Tuesday, July 18, 2017

'அப்பாவின் துப்பாக்கி!'


இலக்கியம் உண்மையான வரலாற்றை எடுத்துச் சொல்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாகக் குறிப்பிடப்படக் கூடிய அண்மையில் வெளியான நூல்களில் ஒன்று 'அப்பாவின் துப்பாக்கி!'

1964ல் ஈராக்கிய குர்திஸ்தான் நிலப்பரப்பில் பிறந்த ஆசாத் ஷெரோ செலீம் என்ற இயற்பெயர் கொண்ட ஹினெர் சலீம் எழுதிய இந்தப் படைப்பு ஒரு நாவலாகவும் சுய சரிதையாகவும் வரலாற்று உண்மைகளைக் கொண்ட ஆவணமாகவும் அமைந்திருக்கிறது.

சத்தாம் உப ஜனாதிபதியாக இருக்கும் போது ஆரம்பிக்கும் கதை சத்தாம் ஜனாதிபதியாகியதுடன் முடிவுக்கு வருகிறது. சத்தாமின் அகண்ட அறபு தேசக் கனவு, அவராலும் அமெரிக்கா, ஐ.நா. ஆகியவற்றாலும் ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் ஆயுத மோதலுக்குள் வாழ்ந்த ஒரு சிறுவன்;, முன் கட்டிளமைப் பருவத்தை அடைவது வரை இக்கதையை இரத்தமும் சதையுமாகச் சொல்லிச் செல்கிறான்.

இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் பிறந்த சலீம் இனப் போராட்டதில் தந்தை முதல் சகோதரர்கள் உட்பட அனைத்து ஆண்களும் தமக்கான சுதந்திரத்துக்காப் போராடியதை இக்கதையூடே சொல்லிச் செல்கிறார். பலாத்காரமான இடப்பெயர்வு, குர்திஸ் மலைப்பாங்கான நிலத்தின் எழில், இனப்போராட்டத்தின் ஆதரவாளர்கள், காட்டிக் கொடு;ப்பவர்கள், அறபு இராணுவம், அதன் அட்டூழியம், கிராமத்தின் வறுமை, பெண்களில் அழகு, ஒரு கோலா பானத்துக்கான ஏக்கம், வறுமை, இடத்துக்கு இடம் மாறி வாழ்தல், கைதிகளாதல், ஏமாற்றப்படுதல் என்று ஏகப்பட்ட விடயங்களை இந்தத் தன் கதை சித்தரிக்கிறது.

கதையில் வரும் முக்கிய பாத்திரங்களில் முதன்மை இடத்தைப் பெறுபது சலீமின் தந்தையாவார். அவர் குர்திஸ்தான் போராட்டக் குழுத் தலைவரின் முக்கிய தகவலாளியும் நம்பிக்கைக்குரியவருமாக இருந்ததுடன் அவர் வைத்திருந்த பழைய, மிகப் பழைய துப்பாக்கியும் கதையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டொரு நாட்கள் வீட்டில் இருப்பதும் மாதக் கணக்கில் போராட்ட அணியுடன் இணையவும் சென்று விடும் சகோதரர்கள், எந்நேரமும் இருந்த இடத்திலிருந்து கிளம்பத் தயாராக இருக்கும் தந்தை, பாசம் மிகுந்த ஆனால் எல்லாவற்றையும் புரிந்து அமைதியும் பொறுமையுமாக இருக்கும் தாய், வயது முறுக்காலும் இனப் பற்றினாலும் தானும் தன் நண்பரும் போராட்டக் குழுவில் சேரச் சென்று திரும்பும் அபாயம் மிக்க பயணம், ஓவியம், பாடல் ஆகியவற்றில் சலீமுக்கு இருந்த ஆர்வம், நிறைவேறாத அற்பக் காதல் என்று பல விடயங்களை இக்கதை நமக்கு எடுத்துச் சொல்வதோடு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஈராக் குர்திஸ்தானில் மக்கள் பட்ட அவதியையும் துன்பத்தையும் மனதில் பதித்து விட்டு நகர்கிறது.

அவர் கதையைச் சொல்லிச் செல்லும் போது ஒரு புன்னகையை வாசகனின் முகத்தில் தோன்றச் செய்யும் வகையிலான வசனங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தாலும் கதையைப் படித்து முடிக்கின்ற போது வாழ்வில் சுதந்திரத்தை மட்டுமல்ல மகிழ்ச்சி என்ற ஒன்றை அனுபவித்திராமல் வாழ்நாள் பூராகவுமே கலக்கத்தோடும் நிம்மதியின்றியும் வாழ்ந்த மக்களின் துயர் ஒரு பாறாங் கல்லாய் மனதை அழுத்துகிறது.

அறபி - குர்திஸ் என்ற பாகுபாடு காரணமாகவும் அறபியரோடு இணைந்து ஒரு சமூகத் துரோகியாக மாறி வாய்ப்புக்களைப் பெற்றுக் கற்று உயராமல் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் சலீமின் சிறு வயது ஆசையான சினிமா தயாரிக்கும் கனவு நிஜத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அது அவரது கதையில் இல்லை.

இத்தாலியில் தஞ்சம் புகுந்த சலீம் அங்கு குர்தியருக்கு பிரசாவுரிமை வழங்கப்படாத காரணத்தால் பிரான்ஸில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.

சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் தமிழ் மொழிபெயர்ப்பு இடறல் இல்லாதது. இந்நூல் காலச் சுவடு வெளியீடு - 2013

(16.07.2017 தினகரன் பிரதிபிம்பம் பகுதியில் பிரசுரமானது)