நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து அன்ப, அன்பிகளுக்கும் - நண்ப, நண்பிகளுக்கும் அவர்களது தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் எல்லோருக்கும் என் மனம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள்!
எங்கும் நிறைந்தவனே... எல்லாம் ஆனவனே...
நோன்புப் பெருநாள் தினத்தில் மட்டுமாவது கிறீஸ் மேன் வராதிருக்க அருள் புரிவாயாக!
அப்படி வந்தாலும் அவனால் ஆபத்து ஏற்படாதிருக்கவும் அந்த இடத்துக்கு வரும் பொலீஸாருக்கும் ஆயுதப்படையினருக்கும் யாரும் கல் வீசாதிருக்கவும் அவர்களது வண்டிகளுக்குத் தீ வைக்காதிருக்கவும் அவர்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தாதிருக்கவும் அருள்வாயாக!
எனது முகப்புத்தகப் பக்கத்தில் செப்பமற்ற ஒரு பெருநாள் கவிதையை யாரும் பதிவிடச் செய்யாதிருப்பாயாக.
எனக்கு வாழ்த்துச் சொல்லும் அனைவருக்கும் விசால மனத்தையும் திருப்தியுற்ற வாழ்வையும் கொடுக்கத் தயங்காதிருப்பாயாக.
எந்தவொரு மாற்று மத சகோதரரும் சகோதரியும் ‘சீ’ என்று சொல்லுமளவு எந்தவொரு செயலையும் நோன்புப் பெருநாள் கொண்டாடும் மக்கள் செய்யாதிருக்கத் துணை நிற்பாயாக.
‘நாங்கள் பெருநாள் தொழுகை செய்கிறோமாக்கும்’ என்ற பெருமிதத்தில் தமது வாகனங்களை பொது மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தாதிருக்க உதவி புரிவாயாக.
‘நாங்கள் இன்று மணக்க மணக்கக் கோழி புறியாணிதான் சாப்பிடுவோம்’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அனைவர் மனதிலும் ஏழை அயலார் பற்றிய ஒரு சின்னச் சிந்தனையையும் உலகம் முழுக்கவும் அகதிகளாகவும் அநாதைகளாகவும் அல்லல் படும் சிறார்களையும் பெண்களையும் வயது முதிர்ந்தோரையும் பற்றிய ஒரு நினைவையும் ஏற்படுத்தி வைப்பாயாக!
புத்தாடை அணியும் ஒவ்வொருவர் மனதிலும் மாற்றுவதற்கு ஆடையற்ற மக்களைப் பற்றிய எண்ணத்தை ஏற்படுத்துவாயாக.
கொண்டாட்டங்களுக்கா மணம் பூசிக் கொள்ளும் எல்லார் மனங்களிலும் வாழ்வதற்காக மட்டும் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் இரத்த வாடையை ஒரே ஒரு கணம் நுகர வைப்பாயாக.
பெருநாள் சந்தோஷத்தை எந்தவொரு அவலச் செய்தியும் வந்து காதில் விழுந்து கலக்கமுறச் செய்யாதிருப்பாயாக.
தன்னலங் கருதுவோருக்கும் தற்புகழ்ச்சி நபர்களுக்கும் கீழ்ப் படிந்து நடக்கும் கீழ்மையை ஒரு போதும் எனக்கு ஏற்படுத்தி விடாதிருப்பாயாக.
நல்லதை நினைக்கும் மனத்தையும் நல்லதைச் செய்யும் உறுதியையும் இந்த நன்னாளில் எனக்கும் என்னைச் சார்ந்தோருக்கும் எனது நட்புக்களுக்கும் இதைப் படிப்போருக்கும் அருள்வாயாக!
ஆமீன்!!!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2 comments:
மிக அற்ப்புதமான கவிதை
ஹா ஹா.. சூப்பர் மன்றாட்டம் அண்ணா.. நையாண்டியாக சகல உண்மைகளையும் கொட்டிவிட்டீர்கள் போங்கள்.. ஆனாலும் நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை, இது யாவரினதும் மன்றட்டமாக இருக்க வேண்டும்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த திருநாள் வாழ்த்துக்கள். (பலகாரம் அனுப்புவதென்றால் சொல்லுங்கள் நான் வாகனம் அனுப்புகிறேன்..ஹா ஹா)
Post a Comment