Saturday, July 2, 2011

எழுத்தாளர் முருகபூபதிக்கு மணிவிழா!


மெல்பேனில் வாழும் சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான் திருவாளர் லெட்சுமணன் முருக பூபதின் மணிவிழாவையொட்டி அவரது நண்பர்கள் அவரது சேவைகளை பாராட்டும் முகமாக வரும் July 31(2011)ஞாயிறுகிழமை விருந்து நிகழ்சியை ஒழுங்கு செய்கிறார்கள்.

கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவு அற்ற குழந்தைகளை இலங்கை மாணவர் நிதியம் ஊடாக கல்வி பெற ஊக்கு சக்திகாக இருந்து வருபவரும் மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் அகதிகள் கழகம் அவுஸதிரேலிய தமிழர் ஒன்றியம் ஊடாக பல வருடங்களாக சேவையாற்றியவர் திரு முருக பூபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியத்தை வளர்க்க முதல் முதலாக அவுஸதிரேலிய கலை இலக்கியசங்கத்தை உருவாக்கி பல இளம் எழுத்தாளரை ஊக்குவித்ததுடன் உதயத்தின் இலக்கி பகுதியையும் பலகாலமாக நடத்தியவர். இவர் இலங்கை அரசின் தேசிய விருதான சாகித்திய விருதை இரு முறை பெற்ற இலக்கியவாதி பலகாலமாக பத்திரிகையாளராக இருந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது.

 கடந்த ஜனவரியில் இலங்கையில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை பல கரிப்புகளுக்கு மத்தில் நடத்துவதில் முன்னணி வகித்தவரில் முருகபூபதியும் ஒருவராகும். இவரின் சேவைகளை மெல்பேண் மக்கள் கௌரவிப்பதாக இந்த நிகழ்சசி அமைகிறது. இந்த நிகழ்சியில் பல எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் அவுஸ்திரேலியாவின் பல பகுதியில் இருந்து கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------

தகவல் நோயல் நடேசன் - நன்றி - தேனீ இணையத்தளம்
---------------------------------------------------------------------------------------------------------

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு சர்வதேசப் பரிமாணத்தை ஏற்படுத்துகிற முக்கியஸ்தர் லட்சுமணன் முருகபூபதி

நீர்கொழும்பூரில் 13-07-1951ல் பிறந்த லெ.முருகபூபதி அவர்களுக்கு 2011 ஜூலையில் அறுபது வயது பிறக்கிறது. நம்பமுடியவில்லைத்தான். அதற்காக மணிவிழா ஆண்டை மாற்றிக்கொள்ளவா முடியும்.


இதே ஜூலை மாதத்தில்தான் ஒரு நாற்பதாண்டுகளுக்கு முன், 1972ல் மல்லிகை மூலம் ஒரு சிறுகதையாளனாக இலக்கியப் பிரவேசம் செய்கின்றார் இருபதுவயது இளைஞன் முருகபூபதி. அந்த முதல் படைப்பின் பெயர் ‘கனவுகள் ஆயிரம்’!இலக்கியமே வாழ்வாகிப்போன இவருடைய இலக்கியக் கனவுகளும் ஆயிரம்தான். நீர்கொழும்பின் கடற்கரைவாழ் ;மீனவர் சமூகத்தின் வாழ்வியல்புகளை - வாழ்க்கை முறைமைகளை வெகு இயல்பான சித்திரிப்பாலும் யதார்த்தமான பிரதேச மொழிச் செழுமையூடாகவும் ஒரு அருமையானபடைப்பைத் தந்திருக்கின்றார் முருகபூபதி என்று முதல்கதையே நிறையப் பேசப்பட்டிருக்கிறது.

மல்லிகையில் முதல் கதை வந்ததைத் தொடர்ந்து ‘அந்தப் பிறவிகள்’ என்னும் இரண்டாவது கதை பூரணியிலும், மூன்றாவது கதை ‘தரையும் தாரகையும்’ புது யுகத்திலும் வெளிவருகின்றன. இந்த மூன்று கதைகளுமே நீர்கொழும்பின் கடல் வாழ்வை மிகத் தத்ரூபமாகப் படம் பிடித்திருந்தன. ஈழத்து இலக்கிய உலகிற்கு ஒரு புதிய வளர்ந்து வரும் குறும்புனைக் கதையாளரை மல்லிகை கைகாட்டி இருக்கிறது என்று தினகரனில் குறித்து வைக்கின்றார் எம்.சிறீபதி அவர்கள்.

எழுபதுகளின் முற்போக்கு முகாமுக்குள் பேராசிரியர்களான கைலாசபதி - சிவத்தம்பி ஆகிய பெரியவர்களுக்கடுத்த, புதுக் குரலாக இளங்குரலாக ஒலித்த இருவருள் ஒருவர் சிறீபதி. மற்றவர் நித்தியானந்தன். பூரணியின் ஆசிரியர் குழுவில் ஒருவரான இமையவன் என்கின்ற இ.ஜீவகாருண்யன் தேடுதலும் ஆளுமையும் மிக்க ஒரு தனித்துவமான விமர்சகர். ‘உங்களுடைய ‘அந்தப் பிறவிகள் கதையையும் மகாகவியின் புதியதொரு வீட்டையும் ஒப்பிட்டு ஒரு விமர்சனம் எழுத உத்தேசித் திருப்பதாக ஜீவகாருண்யன் கூறிய தகவலை முருகபூபதியே ஓரிடத்தில் பதிந்து வைக்கின்றார். ‘அந்த பிறவிகள’; கதை பூரணியில் வெளிவந்த கதை என்பது குறிப்பிடக் கூடியதே. பூரணியில் இந்தக் கதை வந்த சூட்டோடு அதன் ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் அவர்கள் முருகபூபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

‘உங்கள் கதை பிரபல சிங்கள நாடகாசிரியர் கலப்பதியின் மேடை நாடகமான ‘மூது புத்த’வின் அப்பட்டமான தழுவல் என்று அநு.வை.நாகராஜன் ஒரு புகார் கடிதம் எழுதி இருப்பதாகவும் அதற்கான உங்கள் பதில் என்ன? என்றும் கேட்டிருந்தது கடிதம். தழுவல் என்று குற்றம் சாட்டப்பட்ட அந்த மேடை நாடகத்தை நான் அதுவரை பார்த்ததில்லை என்றும் பிறதொரு சமயம் அது நீர்கொழும்பில் மேடை ஏற்றப்பட்டபோது ஓடிச்சென்று பார்த்ததையும்,நாடகாசிரியர் கலப்பதியுடன் தனக்கேற்பட்ட இக்கட்டுக்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் எனது எழுத்துலகம் கட்டுரையில் குறிக்கின்றார் முருகபூபதி. (ஞானம் இதழ் 29 ஒக்டோபர் 2002)

நீர்கொழும்பு என்றதுமே முதலில் மனதில் விரிவது முருகபூபதி என்னும் பெயர் அடுத்து விரிவது நீர்கொழும்பு இலக்கிய வட்டம். எழுபதுகளின் உதய காலங்களில் இந்தச் சங்கம் ஆற்றிய இலக்கியப் பணிகள் மகத்தானவை. இந்த இலக்கியச் சங்கத்தின் ஸ்தாபகரும் செயலாளரும் முருகபூபதிதான். நூல் அறிமுகம், வெளியீட்டு விழா, விமர்சனக் கூட்டம், கலந்துரையாடல், இலக்கிய சந்திப்பு என்று ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களையும், நீர்கொழும்பின் இளம் படைப்பாளிகள் இலக்கிய ஆர்வலர்களுடன் கலந்துரையாடச் செய்து கல கலத்துக்கிடந்த நாட்கள்அவை.

பிந்திய அறுபதுகளில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களை அழைத்து ஒன்றிணைத்து பழைய

மாணவர் சங்கம் அமைத்து செயற்பட்டவர் கல்லூரியின் ஆரம்ப கால முதல் மாணவனான இந்த முருகபூபதி. நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளராக இவர் இருந்த நாட்கள் சரித்திரம் படைத்தவை. தமிழ் விழா, கவியரங்கு, நாடகம் என்று நீர்கொழும்பை ஒரு இலக்கிய பூமியாக்கிக் கொண்டிருந்த நாட்கள் அவை. மகாகவி, இளம்பிறை ர‘;மான், எஸ்.பொ.,அநு.வை.நாகராஜன், என்றும் டொமினிக் ஜீவா, இளங்கீரன், தெணியான், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன், ராஜ ஸ்ரீகாந்தன், மு.கனகராஜன் என்றும் எத்தனை வரலாறுகள். எத்தனை இலக்கிய ஆளுமைகளின் கால் மிதித்த மண் இது. அத்தனை பேரும் வந்திருந்து கதை பல பேசிக் களித்திருந்த மண் இது.

நீர்கொழும்பின் இத்தனை செயற்பாட்டுகளுக் குள்ளும் காற்றென கலந்து கிடந்தவர் முருகபூபதி. தன்னைப் பற்றிய பிரக்ஞைகளற்று முற்றிலும் இலக்கிய தாகம் கொண்டலைகின்ற இலட்சியப் படைப்பாளிகள் சிலர் பற்றி நான் அறிந்திருக்கின்றேன்.அந்தச் சிலரின் ஒருவராக நான் நண்பர் முருக பூபதியைக் கணிப்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல’ என்று குறிக்கின்றார், நீர்கொழும்பு கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் முருகபூபதியின் நெருங்கிய நண்பருமான மு.பஷீர் அவர்கள்.

முருகபூபதியின் முதல் சிறுகதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் நீர்கொழும்பு இலக்கிய வட்ட வெளியீடாக 1975ல் வெளிவந்தது. அந்த ஆண்டுக்கான இலங்கை சா‘pத்திய விருதினையும் பெற்றுக் கொண்டது. தெணியானின் ‘விடிவை நோக்கி’ நாவல் வீரகேசரி வெளியீடாக 1973ல் வந்தது. நீர்கொழும்பு இலக்கிய வட்டம் இந்த நாவலுக்கான வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. டொமினிக் ஜீவா அவர்களையும் என்னையும் பேச அழைத்திருந்தார். எழுபதுகளில் நான் அவ்வளவாக மேடை ஏறியதில்லை. ஆகவே முதலில் மறுத்தாலும் முருகபூபதி விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போய்விட்டார். என்னுடைய முதல் நீர்கொழும்புப் பயணமும் அதுதான்.

தேசாபிமானியில் பணியாற்றிக் கொண்டிருந்த மு.கனகராஜன் வந்திருந்தார். தேசாபிமானியின் இலக்கியப் பகுதி மு.கனகராஜனுடையது.

இந்த வெளியீட்டுவிழா பற்றிய இலக்கியக் குறிப்பை ‘ஈழத்து இலக்கிய விமர்சகர்களிடம் கேள்விக்கணை தொடுத்த தெளிவத்தை’ என்று தலைப்பிட்டுத்தான் எழுதி இருந்தார் மு.க.

மு.கனகராஜன் மிக நெருக்கமான இலக்கிய நண்பர். மல்லிகையின் அட்டைப்படக் கட்டுரைக்காக என்னைச் சந்தித்தவர் அவர்தான். மு.கனகராஜன் எண்பதுகளில் வெளியிட்ட ‘பகவானின் பாதங்களில்’ என்னும் சிறுகதைத் தொகுதி வித்தியாசமானது. 11 கதைகள் கொண்ட இத்தொகுதியின் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு தரமான எழுத்தாளர்களிடமிருந்து ஒரு சிறிய மதிப்புரை பெற்று அந்த மதிப்புரையுடனேயே ஒவ்வொரு கதையும் இந்தத்தொகுதியில் இடம் பெறுகிறது. எஸ்.பொ. தொடங்கி இளங்கீரன் வரையிலான இந்த
மதிப்பீட்டாளர்களுள் முருகபூபதியும் ஒருவர் என்பது குறிப்பிடக் கூடியது.

பிந்திய அறுபதுகளில் தன்னுடைய பதின் வயதில் இலக்கிய ஆர்வம் கொண்ட இளைஞனாக உலாவந்து 72ல் இலக்கியப் பிரவேசம் செய்து, 75ல் முதல் தொகுதி வெளியிட்டு, சங்கங்கள் அமைத்து இலக்கியப் பணிகளாற்றி 76ல் சாகித்திய விருது பெற்று எண்பதில் இன்னொரு தீவிர இலக்கிய வாதியான மு.க.வின் சிறுகதைக்கு மதிப்புரை வழங்கி.... என்று நண்பர் முருகபூபதியின் அபரிமிதமான வளர்ச்சி தனித்துவ மானது. அழுத்தமும் ஆழமும் கொண்டது: ஆரவாரமற்றது.


எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது தேசிய சபைக்குள் முருகபூபதி என்கின்ற இளம் இலக்கியவாதியை, சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு செயற்பாட்டாளனை உள்வாங்கிக் கொள்கிறது. 1975ல் இ.மு.எ.ச. நடத்திய தமிழ் -சிங்கள எழுத்தாளர் தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு சம்பந்தமான செயற்பாடுகளில், பூபதியின் பங்களிப்பை சங்கம் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டது. முதற் கூட்டம் கொரஸ்ஸ என்ற சிங்களக் கிராமத்தில் ரத்னவன்ச தேரர் முன்னிலையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலவை உறுப்பினர் லெ.முருகபூபதி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்று எழுதுகின்றார் இளங்கீரன் அவர்கள்.

அதன் பிறகு சங்கத்தின் வெள்ளி விழா, மாதாமாதக் கருத்தரங்கு
புதுமை இலக்கியம் சஞ்சிகையின் ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், பாரதி நூற்றாண்டு விழா, தமிழக எழுத்தாளர் வருகைகள் என்று முருகபூபதியும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கடலும் நீலமும் போல் கலந்து போயிருந்தனர். பாரதி நூற்றாண்டு விழாவுக்கான, புத்தகம் மற்றும் புகைப்படக் கண்காட்சி, மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது என்கின்ற ஏகோபித்த குரல்களுக்கு முருகபூபதியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளே காரணம் என்று கூறுவார் அவருடன் இணைந்து செயற்பட்ட வேலமுதன் அவர்கள்.

பிந்திய அறுபதுகளில் நான் கொழும்பு நோக்கித் தள்ளப்பட்டேன். ஆபீஸ் முடிந்த அந்திய பொழுதுகள், வீரகேசரி எடிட்டோரியலில் கார்மேகம் அவர்களுடனேயே கழியும். அப்படியான ஒரு மாலையில்தான் ‘இவர் முருகபூபதி’ என்று கார்மேகம் எனக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தார். ஒப்புநோக்காளர் பகுதியில் கிடந்த அவரை வீரகேசரியில் யாரும் கண்டு கொள்ளவதில்லை. ராஜகோபால் அவர்கள் கூட இவருடைய ஒரு கதையையும் வீரகேசரியில் போடவில்லை. மல்லிகை, பூரணி, புதுயுகம் என்று நிறையப் பேசப்பட்டவர்தான் பூபதி.

இவர்தான் முருகபூபதி இளம் படைப்பாளி என்று கார்மேகம் அறிமுகம் செய்தபோது அவருடைய அகம் எனக்கு அந்த முகத்தில் தெரிந்தது. அதன் அழகும் தெரிந்தது. தினமும் மாலை வேளைகளில் அவர் வேலை முடித்து வெளியேறும்போது இலக்கியம் பேசுவோம். ஒரு சில நாட்கள் ஆமர் வீதி வரை நடப்போம். முருகபூபதியை விட வயதால் 17வருடங்களும் எழுத்துப் பிரவேசத்தால் 12 வருடங்களும் முதியவன்

நான். சிறுகதை, நாவல், என்று நான் கூடுதலாக எழுதிய காலம் அது. அவருடைய கதைகள் பற்றிய எனது கருத்துக்களை ஒரு பவ்யத்துடன் கேட்டுக் கொள்வார். என்னையும் ஒரு பெரிய எழுத்தாளனாக நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை.

1977க்குச் சற்று முன் பின்னான காலத்திலிருந்து வீரகேசரியின் ஒப்பு நோக்காளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவரை வீரகேசரியில் யாரும் கண்டுகொள்வதில்லை என்று முன்னே கூறினேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக, இன்றியமையாதவராக, இன்னொரு அடித்தூணாக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்ட கால கட்டத்தில், வீரகேசரியின் ஆசிரிய பீடத்துக்குள் துணையாசிரியர் என்ற மதிப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றார். எழுபது எண்பதுகளில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சக்தி மிகக் கொண்டிருந்தது என்பது உண்மைதான்.

அந்த சங்கத்துக்குள் தனது அடக்கமான நடத்தைகளால், தீவிரமிகு பிரசன்னத்தால், அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளால், தீவிர உழைப்பால், இன்னொரு பிரேம்ஜியாக, இன்னொரு சோமகாந்தனாக, இன்னொரு தூணாக அவர் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் திடீரென அவர் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயரும் செய்தி ஊர்ஜிதமானது. வெளியே காட்டிககொள்ளா விட்டாலும்கூட முற் போக்கு எழுத்தாளர் சங்கம் உள்@ரத் திகைத்துத்தான் போய் விட்டது.

‘பூபதி அவுஸ்திரேலியா போகப்போகும் சங்கதி எனக்கு நம்பமுடியாத அதிர்ச்சியைத் தந்தது. அவர் செய்யவேண்டிய வேலைகள் இங்கு நிறையக் காத்திருக்கின்றன. அவரது எதிர்காலம் இங்கு ரொம்பவும் பிரகாசிக்கக் கூடிய சூழ்நிலை நிலவியது. என்னால் அவரது இந்த முடிவை ஜீரணிக்கமுடியவில்லை. அன்று இரவெல்லாம் சரியான தூக்கமில்லை, ஒரே மனப்பாரம், நெஞ்சு நோவு...’ என்று எழுதுகின்றார் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா. (முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள் பதிப்புரை - 1997)

‘முருகபூபதி அவுஸ்திரேலியா புறப்படுவதை அறிந்ததும் அவரது தனிப்பட்ட தேவை கருதி எவரும் மறுதலிக்க முயலவில்லை. ஆனாலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சுறுசுறுப்பாக இயங்கிய இளைய இரத்த ஓட்டம் உறைந்து போய்விட்டதாக உணர்ந்தது என்று குறிக்கின்றார் திக்குவல்லைக் கமால் (மல்லிகை ஜீவா மனப்பதிவுகள் -பக் 124)

ஒரு நாள் வீரகேசரியிலிருந்து ஆபீசுக்குப் போன் போட்டு சாயந்தரம் வீட்டில் இருப்பீர்களா என்று விசாரித்து அந்தி நேரம் ஓடி வந்தார். நாளை மறுநாள் பயணம் என்றார். அதைப் பகிர்ந்து கொள்ளத்தான் சென்ற வாரம் போல நீர்; கொழும்பு வீட்டுக்கு சில இலக்கிய நண்பர்கள்

வருகின்றார்கள். நீங்களும் ஜீவாவுடன் இணைந்து வாருங்கள் என்றேன். ஒரு பிரிவுபசாரப் பகல் உணவு. நீங்கள் வரவில்லை என்று வருத்தப்பட்டார். வாழ்த்துக்கூறி நெற்றியில் சிலுவையிட்டு ஆசீர்வாதம் சொல்லி அனுப்பினேன்.

எழுத்து இலக்கியம் இலக்கியச் செயற்பாடு என்பது மனிதனை ஆட்கொள்வது. வானமும் பூமியும் போன்றது. கடலையும் அலையையும் போன்றது. காலை இல்லை மாலை இல்லை. இரவு பகல் என்றில்லை. இக்கரை இல்லை அக்கரை இல்லை. சதா சர்வகாலமும் ஜீவிதம் கொண்டிருப்பது. இயங்கிக் கொண்டிருப்பது. முருகபூபதியும் அப்படித்தான். எழுத்தால் இலக்கியத்தால் சதா காலமும் ஆட்கொள்ளப்பட்டி

ருப்பவர். நான் அவுஸ்திரேலியா வந்ததும் எனது இனத்தவர் யார் யார் எங்கெங்கே இருக்கின்றார்கள் என்று தேடத் தொடங்கினேன்’ என்கின்றார் இவர்.

எனது இனத்தவர் என்பது கலை இலக்கிய வாதிகளை என்று விளக்கமும் தருகின்றார்.இனப்பற்று என்பது ஒவ்வொரு மனித மனதுக்குள்ளும் இயங்கும் ஒரு மா கடல். ‘ஒரு மனிதன் இனத்தை நேசிக்கிறான் என்பது மற்ற இனத்தை வெறுக்கிறான் என்பதாகாது’ என்று சத்தியம் செய்கின்றார் மகாத்மா காந்தி.

நவசோதி மாத்தளை சோமு கலாநிதி காசிநாதர் ல~;மண ஐயர் தம்பதிகள், டொக்டர் வாமதேவன், பேராசிரியர் இந்திர பாலா, எஸ்.பொ.,மாவை நித்தியானந்தன், அம்பி, ஆசி.கந்தராசா, அருண் விஜயராணி என்று எத்தனை பேர் இந்த அவுஸ்திரேலியாவுக்குள் (மல்லிகை, அவுஸ்திரேலிய மலர் - நவம்பர் 2000)

இவர் நிறுவி இயங்கும், இயக்கும் ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம’; போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட இலங்கை மாணவர்களுக்கு ஆற்றிவரும் சேவை அளப்பரியது. 2000மாம் ஆண்டிலிருந்து இயங்கும் அவுஸ்தி ரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் இவர் தோற்றுவித்தது. இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து இக்கலைச் சங்கம் ஆற்றும் பணிகள், ஆண்டு தோறும் மெல்பர்ன், சிட்னி, விக்டோரியா, கன்பரா என்று நடத்தும் தமிழ் இலக்கிய விழாக்கள் உலகப் பிரசித்தம் கொண்டவை.

2004ல் கன்பராவில் நடந்த நான்காவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான சிறப்பு மலரை ஞானம் வெளியிட்டு கௌரவம் செய்திருக்கிறது.

இலங்கை, தமிழகம் போன்ற பிறநாடுகளில் இருந்து இலக்கிய வாதிகளை சிறப்பு விருந்தினராக சங்கச் செலவிலேயே அழைத்து கௌரவிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் இலக்கியப் பணிகள் பாரட்டக் கூடியவை. இதனூடாக அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை நூல் உயிர்ப்பு கவிதை நூல் வானவில் BEING ALIVE என்னும் மொழி பெயர்ப்புச் சிறுகதை நூல், நம்மவர் என்னும் விழா மலர் ஆகிய நூல்களையும் தொகுப்பாளராக இருந்து வெளியிட்டுள்ளார் திரு.முருகபூபதி.


1975ல் நீர்கொழும்பு இலக்கிய வட்டம் இவருடைய சுமையின் பங்காளிகள் நூலை வெளியிட்டது. 1987ல் இவர் தனது பதினைந்து வருடகால தீவிர இலக்கியச் செயற்பாடுகளை அறுத்துக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்குக் கிளம்பும் வரை இவருடைய வேறெந்த நூலும்

வெளிவரவில்லை. இவர் ஒன்றித்துக் கிடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1976ல் உருவாக்கிய எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமும் முருகபூபதியின் நூல் ஒன்றை வெளியிட முன்வரவில்லை. இவரும் போட்டுக்கொள்ள முயலவில்லை.அதுதான் முருகபூபதி!

அவுஸ்திரேலிய புலம் பெயர்வுக்குப் பிறகு சமாந்தரங்கள் - சிறுகதைகள் 1988. தனது சோவியத் யூனியனுக்கான பயணக் கட்டுரைநூல் ‘சமதர்மப் பூங்காவில்’ 1989-(இவர் வீரகேசரியில் பணியாற்றிய போது மேற்கொண்ட பயணம் இது) என்று 17நூல்களை வெளியிட்டு சாதனை நிகழ்த்த வல்லமை பெற்றுள்ளார். இந்த வல்லமைக்கான காரணமும் இவருடைய இலக்கிய நெஞ்சமும், கடுமையான உழைப்புமே ஆகிறது.

2004 ஏப்பிரலில் நண்பர் ராஜ ஸ்ரீகாந்தன் அமரர் ஆனார். அவரது நினைவாக முருகபூபதி எழுதி வெளியிட்டுள்ள நூல் அன்பின், நட்பின், நேசிப்பின் மகத்துவத்தைப் பேசுகிறது. கவிஞர் அம்பி பற்றிய ஆய்வு நூல்
மல்லிகை ஜீவா நினைவுகள், பறவைகள் என்னும் நாவல்... 2001ல் nளிவந்த ‘பறவைகள’; இவருக்கு இரண்டாவது முறையாகவும் சாகித்திய விருதினைப் பெற்றுக் கொடுத்தது. விக்டோரியா மானிலத்தின் டெரபின் மாநகர சபை சிறந்த பிரஜைக்கான அவுஸ்திரேலிய தின விருதினை 2002 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கிப் பெருமைப் படுத்தியது. பெருமையும் கொண்டது.

தி.ஞானசேகரன் அவர்கள் தன்னுடைய அவுஸ்திரேலியப் பயணக் கதை நூலில் (1999) முருகபூபதியுடனான நட்பு பற்றி, பகைமை பாராட்டாத அவரது இலக்கிய மனம் பற்றி, மெல்பர்னில் அவரில்லத்தில் கழித்த இரண்டு நாள் இனிய நினைவு பற்றியெல்லாம் குறித்திருக்கின்றார்.

‘வாழ்வு மீதான நம்பிக்கையை பெறுவதற்கும், இன்னல்களையும் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்வதற்கும் ஏற்ற ஆத்ம பலத்தை எனக்குத் தருகின்ற சக்தியாக கலை இலக்கியங்களையே நான் கொள்ளுகின்றேன’; என்று 1997ல் தான் தொகுத்து வெளியிட்ட ‘நம்மவர’; மலரில் குறிக்கின்றார் நண்பர் முருகபூபதி.

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில் நடப்பதற்கான செய்திகள் வெளிவந்தபோதே நெருக்கடிகள் தோன்றின. சவால்கள் மேலெழுந்தன. மனம் வலிக்கும் இன்னல்கள் மண்டிக் கிளம்பின. மேலை நாடுகளிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கையில் இருந்தும்கூட எல்லாம் தெரிந்தவர்களின் எதிர்ப்பும், சக்தி மிக்கவர்களின் சதியும், பலம் கொண்டவர்களின் பகையும் பரவலாக பலவாறாகக்

கிளம்பின. அத்தனை எதிர்ப்புக்களையும், அகத் தாக்குதல்களையும், ‘மாநாட்டை நடத்திமுடித்துவிட்டு முருகபூபதி அவுஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வருவாரா’ என்னும் அச்சுறுத்தல்களையும் மீறி கொழும்பில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நான்குநாள் விழாவாக,

ஒரு வெற்றி மாநாடாக நடத்திக் காட்டிய பெருமை திரு. முருகபூபதி அவர்களின் இத்தனை வருடகால இலக்கியப் பணிகளுக்கும் ஒரு சிகரமாக அமைகின்றது. கலையும் இலக்கியமும் வழங்கிய அருங் கொடையான ஆன்மபலமே முருகபூபதியின் இந்த விஸ்வரூபம்.

வண்ணாத்திக்குளம் நாவலாசிரியரும் டொக்டருமான நடேசன் கூறுவதுபோல் ‘டொக்டர் தி.ஞான சேகரனினதும், குடும்பத்தினரதும், அவருடன் இயங்கிய அமைப்புக் குழுவினரதும் அயராதபணியே இந்த மாநாட்டின் வெற்றிக்கான அடித்தளம் ஆகும்’. இந்தச் செயற்பாட்டுக் குழுவினரைத் தெரிவுசெய்து செயல்புரியவைத்ததும்கூட பகைமை பாராட்டாத அந்த ஆன்மபலமேதான். அறுபது வயதடையும் திரு.முருகபூபதி அவர்களை நீடு வாழ வாழ்த்தும் அதே வேளை அவருக்குள் இருந்து மூச்சுக் காற்றாய் இயங்கும் சக்தியாகத் திகழும்

திருமதி மாலதி முருகபூபதிக்கும் பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------------------------------------------
மேலே நீங்கள் படித்த கட்டுரை தெளிவத்தை ஜோஸப் அவர்கள் எழுதியது. ஞானம் ஜூலை 2011 இதழில் வெளிவந்துள்ளது. - நன்றி - ஞானம்.
-------------------------------------------------------------------------------------------------------

முருகபூபதியின் மூன்றாம் கரம்

மேற்படி தலைப்பிலான கட்டுரையொன்று இதே வலைப்புவில் இடம்பெற்றுள்ளது. அதனையும் சேர்த்துப் டித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

sinnathambi raveendran said...

எதிரியையும் அன்பாக அணைக்கும் நண்பன்.
எதிரியின் அழுக்கினை எடுத்தியம்பாதவன்
எல்லோரையும்அரவணைக்கும் நண்பன்.
இவரிடம் நாம் நிறையப்படிக்கவேண்டும்.

வாழ்த்துவோம் என்றும் எம் பூபதியை

-Vathiri-