திண்ணை இணையத் தளத்;தில் இடம்பெற்றிருந்த அந்தக் கதையைப் படித்த போது எழுந்த அடக்க முடியாத சிரிப்பை நான் வாய் பொத்தாமல் வழமைபோல மனந் திறந்து வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தால் எனது மனைவியும் பிள்ளைகளும் எனக்கு நட்டுக் கழன்று விட்டதாக நினைத்திருப்பார்கள்.
ஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல்லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப்புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.
ஆபிதீன்
ஆபிதீன் என்னளவில் ஒரு மகத்தான படைப்பாளி. ‘இடம்’, ‘உயிர்த்தலம்’ ஆகிய அவரது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றையேனும் நான் படித்ததில்லை. ஒரு கவிஞனை நமக்குப் பிடித்த கவிஞனாகவும் ஒரு சிறுகதையாளரை நமக்குப் பிடித்த சிறுகதையாளராகவும் வரித்துக் கொள்ளஅக்கவிஞரின் எல்லாக் கவிதைகளையுமோ சிறுகதையாளரின் எல்லாக் கதைகளையுமோ படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கவிதை, ஒரு சிறுகதை போதுமானது. ‘அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு’ என்ற நான் படித்த ஆபிதீனின் ஒரே ஒரு கதையுடன் அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளராகி விட்டார்.
ஆபிதீனின் கதைகளில் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் நையாண்டியும். ஆனால் அதை வெறும் எள்ளலாக மட்டும் அவர் கதைகளில் பயன்படுத்தவில்லை என்பதுதான் அடிக்கோடிட்டுச் சொல்லப்பட வேண்டியது. வலிந்து புகுத்தப்படும் நகைச்சுவையோ நையாண்டியாகவோ அவை இருப்பதில்லை. தடவித் தடவி வந்து வலிக்க நோண்டிவிட்டு மீண்டும் தடவி விடுவது போன்ற ஒரு நுணுக்கம் அவற்றில் பரவியிருக்கும். கண்டிக்க வேண்டியதை, கேவலங்களை, அசிங்கங்களை, கேலிக்குரியவற்றை, சொல்ல வேண்டும் என்று நினைத்ததை அவர் இந்த நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும்தான் வெளிப்படுத்தி வருவார்.