Monday, August 15, 2011

கிறீஸ் மேன்


இரவு 11.30 ஐத் தாண்டியதும் மூடிவிட்டு உறங்கப் போகலாம் என்று எண்ணிய போது சட்டென்று,


“இன்னும் தூங்கவில்லையா?” என்ற செய்தி அவளிடமிருந்து வந்தது.

எனது வாசகிகளில் ஒருத்தி. முகப் புத்தகம் ஏற்படுத்தித் தந்த நட்பு. தெளிவாகப் பேசுவாள். தொடர்பில் வந்தால் ஆகக் குறைந்தது அரை மணிநேரம் இலக்கியம், அரசியல், பொது விவகாரங்கள் என்று இருவரும் பேசுவோம்.

“இன்னும் இல்லை.”

“வீட்டில் எல்லோரும் தூங்கிட்டாங்களா?” - கேட்டாள்.

“ஆம்!”

“ஸ்கைப் வரட்டுமா?”

“சரி.”

ஸ்கைப்பில் வந்தாலும் கூட நாங்கள் பேசிக் கொள்வதில்லை. காரணங்கள் பல. முதலாவது காரணம் என்னிடம் ஹெட் போன் கிடையாது. இருந்த இரண்டு ஹெட்போன்களையும் பிள்ளைகள் பல்வேறு இயந்திர சாதனங்களில் பயன்படுத்தி உடைத்து விட்டார்கள்.

இரண்டாவது காரணம் பெண் குட்டிகளோடு அரட்டை அடிப்பதை மனைவியும் ஆண்களோடு அரட்டையடிப்பதை வாசகிகளின் தாய், தந்தை, அண்ணன், தம்பிமாரும் கண்டால் கதை கந்தலாகி விடும்.

ஸ்லோமோஷனில் அசையும் முகங்களை ஆளுக்காள் அவ்வப்போது பார்த்துக் கொண்டு எழுத்துக்களின் மூலம் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.

“உங்கள் ஊரில் கிறீஸ்மேனைப் பிடித்து விட்டார்களாமே...?”

“அப்படித்தான் தகவல் கிடைத்துள்ளது.”

“ஊரில் பெரிய ஆர்ப்பாட்டம் நடக்குது என்று அறிந்தேன்.”

“ம்...”

“என்ன ம்! விபரம் அறிய வேண்டாமா...?”

“அறிந்த வரை ஒரு புது முகம் ஒரு பெண்ணைத் தாக்கியதாகவும் பொது மக்கள் அவரை மடக்கிப் பிடித்ததாகவும் பொலிஸார் அவரை அழைத்துச் செல்ல முயன்ற போது ஏதோ பிர்ச்சினை ஏற்பட்டுக் கலவரம் ஆரம்பித்ததாகவும் தெரிகிறது.”

“கலவரம் ஏற்படக் காரணம் என்ன?”

“தெரியவில்லை... எல்லாச் செய்திகளும் துண்டு துண்டாகத்தான் கிடைக்கின்றன. பொருத்திப் பார்த்தால் கூட முழுமையாக வருவதாக இல்லை...”

“வீட்டுக் கதவுகளையெல்லாம் எப்போதும் மூடியே வைத்திருங்கள்!”

“நீங்கள் எத்தனை மணிக்குக் கதவுகளை மூடுவீர்கள்?”

“எப்போதும் மூடித்தான் இருக்கும். இப்போ கொஞ்ச நாளாய் கேற்றிலும் உள்ளால் பூட்டுப் போட்டு வைத்துள்ளோம்!”

“சிரமம் இல்லையா...?”

“சிரமம்தான். பாதுகாப்பாய் இருக்க வேண்டாமா?”

“நீங்கள் இருக்கும் அறைக்கு எத்தனை கதவுகள் தாண்டி வர வேண்டும்?”

“ஏன் நீங்கள் கிறீஸ் பூசிக் கொண்டு கத்தியுடன் எங்கள் வீட்டுக்கு வரப் போகிறீர்களா?”

“அப்படி வந்தாலும் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று எல்லோரும் ஓடிவிடுவீர்கள்!”

“ஹா... அதெல்லாம் எங்ககிட்ட நடக்காது?”

“சரி... எத்தனை கதவுகள் தாண்டி நீங்கள் இருக்கும் அறைக்குள் வரவேண்டும்?”

“கேற்றோடு சேர்த்து நான்கு.... அது சரி ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறீரகள்?”

“இல்லை...
உங்களுக்குப் பின்னால்
கறுப்பாகத் தெரிவது யாரு?”

ஓர் அலறல் சத்தமும் கதிரையொன்று புரண்டு விழும் சத்தமும் ஒன்றாகக் கேட்டது!


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Mohamed Faaique said...

ஹி..ஹி....

சிரிப்பை அடக்க முடியவில்லை...

கிரீஸ் கள்ளன் பற்றிய என் பதிவு

http://faaique.blogspot.com/2011/08/sri-lankan-super-hero.html

Shaifa Begum said...

ஹஹா ........ஐயோ Greeceman படுத்தற பாடு .........சிரிக்கவும் முடியல... தப்பி தவறி சிரிச்சாலும்..என்ன சிஸ்டர் உங்களுக்கு காமெடியானு கேக்குறாங்க...நாம படுற வேதனை நமக்கு தானே தெரியும்னு சொல்றாங்க. நான் சிரிக்கல ,இப்போ சிந்திக்கிறேன்.....