Saturday, August 6, 2011

கழுதைகள் - விற்பனைக்கு!




கதையின் கதை

இந்தக் கதையைப் படிப்பதற்கு முன் இந்தக் கதையின் கதையை நான் சொல்ல விரும்புகிறேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

28.05.2010 அன்று இந்தக் கதையை நான் மொழிபெயர்த்து முடித்திருந்தேன். நான் மிகவும் ரசித்து ரசித்து மொழிபெயர்த்த கதை இது. கதை கொஞ்சம் பெரியதாக இருந்தமையால் நான் வழமையாக கதைகளை அனுப்பும் சஞ்சிகைகளுக்கு அவற்றின் ஆசிரியர்களைச் சங்கடத்துக்குள்ளாக்க விரும்பவில்லை.

வீரகேசரியில் இதுவரை எனது கதைகள் எவையும் பிரசுரமாகாத படியால் இதனை அதற்கு ஒப்படைத்தேன். ஆனால் ஏழு மாதங்கள் தாண்டியும் கதை பிரசுரமாகவில்லை. விசாரித்ததில் கதை கொஞ்சம் பெரிசாக இருக்கிறது என்று பதில் வந்தது. சங்கடம்தான். ஆகவே தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டேன்.

பிறகு இந்தியாவிலிருந்து வெளியாகும் காலச் சுவடு சஞ்சிகைக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தேன். பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஒரு சிறு தகவல் தரும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால் காலம் கடந்தது. ஐந்து மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கடந்த நிலையில் கடந்த மாதம் வேறு ஒரு துருக்கிக் கதையின் மொழி பெயர்ப்பு காலச் சுவட்டில் வெளிவந்திருந்தது.

நேற்றுக் கால்சுவடு தளத்துக்குச் சென் போது மற்றொரு அதிர்ச்சி. நான் யாருடைய கதையை மொழிபெயர்த்திருந்தேனோ அதே நபருடைய வேறொரு கதையை சகோரர் ரிஷான் ஷரீப் மொழிபெயர்த்திருந்தார். அது ஆகஸ்ட் கால் சுவட்டில் வந்திருந்தது. இரவே ரிஷானை மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட போது தான் அந்தக் கதையை ஜூன் 8ம் திகதி அனுப்பியதாகத் தகவல் தந்திருந்தார். ஆக ரிஷானின் கதை ஒரு மாத இடைவெளிக்குள் பிரசுரமாகியிருக்கிறது.

காலச்சுவடு சஞ்சிகைககு எனது கதை அனுப்பிய மின்னஞ்சல் போய்ச் சேரவில்லையா அல்லது கதை பெரியது என்று தாமதமா என்று என்று ஒரு சந்தேகம் வந்தது

அத்துடன் மாய்ந்து மாய்ந்து நான் மொழிபெயர்த்த இதே கதையை மற்றொருவர் மொழிபெயர்த்து விடக் கூடும் என்று ஒரு பயம் வந்தது எனக்கு.

வழமையாக எனது எழுத்துக்களைப் பத்திரிகை சஞ்சிகைகளுக்கு அனுப்பினால் அவற்றில் வெளிவந்த பிறகே நான் எனது வலைத் தளத்தில் இடுவது வழக்கம். இந்தக் கதைக்கு நடந்த கதியை நினைத்து - நேரடியாக வலைத் தளத்தில் இட்டு விடுவது என்று தீர்மானித்து இன்று இந்தக் கதையைப் பதிவிடுகிறேன்.

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தது. எனது அன்புக்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும். படித்து விட்டுக் கையை விசுக்கிக் கொண்டு போகாமல் உங்கள் கருத்தையும் பதிவு செய்து விடுங்கள். நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------

கழுதைகள் - விற்பனைக்கு!





மொகமட் நுஸ்ரத் நெஸின் (அஸீஸ் நெஸின்)

பல்வலியினால் அவதிப்படுபவனைப் போல முகத்தில் கையை வைத்துக் கொண்டு தலையை இரு புறமும் அசைத்த படி அவன் வந்தான்.


அவ்வப்போது தனது கரங்களால் கன்னங்களில் அறைந்துகொண்டு ‘நாசமாகப் போக... நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்.. நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்...” என்று சொல்லிக் கொண்டான்.

நன்கு உறுதியான உடலமைப்புக் கொண்டவன் அவன். வீட்டுக் கதவருகில் வந்து எனக்கு முகமன் கூறும் நிமிடம் வரையும் தன்னைத் தானே அடித்துக் கொண்டு ‘நாசமாகப் போக... நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்..’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.

“உள்ளே வா... வீட்டுக்கு வந்திருக்கிறாய்... உட்கார்...” என்றேன்.

“நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்.. நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்...”

“எப்படியிருக்கிறாய்?”

“நான் எப்படியிருக்கிறேன் என்று நினைக்கிறாய்? நான் வேறு ஒன்றாக இருக்கவா முடியும்? நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்... அவ்வளவுதான்... எல்லாரும் நாசமாகப் போகட்டும்..”

அவன் ஏதோ ஓர் இடரில் இருக்கிறான் என்று நினைத்தேன். குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு துரதிர்;ஷ்டமான நிகழ்வாகக் கூட அது இருக்கலாம்.

“ஏன்... உனக்கு என்ன நடந்தது?”

“இன்னும் என்ன நடக்கவிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஒரு சொறி பிடித்த கழுதையை இரண்டாயிரத்து ஐநூறு லீராக்களுக்கு ஒருவனுக்கு விற்று விட்டார்கள்.”

அவனைக் கூர்ந்து நோக்கினேன். ‘இவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?’

உண்மையில் எனக்கு அச்சமாகவும் இருந்தது. மனைவியை அழைத்தபடி,

“தேனீர் அருந்துகிறாயா?” என்று கேட்டேன்.

“கோப்பியை விடு... ஒரு சொறி பிடித்த வயதான கழுதை இரண்டாயிரத்து ஐநூறு லீராக்களுக்குப் பெறுமானம் உடையதா?”

“ஒரு கழுதையை நான் பார்த்தே இருபது வருடங்களுக்கு மேலிருக்கும்.”

“நான் உன்னிடம் என்ன கேட்டேன் என்றால், ஒரு கழுதை இரண்டாயிரத்து ஐநூறு லீராக்களுக்குப் பெறுமானம் உடையதா?”

“என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஏதாவது விளையாட்டுக்களைச் செய்து காட்டக் கூடியதாக இருந்தால் சில வேளை அந்தப் பெறுமானம் இருக்கக் கூடும்.”

“என்ன விளையாட்டு சார்... அது ஒரு சாதாரணமான கழுதை. அதனால் எழுந்து நின்று பேச முடியாது. அது ஒரு சாதாரணமான கழுதை... அதுவும் சொறி பிடித்தது. அதை ஒருவனுக்கு இரண்டாயிரத்து ஐநூறு லீராக்களுக்கு விற்று விட்டார்கள். உனக்குத் தெரியுமா... இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அவன் அதை வாங்குவதற்கு உதவியது நான்தான்.”

“இதெல்லாம் எப்படி நடந்தது?”

“அதைத்தான் சொல்ல வருகிறேன். இஸ்தன்பூல் பல்கலைக் கழகம் என்னை என் மனைவியுடன் அமெரிக்காவுக்கு அனுப்பியது. நான் அமெரிக்காவில் ஒரு வருடம் தங்கியிருந்தேன்...”

“எனக்குத் தெரியும்.”

“அமெரிக்காவில் ஒரு பேராசிரியரைச் சந்தித்தேன். அவர் எனக்கு நண்பராகி பல வழிகளில் உதவி செய்திருக்கிறார். மிகவும் அன்பான மனிதர். நான் துருக்கி திரும்பிய பிறகும் எங்களுக்குள் கடிதத் தொடர்பு இருந்தது. துருக்கியை அவர் மிகவும் விரும்பினார். பேராசிரியருக்குப் பழங்கால விரிப்புகளில் ஆர்வமும் அறிவும் உள்ள ஒரு நண்பர் இருந்தார். அந்த நண்பர் பழங்கால விரிப்புகள் பற்றி நூல் ஒன்றை எழுதுவதற்கான ஆய்வுக்காக துருக்கி வரவிருப்பதாகவும் அவருக்கு உதவும்படியும் பேராசிரியர் கடிதத்தில் கேட்டிருந்தார்.

ஜூலை மாதம் பேராசிரியரின் நண்பர் துருக்கி வந்தார். அவர் மிகவும் புத்திசாலி நபர். யூதப் பின்னணியில் வந்த ஜேர்மன் அமெரிக்கப் பிரஜை. நான்கு பெரிய பெட்டிகள் நிறைய பழங்கால ஜமுக்காளங்களை அவர் கொண்டு வந்திருந்தார். அவை பெறுமதி மதிக்க முடியாத பெருஞ் செல்வங்கள் என்று அவர் எனக்குச் சொன்னார்.

அதற்குள் மூன்று அங்குல அகலமும் ஐந்து முதல் பத்து அங்குலங்கள் வரையான அகலமுங் கொண்ட ஒரு ஜமுக்காளத் துண்டு இருந்தது. அது ஆகக் குறைந்தது முப்பதாயிரம் டொலர் பெறுமதி வாய்ந்தது என்று சொன்ன அவர் அதை ஒரு அப்பாவி ஈரானியனிடமிருந்து ஒரு டொலருக்கு வாங்கியதாகப் பெருமையடித்துக் கொண்டார். டொலருக்கு ஈடாக தீனார்களில் கொடுப்பனவு செய்தபோது அந்த ஏழை ஈரானியக் குடியானவன் ஒரு கணம் பேச்சற்றுப் போய்விட்டதாகவும் மகிழ்ச்சியடைந்து தனக்காகப் பிரார்த்தித்ததாகவும் சொன்னார்.

இந்த ஜமுக்காளத் துண்டுகள் ஏன் பெறுமதி வாய்ந்தவை என்று சொல்கிறீர்கள் என்று நான் அவரைக் கேட்டேன். ‘ஒரு சென்ரி மீற்றர் கன சதுரத்துக்குள் எண்பது முடிச்சுக்களைக் கொண்ட ஜமுக்காளத் துண்டு இது. இது ஒரு மாஸ்டர் பீஸ்’ என்று பதில் சொன்னார். ஜமுக்காள விரிப்புகளது தன்மைகளை அவர் எனக்குவிளக்கினார். ‘உலகத்தில் அதியற்புதமான ஜமுக்காளம் ஒரு சென்ரி மீற்றர் கன சதுரத்துக்குள் நூறு முடிச்சுக்களைக் கொண்டது. அந்த ஜமுக்காளம் எந்த நூதனசாலையில் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை’ என்றார்.

ஒரு ஒட்டுக் கம்பளத் துண்டை எனக்குக் காட்டிக் குறும்புச் சிரிப்புடன் ‘இதை நாற்பது சதத்துக்கு வாங்கினேன்
ஆனால் இதை ஐயாயிரம் டொலர்களுக்கு விற்க முடியும் என்றார்.

“இவ்வளவு பெறுமதியானவற்றை எப்படிக் கொள்ளை லாபத்தில் வாங்குகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“இந்த வியாபாரத்தில் நாற்பது வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன். எனக்கென்று ஒரு வியாபார முறை இருக்கிறது.”

தந்திரமான வாய்ப் பேச்சினூடாகத் திகைப்படையச் செய்து சாதித்துக் கொள்வது பற்றி எனக்கு விளக்கினார். ஜமுக்காளங்கள் பற்றி மூன்று நூல்களை அவர் எழுதியிருக்கிறார். தவிர, உலகத்தில் உள்ள அரிதான பொருட்களைச் சேகரித்து வைத்துள்ளவர்களில் அவரும் ஒருவர்.

நாங்கள் இருவரும் அனடோலியாவுக்கு சுற்றுலாக் கிளம்பினோம். மாகாணம், மாவட்டம் என்று எல்லா இடங்களுக்கும் சென்றோம். பள்ளிவாசல்களில் உள்ள ஜமுக்காளங்களில் பெறுமதியானவை எனக் கருதியவற்றை அவர் வண்ணப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சேணங்கள், ஒட்டப்பட்ட மற்றும் நெய்யப்பட்ட துணிவகைகள் போன்றவற்றைச் சிலரிடமிருந்து அவர் வாங்கிக் கொண்டார். அவர் அங்கு வாங்கிக் கொண்டவை எவையும் அவர் இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனத் துருக்கிஸ்தான் ஆகிய பிரதேசங்களில் வாங்கியவற்றை விடப் பெறுமதிகுறைந்தவை என்று அவர் சொன்னார். துருக்கியிலும் பெறுமதியானவை இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றைத் தேடி அலைய வேண்டியிருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

புதைபொருள் ஆய்வு நடைபெறும் இடத்துக்கு வந்தோம். அங்கு அமெரிக்க மற்றும் ஜேர்மனியக் குழுவினர் பத்துக் கிலோமீற்றர் இடைவெளிக்குள் இரண்டு முகாம்களை அமைத்து அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மலைப்பாங்கான இடங்களையெல்லாம் அவர்கள் தோண்டிப் புரட்டிப் போட்டிருந்தனர். சுண்ணக்கல் தகர்த்து வெளியே எடுக்கப்பட்டுப் பரவப்பட்டிருந்ததால் அந்த இடம் செம்மறியாட்டு ரோமத்திலான கம்பளி விரித்தது போலிருந்தது.

அவர்கள் அகழ்வாய்வில் ஈடுபட்டிருந்தது ஒரு சிறிய நகரம். இங்கு பத்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பல்வேறு நாகரிகங்கள் நிலவியிருந்திருக்கின்றன. ஒவ்வொன்றின் மேல் ஒன்றாக ஒவ்வொரு நாகரிக காலத்திலும் உண்டாயிருந்த பல நகரங்கள், சமாதிகள், இடங்கள் என்று அப்பூமிக்குள் புதைந்திருந்தன. அது ஒரு சுவாரஸ்யமான இடமாக இருந்தபடியால் அங்கு சுற்றுலாப் பயணிகளும் புதை பொருளாராய்ச்சியில் ஈடுபடுவோரும் பல்வேறு வாகனங்களில் வந்து சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு இரண்டு கிலோ மீற்றருக்கிடையிலும் ஐந்திலிருந்து பத்து சுற்றுலாப் பயணிகளை நாம் காணமுடியும்.

கிராமத்தவர்கள் தாம் தோண்டியெடுத்தவற்றையும் பெறுமதி மிக்க கூசா, சாடிகளைப் போன்ற பழங்காலப் பொருட்களையும் அங்கு வருவோருக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். கிராமத்துச் சிறுவர் சிறுமிகள் கூட பாதையோரங்களில் வரிசையாக நின்று மோதிரங்கள், பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் மற்றும் சாடி, கூசாக்களின் உடைந்த பாகங்கள் ஆகியவற்றைச் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். இச்சிறார்கள் வெறுங்கால்களுடன் சுற்றுலாக்காரரின் பின்னால் ஓடிச் சென்று ‘ ஒரு டொலர்... இரண்டு டொலர்...’ என்று கூவி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கு சென்ற ஞாபகார்த்தமாக ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொள்ள நான் விரும்பினேன். பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி ஓரு கூசாவின் கைப்பிடியையும் ஒரு சிறுவன் மனித முக வடிவிலான ஒரு நீல நிறக் கல்லையும் வைத்திருந்தார்கள். அந்தக் கல் ஏதாவது ஒரு மோதிரத்தில் இருந்திருக்கலாம் என்று நினைத்தேன்.


அவற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்று கேட்ட போது, கூசாவின் கைப்பிடிக்கு நாற்பது லீரா வேண்டும் என்று அச் சிறுமியும் நீல நிறக் கல்லுக்கு பதினைந்து லீரா வேண்டும் என்று அந்தச் சிறுவனும் சொன்னார்கள். அவற்றைப் பற்றிய அறிவு எனக்கு இல்லாத போதும் குறைந்த விலையில் வாங்கலாம் என்ற எண்ணத்தில் “விலை அதிகம்” என்றேன். அச்சிறுமியும் சிறுவனும் பெரியவர்களைப் போல விவாதம் பண்ண ஆரம்பித்து விட்டனர். உண்மையாகவே அவை விலையுயர்ந்தவை அல்ல. அவர்களது தந்தை ஐந்து மீற்றர் ஆழத்தில் பல நாட்கள் தோண்டி அவற்றை எடுத்துள்ளார்.

அவற்றை வாங்குவதற்கு நான் தயாரான போது அமெரிக்க நண்பர் தடுத்து விட்டார். அவை சரித்திர முக்கியத்துவம் பெற்றவையோ அல்லது பெறுமதி மிக்க பழம் பொருட்களோ அல்ல என்றார். கிழக்குப் பிராந்தியத்தில் தான் பயணம் செய்த புதை பொருள் தோண்டும் எல்லா இடங்களிலும் சரியாக இதே போன்ற பொருட்களை ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொன்னார்.

தந்திரமான கிராமத்தவர்கள் பழங்காலப் பொருட்கள் என்றும் அகழ்வாய்வுப் பொருட்கள் என்று சொல்லிச் சுற்றுலாப் பயணிகளை மடையர்களாக்கிப் போலிகளை விற்று விடுகிறார்கள். ஒரு செத்துப் போன பெரிய நாயின் மயிர் உதிர்ந்த உடலைக் கூடப் பழங்கால அரசனின் ‘மம்மி’ என்று சொல்லி ஓர் அமெரிக்கனுக்கு அவர்கள் விற்றிருக்கிறார்கள். இக்கிராமத்தவர்கள் புதிய பொருட்களைப் பழைய பொருட்கள் போல் ஆக்கிவிடும் திறமை படைத்தவர்களாக உள்ளனர். உதாரணமாக நான் வாங்கவிருந்த நீலக் கல்லைச் சொல்லலாம். அவ்வாறு அதைச் செம்மைப்படுத்தி மாற்றியமைப்பது இலகுவான காரியமும் அல்ல.

நாங்கள் வாடகைக்குப் பிடித்திருந்த வாகனத்தில் ஏறினோம். கால நிலை கடும் வெப்பமானதாயிருந்தது. தெருவோரத்தே சில மரங்கள் இருந்தன. மதிய உணவை அந்த மர நிழலில் உண்ணத் தீர்மானித்தோம். ஒரு வயதான குடியானவன் அம்மர நிழலில் கைகளை விரித்துச் சிறு துயிலில் இருந்தான். அவனை உரசியபடி அவனருகில் ஒரு கழுதை நின்றிருந்தது.

நாங்கள் அவருக்கு முகமன் கூறிவிட்டு அவருடன் உரையாடினோம். அவர் சொல்பவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அமெரிக்க நண்பருக்குச் சொன்னேன்.

“இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் பொதுவாக என்ன செய்து வருகிறார்கள்?” நான் கேட்டேன்.

“சொல்லும்படி ஏதுமில்லை. விவசாயம் செய்வோம். தானியங்கள் விளைவிப்போம். நினைத்துப் பார்க்கிறேன், இங்கே தோண்ட ஆரம்பித்ததிலிருந்து கிராமத்தவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள்.”

“இதே போலத்தான் மற்றைய இடங்களிலும்.” அமெரிக்க நண்பர் சொன்னார்.

“அப்படியென்றால் கிராமத்தவர்கள் எப்படி வாழ்க்கையை நடாத்துகிறார்கள்?” நான் கேட்டேன்.

“தோண்டியெடுக்கப்படும் பானை, கற்கள் மற்றும் பொருட்களுக்கு மவுசு ஏற்பட்டதும் கிராமத்தவர்கள் தமது தொழில்களைக் கைவிட்டு விட்டார்கள். இப்பொருட்களை வெளிநாட்டவருக்கு விற்றுத்தான் வாழ்க்கை நடாத்துகிறார்கள்.”

“இதே போலத்தான் மற்றைய இடங்களிலும்.” அமெரிக்க நண்பர் சொன்னார்.

“எமது கிராமத்தவர்கள் மிக மோசமானவர்கள். எங்கள் நாட்டின் செல்வங்களையெல்லாம் வெளிநாட்டவருக்கு விற்று விட்டார்கள். அவர்கள் தோண்டியெடுத்த கற்கள், சமாதிகள் போன்றவற்றின் சரியான பெறுமதியை உணர்ந்து விற்றிருந்தால் இன்னும் பத்துத் துருக்கிகளை உருவாக்கியிருக்க முடியும். நாம் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த வெளிநாட்டவர் யார்? அவர்கள் அனைவருமே திருடர்கள். இங்கு தோண்டியெடுக்கப்பட்ட பெறுமதி மிக்க புதைபொருட்களைச் சிறிது சிறிதாக தொடர்ந்து கடத்திக் கொண்டு போய் விடுகிறார்கள். திருடியவற்றைத் தமது நாட்டுக்குக் கொண்டு சென்று அழகான நகரங்களை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் அவர்களே தோண்டி அவர்களே திருடிச் சென்று விடுகிறார்கள். கிராமத்தவர்கள் சிரமப்பட்டுத் தோண்டியெடுத்தவற்றைச் சிலர் ஏமாற்றி எடுத்துச் செல்கிறார்கள்.”

“இதே போலத்தான் மற்றைய இடங்களிலும்.” அமெரிக்க நண்பர் சொன்னார்.

“இப்போது பூமிக்குக் கீழே தோண்டி எடுக்க ஓர் அழுக்குக் கட்டி கூடக் கிடையாது. அரசாங்கம் இப்போது விழித்துக் கொண்டுள்ளது. யாரும் இவ்விடத்தில் கைபோட முடியாது. வெளிநாட்டவர் இவற்றைத் திருடிச் செல்வது என்றால் அது அரசாங்கப் பொருளைத் திருடிச் செல்வதாகும். அரசாங்கமே இப்போது சரியான விலைக்கு இப்பொருட்களை விற்கவுள்ளது.”

“ஆமாம். இதே போலத்தான் மற்றைய இடங்களிலும்.” அமெரிக்க நண்பர் சொன்னார்.

“அப்படியென்றால் இப்போது கிராமத்தவர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது?”

“இப்பிரதேசத்தில் ஆறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்குச் சென்றீர்களானால் அங்கு ஒரு துண்டுச் சாடியோ, கண்ணாடிக் குவளையோ, ஒரு சீலைத் துண்டோ இருக்காது.”

“ஏன்?”

“ஏன் என்றா கேட்கிறீர்கள். அவை எல்லாவற்றையும்தான் சுற்றுலாக்காரருக்கு விற்றுத் தீர்த்து விட்டார்களே. அவர்களிடமிருந்த எல்லாவற்றையும் பழமைச் சின்னங்களாக மாற்றி விற்று விட்டார்கள். முதலில் அவற்றைத் துண்டுகளாக உடைத்து நிலத்துக்குக் கீழே புதைத்து விடுவார்கள். அவை அழுக்கடைந்து துருப்பிடித்ததும் அவற்றைப் பெறுமதி மிக்க புதை பொருட்கள் எனச் சொல்லி விற்றுவிடுவார்கள். எமது மக்களின் பண்புகள் மோசமாகி விட்டன.

நேற்று எனது கழுதையின் சேணத்திலிருந்த சிறுமணிகளைத் திருட முயன்ற ஒரு சின்னப் பயலைப் பிடித்தேன். அவனால் அதை எடுத்துச் செல்ல முடிந்திருந்தால் அவன் அவற்றைப் புதைத்து விட்டுப் பின்னர் தோண்டிப் புதை பொருளாக எடுத்திருப்பான். திருமண வயதிலிருக்கும் அனைத்துப் பெண்பிள்ளைகளும் புதியவற்றைப் பழம் பொருட்களாக மாற்றும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உங்கள் விரளவு கல்லொன்றை எடுத்தார்களானால் உங்களால் நம்ப முடியாத அளவுக்கு அதைக் கலைத்துவம் உள்ளதாக மாற்றி விடுவார்கள். கழுதை லாடத்திலிருந்து அவர்கள் பழங்காலக் காசுகளையும் பதக்கங்களையும் உருவாக்குவார்கள்.”

“நான் உனக்குச் சொன்னேன். சரியாக இதே போலத்தான் மற்ற இடங்களிலும்.” அமெரிக்கர் சொன்னார்.

“நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள். உங்கள் காலம் போவது எப்படி?” நான் கிழவரைக் கேட்டேன்.

“நான் கழுதைகள் விற்கிறேன்.”

வயதானவர் எழுந்து அருகிலிருந்த கிணற்றில் நீர் மொண்டு கழுதைக்குக் கொடுக்க அது அருந்தியது. அமெரிக்க நண்பர் எழுந்து கழுதையருகே செல்ல, நானும் கிழவரும் உரையாடினோம்.

“கழுதை வியாபாரத்தில் கிடைப்பது உங்களுக்குப் போதுமா?”

“அல்லாஹ்வுக்கே புகழ் எல்லாம். இந்தத் தொழிலை ஐந்து வருடங்களாகச் செய்து பிழைக்கிறேன். ஆண்டவனுக்கு நன்றி!”

“என்ன வருமானம் கிடைக்கும். உதாரணமாக...”

“அது கழுதைகளைப் பொறுத்தது.”

“ஒரு கழுதையை விற்க எவ்வளவு காலம் எடுக்கும்?”

“நிலைமையைப் பொறுத்தது. சில வேளை ஒரு கழுதையை மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு விற்க முடியாமலும் போகும். சில வேளை ஒரே நாளில் ஐந்து கழுதைகள் கூட விலை போகும்.”

அமெரிக்க நண்பர் உற்சாகத்துடன் என்னை நோக்கி நடந்து வந்தார்.

“கழுதைக்கு மேல் உள்ள அந்த ஜமுக்காளத் துண்டைக் கவனித்தாயா?”

கிழவருக்கு நாங்கள் பேசிக் கொள்வது புரியாது. நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடினோம்.

பழைய, அழுக்கடைந்த, கந்தல் போன்ற துணி கழுதையின் மேல் கிடந்தது.

“அதாவது அந்த அழுக்குத் துணியைச் சொல்கிறாயா?” நான் கேட்டேன்.

“கடவுளே... அது ஓர் ஆச்சரியம். கிடைத்தற்கரியது. அதன் நிறம், கோலம் யாவுமே வியக்க வைக்கிறது. அற்புதமான வேலைப்பாடு. ஒரு கன சென்ரி மீட்டருக்குள் நூற்று இருபது முடிச்சுக்கள் நிச்சயம் இருக்கும். இதற்கு முன்னர் உலகத்தில் இப்படியொன்று காணப்படவில்லை. இது விலைமதிப்பற்றது.”

“உனக்கு அதை வாங்க வேண்டுமா?”

“ஆம். ஆனால் நான் ஜமுக்காளத் துண்டை வாங்கப் போவதாக கிழவன் தெரிந்து கொள்ளக் கூடாது. இங்குள்ள மக்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவர்களது கிழிந்த, பழைய செருப்பை வாங்க முயற்சிக்கிறோம் என்றால் அது பெறுமதி மிக்க பழம் பொருள் என்று நினைத்து உலகத்தின் அனைத்துப் பணத்தையும் கேட்பார்கள். அதிக பணம் கிடைக்கவில்லையென்றால் அவர்கள் திருப்தியுற மாட்டார்கள். அதனால் கிழவன் விடயத்தை அறிந்து கொள்ள வேண்டாம்.”

“என்ன இருவரும் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?” கிழவர் கேட்டார்.

“ஒன்றுமில்லை. இங்குள்ளவற்றை இவர் அதிகம் விரும்புகிறார்.” நான் சொன்னேன்.


“அப்படி விரும்புவதற்கு இங்கு என்னதான் இருக்கிறது. இருப்பது வெறும் சுண்ணப் பாறைகள்தாம்.”

“பொருட்களை குறிந்த விலையில் வாங்குவதற்கு என்னிடம் சில முறைகள் உள்ளன என்று உனக்குச் சொன்னேனல்லவா? அவற்றில் ஒன்றை இப்போது பிரயோகிக்கப் போகிறேன்.” அமெரிக்க நண்பர் எனக்குச் சொன்னார்.

“என்ன?”

“இந்த ஜமுக்காளத் துண்டில் எனக்கு ஆர்வம் இருந்தாலும் நான் அதைக் காட்டிக் கொள்ளப் போவதில்லை. நான் அந்தக் கழுதையை வாங்கப்போகிறேன். உண்மையில் கழுதையின் மேல் இருக்கும் அந்த ஜமுக்காளத் துண்டின் பெறுமதி கிழவருக்குத் தெரிந்திருக்காது. நாம் கழுதையை வாங்கினால் அந்தப் பழைய துண்டையும் அப்படியே விட்டு விடுவார். பிறகு அந்த ஜமுக்காளத் துண்டை எடுத்துக் கொண்டு வழயில் கழுதையை விட்டு விடலாம். நான் அந்தக் கழுதையை வாங்கப் போவதாக இப்போது அவரிடம் சொல்கிறாயா?”

“கழுதையை நீங்கள் விற்க விரும்புகிறீர்களா?” நான் கிழவரைக் கேட்டேன்.

“ஆம்.”

“சாதாரணமாக அதை எவ்வளவுக்கு விற்க எண்ணியுள்ளீர்கள்?”

“அது வாங்கும் நபரைப் பொறுத்தது.“

“நாங்கள் வாங்குவதாக இருந்தால்...”

கிழவர் சிரித்தார்.

“என்னோடு விளையாடுகிறீர்களா? உங்களைப் போன்ற கண்ணியமானவர்கள் இந்தக் கழுதையை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?”

“நாங்கள் இந்தக் கழுதையை வாங்கப்போகிறோம். எவ்வளவுக்கு விற்பீர்கள்?”

“அது வாங்குபவரைப் பொறுத்தது என்று நான் சொன்னேன்தானே... இதை வாங்கப்போவது நீயா அல்லது அவரா?”

“அவர்தான்.”

“இந்த ஆள் எந்த நாட்டவர்?”

“அமெரிக்கன்.”

“ஹ_ம்... அவர் வெளிநாட்டவரல்ல. நம்மில் ஒருவர். இங்கே பார்... இந்தக் கழுதை வயதானது. நொண்டி. அவருக்கு இது பொருத்தமற்றது என்று சொல்லு.”

நான் அமெரிக்க நண்பரிடம் சொன்னேன்.

“மிகவும் நல்லது. அப்படியாயின் கழுதையைக் குறைந்த விலைக்கு விற்று விடுவார்.” நண்பர் சொன்னார்.

“கழுதை வயதானதாக இல்லiயா என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை.” நான் சொன்னேன்.

“உண்மையில் இதை ஒரு அமெரிக்கன் விரும்புவது வெட்கக் கேடானது. அவர் ஊருக்குச் சென்றதும் துருக்கியன் ஏமாற்றி விட்டான் என்று சொல்லப் போகிறார்.”

இதை அமெரிக்கரிடம் சொன்னேன்.

“துருக்கிய கிராம மக்கள் அப்பாவிகள். நேர்மையானவர்கள். எனக்குச் சரியான விலைக்குத்தான் தருவார். அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார். அவருக்குப் பெருந்தொகைப் பணத்தைக் கொடுப்பேன்.”

அமெரிக்கர் ஒத்துக் கொள்வதாகக் கிழவரிடம் கூறினேன்.

“ஆனால் இதை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் இறந்த விடும். தலையிலிருந்து வால் வரை சொறி பிடித்துப் போய் இருக்கிறது.”

“நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். அவர்தான் கழுதை வேண்டும் என்கிறாரே...”

“அல்லாஹ்... அல்லாஹ்... இதோ பார், இது ஒரு பெண் கழுதை கூட இல்லை. சரும நோயுள்ள இதைக் கொண்டு சென்று என்னதான் செய்யப்போகிறார்?”

“உங்களுடைய தொழில் என்ன? நீங்கள் பணத்தைப் பற்றி மட்டும் யோசியுங்கள். இந்தக் கழுதைக்கு எவ்வளவு வேண்டும்?”

“நான் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். உங்களது நாட்டில் கழுதைகள் இல்லையா என்று அமெரிக்க நண்பரிடம் கேட்டுப் பார்.”

அதை நண்பரிடம் சொன்ன போது சற்று யோசித்து,

“இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இதைப் போன்று இல்லை.”

நான் கிழவருக்கு மொழி பெயர்த்துச் சொன்னேன்.

“ஹ_ம்... அப்படியானால் அவர் அமெரிக்கக் கழுதைகளை விரும்பவில்லை. துருக்கிக் கழுதைகளைத்தான் விரும்புகிறார். சரி. நான் என்ன செய்ய முடியும். என்னில் எந்தப் பிழையும் கிடையாது. இந்தக் கழுதையின் குறைபாடுகளை மொத்தமாகச் சொல்லியிருக்கிறேன். ஒரு சொறிக் கழுதைக்காக வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரின் மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. நான் இதை விற்கிறேன்.”

“எவ்வளவு?”

“உங்களுக்கென்ற படியால் பத்தாயிரம்”

“என்ன... உங்களுக்குப் பைத்தியமா... சிறந்த அரபுக்குதிரை ஒன்றையே இரண்டு அல்லது மூவாயிரத்துக்கு வாங்கலாம்.”

“அப்படியென்றால் எதற்கு இந்தக் கழுதை. அரபுக் குதிரையை வாங்கிக் கொள்ளுங்கள்.”

இந்தக் கழுதைக்குப் பத்தாயிரம் லீராக்களைக் கிழவன் கேட்கிறான் என்று சொன்னதும் அமெரிக்க நண்பர்,

“நான் உனக்குச் சொன்னேன்தானே... இந்த ஆட்கள் இப்படித்தான். இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் அதிகப் பணம் தேவை. அதற்குக் காரணம் அவர்களது பொருட்கள் மிகவும் பெறுமதியானவை என்ற எண்ணம். ஜமுக்காளத்தை மட்டும் கேட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்? அதற்கு ஒரு லட்சம் லீராக்களையாவது கேட்டிருப்பார். பத்தாயிரம் லீராக்களைக் கொடுக்க முடியும். ஆனால் பணத்தைக் கொடுக்கும் போது ஐம்பதாயிரம் லீராக்களைக் கேட்பார். இதனால்தான் உறுதியான முறையில் அவர்களோடு பேரம் பேச வேண்டும் என்கிறேன்.”

“உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் இந்தக் கழுதையை எவ்வளவுக்கு வாங்கினீர்கள்?” நான் கிழவரைக் கேட்டேன்.

“நான் பொய் சொல்வதில்லை. இப்போதுதான் தொழுவதற்காக சுத்தம் செய்து கொண்டேன். ஒரு பொய்யாவது நான் சொல்ல மாட்டேன். இந்தக் கழுதையை ஐந்து லீராக்கள் கொடுத்து நான் வாங்கினேன். இதன் தோலை எடுத்து செருப்புக்களைத் தைப்பதற்காக. இந்தக் கழுதை இன்னும் சில தினங்களில் செத்து விடும். பிறகு அதன் தோலை உரித்து எடுக்கலாம். வேறு ஒன்றுக்கும் இது உதவாது.”

“அதெல்லாம் சரிதான். ஒரு நியாயம் வேண்டுமல்லவா? ஐந்து லீராக்களுக்கு வாங்கிய கழுதையை நீங்கள் எப்படி பத்தாயிரம் லீராக்களுக்கு விற்க முயற்சிக்க முடியும்?”

“மகனே... நான் விற்க முயற்சிக்கவில்லை. நீங்கள்தான் வாங்க விரும்புகிறீர்கள். நான் அது வயதானது என்று சொன்னேன். அந்த மனிதன் பரவாயில்லை என்றார். இது சொறி பிடித்தது என்றேன். அப்படியிருந்தும் அதை ஏற்றுக் கொண்டார். அது பெண் கழுதையில்லை என்று சொல்லியும் அவர் வேண்டும் என்கிறார். இன்னும் கொஞ்ச நாள்தான் அது உயிர் வாழும் என்றேன். நல்லது என்று சொன்னார். ஓஹ்... எனக்குச் சொல்ல மறந்து விட்டது. இது ஒரு நொண்டி. வலது கால் மடிந்துள்ளது.”

“பரவாயில்லை.”

“இங்கே பார். இதில் ஏதோ பெறுமதி இருக்கிறது. இந்தக் கழுதையில் ஏதோ அதிசயம் இருக்கிறது. அதுதான் எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது. இல்லாவிட்டால் சொறி பிடித்த இந்த நொண்டிக் கழுதையை வாங்க அமெரிக்கன் விரும்ப மாட்டான். நான் சொல்வது சரியா? பத்தாயிரத்துக்குக் குறைய நான் தரமாட்டேன்.”

“இவர் அதற்குக் குறையத் தரமாட்டேன் என்கிறார். நாம் பத்தாயிரத்துக்கு வாங்குவோமா?” என்று நண்பரிடம் கேட்டேன்.

இரண்டு மணிநேரமாக நாங்கள் பேரம் பேசினோம். சில முறை இயலாமல் கைவிட்டுப் போவதைப் போல நடித்தோம். அம்மனிதர் அதைக் கண்டு கொள்ளவேயில்லை. நாங்களாக மீண்டும் வந்து பேசினோம்.

“நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒரு கழுதைக்காகப் இவ்வளவு தூரம் பேரம் பேசும் நீங்கள் அவ்வளவு இலகுவில் விட்டுப் போகவா போகிறீர்கள்!” கிழவர் சொன்னார்.


வாகனத்தைச் சற்றுத் தூரத்தில் நிறுத்திக் கொள்ளுமாறு நான் சாரதியிடம் சொன்னேன். அப்போதுதான் கழுதையைச் சற்றுத் தூரம் நடத்திச் சென்று விட்டுச் செல்ல முடியும்.

பெரும் பேரப் போராட்டத்துக்குப் பிறகு கழுதையின் விலை இரண்டாயிரத்து ஐநூறு லீராக்களுக்கு வந்து நின்றது. பணத்தை எண்ணிக் கிழவரிடம் கொடுத்தோம். கிழவர் கழுதைக்கு மேல் இருந்த கம்பளித் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கழுதையின் கடிவாளப் பட்டியைக் கையில் தந்து சொன்னார்.

“இதன் தேகாரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.”

கிழவனிடம் இருந்த ஜமுக்காளத் துண்டு மீது அமெரிக்கனின் பார்வை பதிந்தது. நாம் இப்போது என்ன செய்வது?

“எதுவும் பேசாதே. நாம் சற்று நடந்து விட்டுத் திரும்பி கழுதைக்குக் குளிரில் சிரமமாயிருக்கும் என்ற படியால் அதன் முதுகில் போடுவதற்கென்று அந்த ஜமுக்காளத் துண்டைக் கேட்போம். ஜமுக்காளத் துண்டில் நாம் அவதானமாக இருக்கிறோம் என்பது கிழவருக்கு விளங்கக் கூடாது ... புரிகிறதா!”

அமெரிக்கன் கழுதையை பின்னால் தள்ள நான் முன்னால் இழுத்தேன். அதற்கு நகர்வதற்குக் கூடச் சக்தி இல்லை. ஜமுக்காளத் துண்டு மட்டும் கிடைத்து விட்டால் கழுதையை இவ்விடத்திலேயே கூட விட்டு விடலாம். இவ்வாறு ஒரு இருபது எட்டுக்கள் வைத்த நிலையில் பின்னால் கிழவரின் சத்தம் கேட்டது.

“நில்லுங்கள்.. கழுதையின் பொருள் ஒன்றை விட்டுச் செல்கிறீர்கள்...”

அந்த ஜமுக்காளத் துண்டு தானாகவே வருகிறது என்றால் எமது சந்தோசம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

“அமெரிக்காவுக்குப் போனதும் கழுதையை என்ன செய்யப் போகிறாய்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? கட்டுவதற்கான குற்றியில்லாமல் கழுதை வாங்கக் கூடாது. நீ ஒரு ஏமாளியாய் இருக்கிறாய்.”

கழுதையைக் கட்டுவதற்கான ஒரு முனையில் வளையத்தோடு கூடிய இருப்புக் கம்பித் துண்டு கைமாறியது.

அமெரிக்க நண்பர் ‘இதுதான் ஜமுக்காளத் துண்டைக் கேட்கச் சரியான தருணம்’ என்றார்.

“கழுதை கடும் நோய்ப்பட்டுள்ளது. குளிரில் விறைத்துப் போகுமென்றால் வெட்கக்கேடு. கழுதையின் மேல் போட்டிருந்த அந்த அழுக்கு ஜமுக்காளத் துண்டைத் தந்தீர்களானால் கழுதையின் முதுகில் போட்டுக் கொள்ளுவோம்” என்று கிழவரிடம் சொன்னேன்.

“ஆஹ்.. நான் இத்துண்டைத் தரமாட்டேன். கழுதையைத்தான் உங்களுக்கு விற்றேனே தவிர, ஜமுக்காளத் துண்டை அல்ல.”

“ஆம் நாம் கழுதையைத்தான் வாங்கினோம். இப்போது அதை அத்துண்டைப் போட்டு மூடிக் கொள்ளலாமே. அந்த ஜமுக்காளத்துண்டு பழையது
அழுக்குப் பிடித்ததுதானே.”

“ஆமாம். இது பழையது அழுக்குப் பிடித்ததுதான். இது ஒரு சதத்துக்கும் பெறுமதியற்றது. ஆனால் நான் இதை உங்களுக்குத் தரமாட்டேன்.”

“ஏன்?”

“மிஸ்டர்... இதைத் தரமாட்டேன். இது ரோமங்களால் நெய்யப்பட்டது. எனது தந்தையிடமிருந்து கிடைத்தது. இது எமது மூதாதையரிடமிருந்து பரம்பரை பரம்பரையாக வந்தது. நான் தரமாட்டேன்.”

“அது எதுக்கு நல்லது என்று கேள்” என்றார் நண்பர். நான் கிழவரைக் கேட்க,

“இந்த அழுக்குத் துண்டு உனக்கு எதற்கு நல்லது?” என்று திருப்பிக் கேட்டார்.

கிழவர் சற்று உறைப்பானார்.

“நீ என்ன கேட்கிறாய்? எதற்கு நல்லது என்றா கேட்டாய்? நான் இன்னொரு சீக்குப் பிடித்த கழுதையை வாங்கி அதன் மேல் இதைப் போர்த்துவேன். அல்லாஹ் உதவியால் மற்றொருவர் கிடைத்தால் விற்று விடுவேள். இந்த ஜமுக்காளத் துண்டு எனக்கு அதிர்;ஷ்டமானது. நான்தான் உனக்கு இரும்புத் துண்டை இலவசமாகத் தந்திருக்கிறேனே. அதைப் பற்றி நான் ஏதாவது பேசினேனா?”

“சரி சரி.. கொஞ்சம் காசைத் தந்து நாங்கள் அத்துண்டை வாங்கி கழுதையை மூடிக்கொள்கிறோமே?”

“நீ இப்போது மூடிக்கொண்டு சென்று விடுவாய். பிறகு நான் கழுதைகளை எப்படி விற்பது? ஐந்து வருடங்களாக இத்துண்டால் மூடித்தான் நான் கழுதை வியாபாரம் பண்ணுகிறேன். போய்வாருங்கள். கழுதையின் தேகாரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.”

அமெரிக்க நண்பருக்கு இதயத்தாக்கு ஏற்பட்டு விடுமோ என்று எனக்குப் பயம் வந்தது. அவரைக் கையில் பிடித்துக் கொண்டேன்.

சில எட்டுக்கள் வைத்து நடந்த பிறகு கிழவரின் குரல் கேட்டது.

“கழுதையை விட்டு விடும் எண்ணமிருந்தால் தூரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். அதற்குப் போர்த்த வேண்டிய அவசியமும் இருக்காது பாருங்கள்.”

அதே இடத்தில் கழுதையை விட்டு விட்டு வாகனத்தை நோக்கி நடந்தோம்.

“எனக்கு எந்த இடத்திலும் ஒருபோதும் இப்படி நடந்தது கிடையாது. இது ஒரு வித்தியாசமான சம்பவமாக இருக்கிறது.” என்றார் அமெரிக்க நண்பர்.

வாகனத்தில் ஏறினோம். கழுதை கட்டும் இரும்புத் துண்டு இன்னும் அவர் கையில் இருந்தது. அதை அவர் வீசவில்லை.

“இந்த இரும்புத் துண்டை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“இதை எனது பழைய சேகரப் பொருட்களோடு ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்ளப் போகிறேன். இந்த இரும்புத் துண்டு பெறுமதியானது. இதை இரண்டாயிரத்து ஐநூறு லீராக்கள் கொடுத்து அதாவது குறைந்த பணத்தில் பெற்றிருக்கிறோம்.”

“இதோ பார்... நான் உலகத்துக்கு முன்னால் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன். இது எனக்குப் பெரும் வெட்கக் கேடு.”

அடிக்கடி தலையில் அடித்துக் கொண்டு “நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார் அமெரிக்கர்.

28.05.2010
----------------------------------------------------------------------------------------------------
முகமட் நுஸ்ரத் நெஸின் என்ற அஸீஸ் நெஸின் 1915ம் ஆண்டு துருக்கியில் பிறந்தவர். நவீன துருக்கிய     இலக்கியத்தின் பிரபலமான குரலாக அவர் எதிரொலித்தவர். நாட்டாரிலக்கியம் சார் படைப்பாளியாகவும்     சாதாரண மக்களின் இலக்கிய கர்த்தாவாகவும் மிளிர்ந்தவர். படைப்புகள் தடை செய்யப்பட்டும் தனது     படைப்புகளுக்காக சிறையிலடைக் கப்பட்டும் துன்பப்பட்டவர். ஹார்வாரட் பல்கலைக்கழக மத்தியகிழக்குக்    கற்கைகளுக்கான நிலையத்துக்காக Carol Johnson Shedd njhFj;j Are you listening என்ற நூற் பிரதியிலிருந்து   இந்தக் கதை பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கதைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

பூனையும் வீடும் விற்பனைக்காம்.
பூனை விலை பல லட்சம்.
வீடு ஒரு ரூபாய்.

பூனை வாங்குபவ்ருக்குத்தான் வீடு விற்பனையாம்.
வீட்டைவிற்று அந்தப் பணத்தைக் கடன்காரருக்கோ, கோவில் உண்டியலிலோ போடுவதாக கொடுத்த வாக்குக்கு இப்படி ஏற்பாடு

அந்தக்கதை நினைவுக்கு வந்தது.

shenbagam said...

ஏமாறுகிறவர்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.எனினும் இக்கதையைக் கூர்ந்து கவனிப்போமெனில் அமெரிக்கர்களைக் குறி வைத்தே இக்கதைப் புனையப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது.1915-லேயே முகமட் நுஸ்ரத் நெஸின் அவர்கள் அமெரிக்கர்களின் இன்றைய வக்கிர குணத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கதையை யாத்திருக்கின்றார் என்றே எனக்குத் தோன்றுகின்றது.இது எனது மனதில் பட்டது தான்.சரியா?தவறா?என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.கதை துவக்கத்தில் சற்று மந்தமாக சென்றாலும் போகப்போக விறு விறுப்பாக முடிவை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தது. இக்கதையை மிகவும் சிரமம் கொண்டு தமிழாக்கம் செய்து எம்மைப்போன்றவர்களுக்கு படித்தறிய வழிவகுத்த எழுத்தாளர் திரு.அஷ்ரஃப் சிகாப்தீன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
கன்னியாகுமரி,சகாதேவன் விஜயகுமார்.

Shaifa Begum said...

ஆஹா... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் .........திருப்தியான ஒரு முடிவு மனநிறைவைத் தந்தது.
ஆரம்பத்தில் கதையின் போக்கு மந்தம் தான் என்றாலும் இறுதி அரைப்பகுதியின் ஆவலைத் தூணடியதாகவே இருந்தது.. அருமையான கதையை அழகாக மொழிபெயர்த்து எங்களையும் வாசிக்கப்பண்ணிய சேர் உங்களுக்கு நன்றிகள்..

வாசித்து விட்டு கையை விசுக்கிக்கொண்டு யாரும் செல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன்

aotspr said...

நல்ல கதை.
"ஏமாறுகிறவர்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்".
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com