Sunday, August 28, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 1

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 1


தமிழ்நாடு, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பதினைந்தாவது இலக்கியப் பெருவிழா புகழ் மிக்க காயல்பட்டினத்தில் 2011 ஜூலை 8,9,10ம் திகதிகளில் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.


காயல்பட்டின இலக்கிய மாநாடு என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான் இலக்கியப் பெருவிழா என்று குறிப்பிட்டதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இது ஒரு பிரச்சினைக்குரியதோ விவாதத்துக்குரிய தோவான விடயம் அல்ல. ஆனால் நடைபெற்றிருக்கின்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள், பெருவிழாக்கள் பற்றிய எனது அறிவுக்கெட்டிய வரையான சிறியதொரு தெளிவைத் தரவேண்டியது அவசியமாகியி ருக்கிறது.

மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை மூன்றாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்று அவ் வேளை சில இணையத்தளங்கள் குறிப்பிட்டிருந்தன. புதிதாக ஊடகத் துறைக்குள் நுழையும் சில சகோதரர்கள் இம்மாநாடுகள், விழாக்கள் பற்றிய எந்த விதமான புரிதல்களோ விளக்கங்களோ இன்றித் தன்பாட்டுக்கு எழுதி விட்டுப் போவதை அவதானித்து வருகிறேன்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாயான இடமாக மருதமுனை கருதப்படுகிறது. இதன் காரணகர்த்தாவாகத் திகழ்பவர் எஸ்ஏ.ஆர்.எம். செய்யிது ஹஸன் மௌலானா அவர்களாவர். 1966ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பிறை 12ல் மருதமுனை அல் மனார் மகாவித்தியால யத்தில் இந்த விழா நடைபெற்றது. சின்ன ஆலிம் அப்பா மற்றும் உமறுப் புலவர் ஆகியோரின் பெயர்களில் நடைபெற்ற அரங்குகளில் 17 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகள் யாவும் தொகுக்கப் பட்டு ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள்’ எனும் தலைப்பில் அரசு பதிப்பக (அரசாங்கம் அல்ல) வெளியீடாக அதே ஆண்டில் வெளி வந்தது. இந்த விழாவில் அல்லாமா ம.மு.உவைஸ் அவர்களும் ஓர் அரங்குக்குத் தலைமை வகித்துள்ளார்கள்.

கிண்ணியாவின் முன்னாள் முதல்வர் மர்ஹ_ம் அப்துல் மஜீத அவர்களும் கிண்ணியாவில் ஒரு இலக்கிய விழாவை நடத்தியுள்ளார்கள். இதன் காலப் பிரிவு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக எனக்கு அறியக் கிடைக்கவில்லை. இது பற்றிய முழுமையான தகவல்கள் அறிந்தவர்கள் இவ்விழா பற்றி ஒரு கட்டுரை யை எழுதலாம்.

சென்னையில் உருவான இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏழு மாநாடு களைப் பெரிய அளவில் நடத்தியுள்ளது. பெரும்புலவர் சீனி நைனார், நீதிபதி மு.மு.இஸ்மாயில், செய்யிது முகம்மது ‘ஹஸன்’ போன்ற மேதைகளால் வழிநடத்தப்பட்ட இந்த இலக்கியக் கழகம் 2007ம் ஆண்டு தனது ஏழாவது மாநாட்டுடன் அரசியல் மயப்பட்டு இரண்டாகப் பிளவு பட்டது.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் தனது முதலாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை 1973ல் திருச்சியில் நடத்தியது. இரண்டாவது மாநாடு 1974ல் சென்னையிலும் மூன்றாவது மாநாட்டை 1978ல் காயல் பட்டினத்திலும் நடத்தியது. 1979ம் ஆண்டு நான்காவது மாநாடு இலங்கை யில் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அல்லாமா உவைஸ் தலைமையில் நடைபெற்றது. ஐந்தாவது மாநாடு 1990ல் கீழக் கரையிலும் ஆறாவது மாநாடு 1999ல் சென்னையிலும் நடந்தது.

2002ம் ஆண்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஆசீர்வாதத்துடன் இலங்கை அரசு கொழும்பில் ஒரு மாநாட்டை நடத்தியது. கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அரசாங்கத்திடம் பணம் பெற்று உதவ இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இம்மாநாட்டுச் செயற்பாடு களை முன்னெடுத்தது. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஆசீர்வாதத் துடன் இம்மாநாடு நடந்த போதும் அக்கழகத்தின் மாநாட்டுத் தொடரில் இது உள்வாங்கப்படவில்லை.

இம்மாநாட்டை அரசாங்கம் நடத்தியது என்பதும் வேறு சில தொடர்பாடற் சிக்கல்களாலும் மாநாடுகள் வரிசையில் இடம் பெறவில்லை. ஆனால் இலங்கையில் ஒரு புதிய தலைமுறையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றிய விழிப்புணர்வை இது ஏற்படுத்திற்று.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஆறாவது மாநாடு நடைபெற்று எட்டு வருடங்களுக்குப் பிறகே ஏழாவது மாநாடு சென்னையில் நடந்தேறியது. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை கவிக்கோ அப்துல் ரகுமான், காங்கிரஸ் அரசியல்வாதி இதாயத்துல்லாஹ், கெப்டன் அமீர் அலி ஆகியோர் தம்வசப்படுத்திக் கொள்ள எஞ்சியோர் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை ஸ்தாபித்தனர். இந்த அமைப்பு நபிகள் காப்பியம் பற்றிய ஒரு நாள் சர்வதேசக் கருத்தரங்கை சென்னையில் நடத்தியது குறிப்பிடத் தக்கது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட டத்தோ இக்பால் மலேசியாவில் மாநாடு நடத்துவது பற்றிய அறிவிப்பை இதே கருத்தரங்கில் தெரிவித்தார். அந்த மாநாடுதான் மலேசியாவில் மே மாதம் நடைபெற்று முடிந்தது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் என்ற ஓர் அமைப்பு பேராசிரியர் சாயபு மரைக்கார் அவர்களது செயற்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கழகம் ஒவ்வொரு பிராந்தியமாக இலக்கியப் பெரு விழாக்களை நடத்தி வருகிறது. பேராசிரியர் சாயிபு மரைக்காயர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

“உலகளாவிய நிலையில் நாநூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக தொய்வின்றித் தொண்டாற்றி வருகிறது. நாகூர், நீடூர், காரைக்கால், சென்னை, திருச்சி, கோட்டைக்குப்பம், முத்துப் பேட்டை, ராஜகிரி, புதுச்சேரி, மயிலாடுதுறை, பள்ளப்பட்டி, பரமக்குடி, தஞ்சாவூர், அதிராம்பட்டினம் ஆகிய நகரங்களில் 14 மாநாடுகளை இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறது.”

ஆக, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் 15வது இலக்கியப் பெருவிழா அல்லது மாநாடே காயல்பட்டினத்தில் நடைபெற்றது.



ஆறு மாநாடுகள் வரை வெகு சிறப்பாக உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தி வந்த இஸ்லாமிய இலக்கியக் கழகம் அதன் பொலிவை இழந்த பின்னர் இனிமேல் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடைபெறுமா? என்ற கவலையும் வேதனையும் கொண்ட இலக்கிய இதயங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் தனது பதினைந்தாவது இலக்கியப் பெருவிழாவை வெகு சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளது.

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்துக்கு இலங்கையில் இரண்டு உபதலைவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மற்றவர் எஸ்.முத்துமீரான். பதினைந்தாவது மாநாட்டுக்கு இணைப்பாளராக முதுபெரும் எழுத்தாளர் மானா. மக்கீன் நியமிக்கப் பட்டிருந்தார்.

மலேசிய இலக்கிய மாநாடு அறிவிக்கப்படு முன்னரேயே காயல்பட்டின மாநாடு பற்றிய அறிவிப்பு வெளிவந்து விட்டது. இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு பற்றிய கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கும் போதே மானா மக்கீன் இலங்கையில் பத்திரிகைகளுக்குத் தகவல்களைத் தந்து விட்டார். தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் காரணமாக காயல்பட்டின மாநாட்டின் தேதி பிற்போடப்பட்டது.

இந்திய இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த படைப்பாளிகளுடனும் இலக்கிய அமைப்புகளுடனும் நான் மேற் குறிப்பிட்ட மூவரும் நீண்ட காலத் தொடர்பையும் நட்பையும் பேணி வருபவர்கள். எனவே மாநாடுகளும் இலக்கியப் பெருவிழாக்களும் நடைபெறும் போது தொடர்புடையவர் களையே நாடுவார்கள் என்பது தெளிவு. இதை நமது சில எழுத்தாளர்கள் காழ்ப்புணர்வு கொண்டு நோக்குவதும் பேசுவதும் கவலைக்குரியது.

............................................................................................................................... தொடரும்
--------------------------------------------------------------------------------------------------------
நன்றி - எங்கள் தேசம் - செப்டம்பர்  01 -14 (இதழ் 204)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

வாசித்ததில் நிறைய தெரியாத விடயங்களை அறிந்த கொண்டேன்.... வாசித்து விட்டு கையை விசுக்கிக் கொண்டு போவதில் எனக்கு உடன்பாடு இல்லை..