Friday, July 1, 2011

ஒரு வாசகியின் வாசகங்கள்!

ஒரு குடம் கண்ணீர்

கைகளில் இருக்கிறது

இரத்தக் கண்ணீர்

நெஞ்சில் வழிகிறது...!

வித்தியாசமான தலைப்போடு ஒரு முழு நாவல் கிடைத்த சந்தோசத்தில் பிரித்தால்... படித்தால்.... இரவு முழுக்கக் கனவில் அலறல்... அழுகை...!

தூக்கி வளர்த்த மாமாவையும் மகனையும் முன் வாசலிலேயே அமர்த்திக் கண்ணீருக்கு முன்னுரையை எழுதி விட்டீர்களே...

அனஸின் அணிந்துரையே ஒரு சித்திரவதைதான்! ஒரு முழு நீள ஆய்வை நடத்தியிருக்கிறார். நீங்கள் விட்டதை அவர் தொட்டுமிருக்கிறார்... பாராட்டுக்கள் அனஸ் சார்..!

தலைப்பு தனிப்பட்டதாக சொந்தமாக அமைந்தது தனிச் சிறப்பு. வித்தியாசமான தலைப்புத்தான். ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடவும் தூண்டிற்று...

01. சுவனத்தில் மின்னும் முகம்மதின் தாயாக எனது கண்ணீரும் அவனது மையித்தைக் குளிப்பாட்டியது..

02. ஹஸன் நுஹானோவிக்கின் குடும்பத்தைத் தேடிக் கண்டு பிடிப்பதில் என்னாலும் ஏதும் உதவிகள் செய்ய முடியுமாக இருந்தால்... ஏக்கமாக இருக்கிறது. அவருக்கு வெற்றி அல்லது மறதி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

03. ரீட்டாவும் ரூத்தும் இனி என்னுள் வாழ்பவர்களாய்... மனசுக்குள் தத்துப் பெற்று விட்டார்கள். ஜேன் போன்ற உள்ளங்கள் இப்போது இங்கேயும் காணக் கிடைக்குமானால்... அந்தச் சந்திப்பு சில சந்தோஷங்களைத் தரும்.. சம்பந்தமில்லாத உறவுகள் கூட பல சந்தர்ப்பங்களை வாழ்வில் இனியதாய் மாற்றும் சக்தி பெற்றிருக்கின்றன. அதற்கான நல்ல உதாரணம் ஜேன்.

04. கசக்கிப் பிழிந்து சாறு குடித்தும் வெறியடங்காத மிருகங்களினால் கருகிச் சாம்பலான என்னுயிர் அபீர் ஹம்ஸாவே... உன்னை என் மடியில் கிடத்தி... தடவிக் கொடுத்து... தலை கோதிவிடத் துடிக்குதம்மா.... இந்தத் தாய் மனசு. உன் மையித்தை அள்ளிக் கட்டிக் கொண்டு உலகின் கோடானு கோடிக் காதுகளுக்கெல்லாம் கேட்கும் படியாக கத்திக் கதறி அழத் துடிக்கிறது... புறாவே உன்னைப் பெறாத இந்தத் தாய் மனசு. சுவனத்துத் தென்றலின் சுகந்தம் பூவே உனைத் தாலாட்டும். உனை நெஞ்சில் சுமக்கும் இந்தத் தாயின் தூய்மையான பிரார்த்தனை உனை வந்து சேரும் கண்ணே....

இனி இவர்களோடு நானும் வாழ்வேன். எங்கோ பார்த்த மாதிரி... பழகிய மாதிரி... குரல்களும் அவலங்களும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு உறவும் பந்தமும் ஏற்பட்டு விட்டதான உணர்வு

நெஞ்சத்தைக் கசக்கிப் பிழிகிற வலி! கற்பழிப்புகள் அத்தனைக்கும் ஆளான வேதனை! பார்க்காமலே கூட இருந்திருக்கலாம் என்று மனசு சொல்கிறது!

உங்கள் பத்து மாத உழைப்பு மொத்தமாய்ப் பலனளித்திருக்கிறது. எத்தனை தூரம் உங்கள் பயணம் விசாலமானது என்பதை நினைத்தால் சந்தோஷமாக... பெருமையாக... பொறாமையாகவெல்லாம் இருக்கிறது. உங்கள் தேடல் எங்கெங்கெல்லாமோ பரந்து விரிந்திருக்கிறது. ஆழ்ந்தும் அணுவணுவாயும் தேடியிருப்பது... யாராலும் முடியாது!

முழு நாவலற்ற, சொந்தப் படைப்புமற்ற - என்ற வேதனையை தாள்களைப் புரட்டிப் புரட்டி நகரும் போது... அடியோடு மறந்து போனேன். தலைப்புப் பற்றியே தனியாக எழுதலாம். தத்துப் பிள்ளையைப் பேணிப் பேணி பாதுகாத்துப் பராமரித்து நமதாக்கும் பொறுப்பும் ஆழ்ந்த அக்கறையும் முழு வெற்றி தந்திருக்கிறது.

நான் செய்து முடித்த ஒன்றைக் காணும் திருப்தி! நிறைவு! நிம்மதி! ஏன்? - எனக்குத் தெரியவில்லை!

படித்து முடித்ததும் இருக்க முடியவில்லை. அது பற்றிப் பேசாமல் முடியவில்லை.

ஏதோ எனக்குத் தெரிந்த முறையில் முடிந்த வரையில் மனதைத் திறந்துள்ளேன். - உங்களைப் போல் எழுத வராது. தெரியாது. முடியாது!
----------------------------------------------------------------------------------------------------

ஒலி, ஒளி பரப்பில் நான் மும்முரமாக இயங்கிய காலம் முதல் இன்று வரை எனது நிகழ்ச்சிகளுக்கும் எழுத்துக்களுக்கும் ஒரு முக்கிய விசிறியாக இருந்து வரும் ஒரு பெண்மணி நான் அண்மையில் எழுதி வெளியிட்ட “ஒரு குடம் கண்ணீர்” நூலைப் படித்து விட்டு எழுதியிருந்த முழு நீள விமர்சனத்தின் ஒரு பகுதியே மேலே நீங்கள் படித்தது.

நூலில் இடம் பெற்றுள்ள 25 கதைகள் பற்றியும் அவர் எழுதியிருந்தார். நீளம் கருதி அவற்றில் நான்கினையும் அவரது விமர்சனத்திலிருந்து சிறு பகுதியையும் இங்கு தந்துள்ளேன்.

இந்த அன்புக்குரிய விசிறி இலங்கையில்தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் இந்த நிமிடம் வரை அவரை நான் நேரில் சந்தித்தது கிடையாது!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

அந்த வாசகரின் விமர்சனத்தைப் படிக்கும் போது.. என்க்குள்ளும் இதனை எப்படியாவது வாசித்து விட வேண்டும் ஏக்கம் கூடவே வருகிறது.. அவரது உணர்வு பூர்வமான வரிகள் என் நெஞ்சத்தையும் ஒரு கணம் அசைய வைத்து விட்டது. ஒரு குடம் கண்ணீர் என் கைக்குள்ளும் வரும் ஒரு நாள்..