Sunday, September 30, 2012

அரச தேசிய சாஹித்திய விருது - 2012


நானும் நந்தினி சேவியரும்

இவ்வருடத்துக்கான அரச தேசிய சாஹித்திய விருது வழங்கல் வைபவம் இன்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகள் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த வருடம் நான் வெளியிட்ட அரபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியான “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” நூலுக்கு சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுதிக்கான விருது கிடைக்கப் பெற்றது.

இம்முறை விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசியரர்கள் விபரம் வருமாறு-

01. சிறந்த நாவல் - “சொடுதா” - எஸ்.ஏ.உதயன்

02. சிறந்த நிறுகதைத் தொகுதிகள்

    “வெள்ளி விரல்” - ஆர். எம்.நௌஷாத்
    “நெல்லிமரத்துப் பள்ளிக்கூடம்” - நந்தினி சேவியர்

03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்

04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்

05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்

06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்

07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷரீப்

08. சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்

09. சிறந்த மொழிபெயர்ப்பு (இளையோர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவ்லைக் கமால்

10. சிறந்த மொழிபெயர்ப்பு (நானாவிதம்) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்

Tuesday, September 25, 2012

நானும் ஒரு முஸ்லிம்!எப்போதும் நினைவிலிருத்திக் கொள்
நீ ஒரு முஸ்லிம்

ஒரு போதும் பொய் சொல்லக் கூடாது -
நீ ஒரு முஸ்லிம்

தொழுகையைத் தவற விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

நோன்பு பிடிக்காமல் இருந்து விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

ஸக்காத்தைக் கணக்குப் பார;த்துக் கொடுத்து விடு -
நீ ஒரு முஸ்லிம்

ஸதக்காக் கொடு -
நீ ஒரு முஸ்லிம்

வசதி வந்தால் ஹஜ்ஜை நிறைவேற்று -
நீ ஒரு முஸ்லிம்

தப்புகளுக்குத் துணை போகாதே -
நீ ஒரு முஸ்லிம்

மூத்தோரை மதித்து நட -
நீ ஒரு முஸ்லிம்

சிறியவர்களிடம் அன்பு காட்டு -
நீ  ஒரு முஸ்லிம்

வறியவர்க்குக் கட்டாயம் உதவி செய் -
நீ ஒரு முஸ்லிம்

பொதுவிடத்தில் கண்ணியமாக நடந்து கொள் -
நீ ஒரு முஸ்லிம்

ஒரு குழப்பவாதியாக இருந்து விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

வாகனம் செலுத்துகையில் ஒழுங்கைப் பின்பற்று -
நீ ஒரு முஸ்லிம்

விட்டுக் கொடு -
நீ ஒரு முஸ்லிம்

வீண் தர்க்கத்தையும் விதண்டாவாதத்தையும் தவிர் -
நீ ஒரு முஸ்லிம்

உனது நற்பண்புகளால் மற்றோரைக் கவர் -
நீ ஒரு முஸ்லிம்

யாரையும் அவமதிக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

நீயே பிரதானம் என்று பறைசாற்றாதே -
நீ ஒரு முஸ்லிம்

உன் சொல்லையே கேட்கவேண்டும் எனத் துள்ளாதே -
நீ ஒரு முஸ்லிம்

பொதுத் தளங்களில் மற்றவரைக் கவரக் கேனத்தனமாகப் பேசவோ நடக்கவோ முற்படாதே -
நீ ஒரு முஸ்லிம்

கோழையாக இராதே -
நீ ஒரு முஸ்லிம்

Wednesday, September 19, 2012

கிழக்கு மாகாண சபையும் எனது கழிவறையும்


கடந்த வாரம் ரொம்பவும் “டென்ஷன் வாரம்.” 

ஒன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வந்தும் தொடர்ந்தும் இழுபறி நடந்து கொண்டிருந்தமை. அது இப்போது ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டது. இது பற்றிப் பின்னர் எழுதலாம். எழுதாமலும் விடலாம்.

எனக்கு நேர்ந்த அடுத்த “டென்ஷன்” எங்களது வீட்டுக் கழிவறைப் பிரச்சினை.

வீட்டைக் கட்டி அதில் வேறு யார்யாரையோவெல்லாம் வாடகைக்குக் குடி வைத்துவிட்டு நான் கொழும்பில் பத்தரை வருடங்கள் குடியிருக்க வேண்டி வந்தது. பிள்ளைகளின் பாடசாலை, போக்குவரத்துக் கருதியே இப்படி நான்கைந்து வாடகை வீடுகளில் குடியிருந்தோம். வாடகை வீடுகளில் வசிப்பதில் உள்ள சிரமங்களைப் பலர் எழுதி விட்டார்கள். தவிர, நான் எழுத வந்த விடயமும் அதுவல்ல.

பத்தரை வருடங்களுக்குப் பிறகு அண்மையில்தான் சொந்த வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வீடு திருத்தி, பொருட்களை ஏற்றியிறக்கி, 50 வீதம் வீட்டை வீடாக்கி எடுப்பதற்குள் பாதி உயிர் போய்விட்டது.

வீட்டுக்கு வந்து 5ம் நாள் எங்களது வீட்டுப் பிரதான கழிப்பறையிலிருந்து அதன் கதவு நிலையில் ஒரு கால் பகுதியூடாக நீர் கசியத் தொடங்கியது. 6ம் நாள் வீடு முழுக்க நாற்றம் பரவத் தொடங்கிற்று. வீட்டின் மேல்மாடியில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். கழிவுகள் செல்லும் பெருங் குழாயைக் கீழ் வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். எல்லாம் நன்றாக இருந்தது. நீரை வாளி வாளியாக இறைத்து நீர் கசிகிறதா என்று பார்த்தேன். இல்லை! 

வீட்டில் நாற்றம் குடலைப் பிடுங்கத் தொடங்கியதால் சாம்பிராணி, சந்தனக்குச்சி என்று புகை வேறு. 

நமது அறிவுக்கு இது புலப்படாது என்றும் குழாய் வேலைக்காரர் ஒருவரை அழைத்துக் காட்டினால்தான் புரியும் என்றும் நினைத்தேன். ஒரு நாள் இரவு குழாய் வேலைக்காரர் ஒருவரின் உதவியாளரைத் தேடிக் கண்டு பிடித்தேன். வந்து பார்த்த அவருக்கு எதுவும் பிடிபடவில்லை. தனது தொழில் வழங்குனரைக் காலையில் அழைத்து வருவதாகவும் அவர் கண்டு பிடித்து விடுவார் என்றும் சொல்லிச் சென்றார்.

Monday, September 17, 2012

கைகளில் கசியும் பேரீச்சம் பழங்கள்


கைகளில் கசியும் ஒரு “சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”

- மன்னூரான் ஷிஹார்ஈழத்தின் இன்றைய பெயர்சொல்லத்தக்க தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் பெரும் பிரயத்தனத்தினால் நூலுருப் பெற்றிருக்கும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” எனும் சிறுகதைத் தொகுப்பானது அரபுலகின் நாம் அறிந்திராத பல சங்கதிகளை ஏந்தியதாக வெளிவந்திருக்கின்றது.

‘ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது தமிழ்ப் பழமொழி. தமிழர்தம் வாழ்வியலோடும் பாரம்பரியத்தோடும் தொடர்புடைய ஒரு தானியமாக அரிசிச்சோறு இருப்பதால்தான் போலும் இந்தப் பழமொழியில் அது உதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதையே நான் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இந்தச் சிறுகதைத் தொகுப்போடு பிரதியிட்டுப் பார்க்கின்றேன்.

அரபுலகைப் பொறுத்தமட்டில் அதனுடைய அன்றாட வாழ்வியல், வரலாறு, பாரம்பரியம் என்பவற்றோடு ஐக்கியமான ஒரு உணவாகக் கருதப்படுவதும், அரபுதேசம் என்றதுமே நம் எல்லோருக்குமே சட்டென நினைவுக்கு வருவதும் அங்குள்ள பேரீச்சம்பழங்களே. அதில் பலவகையுண்டு. அந்தவகையில் ஈராக், எகிப்து, சூடான், சிரியா, பலஸ்தீன், யெமன், மொரோக்கோ, ஓமான், லிபியா போன்ற வேறுபட்ட குணாதிசயங்களைக்கொண்ட அரபுநாடுகளையும் வெவ்வேறுபட்ட காலகட்டங்களில் அந்நாட்டு மக்களின் வாழ்வியலின் வேறுபட்ட கோணங்களையும் கருவாகக் கொண்டிருக்கும் இந்தக் கதைகளை விதம்விதமான பேரீச்சம்பழங்களாய் நான் காண்கின்றேன். இப்பல்வகைப் பேரீச்சம்பழங்களையும் ஒன்றாகச் சேகரித்து ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்களாய் நமக்கு விருந்தாக்கியிருக்கின்றார் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

பேரீச்சம்பழங்களில் எத்தனை வகையறாக்கள் இருந்தபோதிலும் அவை எல்லாவற்றுக்கிடையிலும் ‘தித்திப்பு’ என்னும் பிரதான ஒற்றுமை உண்டு. அதுபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும்கூட கதை பின்னப்பட்டிருக்கும் தேசம், காலகட்டம், சூழல், பிரதான பாத்திரங்கள் என்பவற்றுக்கிடையில் ஏராளமான வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலுங்கூட இந்தக் கதைகள் எல்லாவற்றுக்குள்ளும் தென்படும் ஒற்றுமையாய் ஒரு இனம்புரியாத சோகம் இழையோடியிருப்பதை வாசகர்கள் உணரலாம். “Unity in diversity”  வேற்றுமையில் ஒற்றுமை என்பார்களே, அதைத் தனதிந்தத் தொகுப்பிலே வெளிக்காட்டியிருக்கின்றார் எழுத்தாளரர். வானவில்லின் ஏழுநிறங்களும் ஒன்றுக்கொன்று தனித்துவமானதாக இருந்தபோதிலுங்கூட அவை ஏழும் சேர்ந்தால்தான் அது வானவில்லாய் அங்கீகாரம் பெறுகின்றது. அதுபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுங்கூட ஒவ்வொரு கதையிலும் ஒரு தனித்துவம் தெரிகிறது;
அதேவேளை அவற்றுள் ஒரு ஒத்த தன்மையும் தென்படுகின்றது.

Sunday, September 16, 2012

கவியரங்கக் காட்சிகள்

“விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்” நேற்றும் இன்றும்  கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துக் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஒரு கண்காட்சியை நடத்தியது.

“ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக“ என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் காட்சிக் கூடம், புகைப்படக் கண்காட்சி, கார்ட்டூன் கண்காட்சி ஆகியன அமைக்கப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

 பி.ப. 2.30 மணி முதல் 3.30 மணிவரை 
அஷ்ரஃப் சிஹாப்தீன் தலைமையில் கவியரங்கொன்றும் இடம்பெற்றது. அக்கவியரங்கக் காட்சிகள் இதோ...

அஷ்ரஃப் சிஹாப்தீன் - தலைமைக் கவிதை
-----------------------------------------------------------

மன்னார்க் கவிஞன், மனங்களைப் படித்தவன்
தன்னார்வத்தால் தமிழ்க் கவியானவன்
பொன்னார் சொற்களில் புதுக்கவி நெய்பவன்
அன்னார்தாம் நம் அமல்ராஜ் பிரான்ஸிஸ்

வளங்குறை மக்களின் வலது கரத்தான்
உளவியல் வல்லான் உறுகவி சொல்வான்
இளங்கவி ஆயினும் இனிதே தமிழில்
அளந்து கொட்டும் ஆற்றல் கொண்டான்

எழுத்திலும் கவியிலும் இதயங்கவர்ந்தவன்
வழுத்திடும் அன்பை வழங்கிடும் நல்லான்
செழுமைச் சொல்லும் சிந்தைக்குக் கருத்தும்
சேர்ந்தே பிசைந்து சீர்கவி தருவான்

மானுடம் போற்றும் மனமெனும் தலைப்பில்
மணிமணியாகக் கவிதையை உரைப்பான்“மானிடம் போற்றும் மனம்” எனுந் தலைப்பில் கவிதை படித்த
கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸ்
--------------------------------------------------------

இனிப் பெண்பா
தருவது ஒரு வெண்பா!

இவள் ஒரு குறிஞ்சிப் பபூ
இவள் இதழ்க் கடையில்
என்றும் குறுஞ் சிரிப்பு

தளைதட்டாத தமிழ்க் கவியில்
இவள் ஒரு குறிஞ்சிப் பூ

இவள் மரபில் மலர்ந்த மலர்
இவள்தான் இருபத்தோராம் நூற்றாண்டின்
உண்மையான அவ்வை!

தொடை தளை சீர் கொண்டு
இவள்
தொடுத்திடுவாள் மாலை
படித்தவர்கள் அறிவார்கள்
அது
மயக்கும் ஆளை

ஸ்ரீமதி ஸ்ரீ
லுணுகல ஸ்ரீ

வாக்குகளான வாழ்க்கை பற்றி
வாக்களிப்பாள் 
உங்கள் மனங்குளிரப் பாக்குளிப்பாள்
“வாக்குகளாலான வாழ்க்கை” எனுந் தலைப்பில்
கவிதை படித்த கவிஞர் லுணுகல ஸ்ரீ
------------------------------------------------------------