Sunday, February 19, 2012

அமைதிப் போராட்டம் - வேதனையும் சாதனையும்!


மிகுந்த மனப்பாரத்துடன் இன்று தர்ஹா நகரில் ஒரு விழாவில் கலந்து கொள்ள நேரிட்டது.

அது ஒரு நூல் வெளியீட்டு விழா. நூலின் தலைப்பு  - silent Struggle.

ஒரு மாற்றுத் திறனாளியின் தந்தையாக சகோதரர் ஹாபிஸ் இஸ்ஸதீன் தனது அவஸ்தைகளை அடக்க முயன்றபடி நிகழ்த்திய விழாவின் ஆரம்ப உரையின் போது, அவ்வாறான ஒரு தந்தையின் நிலையை உணர்கையில் எனக்கும் கண்ணீர் துளிர்த்தது.

வேதனையூடு நிகழ்ந்த சாதனை. அதனை நிகழ்த்தியிருந்தவர் ஹாஃபிஸ் இஸ்ஸதீனின் புதல்வர் இர்பான்.

இர்பான் ஒரு மாற்றுத் திறனாளி. ஐந்தாம் ஆண்டோடு பாடசாலைக் கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் அவருக்கு. டி.எம்.டி - Duchenne Muscular Dystrophy என்ற தசையோடு சம்பந்தப்பட்ட வியாதியால் பீடிக்கப்பட்ட இர்பான் தனது 15வது வயதிலேயே கட்டிலோடு காலம் கழிக்கவேண்டிய நிலைக்குள்ளானார்.

மூவாயிரத்து ஐநூறு சிறுவர்களில் ஒருவருக்கு இந்நோய்த் தாக்கம் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. அமெரிக்கா வரை சென்று இந்நோய் பற்றிய கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு பற்றியுள்ள இர்பானின் தந்தை, இந்த நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார். ஒரு கதிரையில் அமரவோ, சாய்ந்திருக்கவோ, எழுந்து நிற்கவோ இயலாமல் கட்டிலே கதியாகிறது இர்பானுக்கு. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் 18 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

இர்பானின் உடல் செயலிழந்த போதும் மனம் விழித்துக் கொள்கிறது. மடிக் கணினி உதவியுடன் தானாக ஆங்கிலம் கற்கிறார். முகப்புத்தகத்தில் மாற்றுத் திறனாளிகள் பக்கத்தில் ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறார். அவரது கவிதைகளுக்கு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. பாராட்டுக்கள் கிடைக்கின்றன. அவரது தந்தையார் மகன் கவிதை எழுதுவதை அறிய வந்த போது நான்கு கவிதைகளை முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார் இர்பான்.

அவற்றைக் கூட கீ போர்ட்டில் அவரால் எழுத்துத் தட்டி இணைக்க முடியவில்லை. திரைக் கீ போர்ட்டில் மவுசைக் கிளிக் கெய்வதன் மூலம் ஒவ்வொரு எழுத்தாகக் குருவி ஒன்று சேர்ப்பது போல் தனது கனவை வரைகிறார். இர்பானுக்கு இப்போது வயது 30.

பதினைந்து கவிதைகளாவது இருக்குமானால் ஒரு நூலை வெளியிடலாம் என்கிறார் தந்தை. இர்பானுக்கு உற்சாகம் பிறக்கிறது. இன்று அவர் கோத்த 22 கவிதைகள் நூலாக வெளியிடப்பட்ட நாள்.

கரீம் அப்துல் ஹமீத்

தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரி ஆராதனை மண்டபத்தில் காலை பத்து மணிக்கு விழா ஆரம்பமாயிற்று. அரங்கில் கட்டிலில் படுத்த வண்ணம் நடப்பவற்றை இர்பான் அவதானித்துக் கொண்டிருக்க நிகழ்ச்சி களை கட்டிற்று. இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்களின் ஒன்று கூடல். கல்வியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், உறவினர்கள் என்று ஆண்களும் பெண்களுமாக மண்டபம் நிறைந்திருந்தது.

ஸ்ரீலால் சில்வா

சமுகவியற் செயற்பாட்டாளரும் ஆங்கிலப் பத்தி எழுத்தாளருமான கரீம் அப்துல் ஹமீட், கல்வியியலாளர் ஸ்ரீலால் சில்வா ஆகியோர் முறையே ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் இர்பானின் கவிதைகள் குறித்துப் பேசினார்கள். திரு.ஸ்ரீலால் சில்வா இர்பானின் ஆங்கிலக் கவிதைகளை சிங்களத்தில் மொழி பெயர்ப்பதாகக் குறிப்பிட்டார்.

ஷமீலா யூஸூப் அலி

இர்பானின் கவிதைகள் இரண்டு தொகுப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளன. இருபத்தியிரண்டு ஆங்கிலக் கவிதைகள் தனியாகவும் ஆங்கிலக் கவிதைகளும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு அடங்கிய நூல் தனியாகவும் வெளியாகியுள்ளது. முன்னையது 60 பக்கங்களையும் பின்னையது 92 பக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.

கவிஞர் அல் அஸூமத்

இர்பானின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்த கவிஞரும் எழுத்தாளருமான தங்கை ஷமீலா யூஸ_ஃப் அலி, கவிஞர் அல் அஸூமத் ஆகியோர் தமிழில் உரை நிகழ்த்தினார்கள்.

இர்பானின் சகோதரர் இம்ரான்

இர்பானின் சகோதரர் இம்ரான் நன்றியுரை நிகழ்திய பின்னர் கட்டிலில் படுத்திருந்தபடி தனது நன்றியுரையை இர்பான் நிகழ்த்திய போது மண்டபம் அமைதியில் உறைந்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதற்காக ஒரு வாரத்துக்கு முன்னரே கவிஞர் அல் அஸ_மத் அவர்களுக்கு இர்பானின் கவிதைகள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. கவிதைகளைப் பிரதியெடுத்து அவர் தனது மேசையில் வைத்திருந்தார். மேலோட்டமாக இரண்டு கவிதைகளை நான் மேய ஆரம்பித்த போது எனக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. எப்படி வெளிப்படுத்துவது என்று புரியாத எண்ணங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன்.

A Prayer for Prayer, Blessed to be your son ஆகிய இரண்டு கவிதைகளை மாத்திரமே நான் மேலோட்டமாகப் பார்த்தேன்.

முதலாவது நான்படித்த A Prayer for Prayer என்ற கவிதை என்னை மிக ஆழ் சிந்தனைக்கு எடுத்துச் சென்றது. அதிசய நோயால் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் ஓர் உள்ளம் ‘இறைவனிடம் என்னை இப்படி ஆக்கி விட்டாயே’ என்று புலம்பவில்லை. ‘நான் எல்லோரையும் போல் உன்னை வணங்க முடியவில்லை அதற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும்’ என்ற பாணியில் அது நகர்கிறது. இறைவனின் பாக்கியங்களைப் பெற்ற நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் நெஞ்சில் ஓர் அதிர்வை எனக்கு ஏற்படுத்திற்று. மற்றைய கவிதை கண்ணீரை வரவழைத்தது.

இர்பானின் எல்லாக் கவிதைகளையும் இன்னும் நான் படிக்கவில்லை. ஏனெனில் அவை எத்தகைய அதிர்வுகளை மனதில் ஏற்படுத்துமோ என்ற பயம் ஏற்பட்டு விட்டது. படித்து முடிந்ததும் அவை பற்றி ஒரு கட்டுரையாக வரையலாம் என்றிருக்கிறேன்.

எனது வலைப்பூவுக்கு வருகை தரும் என் அன்புக்குரிய வாசகர்களே, நண்பர்களே, சகோதர, சகோதரிகளே....

ஒரு சிறுவன் கட்டிலோடு வாழ்வை முடக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையைச் சற்றுச் சிந்தனை செய்யுங்கள். முப்பது வயதை எட்டிய இர்பான் தனது இளம் பராயத்தைக் கட்டிலோடே கழித்து விட்டிருக்கிறார் என்பதை நினைவு கூருங்கள்.

நன்றியுரை வழங்கும் நூலாசிரியர் இர்பான் ஹாபிஸ்

இப்போதைக்கு அவரது கவிதையொன்றை இங்கே தருகிறேன். படித்து விட்டு இர்பானுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவியுங்கள். அவரை நாம் தூரத்திலிருந்தும் அணுகுகிறோம் என்பதை உணர்த்துங்கள். அவர் மேலும் கவிதைளை எழுத ஊக்கமும் உற்சாகமும் வழங்குங்கள்.

இர்பானின் தந்தையாரின் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் உங்களது வாழ்த்துக்களை வழங்குங்கள். - hafizissadeen@gmail.​com
 
Call to prayer I hear every day
I see People Who go to pray
To avoid Satan make them go stray
Oh.. ALLAH! How can I pray in bed as i lie in this way

Move my head and fingers is all i can do
For me it is not possible to make ‘wudhu’
I did wonder was there a way through
To pray my lord as others do

One day my dad sat my side
politely said “My son, you must pray in mind”
His words lighted up my soul and my heart shined
Oh ALLAH! I began to pray you since that day with pride

I lower my head a little for ‘Rukoo’
Keeping my lord deep in my heart
I bend my head a bit more for ‘Sujood’
Pleading for his endless mercy till I depart

Oh ALLAH! You shower your mercy without any limitation
My only wish before i reach my destination
To touch my forhead on the ground in prostration
In my life, It will be the moment of great jubilation....
-----------------------------------------------------------------

Wudhu - ablution done before prayer
Rukoo - bowing - a ritual during prayer
Sujood - prostration

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

12 comments:

yimhafiz said...

உங்கள் கரிசனையையும் கருத்துக்களையும் கண்டு நெகிழ்ந்து போனேன். நன்றி - ஹாபிஸ் இஸ்ஸதீன்

எஸ்.மதி said...

வாசிக்க தொடங்கும் போதே என் மனசை பிசைகிறது .
என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் இர்பானுக்கு ..
அருமையான பதிவை தந்ததுக்கு நன்றி ஐயா

பி.அமல்ராஜ் said...

இர்பானை நான் ஒருபோதும் மாற்றாற்றல் என்கின்ற வரையறைக்குள் வைத்து பார்க்க முடியவில்லை. அவர் ஒரு மகா பூரண மனிதர். அவரது ஒரே ஒரு ஆங்கிலக்கவிதை மட்டுமே எனக்கு வாசிக்கக் கிடைத்தது. வாசித்ததும் எனது தொண்டை அடைத்துக்கொண்டதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

பி.அமல்ராஜ் said...

மிக்க நன்றி அஷ்ரப் அண்ணா, இந்த செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு.

AH said...

நன்றி... அவரை அறிமுகம் செய்து பாராட்டியதற்கு. உண்மையில் அவரது முயற்சிக்கு மேற்குநாடுகளில் இருந்துவரும் வியப்படையும் சாதனைமாதிரி இருந்தது...

Prapa said...

நன்றி... இப்பிடி ஒரு திரை சாலியா/ வியக்க வைக்குறது . என்னால் என்ன சொல்லுவதென்றே தெரியவில்ல.. இந்த செய்தியை ட்விட்டர் தளத்திநூடகவும் பகிர்ந்திருக்குறேன்.

IT from Shibly said...

அருமையான முயற்சி இர்பான்..வாழ்த்த வார்த்தைகள் இல்லை..எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அத்தனையையும் பொறுத்துக்கொண்டு எவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறீர் ..மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்+பிரார்த்தனைகள்..இந்த கனதியான பதிவை பகிர்ந்த அஷ்ரப் சேர் இன் மனிதாபிமான உணர்வு போற்றததக்கது.

Shaifa Begum said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை..கண்ணீருடன் ஸ்தம்பித நிலையில் இருக்கிறேன்...வரிகள் ஒவ்வொன்றும் இதயத்ததைத் துளைத்தே விடுகிறது.......ஒன்றுமே யோசிக்க முடியவில்லை சேர்..... ...
இந்த சகோதரனை எங்களுக்கும் அறிமுகம் செய்த சேர் உங்களுக்கு நன்றிகள்.............மீண்டும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகிறேன்..

Shaifa Maleek

Lareena said...

வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் வந்து அடைத்துக் கொள்கின்றன. கண்கள் பனித்துக் கணினித் திரையை மறைக்கிறது. என்னவென்று சொல்லத் தெரியாத ஒருவகைத் தவிப்பு. ஒரே ஒரு கவிதைதான் படித்தேன், ஆனால் அப்படி ஒரு சிலிர்ப்பும் அதிர்வும் மனசுக்குள். இனிமேல் அவருக்காகவும் நம் கரங்கள் படைத்தவனிடம் உயரும். ஏன், உங்களுக்காகவும்தான் Sir. விலைமதிக்க முடியாத இந்தப் பதிவுக்கு என் ஆழ்ந்த நன்றிகள் Sir!

Anonymous said...

கண்ணீர், கலை,

Amna said...

கவலைகளை மறந்திருங்கள் சகோதரா...உங்கள் மூலமாக இறைவன் ஏதோ செய்ய நாடியிருக்கிறான் நிச்சயம் அவனது அருளும் கிருபையும் உங்களுக்கு என்றென்றும் கிடைக்கும் ..நாமும் படைத்தவனிடம் இறைஞ்சுகின்றோம் உங்களுக்கு நல்லருள் கிட்ட...ஆமீன்..

Unknown said...

சகோதரர் இர்பானை மாற்று திறனாளி என்று குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை, உங்களின் அறிமுகத்துக்கு நன்றி