Wednesday, April 10, 2013

இலக்கியவாதிகள்தாம் ஒரு சமூகத்தின் வாழ்வையும் வரலாற்றையும் எழுதிச் செல்கிறார்கள்!(ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான எனது செவ்வி)

சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் இவ்வருடம் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7ம் திகதி இம்மாநாடு சம்பந்தமான எழுத்தாளர் ஒன்று கூடலும் கலந்துரையாடலும் கொழும்பு - 2 வொக்ஷோல் லேனில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம்மகாநாடு பற்றி அவருடன் நடத்திய நேர்காணலை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

- அனா

கேள்வி:- கடந்த 7ம் திகதி நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் கலந்துரையாடலுக்கு சிலர் அழைக்கப்படவில்லை என்று அறியக் கிடைக்கிறது... ஏன் அப்படி நடந்தது?

பதில்:- கடந்த 6ம் திகதியிலிருந்துதான் எனது பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இருந்த போதும் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் தங்களால் முடிந்த வரை முகவரிகளைத் தேடி அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார்கள். அழைப்பிதழ் அனுப்பப்பட்ட பட்டியல் எம்மிடம் உள்ளது. ஏறக்குறைய 300 பேருக்கு மேல் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தன. சிலருக்கு உரிய வேளையிலும் சிலருக்குத் தாமதமாகவும் கிடைத்திருக்கலாம். பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்ட பின்பும் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார்கள். சிலரது முகவரிகளோ தொலைபேசி எண்களோ கிடைக்காதமையால் அழைப்பிதழ் அனுப்பத் தவறியிருக்கலாம். அவர்களுக்குச் செய்தி சென்று சேரும் விதமாக இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் இடம்பெற்றிருந்தன.

கேள்வி:- 6ம் திகதிதான் இணைந்து கொண்டதாகக் கூறினீர்கள்? ஏன் அப்படி?

பதில்:-  சர்வதேச மாநாடு என்பது புத்தக வெளியீட்டு விழா நடத்துவது மாதிரி அல்ல. அது மிகக் கடுமையான பணி. நாம் முதலில் 2002ல் நடத்திய மாநாட்டுக்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆக பத்து வருடங்கள் வயது கழிந்து விட்டது. இது ஒரு சிரமமான காரியம். எனவே ஒதுங்கியிருந்து ஆதரவு வழங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆய்வரங்கொன்றில் ஒரு கட்டுரை சமர்ப்பிப்பதுடன் என்னுடைய பங்கை மட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்றிருந்தேன். அத்துடன் இந்த மாநாடு ஒற்றைப்பரிமாண அரசியலுக்குள் சிக்கியிருப்பதாகவும் ஒரு எண்ணம் மனதில் இருந்தது.

ஆனால் கௌரவ. அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் என்னை அழைத்து இம்மாடு பற்றி வெகு தெளிவாகச் சில விளக்கங்களை வழங்கினார். சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைப்பதுடன் சகல முஸ்லிம் கலை இலக்கிய அமைப்புகளையும் ஒன்றிணைப்பது என்பன போன்ற சமூக ஒற்றுமைக்கு வழிகோலும் முனைப்பை வெளிப்படுத்தினார். எனவே யாரும் ஒதுங்கிச் செல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அவரது நல்லெண்ணம் எனக்கு உவப்பாக இருந்தது.

எல்லா முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளையும் ஒன்றிணைத்து தொடர்ந்து இலக்கியத்திலும் சமூக நலன்கருதும் தளத்திலும் செயற்படுவோம் என்றும் அவர் தலைமை வகிக்க ஏனைய முஸ்லிம் கட்சிகளின் அமைச்சர்கள் பிரதித் தலைமை வகிக்க என்னைச் செயலாளராக இருந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். எனவே இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளின் ஒன்றியம்தான் இந்த உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை முன்னெடுத்துச் செல்லும்.

கேள்வி:- ஆனால் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை அல்லவா?

பதில்:- தர்க்கத்துக்கு வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இங்கே ஒன்றுபடுகிறார்கள் என்பது அவதானிக்கத்தக்கது. அப்படியே அரசியல் நலன் இருந்தாலும் கூட ஓர் இலக்கியவாதி என்ற முறையில் இலக்கியத்தை முற்படுத்தும் ஒரு பெருவிழாவுக்கு ஒத்துழைப்பது முக்கியமல்லவா? ஒத்துழைக்காவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் ஒதுங்கியிருப்பது மேல் அல்லவா?

பாருங்கள்.. 1979ல் இவ்வாறான ஒரு மாநாடு நடந்தது. அப்போது அல்ஹாஜ் பாக்கிர் மாக்கார் துணை நின்றார். அது முடிந்து இருபத்து மூன்று வருடங்கள்.. ஏறக்குறைய கால்நூற்றாண்டுக்குப் பிறகு இந்த மண்ணில் ஒரு மாநாடு நடந்தது. அதுவும் உலகத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் ஒரு நாட்டு அரசின் அனுசரணையோடு நடந்த முதல் மாநாடு. அம்மாநாடும் கௌர. ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் நடந்தது. அதன்பிறகு பத்து வருடங்கள் சென்று விட்டன. இப்போதும் அரசியல்வாதிகளின் முன்னெடுப்பில்தான் நடைபெறுகிறது.

இந்த நாட்டு முஸ்லிம் புத்தி ஜீவிகளுக்கும், படிப்பாடிகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும், 'நீங்கள் மாநாட்டை நடத்துங்கள், நாங்கள் பொருளுதவி புரிகிறோம்' என்று எந்தச் செல்வந்தரும் உதவிபுரிந்தது கிடையாது. ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கான பெருந்தொகைப் பணத்தைத் திரட்ட அரசியல்வாதிகளால்தான் முடிகிறது. எனவே, இலக்கியப் படைப்பாளி என்ற வகையில் நமக்கு அவர்கள் பெரும் உந்துதலாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

கேள்வி:- ஏன் அரசியல்வாதிகள் இலக்கியத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்?

பதில்:- இதில் மூடிமறைத்த இரகசியம் எதுவும் இல்லை. இலக்கியவாதிகளே ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துதான் இருக்கிறார்கள். இந்த இலக்கியவாதிகள் எல்லோரும் இணைந்தாலும் கூட ஒரு பிரதேச சபை அங்கத்தவரைக்கூடத் தெரிவு செய்ய முடியாது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இலக்கியவாதிகள்தாம் ஒரு சமூகத்தின் வாழ்வையும் வரலாற்றையும் எழுதிச் செல்கிறார்கள் என்பதை நமது அரசியல்வாதிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு மெச்சத்தக்க நிலை. இன்னும் நூறு வருடங்கள் கழிந்த பிறகு நமது வாழ்வியல் எப்படியிருந்தது என்பதை இன்று படைக்கப்படும் இலக்கியங்களை அடிப்படையாக வைத்தே வரலாறு குறிப்பெடுக்கும். ஹன்ஸார்டை மாத்திரம் கொண்டு ஒரு சமூகக் குழுமத்தின் வாழ்வியலைத் தீர்மானிக்க முடியாது. வரலாற்றை எழுத முடியாது. இலக்கியம்தான் ஜீவனுடன் அதை எடுத்துச் சொல்லும்.

கேள்வி:- இன்று இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான சவால்களுக்குள் இம்மாநாடு அவசியம் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- அவசியம்தான். சவால்கள் ஏதோ ஒரு வகையில் எப்போதும் இருக்கவே செய்கின்றன. இதே சவால்களுக்கூடேதான் திருமணங்கள் நடைபெறுகின்றன... எல்லா வகையான அமைப்புகளும் கூட்டங்களை நடத்துகின்றன. விழாக்கள் நடைபெறுகின்றன. ஏன்? நாட்டில் போர்க்காலத்திலும் நாம் இதையெல்லாம் செய்தோம்தானே! எனவே, ஓர் இலக்கிய மாநாட்டையும் அது போலவே நடத்திச் செல்வதில் என்ன பிழை இருக்கிறது?கேள்வி:- 'முஸ்லிம் தேச இலக்கியம்', 'முஸ்லிம் தேசிய இலக்கியம்', 'முஸ்லிம் தேசிய தமிழ் இலக்கியம்' என்றெல்லாம் அவ்வப்போது குரல்கள் எழுகின்றன. அவை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- காலவோட்டத்தில் மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்வியலில் மாற்றங்கள் வரவேண்டியது அவசியமே. மாற்ற முடியாதவற்றையும் ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்றபடியாக காலம் மாற்றிச் செல்லும்.

கடந்த கலந்துரையாடலில் நண்பர் நவாஸ் சௌபி இது குறித்த தெளிவான விளக்கங்கள் சிலவற்றை முன் வைத்தார். மாநாட்டுக் குழுவில் உள்ள சிலருக்கும் இதுபற்றி மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன.

2002ம் ஆண்டு மாநாடு நிறைவடைந்த போது எதிர்காலத்தில் இம்மாநாடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மாநாட்டுக்கு ஆதரவளித்துச் செயற்படுத்திய இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் முடிவுக்கு வந்தது. இது பற்றி பல கூட்டங்களில் நாம் கலந்து பேசினோம். 2007ல் சென்னையில் நடந்த மாநாட்டுக்குப் பின்னர் இந்த எண்ணம் மிக ஆழமாக எம்மில் ஏற்பட்டது. அத்துடன் மாநாட்டின் வடிவமைப்பிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் கூட முடிவுக்கு வந்திருந்தோம்.

'உலக முஸ்லிம் கலை, இலக்கிய மாநாடு' என்று இதை மாற்ற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. சுருங்கிய உலகத்தில் நாம் மிக வேகமாக உலகளாவிய உம்மத்தோடு இலக்கியப் பரிச்சயமும் பரிமாறலும் மேற்கொள்ள வேண்டும் என்ற எனது பேராசை அது. ஆனால் எனது தனிப்பட்ட கருத்தை நான் யாரிடமும் பலாத்காரமாகத் திணிக்க முடியாது. இவ்வாறான வேளையில் நமது கருத்துக்களை முன்வைக்கலாமேயொழிய என் கருத்துத்தான் சரியானது என்று வாதாடிக் கொண்டு பிரச்சினைப்படுத்துவது பக்குவப்பட்ட ஒரு மனோநிலை அல்ல. ஒரு மாநாட்டுக்குழுவில் பல்வேறு வித சிந்தனைகளோடு பலர் இருப்பார்கள். எல்லோருடைய கருத்துக்களையும் அவதானித்து இதை முன் கொண்டு செல்வதற்கான வழிவகைகளை ஆராய்வதே அறிவுடைமையாகும் என்று கருதுகிறேன்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்ற பெயரில் இதுவரை 9 மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டின் பெரும் பெரும் அறிஞர்கள் முன்னின்று நடத்திய மாபெரும் மாநாடுகள் இவை. இது தவிர தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் 14 வரையான இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு காயல்பட்டினத்தில் இதுவும் ஒரு மாபெரும் மாநாடாகவே நடந்து முடிந்தது. எனவே, இம்மாநாடுகளுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. அந்தப் பாரம்பரியம் மிகப் பெரும் அறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டது.

கேள்வி:- இதைக் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? எப்படிச் சாத்தியப்படுத்தலாம் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- மாற்ற முடியாதவற்றையும் ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்றபடியாக காலம் மாற்றிச் செல்லும் என்று நான் ஏலவே குறிப்பிட்டேன். மாற்றத்துக்கான கருத்துக்களில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. திருச்சியில் நடந்த மாநாட்டில்தான் 'உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழக, மலேசிய, இலங்கை அறிஞர்கள் முன்னால் இம்மாற்றுக் கருத்து முன்வைக்கப்பட்டு ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தே தவிர, மாநாட்டுக் குழுவின் கருத்து அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி:- இம்முறை மாநாட்டில் புதிய அம்சங்கள் சேர்த்துக் கொள்ளப்படுமா?

பதில்:- ஆம்! சினிமா, நாடகம், வரலாறு, கல்வி, பாரம்பரியக் கலைகள், குறும்படங்கள், பாடல், கவிதை, சிறுகதை என்று ஒரு முழுப் பட்டியல் வைத்திருக்கிறோம்.

இங்கே ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வரலாறு என்று ஓர் அரங்கு நடைபெற்றால் இலங்கை முஸ்லிம் கிராமங்கள், இலங்கை முஸ்லிம்கள் இன ரீதியாக எதிர்கொண்ட சவால்கள், சர்வதேச முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் எதிர்கொண்ட பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துன்பியல் நிகழ்வுகள் - என்று ஏகப்பட்ட விடங்களை உள்ளடக்கலாம்.

தற்கால இலக்கியம் என்ற ஓர் அரங்கை நாம் 2002ல் ஏற்பாடு செய்திருந்தோம். நவீன இலக்கியப் போக்குகளைப் பேசுவது இந்தத் தலைப்பின் கீழ்தான். இந்த விடயங்கள் புரியாமல் பின் நவீனத்துவச் சொற்களைப் பயன்படுத்திச் சிலர் கருத்து வெளியிட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது. 'கவின்கலைகளும் நாட்டுப்புறவியலும்', 'குழந்தை இலக்கியம்', சிற்றிலக்கியமும் பக்தி இலக்கியமும்', 'இதழியல்', 'கல்வியியல்' என்றெல்லாம் அரங்குகளை அப்போதே அமைத்திருந்தோம். புதிதாகக் கருத்துச் சொல்ல வருபவர்கள் இத்தலைப்புக்களின் கீழ் என்ன என்ன விடயங்களைப் பேசலாம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குள் அடங்காத அம்சங்களைச் சுட்டிக் காட்டும் போது நிச்சயம் அவற்றை நாம் சேர்த்துக் கொள்வோம்.

'ஒலி, ஒளிபரப்பில் முஸ்லிம் இலக்கியம்' என்றொரு ஆய்வரங்குத் தலைப்பை நாங்கள் 2002ல் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது பற்றிப் பேசும் ஒரு கட்டுரைதானும் கிடைக்காத படியால் அவ்வரங்கைக் கைவிட்டோம். ஆய்வரங்குகள் என்பவை நாம் கோரும் பெருந்தலைப்புகளின் கீழ் வரும் கட்டுரைகளைப் பொறுத்தே அமைகின்றன. அது இல்லை, இது இல்லை என்பவர்கள் இல்லாதது என்று குறிப்பிடுவதைப் பற்றி ஏன் எதுவும் எழுதவில்லை என்று கேட்க விரும்புகிறேன். இவர்கள் கடந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வரங்குக் கோவையைச் சற்றுப் பார்த்து விட்டுக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். குறிப்பிட்ட தலைப்புக்களில் பொருத்தமான கட்டுரைகள் வராவிட்டால் அதை மாநாட்டுக்குழு உட்கார்ந்து எழுத முடியாது. குறை சொல்வதற்கும் உபந்நியாசம் பண்ணுவதற்கும் முன்னர் முதலில் தமது பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.

கேள்வி:- எப்போது இம்மாநாடு நடைபெறவுள்ளது?

பதில்:- இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்டம்பரை நோக்கி நகருமாறு கௌரவ. அமைச்சர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பிந்தினாலும் கூட இந்த வருடத்துள் நடத்தி முடிக்கவே தீர்மானித்துள்ளோம்.

கேள்வி:- உங்களது வேண்டுகோள் ஏதாவது உண்டா?

பதில்:- சகலரும் ஒத்துழைக்கக் கோருகிறேன். இது கௌரவ அமைச்சர் தனக்காக மேற்கொள்ளும் முயற்சியோ குழுவில் உள்ளவர்கள் தமக்காக மேற்கொள்ளும் முயற்சியோ அல்ல. குழுக்களில் இணைந்து செயற்பட விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். மாநாட்டுக்கான அறிவிப்புகள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும். பத்திரிகைகள், இணையத்தளங்கள் மூலம் அவற்றை அறிவிப்போம்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

shamilasheriff said...

நேரத்திற்கு தகுந்த பேட்டி.பலரின் சந்தேகங்களுக்கு பதில் கிடைத்திருக்கிறது.நன்றி jaffna muslim