அவர் தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர். தனித்துத் தெரிபவர்.
பாலகுமாரனின் நாவல்களை ஒன்றும் விடாமல் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சுப்ரமண்ய ராஜூ பாலகுமாரனின் நெருங்கிய இலக்கிய நண்பர் என்பதை அறிய வந்தேன். அவரது எழுத்துக்களைத் தேடியதில் ஒன்றிரண்டு கதைகள் எங்கெங்கோ படிக்கக் கிடைத்தன. அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்துக்களை ஆவலடங்குமளவாவது படித்துக் கொள்வதற்கும் வாய்ப்பிருக்கவில்லை.
2009ல் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது சுப்ரமண்ய ராஜூ கதைகள் முழுத் தொகுப்பு கிடைத்தது. 486 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் சுப்ரமண்ய ராஜீவின் 32 சிறுகதைகள் அடங்கியுள்ளன. 2008ல் கிழக்கு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.
இந்த நூலில் முன்னுரையை சுப்ரமண்ய ராஜூவின் நண்பரும் எழுத்தாளருமான தேவகோட்டை வா. மூர்த்தி எழுதியிருக்கிறார். இந்த முன்னுரையைப் பலமுறை நான் படித்து விட்டேன். அவ்வளவு உயிரோட்டம் அதில்.
சுப்ரமண்ய ராஜூபற்றி அவர் எழுதியிருக்கும் சில பந்திகளைத் தரலாம்:-
“எல்லோருக்கும் புன்முறுவல்தான். எல்லோருக்கும் உதவி. எல்லோருக்கும் இன் சொல். எவரிடமும் வெறுப்பில்லை. யாரிடமும் காழ்ப்பில்லை. யாரையும் குறை சொல்வதில்லை. யாரையும் கடிந்ததில்லை. இவைதான் சுப்ரமண்ய ராஜூ.”
“தனக்குப் பரிசாகக் கிடைத்த, தான் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஒரு விலையுயர்ந்த பேனாவை ராஜூவுக்குத் தந்தார் பிரபஞ்சன். ‘இந்தப் பேனாவுக்கு நிங்கள்தான் தகுதி’ என்பது போல.”
“ராஜூவின் சிறுகதைத் தொகுதியைப் படித்து விட்டு “வாழ்க்கையில் சதா சலிக்கும் கேள்விகளை இவ்வளவு அடக்கமான தொனியில் சித்தரித்த சமகாலத்து எழுத்தாளர் யாரும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது” என்ற ரீதியில் கவிஞர். ந. ஜெயபாஸ்கரன் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை ராஜூவிடம் கொடுத்தேன். ‘சமகாலத்து எழுத்தாளர் யாருமில்லை என்று ஜெயபாஸ்கர் எபப்டிச் சொல்ல முடியும்?’ என்று என்னுடன் விவாதித்தான்.”
“பிரபஞ்சனின் பேனா, கல்யாண்ஜியின் கடிதம், ஜெயபாஸ்கரனின் சிநேகம், தீபப்பிரகானின் திருப்தி - இவையெல்லாம்தான் தனக்குத் தங்க மெடல்கள் போலப் பரவசப்பட்டான். ஆனால் அவனது சிறுகதைத் தொகுதிக்கு தமிழக அரசின் முதற்பரிசு கிடைத்ததும் அவனது இயல்பான தன்னடக்கத்தின் விளைவாக ஆச்சரியம் அடைந்தான். அசலான இலக்கியத்துக்கு அரசு பரிசு தந்தது எனக்கும் வியப்புத்தான். ஆனால் ராஜூவின் வியப்பு எனக்கு வியப்பில்லை.”
“ராஜூவின் எழுத்துலக வாழ்க்கையில் முக்கிய மைல் கல் - 1976ம் ஆண்டு கணையாழி இதழ் ஒன்றில் தனது ஆதர்ச சிறுகதைத் தொகுதி என்று சுஜாதா ஒன்றை விவரித்து அதில் சுப்ரமண்ய ராஜூவின் பெயரைச் சேர்த்திருந்ததுதான். புதுமைப் பித்தனுக்கு அத்தொகுதியில் இடமில்லை என்று கூறியிருந்த சுஜாதா, ராஜூவின் பெயரை அதில் சேர்த்திருந்தார்.”
“பின்பற்றியது போலவே ராஜூ உடைத்தெறிந்த நியதிகளும் ஏராளம். ‘வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல’ என்பது ராஜூ, அடிக்கடி குறிப்பிட்ட இன்னொரு நியதி. ஆனால் இந்த நியதியை உடைத்தெறிந்த முதல் ஆளும் அவனே. சுப்ரமண்ய ராஜூ எல்லா விதத்திலும் வித்தியாசமானவன். அதனாலேயே விசேசமானவன்.”