Tuesday, March 29, 2011

சப்பாத்துக்குள் ஒரு சரளைக் கல்

ஏகாம்பரத்தின் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போல் ஆத்திரம் வந்தது. அதுவும் கூப்பிட்டு அறைய வேண்டும்!

ஓர் அறுபது வயது மதிக்கத்தக்க மனிதனின் கன்னத்தில் அறைய நினைப்பது முறைதானா என்று நீங்கள் கட்டாயம் என்னைக் கேட்கத்தான் செய்வீர்கள். ஏகாம்பரம் பண்ணும் கில்லாடித் தனங்களை நீங்கள் அறிய வருவீர்களானால் சில வேளை அவரது குரல்வளையைக் கடிக்க வேண்டும் என்பீர்கள். என்னை விட அதிகக் கோபக்காரர்களாக நீங்கள் இருப்பீர்களென்றால்!

எனக்கு ஏற்பட்ட கோபத்தில் விசயத்தைச் சொல்லாமல் இடையில் தொடங்கி விட்டேன் பாருங்கள். என்ன நடந்தது என்பதைச் சொன்னால்தானே எனது கோபம் சரியா பிழையா என்று உங்களால் தெரிந்து கொள்ள முடியும். சொல்கிறேன் கேளுங்கள்.

சாதாரண ஒரு விழாவை நடத்துவது என்றாலே நடத்துவோருக்கு நாரி முறிந்து போகும். அகில இலங்கை ரீதியிலான ஒரு விழாவென்றால் சும்மாவா? எத்தனை விடயங்களை ஓடியாடிச் செய்ய வேண்டும். குறை பிடிப்பதற்கென்றே ஜென்மம் எடுத்து வந்த குறுகிப்போன இதயங் கொண்ட மனிதர்கள் சிலர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் எல்லாவற்றையும் நிறைவோடு செய்ய வேண்டும் அல்லவா. அதனால் ஒரு விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

விழாவை நடத்துவதில் ஈடுபட்டு நொந்து நூலாகித் திரியும் ஏற்பாட்டுக்காரர்கள் ஒரு புறத்தேயிருக்க விழா நடக்கும் அந்தச் சில மணித்தியாலங்களுக்குள் எல்லாவற்றையும் தாமே நடத்துவது போல் பாசாங்கு பண்ணிச் சிலர் படம் காட்டுவார்கள் பாருங்கள்! அப்போதுதான் என்னைப் போன்றவர்களுக்கு உடம்பில் நெருப்பு வைத்து விட்;டது போல் இருக்கும். இந்த மனிதர்கள் கையாளும் விதம் விதமான தந்திரங்கள் நமக்குக் கோபத்தையும் கூடவே அதிர்ச்சியையும் உண்டு பண்ணும். இந்தத் தந்திரங்களை ‘ரூம் போட்டு’ யோசிக்கிறார்களா என்று கூடச் சந்தேகம் வரும்.

இவ்வாறான ஒரு வகையான தந்திரக்காரர்தான் ஏகாம்பரம்!

விழாவில் ஒரு நல்ல நாடகத்தை வழங்க வேண்டும் என்று செயற்குழு விரும்பியது. கொழும்பிலிருந்து மூன்று மணித்தியாலப் பயணத்தில் உள்ள ஓர் ஊரில் அருமையான நாடகம் ஒன்றிருப்பதாக அறிய வந்தோம். அதை அந்த ஊரிலேயே நடிக்கவிட்டுப் பார்த்துப் பொருத்தமானால் மேடையேற்றுவோம் என்று தீர்மானித்தோம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை தலைவர் உட்பட செயற்குழு அங்கத்தவர்கள் அறுவர் செல்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. செயற்குழு அங்கத்தவர் ஒருவர் பயணத்துக்கான வாகனத்தை ஏற்பாடு செய்ய வாகனப் பொருத்தம் பேசிக் கொண்டிருக்கையில் அதனைக் கேட்டுக் கொண்டு அந்த இடத்தில் நின்றிருந்தார் ஏகாம்பரம். எங்களது கெட்ட நேரம், நாடகக்கார்கள் வசிக்கும் ஊரே ஏகாம்பரம் பிறந்த ஊராகவும் இருந்தது. தானும் வர விரும்புவதாக செயற்குழு அங்கத்தவரில் தொங்க ஆரம்பித்தார் ஏகாம்பரம். ‘பயணிக்க இருப்பவர்கள் எல்லோரும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள். நீங்கள் வருவதை விரும்பமாட்டார்கள்’ என்று அவர் ஏகாம்பரத்தைத் துண்டித்து விட்டார்.

ஏகாம்பரம் விடவில்லை!

சங்கத்தின் செயற் குழுக் கூட்டம் முடிவடையும் வரை காத்திருந்து தலைவரைப் பிடித்துக் கொண்டார். தலைவர் யாரையும் நொந்து கொள்ள மாட்டார். ஏகாம்பரத்தை நேரடியாக மறுக்காமல் மற்றொரு அங்கத்தவரைச் சுட்டிக் காட்டி, அவரோடு கதைத்து ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கழன்று கொண்டார். தலைவர் சுட்டிக்காட்டிய நபரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.

ஏகாம்பரத்தின் தொந்தரவு பொறுக்காமல் என்னைத் தொலைபேசியில் அழைத்த நண்பர் விடயத்தைச் சொன்னார். தலைவர் தன்னை ஏகாம்பரத்திடம் மாட்டி விட்டதற்காகக் கோபப்பட்டார். ஏகாம்பரத்தை நம்மோடு கூட்டிச் சென்றால் குழு அங்கத்தவர்கள் அது பற்றி எழுப்பும் வினாக்களுக்குத் தானே பதிலளிக்க வேண்டும் என்பது அவரது கோபத்துக்கான காரணம்.

“செயற்குழு அங்கத்தவர்கள் தவிர வேறு யாரும் அந்த வாகனத்தில் செல்வதில்லை” என்று திட்டவட்டமாக ஏகாம்பரத்திடம் சொல்லி விடுமாறு அவரிடம் சொன்னேன். காலையில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வருபவர் செயற்குழு அங்கத்தவர்களின் வீடுகளியே அவர்களை ஏற்றிச் செல்வதால் ஏகாம்பரம் இந்த வாகனத்தில் வர முடியாது என்பது ஆறுதலாக இருந்தது.

இவ்வளவுக்கும் நான் ஏகாம்பரத்தைக் கண்டதில்லை!

காலை ஏழு மணிக்குக் கொழும்பிலிருந்து வாகனம் புறப்பட்டது. நடக்கப் போகும் விழா பற்றிய எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு பயணித்தோம். விழாக்கள் நடைபெறும் போது இடம் பெறும் கேலிக் கூத்துக்கள், நல்ல அம்சங்களுக்குள்ளும் குறை தேடும் மனிதர்கள், பல்வேறு நகைச்சுவைகள் என்று பலதும் பத்துமாகக் கதைத்துச் சிரித்துக் கொண்டோம். பண்பற்ற முறையில் இடையில் புக நினைத்த ஏகாம்பரம் பற்றியும் சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளத்தான் செய்தோம்.

காலை பதினொரு மணிக்கெல்லாம் அந்த ஊரில் சென்று இறங்கிவிட்டோம். ஒரு பாடசாலை மண்டபத்தில் நாடகம் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு எங்களுக்காக நாடகக் குழுவினர் காத்திருந்தார்கள். மண்டபத்தை நோக்கி நாம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு முக்கியஸ்ரைப் போல கம்பீரமாக எம்மை நோக்கி நடந்து வந்த நபரைப் பார்த்ததும் கூட வந்த நண்பர்கள், ‘அட ஏகாம்பரம்!’ என்றார்கள்.

அவர் நேரே தலைவரை நோக்கி வந்து கைகளைக்குலுக்கியபடி,

“நான் ஆறு மணிக்கே கொழும்பில் பஸ் எடுத்து ஒன்பதரைக்கெல்லாம் வந்து விட்டேன்” என்றார். கையில் ஒரு பை இருந்தது.

எல்லோருமாக மண்டபத்துக்குள் சென்றோம். முன் வரிசையில் நாம் அமர்ந்த போது தலைவருக்கு அருகில் ஏகாம்பரம் சட்டென அமர்ந்து கொண்டார்.

ஏகாம்பரம் இந்த விழாவில் கடும் அக்கறையோடு இருக்கிறார் என்று நினைத்தேன். மதிய உணவும் அவ்வூரிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் வாகனம் ஏற்பாடு செய்த நபரிடம்,

“மதிய உணவை ஏகாம்பரமா ஏற்பாடு செய்துள்ளார்?” என்று கேட்டேன்.

“இல்லை, எனது அக்கா இங்குதான் இருக்கிறார். அங்குதான் ஏற்பாடு” என்றார்.

நாடகம் தொடங்கி முடிந்தது. நான் ஐம்பது புள்ளிகள்தான் இடுவேன் என்று தலைவரிடம் சொன்னேன். ஐம்பது புள்ளிகள் என்றால் சித்திதானே என்றார் தலைவர். மற்ற நண்பர்கள் திருப்தி சொன்னார்கள். அந்த நாடகத்தை விழாவில் மேடையேற்றுவது என்று முடிவு செய்தாயிற்று. அதைத் தலைவரே அங்கு தெரிவிப்பது பொருத்தம் என்பதால் அவரைப் பேசச் சொன்னோம்.

நாடகத்தை மேடையேற்றத் தீர்மானித்து விட்டதைத் தெரிவித்துத் தலைவர் பேசி முடித்து ஆசனத்தில் வந்த அமர்வதற்குள் ஏகாம்பரம் எழுந்து முன்னால் வந்து உரையாற்ற ஆரம்பித்தார். நடை பெற இருக்கும் விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆரம்பித்து தலைவரைப் புகழ்ந்து தள்ளினார். அங்கிருந்த பலருக்கு அந்த உரையில் இஷ்டம் இல்லை என்பது அவர்களின் முகங்களில் தெரிந்தது. சங்க உறுப்பினர்கள் பேசலாம். நாடக நடிகர்களோ நெறியாளரோ அல்லது ஏற்பாட்டாளர்களோ பேசலாம். ஏகாம்பரம் யார்? சங்கத்தில் ஓர் அங்கத்தவராகக் கூட அவர் இல்லை. அவர் எதற்காக எந்த அடிப்படையில் பேசுகிறார் என்பது புரியாமல் அனைவரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
 
பத்து நிமிடம் விடாமல் பேசிய ஏகாம்பரம் பேச்சை முடித்தக் கொண்டதும் தனது பையை விரித்து அதனுள்ளிருந்து ஒரு பொன்னாடையை உருவியெடுத்தார்.பொன்னாடையைக் கண்டாலே அலர்ஜியாக உணரும் தலைவரை முன்னால் அழைத்தார். சூழ்நிலைக் கைதியாக அவர் முன்னால் போக, நனைந்த சாக்கைப் போட்டுக் கள்ளக் கோழியை அமர்த்துவது போல் அதனைப் போர்த்தித் தலைவரை அழுத்திப் பிடித்தார். எனக்கு ஏற்பட்ட எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் மண்டபத்திலிருந்து வெளியேறினேன்.

வண்டிக்குள் ஏறியமர்ந்து கொண்டு நண்பர்களின் வருகைக்குக் காத்திருந்தேன். எல்லோருடனும் பேசிக் கொண்டு வந்த ஏகாம்பரம் யாரைப் பற்றியும் கவலைப் படாமல் வாகனத்தில் ஏறி வசதியான ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நண்பர்களும் ஆளை ஆள் பார்த்துக் கொண்டு பேசாமல் வண்டியில் ஏற மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடு நோக்கி வாகனம் நகர்ந்தது.

வண்டிக்குள் அமர்ந்திருந்த ஏகாம்பரம் நாடகம் பற்றிக் கதைக்க ஆரம்பித்தார். சுவாரஸ்யம் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். செயற்குழு அங்கத்தவர்களான நாங்கள் ஏதாவது கதைத்தால் அந்தக் கதை ஏகாம்பரம் மூலமாக வெளியில் பரவும் அபாயம் கருதி மௌனம் காத்தோம்.

மதிய உணவில் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் ஒரு செயற்குழு அங்கத்தவரைப் போலவே ஏகாம்பரம் நடந்து கொண்டார். இடைக்கிடையே ஒவ்வொருவராகச் சுரண்டித் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். எல்லோரும் ஒரு மத்தியமான புன்னகையுடன் உள்வாங்கிக் கொண்டோம். உணவு முடிந்து கொழும்பு வருவதற்கும் வண்டியில் அவர் தொற்றிக் கொண்டதால் எங்களால் விழா பற்றிய எவ்வித எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியாமலே போயிற்று. அதைப் பற்றிய எந்தக் கவலையும் ஏகாம்பரத்துக்கு இருக்கவில்லை.

முழு நாள் விழா. வெகு கோலாகலமாகத் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. பல அறிஞர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் என்று அமர்க்களப்பட்டது விழா. அரங்கிலிருந்த நான் தலைவரைத் தேடி அவசரமாக வெளியே வந்த போது தலைவரை ஒரு தொலைக் காட்சி நிறுவனத்தின் தயாரிப்பாளர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அதைத் தாண்டி கமரா வைத்திருந்தவருக்குப் பக்கத்தில் தலைவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த போதுதான் அந்த விடயத்தை அவதானித்தேன். தலைவருக்குப் பின்னால் கமராவில் முகம் தெரிவதற்கு வாகாக ஏகாம்பரம் நின்று கொண்டிருந்தார். நான் அவரை அவதானிக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டும் ‘உன்னை நான் காணவில்லை’ என்ற பாவனையில் அவர் நின்றதை நினைக்க ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கோபமும் வந்தது.

அரசியல்வாதிகள் தொலைக் காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கும் போது அவரது அல்லக்கைகள் பின்னாலிருந்து ‘போஸ்’ கொடுப்பார்கள் பாருங்கள்! அப்படித்தான் இருந்தது அந்தக் காட்சி.

அந்தக் கணத்தில்தான் நான் ஏகாம்பரத்தின் சரியான மீற்றரைக் கண்டு பிடித்தேன் என்று நினைக்கிறேன்.

ஒரு நிகழ்வை நேரடியாக எதிர்த்து நிற்கும் ஒருவரை விட ஏகாம்பரம் போன்ற பிரகிருதிகள் ஆபத்தானவர்கள் என்று எனக்குப் புரிந்தது. அழகான சப்பாத்தணிந்து நடந்து போகையில் அதற்குள் ஒரு சிறு சரளைக் கல் புகுந்து விட்டால் நமக்கு எப்படி உறுத்துமோ அப்படித்தான் இவர்களும். சப்பாத்துக் கால்களுக்குரியவர் ஒரு சீனி வியாதிக்காரராக இருந்தால் அந்தக் கல்லே அவரது காலைக் கழற்றி எடுக்க ஏதுவாகிவிடும்.
தொலைக் காட்சியில் பலரின் கண்களுக்கு ஏகாம்பரம் ஒரு முக்கியஸ்தராகத் தோற்றமளிப்பார். அந்த விழாவை நடத்துவதில் ஏகாம்பரத்தின் பங்கு அளப்பரியது என்று அவரது நண்பர்களும் உறவினர்களும் நினைத்துக் கொள்வார்கள். அதைப் பற்றி விசாரிப்பவர்களிடம் விழாவை நடத்தியவர் போலும் அவர் பாசாங்கு பண்ணக் கூடும். சில வேளை ஒரு புன்னகையுடன் அதை அனுமதிக்கவும் கூடும். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் விழாவை நடத்துவதில் ஆயிரம் பிரச்சினைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கும் போது அதன் பெறுபேறுகளை ஏகாம்பரம் போன்றவர்கள் அலாக்காகத் திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள்.

தனியே நின்றிருக்கையில் ஆளைப் பார்த்தால் அப்பாவி போலத் தோற்றமளிக்கும் அவரை அந்த வேளை கட்டுப்படுத்தினால் மனம் வருந்தக் கூடும் என்று எண்ணினேன். தவிர, கோபத்தில் ஏதாவது பண்ணப்போக அது விழாவுக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விடவும் வாய்ப்புண்டு. அதற்கெல்லாம் அப்பால் கவனிப்பதற்கு நிறைய வேலைகள் இருந்தன. எனவே அவரைக் கைவிட்டு விட்டு நகர்ந்தேன். ஆனால் இந்தச் சந்தர்ப்பங்களைத்தான் ஏகாம்பரங்கள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கையில் ஓர் ஆவேசமும் எழத்தான் செய்தது.

ஒருவாறு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

நானும் எனது கமராவைக் கொண்டு சென்றிருந்தேன். சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொள்ள வேண்டிய பல பிரமுகர்கள் விழாவுக்கு வந்திருந்தும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததால் அது சாத்தியமாகவில்லை. எனது நெருங்கிய நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். அவரோடு மட்டும்தான் நின்று ஒரு படம் பிடித்துக் கொண்டேன்.

விழா முடிந்து மூன்றாம் நாள்தான் எனக்கு அது ஞாபகம் வந்தது. வயர்களைப் பொருத்தி ஒருவாறு என் மடிக் கணினியில் அந்தப் படத்தை எடுத்துப் பார்த்த நான் அதிர்ந்து போனேன்.

எங்கள் இருவருக்கும் பின்னால் - நடுவில் ‘போஸ்’ கொடுத்தபடி நின்றிருந்தார் ஏகாம்பரம்!

இப்போது சொல்லுங்கள்! ஏகாம்பரத்தை நான் என்ன செய்யட்டும்?


நன்றி - ஞானம் - மார்ச் 2011
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: