் குந்தியெழும்புவோரும் இத்தகையவர்தாம். என்னதான் ஒன்றிருந்து வாழ்தல் பற்றிப் பேசினாலும் இச்சந்தர்ப்பத்தில்தான் செவ்விந்தியத் தலைவன் ச்சீஃப்சியெற்றல (Chief seattle) தம் நிலங்களை அரசாங்கத்துக்கு விற்று விடும்படியும் அப்படி விற்றுவிட்டால் ஆக்கிரமிப்பாளர்களின் தொல்லை இருக்காதென்றும் ஏப்ராஹாம் லிங்கன் கேட்டுக்கொண்ட போது கூறியதை நாம் எமது சூழலுக்கு ஏற்றவாறு பின்வருமாறு தருகிறோம்:-

மனிதன் உயிர்வாழ மூக்கினால் சுவாசிக்கிறான். மீன்கள் தம் தாடையால்சுவாசிக்கின்றன. மனித இனக் கூட்டமோ தாம் மகிழ்வுடன் உயிர்வாழத் தம் சுதந்திரத்தை, தமது மொழி, மதம், மண், கலை, கலாசாரத்தின் மூலமாகச் சுவாசிக்கிறது.
மொத்தத்தில் இந்நூல் ஒருவர் சலிப்புற்றிருக்கும் போது தன்னை உயிர்ப்புறவைக்கப் படிக்க வேண்டிய நூல். எவ்வாறு மேற்கு நாட்டு ஆதி இலக்கியங்களான கன்டபறிக் கதைகளும் டெகமறன் கதைகளும் நெடும் பயணம் செய்வோர் தம் பயணக் களைப்பகற்றி உயிர்ப்புறவும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தனவோ அவ்வாறே தீர்க்க வர்ணமும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை - உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் போது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: