காஸாவிலிருந்து ஒரு கடிதம்
கஸ்ஸான் கனஃபானி
அன்புள்ள முஸ்தஃபா,
இப்போதுதான் உனது கடிதம் கிடைத்தது. ஸெக்ரமென்டோவில் உன்னுடன் நான் தங்கியிருப்பதற்கு அவசியமான எல்லா ஏற்பாடுகளையும் நீ செய்திருப்பதை உனது கடிதம் சொன்னது. கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் கற்பதற்கு எனக்கு அனுமதி கிடைத்திருக் கும் செய்தியும் எனக்குக் கிடைத்துள்ளது. எல்லாவற்றுக்கும் உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும், அன்புள்ள நண்பனே.
ஆனால் நான் உனக்குச் சொல்லப் போகும் செய்தி உனக்கு விசித்திரமாகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். எப்போதும் இல்லாத வகையில் இப்போது நான் இருக்கும் சரியான, தெளிவான நிலை குறித்துச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. இல்லை, நண்பனே... நான் எனது மனதை மாற்றிக் கொண்டேன்.
நீ குறிப்பிட்டிருப்பதைப் போல ‘பசுமையும் நீரும் அழகிய முகங்களும்’ உள்ள இடத்துக்கு உன்னைத் தொடர்ந்து நான் வரப்போவதில்லை. இல்லை, நான் இங்கேயே இருக்கப் போகிறேன்’ ஒரு போதும் இங்கிருந்து வெளியேறப் போவதில்லை!
ஒரே துறையில் நாம் வாழ்வைத் தொடரவில்லை என்பது எனக்கு உண்மையில் மிகவும் மனக் குறையாகவுள்ளது, முஸ்தஃபா. ஒன்றாகவே பயணிப்பது பற்றிய நமது உறுதி மொழியை நீ அடிக்கடி சொல்வது எனக்கு ஞாபகம் உள்ளது. அந்த வகையில் ‘நாம் செல்வந்தர்களாவோம்’ என்று அடிக்கடி நாம் சத்தமிட்டிருக்கிறோம். ஆனால் என்னால் செய்ய முடிந்தது எதுவுமில்லை, நண்பனே. ஆம்’ உன்னுடைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கெய்ரோ விமான நிலையத்தில் நின்றிருந்த அந்த நாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அன்று என் முன்னால் நின்றிருந்த உனது வட்டமான முகம் அமைதியாகவிருந்தது. இலேசான சுருக்கங்களைத் தவிர, காஸாவின் ஸாஜியாவில் வளர்ந்தபோது இருந்தது போலவே உன் முகம் மாறாமல் இருக்கிறது. நாம் ஒன்றாகவே வளர்ந்தோம்’ ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தோம். கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று உறுதிப்பாட்டுடன் இருந்தோம். ஆனால்...
“விமானம் கிளம்புவதற்குக் கால் மணி நேரம் இருக்கிறது. இப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டிராதே. கேட்டுக் கொள்! அடுத்த வருடம் நீ குவைத்துக்குப் போவாய். கிடைக்கும் உனது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமித்து எடுத்துக் கொண்டு காஸாவிலிருந்து கிளம்பி கலிபோர்னியாவுக்குச் சென்று உன்னை நிலை நிறுத்திக் கொள். நாம் ஒன்றாகவே தொடங்கினோம். ஒன்றாகவே தொடருவோம்!”
அந்தக் கணத்தில் வேகமாக அசையும் உனது உதடுகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். காற் புள்ளியோ முற்றுப் புள்ளியோ இல்லாமல் பேசுவது உனது பாணி. ஆனால் அந்த விமானப் பயணத்தில் நீ முழுமையாகத் திருப்தி யடையவில்லை என்று என்னால் உணர முடிந்தது. அதற்கான நியாயமான காரணங்களெதையும் நீ தெரிவிக்கவில்லை. அந்த வலி எனக்கும் இருந்தது. ஆனாலும் “ஏன் காஸாவைக் கைவிட்டு நாம் பறந்து விடக் கூடாது? ஏன் நாம் போகக் கூடாது?” என்ற தெளிவான சிந்தனையிருந்தது.
உனது நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. குவைத்தின் கல்வியமைச்சு எனக்குத் தராத போதும் உனக்கு ஒரு தொழிலைத் தந்தது. அந்த அமைச்சினூடாக ஒரு சிறு தொகையை எனக்கு அனுப்பினாய். அவர்களிடம் நான் கடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீ விரும்பினாய். ஏனெனில் நான் அசௌகரியப்பட்டு விடக் கூடும் என்று பயந்தாய். எனது குடும்பச் சூழல் பற்றி உள்ளும் புறமும் நீ அறிந்து வைத்திருந்தாய். எனக்குக் கிடைக்கும் சம்பளம் எனது தாயாரையும் எனது சகோதரரின் விதவையான மனைவி யையும் நான்கு பிள்ளைகளையும் கவனிக்கப் போதுமானதாக இல்லை என்பதை நீ அறிந்திருந்தாய்.
“கவனமாகக் கேட்டுக் கொள். ஒவ்வொரு நாளும் எழுது... ஒவ்வொரு மணித்தியாலம், ஒவ்வொரு நிமிடம் பற்றியும் எனக்கு எழுது. விமானம் புறப்படப் போகிறது... நான் கிளம்புகிறேன்... இல்லை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை...”
உனது உதடுகள் எனது கன்னத்தில் பதிந்தன. விமானத்தின் பக்கம் நீ முகத்தைத் திருப்பிக் கொண்டாய். மீண்டும் நீ திரும்பி என்னைப் பார்க்கையில் உனது கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன்.
சில காலத்துக்குப் பின் குவைத் கல்வியமைச்சு எனக்கும் ஒரு தொழில் வாய்ப்பை வழங்கியது. அங்கு எனது வாழ்க்கை எப்படிக் கழிந்தது என்கிற விபரத்தை உனக்கு நான் திரும்பச் சொல்லத் தேவையில்லை. எப்போதும் எல்லாவற்றைப் பற்றியும் நான் உனக்கு எழுதியிருக்கிறேன்.நான் ஒரு சாதாரணனாக இருந்த போதும் பசை போட்டு ஒட்டி வைத்தாற் போன்று மாட்டிக் கொண்டதான ஒரு வெறுமையை உணர்ந்தேன். கொடுந் தனிமையை அனுபவித்தேன். அலுப்பூட்டும் ஒரே விதமான வேலைச் சூழலில் அழுகும் நிலையிலிருந்தேன். எல்லாமே சூடானதாகவும் ஒட்டிக் கொண்டது போன்றது மான ஒரு விசித்திரமான உணர்வு. எனது முழு வாழ்விலும் அது ஒரு சறுக்கல். சகலதுமே மாசக் கடைசியில் தங்கியிருந்தன.
வருட மத்தியில் ச:பாவில் யூதர்கள் குண்டு வீசினார்கள். காஸாவைத் தாக்கினார்கள். நமது காஸா கொழுந்து விட்டெரிந்தது. எனது வேலைச் சூழலில் அந்தச் சம்பவம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நான் வெளியேற வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இத்தனை காலம் சிரமப்பட்டதற்காக எனக்குப் பின்னால் இருக்கின்ற காஸாவை விட்டுப் பசுமை மிகுந்த கலிஃபோர்னியாவுக்குச் சென்று எனக்காக நான் வாழ வேண்டும்’ எனக்காக மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணினேன். காஸாவையும் அங்கு வாழ்வோரையும் வெறுத்தேன். நாலா புறமும் முற்றுகையிடப்பட்டுத் துண்டிக்கப்பட்ட நகரத்தின் சகல அம்சங்களுமே நோயுற்ற மனிதனொருவனால் சாம்பல் நிறத்தில் வரையப்பட்ட கோணல் மாணலான சித்திரங்களைப் போல் எனக்குக் காட்சியளித்தன.
ஆம்! எனது தாயாருக்கும் எனது சகோதரரின் விதவை மனைவிக்கும் நான்கு பிள்ளைகளுக்கும் அவர்கள் வாழ்வதற்காக ஒரு சிறு தொகைப் பணத்தை அனுப்பவேண்டியிருந்தது. இந்தக் கடைசி முடிச்சிலிருந்தும் கூட என்னை விடுவித்துக் கொள்ள எண்ணினேன். ஏழு வருடங்களாக எனது மூக்கை நிறைத்திருந்த தோல்வியின் துர் நாற்றத்திலிருந்து மிகத் தூரத்திலிருக்கின்ற அழகும் பசுமையும் நிறைந்த கலிஃபோர்னியாவை அடைய நினைத்தேன்.
என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் எனது சகோதரரின் குழந்தைகள், அவர்களது விதவைத் தாய் ஆகியோர் மீதான அனுதாபமானது செங்குத்தாக என்னைத் தள்ளும் எனது சோகங்களை விடப் பெரியவை அல்ல. கடந்த காலங்களைப் போல் என்னை மீண்டும் கீழே தள்ளிச் செல்ல நான் அனுமதிக்க முடியாது. நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும்!