Sunday, April 21, 2013

அழுவதற்கென்று பிறந்தவர்கள்!எனது வீட்டிலிருந்து கூப்பீடு தூரத்தில் (15 யார்கள்) ஓர் அரச பாடசாலை இருக்கிறது.

நேற்றுக் காலை 8.00 மணிக்கெல்லாம் அப்பாடசாலையிலிருந்து ஸ்பீக்கரில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. மிகப் பழைய சிங்களப் பாடல்கள். அநேகமாகவும் 80களுக்கு முந்திய பாடல்களாக இருக்க வேண்டும். பாடல்களின் பின்னணியில் இசையை மீறிய இரைச்சல். இருந்த போதும் அதில் ஒரு பாடலின் மெலடி என்னை வெகுவாகக் கவர்ந்தது.

நெருக்கம் மிகுந்த - ரெசிடன்டல் ஏரியா - என்பதால் பொது நிகழ்வுகள் அவ்வப்போது இப்பாடசாலையில் நடைபெறுவதுண்டு. படிக்கும் மாணவர் தொகை சொற்பம். பெரிய மைதானம் உண்டு.

புதுவருடக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன என்று நினைத்தேன். பொதுவாக சிங்கள - தமிழ் புத்தாண்டு வந்தால் மாதம் முடியும் வரைக்கும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

பத்து மணியளவில்ஏரியாப் பாடகர்கள் இசை இல்லாமல் பாடிக் கொண்டிருந்தார்கள்.  பதினைந்து பதினாறு வயதுக்குக் குறைந்தவர்கள் போல் இருந்தது.ஒரு கிராமத்தில் புதுவருடத்தில் பாட முடிந்தவர்கள் பாடுகின்ற ஏற்பாடு போல் தெரிந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் “சமுர்த்தி பெறும் குடும்பத்தினர் மட்டும்” என்று அறிவிப்பாளர் ஒலிவாங்கியில் கமறிக் கொண்டிருந்தார். இங்கு என்னதான் நடக்கிறது என்று என்னால் மட்டிட முடியவில்லை.

10.30 போல் கடைக்குச் செல்வதற்காக வெளியேறிய போது பாடசாலை கேற்றில் இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு பெனர் கட்டப்பட்டிருந்தது. “சமுர்த்திக்
கொண்டாட்டம்” என்று சிங்களத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது.

அந்த பெனரின் அளவு என்ன தெரியுமா? ஒன்றரைக்கு ஒன்றரை அடிகள்தாம். அடடா... குறைந்த  வருமானம் பெறும் மக்களுக்கான விழாவைக் கூட மிக மிகச் சிக்கனமாக “சமுர்த்தி” ஏற்பாடு  செய்திருக்கிறது என்று மகிழ்ந்தேன். வறுமையில் வாழும் மக்களைச் சந்தோஷப்படுத்தும் ஒரு முயற்சியாகத் தெரிந்தது. அட... பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயத்தை “சமுர்த்தி” செய்கிறது என்று உள்ளம் பூரிப்படைந்தது.

“ஜனசவிய” என்று வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்காக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ பிரதமராக இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட திட்டம். சந்திரிக்கா அமையாரின் காலத்தில் “சமுர்த்தி” என்று பெயர்மாற்றம் பெற்றது. பிறகு அது ஒரு அமைச்சாக மாறி மகிந்தர்
ஆட்சியில் அமைச்சே இல்லாமல் போய் விட்டது. ஆனாலும் திட்டம் நடைபெற்று வருகிறது.

அடுத்த கணம் மனது மாற்றிச் சிந்தித்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் கொண்டாட்டத்துக்கெல்லாம் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை என்று நினைத்து விட்டார்களோ என்று நினைப்பு வந்தது. ஒரு கட்டடத்தைத் திறந்து வைக்கும் அரசியல்வாதிக்கு 50 க்கு 20 அடிகளுக்கு கட்அவுட் வைக்கும் அதிகாரிகள் ஏழைகளின் விழாதானே என்று ஒன்றரைக்கு ஒன்றரை பெனர் போட்டிருக்கிறார்களாக்கும் என்றே எண்ணினேன்.

மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஸ்பீக்கரில் சிறுவர்களும் சிறுமியரும் கதறிஅழும் சத்தம் கேடடது. காது கொடுத்துக் கேட்டால் அது அழுகைப் போட்டி.

விசித்திரமான போட்டியாக இருக்கிறதே. சிறுவர் சிறுமியர் எந்தக் காரணத்துக்காக அழுகிறார்கள் அல்லது அழ எண்ணுகிறார்கள் என்று “சமுர்த்தி” கணிப்பீடு செய்து ஏதாவது நல்ல முடிவுக்கு வரப் போகிறதாக்கும் என்று மீண்டும் மனதுக்குன் பாராட்டியபடி காதைக் கூர்மைப்படுத்தினேன்.

 அவ்வாறு ஒன்றும் இல்லை...

நன்றாக அழுபவருக்குப் பரிசு அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது...

இப்போது ஜூட் அழுவார்...

“ஐயோ... அப்பா அடிக்க வேண்டாம்... ஐயோ... ஐயோ... ஆ... ஊ....” என்ற
அழுகைச் சத்தம்.

இப்போது முனீரா அழுவார்...

ஓவென்ற அழுகை... அம்மா அடித்ததாக அப்பாவிடம் சொல்லித் தேம்பியழுகிறாள்...

இப்போது புவனா....

சகோதரன் அத்து விட்டானாம்... அதே அழுகை!

ஒவ்வொரு அழுகையும் முடியப் பலத்த கைதட்டல்...

சரிதான்!

அதிகரிக்கும் விலைவாசியால், உழைப்புக்குரிய ஊதியம் கிடைக்காமையால்,
கல்விக்குரிய தொழில் கிடைக்காமையால், கூடிய சீக்கிரம் “சமுர்த்தி ” உதவியும் குறைக்கப்பட்டால்...எதிர்காலத்தில் ஏழைகள் வாய்விட்டு அழவேண்டும் என்பதற்காகப்  போட்டிவைத்து அழப்பழக்குகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: