Sunday, July 31, 2011

கன்னியாகுமரியிலிருந்து ஒரு கடிதம்!


இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுததான தென்றல் சேவையில் இடம்பெற்ற “சந்தித்த வேளை” நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினேன்.

அறிவிப்பாளர்களான கலிஸ்டா லூக்கஸ், ஏ.எல்.ஜஃபீர் ஆகியோர் என்னுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியைக் கேட்ட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

இங்கே தமிழகத்திலிருந்து ஒரு நேயர் ஒரு கடிதத்தை எனது முகப்புத்தகத்துக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடிதத்துக்கான பதிலை நண்பருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கும் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சியில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி பின்னொரு பதிவு இடப்படும்.

இனி நேயரின் கடிதம்.

---------------------------------------------------------------------------------------------------
இனிய மாலை வணக்கம் எமது முன்னாள் அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர்,நாடக நடிகர் திரு. அஷ்ரஃப் சிகாப்தீன் அவர்களே! நல.நலமறிய ஆவல்.


நான் ஓர் இலங்கை வானொலியின் தீவிர நேயர்.என் மனதில் பட்டதை எழுத்துக்களில் வடிக்கத் தெரியுமே அன்றி கவி புனைய தெரியாது.தெரிந்திருந்தால் தங்களைக் கவிதைச் சரங்களால் மாலை சூட்டியிருப்பேன்.

இன்று 31.7.2011 நமது இலங்கை வானொலி தென்றலில் காலை 09.00 மணிக்கு சந்தித்த வேளை நிகழ்ச்சியில் அதிதியான தங்களது இனிய செவ்வியைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன்.மிகுந்த மன நிறைவைத் தந்தது தங்களது பேட்டி யென்றால் அது மிகையில்லை.ஆமாம்.கடந்த வாரம் நமது முன்னாள் அறிவிப்பாளரும் அமரர் சில்லையூரார் அவர்களின் துணைவியாருமான திருமதி. கமலினி செல்வராஜன் அவர்களின் பேட்டியும் சில வாரங்களுக்கு முன்னர் நமது மூத்த ஒலிபரப்பாளர் திரு.ஜோசப் ராஜேந்திரன் அவர்களின் பேட்டியும் இதே நிகழ்ச்சியில் ஒலித்தது.இருவரும் இந்த வானொலியில் அறிவிப்பாளர்களாக இருந்தவர்கள் என்ற நினைவுகள் கொஞ்சமும் இன்றி அனைத்தையும் மறந்து நிகழ்ச்சியைக் கெடுத்துவிட்டு சென்றார்கள்.அவ்வாறு
இவ்விருவரும் தாம் பணியாற்றிய வானொலித்துறையை அறவே மறந்தது என்னைப் போன்ற பழைய நேயர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்பது தான் உண்மை.


ஆனால் தாங்கள் கடந்த காலத்திய நினைவுகள் அனைத்தையும் மறவாமல் மிக சுவாரசியமாக மிக யதார்த்தமாக அதிக ஆங்கில கலப்பின்றி பேட்டியை வழங்கியது நிகழ்ச்சியை விறு விறுப்படையச்செயதது.இன்னும் இன்னும் உங்கள் பேட்டி தொடரக்கூடாதா; இன்னும் இன்னும் ஏராளமான விடையங்கள் கிடைக்குமே என்ற ஓர் ஏக்கத்தை உருவாக்கியது.

1989 களில் ஆசிய வர்த்தகசேவை என்ற பெயரில் கம்பி வட தொலைக் காட்சிகளின் ஆதிக்கங்கள் இல்லாத காலத்தில் 340 தசம் 1 மீட்டர் 882 கி.ஹெ மத்திய அலைவரிசையில் ஓங்கி ஒலித்த எமது கொழும்பு சர்வதேச வானொலியில் தங்களால் தொகுக்கப்பெற்ற நெஞ்சில் நிறைந்தவை, மந்தமாருதம் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி வாசித்தது கணீரென்று இன்றளவும் எனது ஒலிப்பதிவுகளில் உள்ளது. உங்களைப் போன்றோர் இந்த வானொலியிலிருந்து விலகிச் சென்றது எம்மைப் போன்ற பழைய நேயர்களுக்கு (பழைய பாடல் விரும்பிகளுக்கு) மிகப்பெரிய இழப்பு.


என்றும் அக்கால பசுமையான நினைவுகளுடன்...................................


சகாதேவன் விஜயகுமார்,
17-5 எச்,மாதவபுரம்,
கன்னியாகுமரி-629702, தமிழ்நாடு.

---------------------------------------------------------------------------------------------
இந்தக் கடிதத்தில் கடந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள் பற்றியும் நேயர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சிகளை நான் கேட்டிருக்கவில்லை. அதே வேளை அவரது கடிதத்தில் உள்ள அந்தப் பகுதியை மறைத்து விடவும் விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருக்கும் என்பதோடு மட்டும் நான் நிறுத்திக் கொள்கிறேன்.

நிகழ்ச்சியைக் கேட்டு நாள் முடிவதற்குள் என்னை முகப்புத்தகத்தில் தேடிக் கண்டு பிடித்து கடிதம் அனுப்பிய அவரது வானொலி நெஞ்சத்தையும் என் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையும் பாராட்ட விரும்புகிறேன்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

Shaifa Begum said...

சேர் இப்படியெலல்ாம் நேயர்கள் சொல்லும் எங்களுக்கும் இந்த நேர் காணலை கேட்க வேண்டுமென்ற ஆவல் வெகுவாகவே வருகிறது. முடிந்தால் உங்கள் வலையத்தில் பதிவிறக்கம் செய்தால் என்னை போன்ற நாட்டுக்கு வெளியில் உள்ளவர்களும் கேட்பார்கள் தானே...

சுதர்ஷன் said...

தென்றல் கேட்டு நாட்கள் ஆகி விட்டது .தங்களின் வலைப்பூ இப்போது தான் பார்க்கிறேன் . மகிழ்ச்சி :) எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்.

நிரூபன் said...

வணக்கம் சகோ,
உங்களின் ஆரம்ப கால வானொலி நினைவுகளை மீட்டும் வண்ணம் தமிழகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற கடிதம் அமைந்திருந்தது.

ரசித்தேன் சகோ.

shenbagam said...

ஒரே நாட்டைச் சேர்ந்த ஒரே இனத்தைச் சேர்ந்த இருவருக்குள் இந்த கருப்பு-வெள்ளை பேதமென்றால் எங்கே போய் முட்டிக்கொள்வது. என்ன இருந்தாலும் கருப்பைக் கண்டு அலறிய வெள்ளைப் பெண்மணிக்கு விமானப் பணிப்பெண் தனது புத்தி சாதுரியத்தால் முகத்தில் கரியைப் (மறைமுகமாக) பூசிவிட்டார். விமானப்பணிப்பெண்ணுக்குத் தான் ஒரு சபாஷ்.
சகாதேவன் விஜயகுமார்