Saturday, November 22, 2014

தெற்கே உதித்த சூரியன்!


 - 07 -

 மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த  அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.

20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆசிரியராக, கவிஞனாக, கலைஞனாக, சிறுகதையாளராக, நாவலாசிரியராக, பாடலாசிரியராக, பாடகராக, பத்திரிகை ஆரிசியராக, சமூகப்போராளியாக என்று ஏகப்பட்ட பக்கங்களுடன் ஓயாமல் உறங்காமல் உழைத்த சகலகலா விற்பன்னர்தான் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள்.ஒரு தனிமனித இயக்கமாக நின்று சமூகத்தளத்திலும் இலக்கியத் தளத்திலும் இவரைப் போன்று இயங்கிய ஒருவரைக் கடந்த காலமும் கண்டிருக்கவில்லை, நிகழ்காலமும் காணவில்லை. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் இன்று முஸ்லிம் சமூகத்திலிருந்து குழு ரீதியான முறைமையிலேயே பதில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்ந்த காலம் முழுவதும் இதை அவர் தனியொருவனாய்த் தைரியமாய்ச் செய்து வந்தார்.

அவர் ஈடுபட்ட துறைகள் எல்லாவற்றிலும் துலங்கினார். அவர் எழுதிய 'வெண்புறாவே' பாடல் அதற்கு அழியா வரம்பெற்றது. தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாத ஆக்கங்களை அவர் தனது 'அஷ்ஷூரா' பத்திரிகையில் பிரசுரித்து என்னைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தினார். தினகரன் பத்திரிகையில் 'புதுப் புனல்' என்ற பக்கத்தின் மூலம் நூற்றுக்கணக்கான இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வளர்த்தெடுத்தார்.

சமூகத்தை ஏமாற்றிப் பிழைத்தல், மார்க்கத்தை வைத்து வயிறு வளர்த்தல், ஆஷாடபூதித் தனம், பெண் கல்வி மறுப்பு, சிந்திக்காத மூடப் போக்குகள் போன்றவற்றை நேரடியாகச் சாடினார். ஒரு சமூகத்தின் அடையாளம் மார்க்கத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை, அதன் கலை, கலாசார அம்சங்களில் தங்கியிருக்கிறது என்பதை மிக உறுதியாக அவர் நம்பினார். அதற்காகச் செயல்பட்டார். மரணத்துக்குப் பிறகும் கலை, இலக்கியத்தோடு சார்ந்த சமூகாபிமானிகளுக்கு ஓர் சிறந்த முன்னோடியாகவும் கையிலெடுக்கத் தக்க ஆயுதமாகவும் அவரை நினைக்கத் தோன்றுவது இதனால்தான். சமூகத்தில் குழப்பத்தையும் பிரச்சகைளையும் ஏற்படுத்தியவர்களைச் சாடியதால் அவரையே ஒரு குழப்பவாதி என்று சித்தரிக்க முயன்றது பெரிய வேடிக்கை!

ஓர் அறைக்குள் இடது புறம் பத்திரிகைக் குவியல், வலது புறம் புத்தகக் குவியல், மேசையில் விரித்தபடி இருக்கும் வெள்ளைத்தாள்களும் பேனைகளுமாய் அமர்ந்திருந்து ஷம்ஸ் அவர்கள் சமூகத்தில் கலை, இலக்கியத்தைப் பயன்படுத்தி, அதிர்வுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தினார். எல்லாவற்றையும் விட சிந்தனை மாற்றத்தை நோக்கிச் சமூகத்தை அழைத்துச் செல்ல அவர் மிகவும் பிரயாசைப் பட்டார். மனிதாபிமானத்தையும் சகோதரத்துவத்தையும் சக வாழ்வையும் கட்டி எழுப்புவதற்கு கலையும், இலக்கியமும் பெரும் பங்களிப்புச் செய்யக் கூடியவை என்று நம்பினார். அப்படியே இயங்கினார்.

புதிய தலைமுறைக்கு எம்.எச்.எம்.ஷம்ஸ் என்ற ஆளுமையையும் அவர் ஏற்படுத்திய தாக்கங்களையும் பற்றிப் பெரிய அளவில் தெரியாது. அவரது 'கிராமத்துக் கனவுகள்' நாவல் மற்றும் தற்போது வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்புமே அன்னாரின் இலக்கியச் சொத்துக்களாகச் சமூகத்துக்குக் கிடைத்திருக்கின்றன. பல நூல்களை வெளியிடும் அளவு எழுத்தும் பல இயக்கங்களின் செயற்பாடும் தன்னகத்தே கொண்ட அவரை முழுமையாக சமூகத்துக்கு முன் கொண்டு வர வேண்டுமானால் அவரது அனைத்துப் படைப்புகளும் (முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக எழுதியோருக்கு அவர் கொடுத்த மறுப்புக் கட்டுரைகள் உட்பட) வெளிக்கொண்டு வரப்படல் வேண்டும். அவற்றை வெனிக் கொண்டு வரும் கடமை அவரது பிறந்த ஊருக்கும் சமூகத்துக்கும் உரியது என்று அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

மர்ஹூம் ஷம்ஸை அறியாதவர்கள் மற்றும் அவருடன் பழகாதவர்கள் அவரது செயற்பாடுகளையும் இயங்கியலையும் பார்த்து, அவரைக் கடும் கோபக்காரனாக, இடைவெளி வைத்துத் தன்னைத் தனித்துவப்படுத்தும் ஒரு கனவானாகக் கற்பனை செய்யக் கூடும். அப்படியெனில் அந்தக் கற்பனை மிகவும் பிழையானது.

அவரது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் அவர் சொல்வதைப் பாருங்கள்...

'நான் என் மனுஷியின் பெயரிலேயே சிறுகதை எழுதினேன். நான் பாஹிராவைக் கைப்பிடித்த புதிதில்தான் 'இன்ஸான்' வெளிவந்தது. கல்யாணப் பரிசு படத்தில் தங்கவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே மனுஷியின் பிரார்த்தனை!'

(மீள்பார்வை இதழ் - 306)

Tuesday, November 11, 2014

வற்றாத கடலில் ஓயாத அலைகள்!


 - 06 -

ரிஹாம் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி வழங்குனர். பழுப்புத் தலைமுடி கொண்ட  இளம் எகிப்தியப் பெண். மணிக்கட்டு வரை மறைக்கும் ஒரு கருப்பு நிற டீஷேர்ட் மாதிரியான மேலுடை அணிந்து ஒரே பார்வையில் அழகிய நாகரிகப் பெண்ணாகத் தோற்றமளிக்கிறார்.

அன்றையத் தொலைக் காட்சி  நிகழ்ச்சிக்கு நேர்காணலுக்காக வந்திருப்பவர் மிகவும் வில்லங்கமான ஒரு பெண்மணி. நோஹா முகம்மத் சலீம் என்ற 53 வயதான அந்தப் பெண்  பழுப்பு நிறமான துணியினால் முகத்தையும் தலையையும் மறைத்திருக்கிறார்.

பேட்டி ஆரம்பமாகிறது.

ரிஹாம் வினாவை விடுகிறார். ' நீங்கள் வழமையாக ஹிஜாப் அணிவதில்லை என்று நினைக்கிறேன்.' பதில் 'ஆம், அணிவதில்லை!' என்று வருகிறது. 'அப்படியயானால் இப்போது ஏன் அணிந்திருக்கிறீர்கள்?' என்ற மறுவினாவுக்கு 'நான்என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவோ என்னைக் கொல்வதற்கான வாயப்பளிக்கவோ நான் விரும்பவில்லை. மார்க்கப்பற்று மிக்க எனது குடும்பத்தினரைச் சங்கடப்படுத்தவோ காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை' என்று பதில் வருகிறது.

'முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மேதை! ஒரு சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கட்டளையாளர் மற்றும் சிறந்த மனிதராக இருந்தவர். குர்ஆனை அவரே எழுதினார். தூது இறங்கியதும் கிடையாது. ஜிப்ரஈல் என்று யாருமில்லை' என்கிறார் நோஹா. மிகவும் தெளிவாகவும் சாமார்த்தியத்தோடும் வினாத் தொடுக்கும் ரிஹாமுக்குள் கோபம் பரவுகிறது. 'முகம்மத் (ஸல்) அவர்கள் இறைதூதர் இல்லையென்றும்  பரிசுத்தத் தூது இறங்காத போது அவர் எப்படித் தூதராக முடியும்?என்றும் ஜிப்ரஈல் ஒரு கற்பனைப் பாத்திரம்' நோஹா சொல்லும் போது ரிஹாம் கோபத்தின் உச்ச நிலைக்குச் செல்கிறார்.

நோஹாவின் கதை விசித்திரமானது. 24 வயதில் திருமணம் செய்த அவருக்கு 30 வயது வரை எல்லாம் சுபமாகவே இருந்தது. 30 வயதில் இஸ்லாம் பற்றிய விநோதமான சிந்தனைகள் அவரில் தோன்றவே கணவருடன்  சென்று வைத்தியரைப் பார்த்தார். அவ்வாறான சிந்தனை குறைந்தது. ஆனால் மருந்து மூளையைச் சிதைத்து விடுமோ என்ற பயத்தில் மருந்தை நிறுத்தினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறியது. உனக்கும் எனக்கும் சரிவராது என்று கணவன் பிரிந்து போய் விட்டார். நோஹாவின் இரண்டு மகன்களும் கூட அவரது கருத்துக்களை ஏற்கவில்லை. தனது மனோ நிலை சரியாகவே இருக்கிறது என்பதை நிரூபிக்க நோஹா ஒரு வைத்திய சான்றிதழைப் பெற்று வைத்திருக்கிறார். ஆனால் குடும்பத்தவரோ 'டாக்டர் பிழையாக உனக்கு அதை எழுதித் தந்திருக்கிறார்' என்கிறார்கள்.

இந்த நோஹாவுடன்தான் ரிஹாம் சூடுபறக்க விவாதித்துக் கொண்டிருந்தார். 'கை வெட்டுவது மனிதாபிமானமற்றது' என்கிறார் நோஹா. 'ஷரீஆ சட்டம் அமுல் செய்யப்பட்டு மதுச்சாலைகளையும் காபரே கிளப்புகளையும் உடைத்தெறிய வேண்டும் அப்போதுதான் யாவும் உருப்படும்' என்று கோபத்தோடு பதில் சொல்கிறார் ரிஹாம். தலை மூடாத ரிஹாம்!

'ஏன் நீ தொழுவதில்லை?' என்ற ரிஹாமின் கேள்விக்கு 'நான் கடந்த காலத்தில் தொழுதேன், ஆனால் எனக்கு இறைவன் பதிலளிக்கவில்லை' என்று பதில் வர 'இப்படிப் பேசும் உனக்கு எப்படிப் பதில் வரும்?' என்று மறுவினாவைத் தொடுக்கிறார் ரிஹாம். வார்த்தைகள் சூடேறக் கடும் கோபம் கொண்ட ரிஹாம் 'நீ இங்கிருந்து போய் விடு!' என்று சொல்லிக் கலையகத்திலிருந்து நோஹாவைத் துரத்தி விடுகிறார்.

மற்றொரு காட்சி. தலை மூடாத அதே ரிஹாம். இம்முறை மார்க்க அறிஞர் யூஸூப் பத்ரி.

நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன் ஷெய்க் யூஸூப் பத்ரி, தலையை மூடிக்கொள்ளுமாறு ரிஹாமிடம் கோருகிறார். 'கலையகத்துக்கு வெளியே உங்களுடைய அன்றாட வாழ்வில் தினமும் தலையை மூடாத ஆயிரக் கணக்கான பெண்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள். தொலைக் காட்சியில் உங்களை நேர்முகம் செய்வதற்காக மட்டும் நான் தலையை மூட வேண்டுமா?' என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார் ரிஹாம்.

ஆனாலும் ரிஹாம் தலையை மூடியபடி பேட்டியை ஆரம்பிக்கிறார். மந்திரித்தல், பேயோட்டுதல் என்ற பெயரில் சில ஆண்கள் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதைப் பற்றிக் கேட்ட போது, 'தலைப்பை மாற்று' என்கிறார் ஷெய்க் பத்ரி. 'பொதுமக்கள் விடயத்தைத்தான் நான் பேசுகிறேன், பதில் சொல்லுங்கள்' என்று கேட்க, பத்ரி கோபம் கொண்டு பேசுகிறார். 'நீங்கள் கோபம் கொண்டு எனக்கு ஏசுவதற்காகவா  எங்களிடம் 1000 பவுண்கள் வாங்கிக் கொண்டு நேர்முகத்துக்கு வந்தீர்கள்?' என்று ரிஹாம் கேட்கிறார். அதற்குப் பதில் சொல்லாமல் கோபத்தில் 'தொலைக் காட்சி நிலையத்தையே மூடிவிடும் வேலையைச் செய்வேன்' என்று பயங்காட்டுகிறார் ஷெய்க் பத்ரி. 'எங்கள் பணத்தையும் வாங்கிக் கொண்டு எங்கள் அலைவரிசையை மூடிவிடுவேன் என்கிறீர்களே.. இதென்ன நியாயம்?' என்று கேட்டபடி தலைத் துணியை நீக்குகிறார் ரிஹாம்.

ஷெய்க் பத்ரி, 'முதலில் தலையை மூடு. இல்லாவிட்டால் நான் போய் விடுவேன்' என்கிறார். 'நான் மூடமாட்டேன், நீங்கள் இருங்கள். நானே போகிறேன்' என்று கலையகத்திலிருந்து வெளியேறுகிறார் ரிஹாம்.

இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்த போது எனக்குள் பல பல்புகள் ஒளிர்ந்தன. பிரதான பல்பு வெளிச்சத்தில் எனக்கு விளங்கியது என்னவென்றால் -

 இரண்டு கோடி முஜத்திதுகள் தோன்றினாலும்  ஈஸா (அலை) இறங்கும் வரை இவ்வாறான பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்பிருக்காது என்பதுதான்!

Monday, November 10, 2014

அவனும் அவளும்!


மராம் அல் மஸ்ரி
(சிரியா)


ஒரு வீடு
பிள்ளைகள்
அவனுக்கு அன்பு செலுத்தும்
ஒரு மனைவி;..
இதற்கு மேல்
அவனுக்கு எதுவும் வேண்டியதில்லை

ஆனால்
ஒருநாள் 
அவன் கண்விழித்த போது
அவனுடைய ஆன்மா
வயதாகி விட்டதை
அறிந்து கொண்டான்!

ஒரு வீடு
பிள்ளைகள்
அவளுக்கு அன்பு செலுத்தும்
ஒரு கணவன்..
இதற்கு மேல்
அவளுக்கு எதுவும் வேண்டியதில்லை

ஆனால்
ஒருநாள் 
அவன் கண்விழித்த போது
அவளுடைய ஆன்மா
ஒரு யன்னலைத் திறந்தது
பின்னர்
பறந்து விட்டது!


தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

Monday, November 3, 2014

வளவையின் மடியிலே...


பன்முகக் கலைஞரும் எழுத்தாளரும் கவிஞருமான மறைந்த எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு “வளவையின் மடியிலே”  நேற்று ஞாயிறு (02.11.2014) அன்று கொழும்பு - 6, பெண்கள் ஆய்வு மையக் கேட்போர் கூடத்தில் கவிஞர், எழுத்தாளர் அல் - அஸூமத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


பிரபல எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத் அவர்கள்


நூல் குறித்த கருத்துரை - திருமதி வசந்தி தயாபரன் அவர்கள்


எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களது இலக்கியப் பட்டறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான இளையநிலா பஸ்மினா அன்ஸார் கவிதை படித்தார்.


கருத்துரை - அஷ்ரஃப் சிஹாப்தீன்


கருத்துரை - ஜவாத் மரைக்கார்


சிறப்புரை - கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்

முதற்பிரதி கொடகே நிறுவனர் சரிசுமண கொடகே அவர்களால் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.