Thursday, April 11, 2013

அரசனும் செம்படவனும்



நீண்ட காலங்களுக்கு முன்னர் ஓர் ஏழை மீனவன் தனது மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். அவனிடமிருந்த வலையைக் கொண்டு கடலில் மீன் பிடித்துத் தனதும் தனது குடும்பத்தினதும் ஜீவனோபாயத்தை அவன் நடத்திக் கொண்டிருந் தான்.

ஒரு நாள் அதிகாலை அவன்  மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றான். அன்று பிற்பகல் வரை அவனது வலையில் மீன்கள் எதுவும் சிக்க வில்லை. கவலையுடன் கடைசியாக ஒரு முறை முயன்று பார்த்தான். அந்த வீச்சில் ஏராளமான சிறிய மீன்களும் அவன் அதுவரை கண்டிராத அளவு ஒரு பெரிய மீனும் சிக்கின. அவற்றை அவன் வீட்டுக்குக் கொண்டு வந்த போது மீனவனின் மனைவி ஆச்சரியப் பட்டாள். சிறிய மீன்களைத் தமது உணவுக்கு எடுத்துக் கொண்டு பெரிய மீனை அரசனுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு விரும்புவதாக அவன் மனைவியிடம் சொன்னான். அவனது மனைவியும் அவனது விருப்பத்தை ஏற்றுக் கொண்டாள்.

மீனவன் பெரிய மீனைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அரச மாளிகைக்குச் சென்றான். காவலர்களின் அனுமதி பெற்று அரசன் முன் நின்று, 'மாட்சிமை தங்கிய அரசே, இன்று எனது வாழ்விலே கண்டிராத அளவு பெரிய மீன் ஒன்று என் வலையில் சிக்கியது. அதை எனதும் எனது மனைவி குழந்தைகள் சார்பிலும் தங்களுக்கு அன்பளிப்பாகத் தருவதற்கு எடுத்து வந்துள்ளேன்' என்று சொன்னான். அரசன் முதலில் மீனைப் பார்த்தான். பின்னர் மீனவனைப் பார்த்தான். மீனவன் மீது அரசனுக்கு இரக்கம் உண்டாயிற்று. அன்பளிப்பை ஏற்றுக் கொண்டு தனது அன்பளிப்பாக நூறு தீனார்களை மீனவனுக்கு வழங்கினான்.

ஆனால் நூறு தீனார்களை வழங்கிய அரசரின் செயலை அரசி விரும்பவில்லை. பணத்தை மீளப் பெற்றுப் பத்து தீனார்களை மட்டும் கொடுக்குமாறு அரசரைக் குடைந்தாள். அரசரால் வழங்கப்பட்டதை மீளப் பெறுவது கண்ணியத்துக்கு இழுக்கானது என்றும் மக்கள் இதை தவறாகக் கதைப்பார்கள் என்றும் அரசன் அரசிக்குச் சொன்னான். அரசி விடவில்லை.

அவ்வாறாயின் மீனவனை அழைத்து இது ஆண் மீனா அல்லது பெண் மீனா என்று கேட்கும்படி வற்புறுத்தினாள். ஆண் என்று அவன் பதிலளித்தால் தனக்குப் பெண் மீனே தேவை என்றும் பெண் என்று பதிலளித்தால் ஆண் மீனே தேவை என்றும் சொல்லிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னாள்.

மீனவன் அழைக்கப்பட்டு அரசி சொன்னவாறு வினாத் தொடுக்கப்பட்டது. ஏதோ ஒரு சூழ்ச்சி நடப்பதைப் புரிந்து கொண்ட மீனவன் இம்மீன் ஆணா அல்லது பெண்ணா என்று தனக்குத் தெரியாது என்று சொன்னான். அவனது புத்திசாதுரியமான பதிலை மெச்சி அரசன் மேலும் நூறு தீனார்களை மீனவனுக்கு அன்பளிப்பாக வழங்கினான். கிடைத்தவரை லாபம் என்று கருதியபடி மீனவன் மாளிகையை விட்டு வேகமாகத் திரும்புகையில் அவனது கையில் இருந்த இருநூறு தீனார் பணத்தில் ஒரு தீனார் நாணயம் கீழே விழுந்தது.

அதை அவன் அவசரமாப் பொறுக்கியதை அரசி அவதானித்து விட்டு அரசரிடம் 'பாருங்கள் கீழே விழுந்த ஒரு தீனாரைக் கூட விட்டு வைக்காமல் எடுத்துக் கொண்டான். அவனை அழைத்து அந்த ஒரு தீனாரை இங்கிருக்கும் வேலைக்காரர்கள் எடுத்துக் கொள்ள விடாதது ஏன் என்று கேளுங்கள்' என்று நச்சரித்தாள்.

அரசர் மீண்டும் மீனவனை அழைத்து ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டார். 'மாட்சிமை பொருந்திய அரசரே... எனது கஞ்சத்தனத்தினாலோ பேராசையினாலோ அதனை நான் எடுத்துக் கொள்ளவில்லை. தாங்கள் பெரு மனது கொண்டு கொடுத்த அன்ப ளிப்பை மாளிகையில் விட்டுச் செல்வது தங்களை அவமானப் படுத்தியதாகி விடும் என்றுதான் எடுத்துக் கொண்டேன்' என்று பதில் சொன்னான். அவனது பதிலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் மேலும் நூறு தீனார்களை அன்பளிப்பாக வழங்கி அவனை வழியனுப்பினான்.

ஜெரூஸலத்தில் 1987ல் அரபுக் கற்கைகள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பலஸ்தீனத்தின் பிரபலமான வாய்வழிக் கதைகளில் ஒன்று இது. இதில் வரும் மீனவன் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறான். அதற்குக் காரணம் தனக்குக் கிடைத்த அன்பளிப்புப் பொருளை இழந்து விடாதிருக்க அவன் அளித்த புத்திசாதுரியமான பதில்கள்தாம்.  இக்கதையில் அவதானிக்க வேண்டிய மற்றொரு அம்சம் சிக்கல் படுத்தும் அரசியை அரசன் கையாளும் விதம். இவை இரண்டுக்கு மாகவே இக்கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

இக்கதை பெண்களை அவமதிக்கிறது என்று கருதுவோர் பின்வரும் பந்தியைப் படித்து இன்புறலாம்.

திருமணம் செய்து கொள்ளாத தனது மாமியிடம் ஒரு சிறுவன் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டான். அதற்கு அப் பெண் நான் ஒரு கிளியையும் ஒரு நாயையும் ஒரு பூனையையும் வளர்க்கிறேன் என்று சொன்னாள். திருமணத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சிறுவன் மீண்டும் கேட்டான். இவை மூன்றும் ஆண்களின் வேலைகளைத்தான் செய்கின்றன. கிளி ஆண்க ளைப் போல அவ்வப்போது ஆணையிடுகிறது. நாய் அவ்வப்போது ஓய்வின்றிக் குரைக்கிறது. பூனை கால நேரம் பார்க்காமல் ஊர் சுற்றித் திரிகிறது என்று பதில் சொன்னாள்.

07.09.2008

(தீர்க்கவர்ணம் நூலிலிருந்து)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: