Friday, August 19, 2011

கொகோ ட்ரைஃபி ரைஸ் - அதியற்புத உணவு!



சுட்ட கருவாட்டுடன் தேங்காய்ப் பூச்சோறு சாப்பிட்டிருக்கிறீர்களா?

நண்பர் திடீர் எனக் கேட்டார். பலரையும் போலவே கொஞ்சம் சுவையாகச் சாப்பிடும் விருப்பம் உள்ளவர்கள் நாங்கள்.

அவர் சொல்லும் சாப்பாடு என்னவென்று விளக்கமளிக்கத் தொடங்கிய போது - பழைய கதைகளில் வருவது போலச் சொல்ல வேண்டுமானால் - நாக்கில் ஜலம் ஊறியது.

“நாளைக் காலை தயாராக இருங்கள். காலையுணவு எங்கள் வீட்டில்.”

நண்பர் இதைச் சொல்லிவிட்டுப் பிரிந்த போது இரவு எட்டு மணியளவில் இருக்கும்.

தனது மனைவியை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். நாங்கள் உணவு முறையில் பொதுப் பார்வையில் கொஞ்சம் கிறுக்குத் தனமானவர்கள் என்பதை அவரது மனைவியும் தெரிந்துதான் இருந்தார். ஆனால் மற்றொரு நபருக்கு சாதாரண உணவுகளை வழங்க நமது பெண்கள் ஒப்புக் கொள்வதில்லை.

வீட்டுக்கு வேறொருவர் சாப்பிட வருகிறார் என்றால் அது ஒரு விருந்து. எனவே அதற்குரிய வகையில் சிறந்த முறையில் உணவு வழங்கவில்லையென்றால் சம்;மதம் கொள்ள மாட்டார்கள். அப்படியேதான் குறித்த உணவைத் தயார் படுத்தினாலும் கூட இன்னும் சில விசேட உணவு வகைகளையும் தயாரித்து வைத்து விடுவார்கள்.

காலை எட்டரைக்கு வந்து வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நான் நினைத்தது போல்தான் நடந்திருந்தது.

குறிப்பிட்ட உணவுக்கு அப்பால் முட்டைப் பொரியல், மீன் கறியென்று வேறு சில ஐட்டங்களும் இருந்தன.

சுடச் சுட இருந்த சோற்றில் தேங்காய்ப் பூவைப் போட்டுப் பிதறி சுட்ட கருவாட்டுடன் வெட்டியெறிய ஆரம்பித்தோம்.

இந்த உணவின் ருசி இருக்கிறதே.... அதை என்ன வார்த்தைகளில் நான் சொல்வது?

‘கியலா வெடக் நெஹெ...’ (சொல்லி வேலையில்லை!)

அப்படி ஒரு ருசி!

நட்சத்திர ஹோட்டல்களில் நமது கிராமிய உணவுகள் விற்பனைக்கு உண்டு. ஏதாவது வதிவிடக் கருத்தரங்குகளுக்குச் சென்று நட்சத்திர ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் எனது காலையுணவு இலைக் கஞ்சியும் கருப்பட்டியும்!
 
Coco dryfi Rice என்று மெனு அட்டையில் கீழைத்தேய உணவு வகைகளில் ஒரு பெயர் இருக்குமானால் நீங்கள் கடுமையாக யோசிக்கத் தேவையில்லை. ஒரு கவளம் சோறும் கொஞ்சம் தேங்காய்ப் பூவும் இரண்டு கருவாட்டுத் துண்டுகளும் கொண்ட உணவுக்குத்தான் அந்தப் பெயராக இருக்கும். சாப்பிட்டு நிமிர்ந்தால் ஆகக் குறைந்தது 35 டாலர்கள் பில் வருவது நிச்சயம்!


சில வீடுகளில் இந்த சாதாரண அதி ருசிமிக்க உணவைத் தயாரிப்பதும் சாப்பிடுவதும் - பிச்சைக்காரத் தனமானது என்று பலர் கருதுவார்கள்.

இந்தச் சோற்றுக்கு கீரிக் கருவாடுதான் மிகப் பொருத்தமானது என்று நண்பர் சொன்னார். ‘நேற்றிரவும் காலையிலும் எல்லாக் கருவாட்டுக் கடைகளிலும் ஏறி இறங்கினேன்... கீரிக் கருவாடு கிடைக்கவில்லை!’ என்று சாப்பிடும் போது கைசேதப்பட்டுச் சொன்னார் நண்பர். அதனால் அறுக்குளாக் கருவாடு சுட்டு வைத்திருந்தார்.

இப்படிப் பொத்தாம் பொதுவாக எழுதினால் எப்படி? இதற்கு ஒரு செய்முறை இருக்கிறதல்லவா? அதை விளக்க வேண்டாமா என்று நீங்கள் ஏங்குவது எனக்குப் புரிகிறது.

சமையல் குறிப்பு என்றால் அதை எழுதுவதற்கு ஒரு முறை இருக்கிறது. அந்த முறைப்படி இந்த உணவை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.


கொகோ ட்ரைஃபி ரைஸ்





தேவையான பொருட்கள்

அரிசி (தேவையான அளவு)
தேங்காய் (பாதி)
கீரிக் கருவாடு (தேவையான அளவு)


செய்முறை




அரிசியை நெல், கல் நீக்கிக் கழுவி தேவையான அளவு நீரில் அடுப்பில் வேக வைக்கவும். அடுப்பில் தீ மூட்டுவதற்கு மறக்க வேண்டாம்.

தேங்காயை இரண்டாக உடைத்து ஒரு பாதியைக் குளிரூட்டியில் வைத்து விட்டு மீதிப் பாதியை திருவுலையில் திருவிக் கொள்ளவும். நின்றோ குந்தியோ வசதிப்படி துருவிக் கொள்ளலாம்.

கீரிக் கருவாட்டின் கழுத்துப் பகுதியைக் கிள்ளி வீசி விடவும். தலைப் பகுதியையும் தவிர்ப்பது நல்லது. சுத்தம் செய்யப்பட்ட கருவாட்டைக் கம்பியொன்றில் குத்தி நெருப்பில் பிடிக்கவும். கேஸ் அடுப்பை விட விறகு அடுப்பில் சுடப்படும் கருவாடு ருசியாக இருக்கும்.

கருவாட்டில் இருந்து ஒரு சொர்க்க வாசம் வீசும் பாருங்கள். அந்த வாசம் வரும் வரை நீங்கள் கருவாடுகளைச் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பிலிருந்து சோற்றை இறக்கி அகப்பையால் எடுத்து ஒரு பீங்கானில் போட்டுக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு தேங்காய்ப் பூவை சோற்றலி போட்டுப் பிதறவும். இவ்வாறு பிதறும் போது கை சுடுவதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். சுவையானது, பெருமையானது, உயர்வானது யாவுமே நோவுகளோடுதான் கலந்துள்ளன.

இனி - சுட்ட கருவாட்டைக் கடித்துக் கொண்டு பிதறியை சோற்றைச் சாப்பிடலாம். சிலருக்கு உறைப்பு இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது. அப்படியானவர்கள் ஒரு பச்சை மிளகாயையும் அவ்வப்போது கடித்துக் கொள்ளலாம்.

சாப்பிட்டுப் பாருங்கள்! இந்த ருசியை உணர்ந்த பிறகு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தால் இந்த உணவை அறிமுகப்படுத்தியதற்காக என்னை அழைத்து ஒரு பொன்னாடை போர்த்துவீர்கள்.


மேலதிகக் குறிப்புகள்

01. நோன்பு பிடித்த நிலையில் இக்குறிப்பை வாசிப்பவர்களுக்கு நாக்கில் ஜலம் ஊறினால் அதற்கு நான் பொறுப்பல்லன்.

02. கீரிக் கருவாட்டின் தலையை நோண்டி வீசிவிடலாம் என்று நினைப்பவர்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுக்கவும். 100 கிராம் கீரிக் கருவாடு எழுபது ரூபாய் விற்கிறது. 500 கிராம் வாங்குவது என்றால் 350 ரூபாயாகி விடும். கிட்டத்தட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை அது.

03. இந்த உணவுக்கு நான் கொகோ ட்ரைஃபி ரைஸ் என்று பெயர் சூட்டியது நான். இந்தப் பெயருக்குக் காப்புரிமை உண்டு. கொகோ என்பது கொகனட் என்பதன் சுருக்க வடிவம். ட்ரைஃபி என்பது கருவாட்டைக் குறிக்கிறது. ரைஸ் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும் அல்லாவா?

இப்போது நான் அடிக்கடி இந்த உணவை இரவுணவாக நான் உட்கொண்டு மகிழ்ந்து வருகிறேன். பீங்கானில் தேங்காய்ப் ப+ சேர்த்துப் பிதறிய சோற்றில் சுட்ட கருவாட்டை வைத்துப் படம் பிடித்து எனது அன்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்குமுரிய வாசகர்களாகிய உங்களுக்காகப் பதிவிடும் ஆசை இருந்தது.

சாப்பாட்டு மேசையில் இருக்கும் இந்த உணவைப் புகைப்படம் பிடித்து தளத்தில் இடுகிறேன் என்பது தெரிய வந்தால் என்னை வீட்டை விட்டுத் துரத்தி விடுவார்கள் என்பதால் தவிர்த்துக் கொண்டேன்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

6 comments:

rajamelaiyur said...

அருமையான உணவு குறிப்பு

RIPHNAS MOHAMED SALIHU said...

இதற்கு காம்பினேஷனாக ஊறுகாய் தொட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. என்ன சொல்கிறீர்கள்?

Mohamed Faaique said...

இந்த நோன்பு காலத்துல இப்படி பண்ணிட்டீங்களே சார்...

Shaifa Begum said...

ஏன் சார் நோன்பு நாளில் இந்த சமையல் குறிப்பு ..? இப்போ என்னக்கு காலை9.42am மணி இந்த நேரத்தில் நானும் என்ன என்று தெரியாமல் நம்பி இதனை வாசித்தேன் . இப்போ தடுமாறிப் போயிருக்கிறேன் .
செய்முறை ரொம்ப கலக்கல். எப்படி Sir ஒரு Chef Range ல செய்முறை சொல்றீங்க..? பேசாமல் எழுதவதை விட்டு விட்டு இந்த துறையில் காலடி எடுத்து வைக்கலாம். பிரமாதம் ! Cocodryfy rice பெயரே அசத்தலா இருகிறதே.. சின்ன வெங்காயமும் இதற்க்கு சேர்த்து கொண்டால் இன்னும் தூக்கலா இருக்கும்..try பண்ணி பாருங்க.....

ASHROFF SHIHABDEEN said...

முகப்புத்தகப் பின்னூட்டங்கள்

Nagul Selvan

சும்மா போங்க பாஸ்!!! வெளிநாட்டில் இருக்கும் எங்களை வேதனைப்படுத்தி பார்ப்பதே உங்களுக்கு வேலையாக போய் விட்டது.. ஒரு பார்சல் அனுப்பினால் நல்லம்
August 19 at 12:04pm · Like · 3 people

Suhaitha Mashoor

உங்கள் இளமையின் இரகசியம் இதுதானோ. தங்களைக் கவிஞர் என்றுதான் நினைத்தேன்.அதற்கும் அப்பால் நல்ல சமயல்காரரும் போல . . . . .கொடுத்து வைத்த மனைவி . . . . .வாசிக்கும் போதே நா ஊறுகிறது . .நாளை ஸகர் சாப்பாடு இதுதான் . . ஆமா . .என்ன அரிசி . .
August 19 at 12:37pm ·

Hanoon Jameela Umar

Half a coco(!) every night!valiyech chenru valiyai vangurathu enpathu ithuthan!! Cholesterol!!! nanperin chappaadu rushi thaan.. atherkahe, ovvoru naalumaa?!
August 19 at 1:09pm ·

Begum Sbegum

ஆஹா இந்த சமையல் குறிப்பு கொஞ்சம் danger தான்....தெரியாமல் வாசித்து விட்டேன் ....
August 19 at 2:32pm ·

Abdullah Azam

nalla saabadu.....thank you sir....will try this 4 u.
August 19 at 3:21pm ·

Oddamavadi Nasar

Rompa kasttamana samaiyal kurippu sir!!
August 19 at 4:23pm ·

Rinoosa Irham

எப்படி sir உங்களால மட்டும் இப்படி முடிகிறது ?நிஜமாகவே நாவில் எச்சில் ஊறுகிறது,செய்து பார்க்க தான் வேணும் ...
August 19 at 7:09pm · Like · 3 people

Lareena Abdul Haq

ஆஹா! சூப்பர்! நாங்களும் இடைக்கிடையே இதை சாப்பிடுவதுண்டு. இன்னும் பலர் இப்படி இருக்கலாம்... ஆனால், அதை மற்றவர்களோடும் பகிர வேண்டும் என்று உங்களுக்குத்தான் தோன்றியுள்ளது Sir. வாழ்க உங்கள் பெருந்தன்மை! :)
August 19 at 7:52pm Like · 2 people

Allahvin said...


"கொகோ ட்ரைஃபி ரைஸ்" காப்புரிமை உங்களுக்கு உள்ளதால், நீங்களே ஒரு அறிமுக விருந்தை ஏற்பாடு செய்து நண்பர்கள் எல்லோரையும் அழைத்து அசத்தலாமே? நாங்களும் வாழ்த்தி, பாராட்டிவிட்டு, நன்றியும் சொல்லிவிட்டு போவோமே?