பதினைந்து நாட்கள் இந்தியப் பயணம் முடித்து 18ம் திகதி நாடு திரும்பியிருந்த எனக்கு பொது நிகழ்வு ஒன்றுக்கான அழைப்பு 19ம் திகதி ‘எங்கள் தேசம்’ பத்திரிகைப் பொறுப்பாசிரியர் சகோதரர் பஷீர் அலியிடமிருந்து அலைபேசி வாயிலாக வந்தது.
‘எங்கள் தேசம்’ பத்திரிகையின் 200 வது இதழ் வெளியீட்டை ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக நடத்தும் திட்டம் அது. அடுத்த நாள் நிகழ்வு. அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று அவதிப்பட்டார். வேண்டாம், நான் வந்து கலந்து கொள்வேன் என்று அவருக்கு உறுதியளித்தேன்.
தமிழ் நாட்டு வெய்யிலில் மண்டை காய்ந்து போய் வந்திருந்தேன். (ஏற்கனவே அப்படித்தானே உங்கள் மண்டை இருக்கிறது என்று நினைத்துச் சிரிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்!) நாடு திரும்பிய பிறகு வீட்டை விட்டு வெளியேறிய முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது.
20ம் திகதி பி.ப. 4.45 அளவில் மண்டபத்துக்குள் சென்று விட்டேன். மண்டபம் சிறியதுதான் என்ற போதும் அது நிறைந்திருந்தது ஒரு சந்தோசத்தை ஏற்படுத்தியது. பத்திரிகைத்துறையோடு சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்படாத சமூகாபிமானிகள், எழுத்தாளர்கள் என்று பரவலாக அமர்ந்திருந்தார்கள். மேடையைப் பார்த்த போது ஒரு கலக்கம் வந்து விட்டது. இவ்வளவு பேரும் பேசி முடிக்க சஹர் நேரமாகும் என்று நினைத்தேன். எனது கலாசாலைத் தோழர் ஷெய்க் அகார் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
ஷெய்க் அகார் ‘எங்கள் தேசம்’ பத்திரிகையை நீண்ட நாட்களாகப் படித்து வருகிறார் என்பதும் அப்பத்திரிகையில் அவதானம் கொண்டிருக்கிறார் என்பதும் உரையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அது இன்னொரு சந்தோஷமாகவும் இருந்தது.
கிண்ணியா அமீர் அலி கவிதை படித்தார். வழமை போல திருப்புகழ் ஸ்டைல், புதுக்கவிதை, வசன கவிதை என்றெல்லாம் கலந்து சாம்பாராக இருந்தது. சில சிலேடைச் சொற்கள் ரசிக்கத் தக்கவையாக இருந்தன. 21ம் திகதி அமீர் அலி அலைபேசியில் தொடர்பு கொண்டார். பல விடயங்களையும் கதைத்தோம். கவிதை பற்றிக் கேட்டார். இந்தச் சாம்பார் ரசம் எனக்குப் புளித்து விட்டதைச் சொன்னேன். விமர்சியுங்கள் என்று சொன்னார். ஒரு கொத்து ரொட்டி போட்டு விடவா என்று கேட்டேன். ‘தாராளமாக’ என்று சொல்லி அனுமதி வழங்கினார்.
மண்டபத்தில் இலவச 200வது இதழைத் தந்தார்கள். கேக் சகிதம் குளிர்பானம் தந்து உபசரித்தார்கள்.
மாவனல்லைக் கலவரத்தில் பிறந்தது ‘எங்கள் தேசம்’. அந்தக் கட்டத்திலாவது நமக்கு இப்படி ஒரு பத்திரிகை தேவை என்பது உறைத்ததே பெரிய விசயம்.
இந்தக் கலவரம் பற்றிய உண்மைச் செய்தியைப் பிரசுரிக்க முயன்ற ஒரு முஸ்லிம் பத்திரிகையாளர் பதவி மாற்றம் செய்யப்பட்டார் என்பது பலருக்குத் தெரியாது. அப்போது தினகரனில் ஆசிரியராக இருந்தவர் ஒரு முற்போக்கு எழுத்தாளர். பிரதம ஆசிரியருக்கும் செய்தி ஆசிரியருக்குமிடையில் இந்த விவகாரம் ஒரு வாக்குவாதமாக நடந்த பின் அந்தச் செய்தி அதாவது உண்மைச் செய்தி தவிர்க்கப்பட்டது. அதோடு விட்டிருக்கலாம். முற்போக்கு எழுத்தாளர் அந்த முஸ்லிம் செய்தியாசிரிரை லேக்ஹவுஸ_க்குள்ளேயே தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றினார். இதில் ஆச்சரியம் என்னவெனில் தமிழ் வெளியீடுகளுக்கு அவ்வேளை பொறுப்பாக இருந்தவர் சகோதரர் என்.எம். அமீன்.
அரச கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போது அவசியப்பட்டால் மாத்திரமே கொட்டாவி விடலாம். சகோதரர் அமீன் தலையிட்டிருந்தால் அநேகமாக அவரும் அப்பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதுதான் சுயாதீனமான ஒரு பத்திரிகை எத்தனை முக்கியத்துவம் மிக்கது என்பதை நாம் உணர்கிறோம். நமக்கொரு பத்திரிகை இல்லை, பத்திரிகை இல்லை என்று பைத்தியம் பிடித்தவர்கள் போல சொல்லிச் சொல்லிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர அதைச் சாதிக்க யாரும் முன்வந்ததில்லை. இந்தப் பாரிய இடைவெளியைத்தான் இன்று நவமணி, எங்கள் தேசம், மீள்பார்வை, விடிவெள்ளி போன்றவை ஓரளவு நிவர்த்தி செய்து வருகின்றன.
ஓர் எழுத்தாளனாக ‘எங்கள் தேசம்’ பத்திரிகையின் துணிச்சலைச் சொல்ல வேண்டும். 2004ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 2005ன் ஆரம்பப் பிரிவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தலைமைத்துவத்துடன் கருத்து வேறுபாடு கொண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றார்கள். அதை அரசியல் உட்பார்வையூடாக பிரிந்து செல்ல வைக்கப்பட்டார்கள் என்றும் கூடச் சொல்ல முடியும். இந்த வேளை இம்மூவருக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் கிடைத்தன. ஆனால் முஸ்லிம் அரசியல் நாறியது.
எலும்புத் துண்டுக்குச் சோரம் போனார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸ் நிர்வாக பீடமும் வேறு ஒரு தொடர்பைக் கொண்டு தலைமைத்துவத்தை அம்மூவரும் மாறிமாறி வைதார்கள். (அதே அரசில் அதே எலும்புகளை ஏயைவர்கள் பெற்றது வேறுகதை) இந்த நிலையில் எனக்குள் பிறந்தது ஒரு கவிதை. அதை எந்தப் பத்திரிகையிலும் பிரசுரிக்க முடியாது என்றே நினைத்திருந்தேன். நான் வெளியிடும் சஞ்சிகையான ‘யாத்ரா’வும் தாமதமாவதால் அது கிடப்பில் கிடந்து.
அக்காலப் பிரிவில் எங்கள் தேசத்தின் கவிதைப் பகுதியை சகோதரர் எஸ்.நளீம் பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் என்னிடம் ஒரு கவிதை தாருங்கள் என்று கேட்டார். கவிதை இருக்கிறது. ஆனால் உங்களால் அதைப் பிரசுரிக்க முடியாது என்றேன். அவர் எங்கள் தேசத்தின் ஆத்;ம வலிமையை நம்பியிருந்தார் போலும். பலவந்தமாகப் பெற்றுச் சென்றார். அடுத்த இதழில் அந்தக் கவிதை பிரசுரமாகியிருந்தது. உண்மையில் நான் ஆச்சரியப்பட்டேன். இதுதான் அந்தக் கவிதை.
தட்டுக்கு வந்த விட்டது
அப்பம்
பங்கிடுவதற்குத் தயாராக
குரங்குகள்
அப்பம் ருசி
அதைவிட ருசி அதன் அருகு
நமது அருகு
பங்கீட்டில்
முதலில் பிய்யப்போவது
அருகு
நமது அருகு
குரங்குகள்
வாயில் போட்டுக் கொள்ளாமல்
பார்த்துக் கொள்ள நீ
நான் எனும் நீ
எங்கள் தலைவிதி
நீ
கச்சையவிழ்த்துத் திரிகிறாய்!
என்னதான் இயக்கப் பின்னணி இருந்த போதும் எங்கள் தேசமும் பல தடைகளைத் தாண்டித்தான் வந்திருக்கிறது என்பது எனது அனுமானம். இதை சகோதரர் அஸாமிடம் கேட்டால் சில வேளை சொல்லக் கூடும். கடந்த காலங்களில் பயில் நிலை ஊடகச் செயற்பாட்டாளர்கள் பங்களிக்கும் நிலையிலிருந்தே இன்றைய வளர்ச்சி நிலையை எட்டியிருக்கிறது.
என்னைப் பொறுத்த வரை இன்னும் சில விடயங்களில் எங்கள் தேசம் கவனம் செலுத்த வேண்டும்.
01. முஸ்லிம்களின் வாழ்வியலைப் பேசும் சிறுகதைகள் இடம் பெறச் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு தென்னிந்திய எழுத்தாளர் ஜே.எம். சாலி அவர்கள் எழுதிய ‘சாயல்’, ‘நோன்பு’ ஆகியவற்றைச் சொல்லலாம். ஆளுர் ஜலால் எழுதிய ‘மினாராக்கள் நிமிர்ந்து நிற்கின்றன’ தொகுதியில் உள்ள எல்லாக் கதைகளையும் சொல்ல முடியும். இவ்வாறான கதைகளை முன்னுதாரணமாகக் கொண்டால் இஸ்லாமிய வரை முறையூடா முஸ்லிம்களின் வாழ்வியலைப் பேச முடியும்.
02. சமூகவியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் செயற்பாட்டு இயக்கங்கள் சார்ந்தோரைத் தேடிப் பிடித்து நேர்காணல் செய்தல். பல அமைப்புகள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகளோடு முடங்கிக் கிடப்பதிலிருந்து செய்பாடுடையவையாக்க அதன் மூலம் சாத்தியமாகும். செயற்பாட்டில் இருப்போரை மேலும் தூண்டவதாகவும் அது அமையும்.
03. ஒவ்வொரு முறை அமைச்சுக்கள் மாறும் போதும் அவற்றின் கீழ் இயங்கும் சபைகள், திணைக்களங்கள் மாறுபடுகின்றன. இவற்றில் நிர்வாக தரத்தில் இருக்கும் முஸ்லிம் அதிகாரிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
04. சராசரியாக அரபுக் கலாபீடங்கள், மதரஸாக்களிலிருந்து வருடத்துக்கு 300 பேருக்கு மேல் அறபு மொழி கற்று வெளியேறுகிறார்கள். அவர்களில் திறமையானோரை அணுகி அறபு இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருதல். அவர்களில் அனேகர் ஹவுஸ் மேட்டின் எஜமானருக்கு அறபியில் கடிதம் எழுதிக் கொடுப்பதுடன் தமது அறபு மொழி அறிவை மட்டுப்படுத்தி விடுகின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.
05. எல்லா முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாடுகளையும் சமூகத்திடமும் அதிபர் ஆசிரியர்களிடமும் விசாரித்து அறிந்து வெளிப்படுத்துவது. கடந்த கால பரீட்சைப் பெறு பேறுகள், ஆசிரியர் குறைபாடு, சித்தியடைந்த மாணாக்கர் விபரம் போன்றவற்றைத் தருதல். (பாடசாலை அதிபர் ஆசிரியர் குழாத்தின் குறூப் போட்டோ கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.)
06. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களின் பொதுக் குறைபாடுகளை வெளிப்படுத்துவது. உதாரணமாக - பாதைகளின் சீர் கேடு. அதற்கான காரணிகளை ஆராய்வது, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளமைக்கான சமூகப் பெரியவர்களினதும் படித்தவர்களதும் அசட்டைத் தனத்தை வெளிக் கொணரல்.
07. எங்கள் தேசம் பத்திரிகையை இணையத் தளத்தில் இடம் பெறச் செய்தல். (செய்திகள், கட்டுரைகள் வேறாக ஒவ்வொரு இதழாக இடம் பெறச் செய்தால் ஆபத்துக்கு உதவும்)
பாராட்டத்தக்க பல பணிகளை எங்கள் தேசம் மேற்கொண்டே வருகிறது. அவற்றை விலாவாரியாக ஆய்வு செய்து ஒரு தொங்கல் காண்பதற்கு எங்கள் தேசத்திடம் மாத்திரமே ஓர் இளைஞர் படை இருப்பதாக நான் கருதுகிறேன்.
வாராந்தம் எங்கள் தேசம் வெளிவரவிருக்கிறது என்பது இனிப்பான செய்தி. அது இன்னும் காத்திரமாகவும் தாக்கமுடையதாகவும் வெளிவரவேண்டுமானால் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்புமாகும். எங்கள் தேசம் சார்ந்துள்ள இயக்க நோக்கத்தை மட்டும் முன்னெடுத்துச் செல்லும் பத்திரிகையாக செயற்பட்டதில்லை. எனவே சகலரும் அதனுடன் கைகோர்க்க வேண்டும்.
இன்று 23ம் திகதி ஒரு விடயம் சம்பந்தமாக பொறுப்பாசிரியரைத் தொடர்பு கொண்டேன். மேடையில் நிறையப் பேர் பேச இருந்த காரணத்தால் வேளைக்கே புறப்பட்டு வந்து விட்டதைச் சொன்னேன். மஃரிபுடன் கூட்டத்தை நிறைவு செய்த விட்டதாக அவர் சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
மேடையில் அமர்ந்திருந்த பேச்சாளர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நினைக்கிறேன்.
குறிப்பு
01. பெனரில் “எங்கள் தேசம்” என்று எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அழகாக இருந்தன. அதையே பத்திரிகைக்கும் பயன்படுத்தினால் நல்லாயிருக்கும் அல்லவா?
02. நீங்கள் தந்த மென்பானத்தைக் கொஞ்சம் குளிராக்கித் தந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். (குறை சொல்லாட்டித்தான் நமக்குத் தூக்கம் வராதே)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
Appreciated. Tks. -k.munas
Post a Comment