கலாநிதி சாலிஹ் ஹஸனைன்
இன, மத, தேச, பிரதேச மற்றும் இன்னோரன்ன காரணிகளைக் கொண்டு மனிதர்கள் பாகுபாட்டுக்குள்ளாவது அல்லது வேறுபடுத்தி நோக்கப்படுவது இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர்வது நம்பச் சிரமமாகத்தான் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அது இன்னும் தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
உலகம் முழுவதும் ஆங்காங்கே சில மூடர்கள் இனத்தை, மதத்தை, நிறத்தை முன்னிறுத்திப் பாகுபடுத்துவதன் மூலம் சிலர் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வாறான மூடர்கள் அல்லது வெறியர்கள் நாகரிகமடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளில் வாழ்ந்து வருவதுதான் பெரும் வேடிக்கை.
கடந்த வருடம் ரஷ்யாவிலுள்ள சில விளையாட்டுக் கழகங்கள் கமரூன் தேசத்திலிருந்து அதி திறமை வாய்ந்த சில உதைபந்தாட்ட வீரர்களைத் தமது அணிகளில் விளையாட ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் குறிப்பிட்ட வீரர்களுடன் களமிறங்கிய அணியுடன் விளையாடுவதற்கு எதிர் அணி மறுத்து விட்டது. மாத்திரமல்ல விளையாட்டரங்கில் கமரூன் வீரர்களை அவமானப்படுத்திக் கூக்குரலிட்டிருக்கிறார்கள். கமரூன் வீரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் விமானம் ஒன்றில் நடந்த கதை வித்தியாசமானது!
ஜொஹனார்ஸ்பேர்கிலிருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தென்னாபிரிக்க வெள்ளையினத்தைச் சேர்ந்த நடுவயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தார். அவரது பக்கத்து ஆசனத்தில் தென்னாபிரிக்கக் கறுப்பு இன மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. விமானப் பணிப் பெண்ணை அழைத்து முறைப்பட்டார்.
“உனக்குத் தெரியவில்லையா...? என்னை ஒரு நீக்ரோவுக்கு அருகில் அமர வைத்திருக்கிறீர்கள். இந்த மனிதனுக்குப்பக்கத்தில் என்னால் அமர முடியாது... எனக்கு வேறு ஓர் ஆசனம் தரவேண்டும்!”
விமானப் பணிப் பெண் பவ்வியத்துடன் சொன்னாள்:-
“அமைதியாக இருங்கள் மேடம்... இன்று விமானத்தில் மேலதிக ஆசனம் எதுவும் கிடையாது. இருந்த போதும் பிஸ்னஸ் வகுப்பிலோ முதலாம் வகுப்பிலோ ஆசனம் ஏதும் இருக்கின்றதா என்று ஒரு முறை பார்த்து விட்டு வருகிறேன்...”
அந்த வெள்ளைப் பெண்மணி அருகிலிருந்த மனிதரை நோக்கி ஓர் ஆணவப் பார்வையை வீசிவிட்டுத் திரும்பிக் கொண்டாள். இரண்டு நிமிடங்களில் விமானப் பெண் திரும்பி வந்தாள். வெள்ளைப் பெண்மணி கர்வத்துடனான ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள். விமானப் பணிப்பெண் அப் பெண்மணியைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினாள்:-
“மேடம்... துரதிர்ஸ்டவசமாக நான் நினைத்தது போலவே சாதாரண வகுப்பு முற்றாக நிறைந்த விட்டது. ஒரு ஆசனம் கூட இல்லை. ஆனால் முதலாம் வகுப்பில் ஓர் ஆசனம் உண்டு..”
இடைமறிக்கப் போன அந்த வெள்ளைப் பெண்ணைப் பேச விடாமலே விமானப் பணிப்பெண் தொடர்ந்தாள்...
“... ஆனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தரமுயர்த்தி வழங்குவது வெகு அபூர்வமாகத்தான் நடக்கும். இருந்தாலும் நான் விமானத்தின் கெப்டனிடம் விசேட அனுமதி பெற்றுவிட்டேன். வெறுப்புணர்வு மிகுந்தவர்களுக்கு அருகில் உட்கார நிர்ப்பந்திக்கப்படுவதன் மூலம் துன்பத்துக்குள்ளாகும் நபருக்கே அந்த ஆசனத்தை வழங்க வேண்டும் என்று கப்டன் விரும்புகிறார்...”
படபடவெனச் சொல்லி முடித்த அவர் அந்த கறுப்பு நிற மனிதரை நோக்கி,
“உங்களுக்கு விருப்பமெனில் உங்களது பிரயாணப் பையை எடுத்துக் கொண்டு வாருங்கள் சேர். உங்களுக்கு முதலாம் வகுப்பில் ஓர் ஆசனம் தயாராக இருக்கிறது...”
அந்த மனிதர் முதலாம் வகுப்பு ஆசனத்துக்குச் செல்ல எழுந்து நடந்த போது சுற்றியிருந்த பிரயாணிகள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டித தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்!
=================================================================
கலாநிதி சாலிஹ் ஹஸனைன் எகிப்தில் பிறந்து கனடாவில் குடிபெயர்ந்து வாழ்பவர். அணுவிஞ்ஞானி, சுற்றுச் சூழலியலாளர், எழுத்தாளர்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
4 comments:
soooper decision
அட ...இதைப்படித்ததில் மனது நிறைந்து விட்டது.. ஒரு பக்கமாக மனிதநேயம் அழிந்து விட்டதே என்று எண்ணத் தோன்றினாலும் ,இன்னொரு பக்கமாக நேயம் தலைத்தோங்குவதும் இருக்கத்தான் செய்கிறது..
இறைவன் தான் நாடியவர்களை உயர்த்துகிறான்....மேலும் அவன் நாடியவர்களை இழிவுப்படுத்துகிறான்... எல்லா புகழும் இறைவனுக்கே!
இவ்வாறான சிறப்பான தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களது பாராட்டுக்கு உரியவராகின்றீர்கள். முதலில் மனம் தலை குனிந்தது. பின்பு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டது.
Post a Comment