Friday, July 29, 2011

கடையநல்லூர்க் கவிஞனைக் கண்டேன்!


கவியரங்குக்குத் தலைமை வகித்த தமிழன்பன் அடுத்து கடையநல்லூர் கமால் என்று அழைத்ததும் நான் ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

காயல்பட்டண இலக்கியப் பெருவிழாவின் அழைப்பிதழ் மூன்று தினங்களுக்கு முன்னரே காணக் கிடைத்தும் கவியரங்கில் பங்கு பற்றுவோர் தொகை 34 ஆக இருந்ததால் அனைவரதும் பெயர்களையும் பார்க்கும் எண்ணம் தோன்றவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
இல்லையென்றால் மூன்றாவது அணியில் இரண்டாவதாக இடம்பெற்றிருந்த அவரது பெயர் கண்ணில் பட்டிருக்கும்.

எனது நினைவுகள் சட்டென 1979ல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நோக்கி நகர்ந்தன. அழிந்தும் அழியாமலும் ஞாபக அடுக்குகளில் அந்த வேளை பதிவானவர்களில் சகோதரர் கடைய நல்லூர் கமாலும் ஒருவர்.

அவ்வேளை நான் சந்தித்து உரையாடிய இந்தியப் படைப்பாளிகளில் அவர் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கிறார். அதற்குக் காரணம் அவர் எனது ஆட்டோகிராபில் எழுதிய ஒரு சிறு கவிதை.

கவிஞர் புரட்சிக் கமாலும் கூட,

ஊனாய் உயிராய் உயிர் மூச்சாயெல்லாம்
தானாயிலங்கும் தமிழ்
என்று எழுதித் தந்த அந்த ஆட்டோகிராபை நீண்டகாலமாக நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதாவது இரண்டு கமால்கள் எழுதிய ஆட்டோகிராஃப் அது!

பலமுறை இந்தியா சென்றும் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டும் கூட சகோதரர் கமால் அவர்கள் என் கண்ணில் பட்டதில்லை.

கவியரங்கில் என்னைக் கவர்ந்தவர்களில் கமாலும் ஒருவர். 34 பேரும் கவிதை வாசித்து முடிக்க நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை இழந்து விடுவேன் என்றுதான் நினைத்திருந்தேன்.

இரண்டாம் நாள் ஆய்வரங்குகளுக்குள் புகைப்படம் பிடிப்பதற்காகச் சென்ற போது ஓர் அரங்குக்குள் மனிதர் அமர்ந்திருந்தார். வெளியே வந்து சைகை செயது வெளியில் அழைத்து ஞாபகப்படுத்தினேன். மகிழ்ந்தார்.  அதே இடத்தில் இருவரும் நின்று படம் எடுத்துக் கொண்டோம். அன்றே ஊர் திரும்புவதாகச் சொன்னார்.

மூன்றாம் தினம் தமிழ் மாமணி விருது பெறுவதற்காக மேடையில் அமர்ந்திருந்த போது எனது பின்புறமாக இருந்து யாரோ ஒரு சகோதரர், “கமால் பேசுகிறார்.. உங்களுடன் பேச வேண்டுமாம்” என்று சொல்லி அலை பேசியைத் தந்தார். லைனில் இருந்த சகோதரர் கமால் தமிழ் மாமணி விருது பெறுவதற்காக எனக்கு வாழ்த்துத் தெரிவித்ததும் நான் அசந்து போனேன்.

குறிப்பிட்ட நேரத்தில் ஊரிலிருந்து அவர் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தது என்னை மிகவும் சந்தோசப்படுத்தியது.



சகோதரர் கமால் அவர்களது வாழ்த்துச் செய்தியை அலைபேசியில் கேட்டுக் கொண்டிருக்கும் வேளை சகோதரர் அகமட் எம். நஸீர் மேடையை புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படமே மேலே உள்ளது.

நான் நாட்டுக்கு வருவதற்கு முன்னரே சகோதரர் கமாலின் மின்னஞ்சல் வந்து விட்டிருந்தது. 32 வருடங்களுக்குப் பின்னரும் அவரது நட்பும் பாசமும் என்றும் மறக்காதது.

இனி சகோதரர் கமால் அவர்கள் கவியரங்கில் படித்த கவிதை.

உத்தம நபிகள் என்னும்
ஊடகத்தைத் தந்துஎங்கள்
உள்ளத்து இருள்நீக்கி
ஒளியேற்றி வைத்தவனே!
உன்திருநாமச் சாவி கொண்டு
திறக்கின்றேன் என்கவிதை !

தொண்டுள்ளம் கொண்டோரே !
தூயகலி மாவின்பொருள்
கண்டுள்ளம் ஏற்று
கனிவடையும் சான்றோரே !
சிறுமக்கம் காயலின்
பெருமைக்க ளேநீங்கள்
செவியரங்கம் திறந்து
கவியரங்கம் வந்துள்ளீர்
அனைவருக்கும் எனது
அஸ்ஸலாமு அலைக்கும் !

காயல்பட்டினம்-
ஆன்மீகச் செல்வர்களின்
காதல் பட்டினம் !
உத்தம நபிகளின் ஊடகங்களான
ஒலிமார்களின் தலைநகரம் !
சாத்தானுக்குத் தொலைநகரம்!
சத்தியத்தின் கலைநகரம் !
ஆன்மீகத்தின் அலைநகரம் !
திருப்புகழின் உலை நகரம் !
காயல்பட்டினம்-
பகுதாதின் பாதிப்பு !
மக்காவின் மறுபதிப்பு !
ஆன்மீகச் சோற்றில்
அளவான உப்பு !
கடல் அலைக் கரங்களால்
வாரி வழங்குகின்ற
தாராள மனம்கொண்ட
"தர்மபுரியும்" இதுதான் !

வானமுதத் தேன்கலந்து
வள்ளல் நபிநாயகத்தின்
ஆன்மீகக் கல்வியை
ஊட்டிவிடுகின்ற
ஊட்டியும் இதுதான் !

தெருக்கள் தோறும்
தீனிறைப் பள்ளிகள்
இருப்பதினால் இது
திருப்பதியும் ஆனது !

கறைமுகம் இல்லாத்
துறைமுகம் இந்தக்காயல் !
மதரசாக்கள் என்னும்
துறைமுகங்களில்
இஸ்லாத்தின் கல்வி
ஏற்றுமதியாகிறது !

இந்தப்
பட்டினத்துப் பாலைகளில்
படிந்திருக்கும் தூசுகளில்
இறைநேசச் செல்வர்களின்
எழிற் பாதம்பட்டதினால்
சுவனத்து மகரந்தம்
சூல்கொண்டிருக்கிறது !

இங்கே-
களவுகள் பிணக்குகள்
கடுகளவும் இல்லையதால்
காவல் நிலையம் இந்தக்
காயலிலே இல்லை !

ஈமானின் "ஆறு"
இங்கே இருப்பதினால்
இயற்கையாய் ஆறுகள்
இங்கே இல்லை !

 ஈமானும் சீமானும்
இரண்டறக் கலக்கின்ற
காயலிது!
அதனால்-வறுமை எனபது
இல்லவே  இல்லை !

ஆமாம்-
தீனிலும் வறுமை இந்தத்
திசையிலே  இல்லை !
வாழ்க்கையிலும்
வறுமை இந்த
வட்டாரத்தில் இல்லை !

இங்கே-காமிலான ஒலிகளின்
கல்லறைகள் எல்லாமே
கர்த்தனின் செய்திக்
கருத்துரைகள் பரப்புகின்ற
ஊடகங்களின்
ஒளிபரப்புக் கோபுரங்கள் !

இங்கே
ஒரேயொரு தெருதான்
நெசவுத் தெருவென்று
நினைத்துக் கொண்டீர்களா ?
இல்லை -
எல்லாத் தெருக்களுமே
எழில் நெசவுத் தெருக்கள் தான் !
தௌஹீதுப் பட்டாடை தறி
நெசவு நடக்கின்ற
நெஞ்சத்தில் நிறைகின்ற
நெசவுத் தெருக்கள் !

காயல் பட்டினம்-
தமிழ்த் தாய்க்குப் பாலூட்டிய
பிள்ளைகள் பிறந்த ஊர் !
அவர்கள் ஊட்டியது
வெட்டிப் பாலான
புட்டிப் பால் அல்ல -
வானப் பால்மழை  தோற்கும்
ஞானப் பால் !
இங்கே நடப்பது
நாடகங்கள் நடத்தும்
ஊடகங்கள் அல்ல -
பாடங்கள் நடத்தும்
பல்கலைக் கழகங்கள் !

ஒலிமார்கள்-
நபிகள் நாயகத்தின்
நடமாடும் ஊடகங்கள் !
நமதுகண்மணி நாயகமோ
அல்லாஹ்வின் ஒளி பரப்பும்
அழகான ஊடகம் !
மூத்தகுடிப் பிறப்புக்கும்
முன்மாதிரி ஊடகம் !
மூச்சுக் காற்றையும்
சலவை செய்ய வந்த
மூலவ னிறைவனின்
பேச்சான ஊடகம் !

பெருமானாரின்பிறப்புக்கு முன்பு
வெளிச்சத்தை விட்டில்கள்
கடித்துத்  தின்றன !
நெருப்பினைக் கரையான்
உண்டு கொழுத்தன !
பாலைவனமே
பழுதாகிக் கிடந்தது !
உத்தம நபிகளஎன்னும்
ஊடகம் வந்தபின்
சூரியனுக்கு சூடுமட்டுமல்ல
சொரணையும் வந்தது !
 நிலவின் அகங்காரம்
நின்றுபோனது !
பூமியும் கூட
புள காங்கித்தது !
வெளிச்சம் தன்
இருட்டு முக்காட்டினை
உதறிவிட்டு அகிலங்களுக்கு
ஆதரவானது ! 

மானாட மயிலாட
மனிதர்களின் மனங்களெல்லாம்
மகிழ்ச்சியினில் கூத்தாட
ஊடகம் ஒன்று தன்
ஒளிபரப்பை துவங்கியது !
ஆயிரத்து நானூறு
ஆண்டுகளுக்கு முன்னால் !

அது ஒருபத்திய விரதத்தின்
சத்திய மாதம் !
குகைக்குள்ளிருந்த ஒளித்திரையில்
ஓதுவீராக -
 என்ற ஒலிக்குறிப்போடு
ஒளிபரப்பு ஒன்று
உருவானது அன்று !
பாவ நாடக மேடை
திரைவிழ தூவ 
கருணையின் மழையின்
துளிவிழ
ஊடகமாய் நபி
உதித்து வந்தனர் !

அந்த
ஊடகம் உலகில்
உருவான பின்னர்தான்
திருமறை எனும் தொடர்
நமக்குத்திருத்தமாய்க் கிடைத்தது !
அந்தத் தொடரில்
ஆபாசங்கள் இல்லை.
 ஆசா பாசங்களின்
அளவீடு இருந்தது !
சித்திகதைகளின்
சீரியல் இல்லை.
சித்தி அடைகின்ற
சீரிய வழிகள் இருந்தன !.
அத்திப்பூக்கள்
அங்கே இல்லை-
மனிதனை
செத்திச் செதுக்கும்
நெறிகள் இருந்தன !
அந்தத் தொடரில்
வயலும் வாழ்வும் அல்ல-
செயலும் வாழ்வும்
சிறக்கும் வழிகள் இருந்தன !

குற்றம் கொலைகள்
கொள்ளை நிலைகளை
சத்தம் போட்டு
சாற்றும் ஊடகமாய்
பெருமானார் அன்று
பிறப்பெடுத்து வரவில்லை !

குடியுடன் கொலையைக்
கோர்த்து வாழ்ந்த
அடிமடையர்களை
அல்லாஹ்வின் திசைக்கு
திருப்பியும் திருத்தியும்
திருமறை வழியில்
திருந்தியும் வாழும்
திலகங்களாய் மாற்றினார்கள் !
ஊடகத்தின் நோக்கம்
உண்மை ஆனது அப்போது !

அந்த ஊடகம்
தனது ஒளிபரப்பை
ஹிராக் குகையின்
இருட்டில் துவங்கியது !
அதனால் நாமின்று
வெளிச்சத்தில் வாழுகிறோம் !
அந்த ஊடகத்தின்
கம்பிவட முகவர்களே
காமிலான ஒலிமார்கள் !
உத்தம நபிகளஎன்னும்
ஊடகம் இல்லையென்றால்
இருட்டுக்குள்தான் நாம்
இன்னும் இருந்திருப்போம் !
உயர்குண நபியின்
ஊடகத் திரையில்
6666  தொடர்கள்
ஒளிபரப்பப் பட்டதினால்
நமது உள்ளங்கள் மட்டுமல்ல
இல்லங்களும் கூட
இருள் அற்றுப் போயின !

இறைவா!
மூலவனின் ஒளிக்கு
முகவரி தந்த
முத்து நபி நாயகத்தின்
சொத்துக்கள் ஒலிமார்கள்!
அந்தஒலிமார்கள் என்னும்
ஊடகத் தொடரால்
எங்கள் கவனங்கள்
உன்பக்கமே திரும்ப
உதவி செய்வாய் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: