இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார்த்தோம். அவர்களிடம் இலங்கை முஸ்லிம்களின் இருப்பு, மத சுதந்திர அச்சுறுத்தல் பற்றிய ஜனாதிபதியின் பதிலுக்கு அப்பால்
முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ராஜதந்திர மட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய அவதானத்துடன் இருக்கிறோம் என்ற செய்தியை இலங்கைக்கும் முழு உலகுக்கும் உணர்த்தியிருப்பதானது ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.
மேற்படி ஒன்றுபட்ட கலந்துரையாடலுக்குச் சென்ற நாடுகளில் அரபு நாடுகளும் உள்ளன. இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தமது சகோதர உணர்வைப் பிரதிபலிக்கும் அதே வேளை அவர்கள் மீது குறிப்பாக அரபு நாடுகள் மீது ஒரு முக்கியமான கடமை உண்டு.
தமது நாடுகளில் தொழில் நிமித்தம் பணிபுரியும் பிற நாட்டவர்களை - குறிப்பாக ஆசிய நாட்டவர்களை - அந்நாடுகளிலுள்ள வேலை கொள்வோர் கசக்கிப் பிழிவதும் துன்புறுத்துவதும் தண்டிப்பதும் நிறுத்தப்படுவதற்கு இந்நாடுகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்.
இத்துன்புறுத்தல்களும் கொடுமைகளும் இனம், மதம் என்ற வித்தியாசத்துக்கப்பால் அங்கு நடைபெற்று வருகின்றன. தன்னை வீட்டு எஜமான் நிர்வாணப்படுத்திக் கொடுமைப் படுத்தியதாக மிக அண்மையில் சவூதியிலிருந்து வந்த ஒரு சிங்களப் பெண் தெரிவித்திருக்கிறார். இவ்வாறான
கொடுமைகள் பற்றிய கதைகள் இணையத்திலும் ஊடகங்களிலும் ஆயிரமாயிரம் கிடைக்கின்றன. மனிதாபிமானமற்றமுறையில் அரபிகள் நடந்து கொள்வது வெறும் முஸ்லிம் நாட்டின் பண்புகளையும்
கலாசாரப் பழக்கவழக்கங்களை மட்டுமல்ல, இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியையும் கேள்விக்கு உட்படுத்துவதாகும்.
வேலைக்குச் செல்லும் எல்லோரும் இஸ்லாம் பற்றி 50 வீதமாவது அறிந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அநேகமானோர் படிப்பறிவில் குறைந்தவர்கள். எனவே முஸ்லிம்கள் வாழும் தேசங்களில் இஸ்லாம் வாழ்க்கை வழி என்று சொல்லிக் கொள்ளும் தேசங்களில் மனிதாபிமானமற்ற
கொடுமைகள் நடப்பதை “வாளினால் கழுத்தை வெட்டுவது” என்ற தண்டனைப் பார்வையிலிருந்தே அவர்கள் பார்க்க முனைவார்கள். இது முஸ்லிம்கள் பற்றிய மிக மோசமான மனப்பதிவை இவ்வாறான
கொடுமைகளுக்கு உள்ளாகுவோருக்கும் அவர்கள் குடும்பத்தினர், அயலவர், தெரிந்தவர் என்ற ஒரு பெரிய வட்டத்துக்கு உருவாக்கி விடுவதைத் தவிர்க்க முடியாது.
இவ்வாறான கொடுமைகளைச் செய்வோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்ன என்பதாவது ஊடகங்களில் வெளிவருவதில்லை. இந்தப் பிரச்சினையை அவர்கள் கணக்கில் எடுக்கிறார்களா இல்லையா என்பதே
தெரிவதில்லை. ஒரு முஸ்லிம் தேசத்தில் இந்த விபரங்கள் மிக வெளிப்படையாக இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். இருட்டுக்குள்ளேயே யாவற்றையும் அடக்கி விடுவதானது இஸ்லாம் பற்றிய
தவறான கருத்துக்கள் பரவவே வழி செய்யும்.
இவற்றில் அவதானம் செலுத்தாமல் இஸ்லாமியப் பிரசாரத்துக்கு லட்சம் லட்சமாகப் பணம் செலவழிப்பதிலும் பள்ளிவாசல் கட்டுவதிலும் குர்ஆன் பிரதி அச்சிடுவதிலும் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு திருப்திப் படுவதில் அர்த்தங்கள் இருக்குமா என்று புரியவில்லை.
இராஜதந்திர, அரசியல் பார்வையில் உலகளாவிய முஸ்லிம் சகோதரத்துவக் கட்டமைப்பை விட இன்ன தேசத்தைச் சார்ந்தவர்கள் என்ற விடயமே முற்படுத்தப்படும் அம்சமாக இருக்கும். அவர்கள் எந்த இனமாக இருந்தாலும் சரியே.
ஒரு பிரதேசத்துப் பள்ளிவாசலை பெரும்பான்மையோர் தாக்கிய போது அது குறித்து ஒரு அரசியல் முக்கியஸ்தர் ஜனாதிபதியிடம் சொன்ன போது, “ஒரு தெருவுக்கு எதற்காக இரண்டு பள்ளிவாசல்கள்?” என்று கேட்டதாக அக்காலப்பிரிவில் காற்றுவாக்கில் ஒரு செய்தி வந்தது. (தர்க்கங்களை விடுவோம்.)
மற்றொரு முறை இதே போல் இவர்கள் இலங்கை முஸ்லிம்கள் விடயமாக ஜனாதிபதியைச் சந்திக்கும் போது (தொழில் வழங்கும் நாடுகள் )ஒவ்வொரு நாட்டிலும் இலங்கையருக்கு நடந்த கொடுமைகள் பற்றிய தகவல்களை ஓர் ஆவணமாக இவர்கள் முன்னால் போட்டு இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று கேட்டால் சொல்வதற்குப் பதில் இருக்க வேண்டும்!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment