Wednesday, September 27, 2017

யாரும் மற்றொருவர்போல் இல்லை!


எப். எச். ஏ. ஷிப்லி (கவிஞர் நிந்தவூர் ஷிப்லி)
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகம் 

பன்முக இலக்கியவாதி, சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர் என பல்துறை ஆளுமை கொண்ட  அஷ்ரப் சிஹாப்தீன் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இளமை நதி. வற்றாத அறிவியல் ஊற்று.பல்துறைகளிலும் ஆழமாக் காலூன்றி, வேரூன்றிய கலை ஜாம்பவான்..

அவரதுபத்தாவது நூலாகவும்,மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலாகவும் அண்மையில் வெளியாகியது“யாரும் மற்றொருவர்போல் இல்லை”எனும்மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி.யாத்ரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டஇந்த நூலில் முப்பது நாடுகளைச் சேர்ந்த 49 கவிஞர்களின் ஐம்பது கவிதைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. நூலினைநூலாசிரியர் அவரது தாய்வழிப் பாட்டனார் புலவர் மஹ்மூது அப்துஸ்ஸமது ஆலிம் அவர்கட்கு சமர்ப்பித்துள்ளார்.

இளைய இலக்கியவாதிகளை மனமாரப்பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தும் மூத்த இலக்கியவாதிகளில் அஷ்ரப் சிஹாப்தீன் முக்கியமானவர். அதற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நூற்றுக்கணக்கான இளைய எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை ஊக்கப்படுத்தியமைமுக்கிய சான்று.

இந்த நூலில் இடம்பெற்றுள்ளமொழிபெயர்ப்புக் கவிதைகளின் கவிதைத்தேர்வுகளை வாசிக்கின்றபோது தனிமனித உணர்வு சார் கவிதைகள், காதல் கவிதைகள், யுத்தமும், அதன் கோர நகங்கள் பதித்த வலிமிகுந்த கீறல்கள் தொடர்பான கவிதைகள், அரசியல் சார் கவிதைகள், வாழ்வியலையும், அழகியலையும் பேசக்கூடிய கவிதைகள், மனிதாபிமானம் தொடர்பான கவிதைகள், புரட்சி விதைகளை விதைக்கின்ற கவிதைகள் என்று பல கோணங்களிலும் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவாக்கம் பெற்றதை அவதானிக்கலாம். அதேபோலகானா, பங்களாதேஷ், பாரசீகம், நமீபியா, போஸ்னியா, பாலஸ்தீன், நேபாளம், பாகிஸ்தான், சிரியா, ஆப்கானிஸ்தான், குர்திஷ், அமெரிக்க, கென்யா, நைஜீரியா, தன்ஜானியா, அல்பேனியா, எகிப்து, கியுபா உள்ளடங்கலாகநாம் இதுவரை வாசிக்காத, நமது தமிழ் வாசிப்புச் சூழலுக்கு அதிகம் பரிச்சயமில்லாத பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்படுள்ளன.

Translation என்ற வார்த்தை "translatio" என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பிரதியின் அர்த்தத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பிரதிக்கு இணையான’ என்ற பிரயோகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும். ஏனென்றால் அதுவே ‘பிரதிக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது.

இந்த நூலில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பு உத்தியைப் பார்க்கின்ற போது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான பண்பு “எளிமை” அதாவது எளிய சொற்கள். நோபல் பரிசு பெற்ற காப்ரியல் கார்சியோ மார்க்கேஸ் என்ற ஸ்பானிஷ் எழுத்தாளரை ஆங்கில மொழிபெயர்ப்பில் இலகுவாகப் படித்துப் புரிந்து கொள்ளமுடிகிறது. அனால், அதே எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு வாக்கியத்தைக் கூட புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் ஒருவிதமான சிக்கலான மொழியில் எழுதினால்தான் இலக்கியம் என்ற கருத்து இங்கே நிலவுவது சற்று துரதிஸ்டவசமானது.

அப்படி அல்லாமல் மிக எளிமையான சொற்களின் மூலம், கவிதைகளின் மூலம் கெடாமல் தமிழுக்கு அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார் அஷ்ரப் சிஹாப்தீன். மொழிபெயர்ப்பு என்பது இலகுவான இலக்கிய வடிவம் அல்ல. மொழிபெயர்க்கின்ற நபருக்கு மொழியறிவும், கலையுணர்வும், கவிதைகள் தொடர்பான ஆழ்ந்த வாசிப்பனுபவமும் அவசியம். மிகப்பெரிய இலக்கிய மேதைகள் கூட தடுக்கி விழுகிற இடமே இந்த மொழிபெயர்ப்பு என்றுகூடச் சொல்லலாம்.

இன்றைய திகதியிலுள்ள வாசகர்களுக்கு எளிமையான இலக்கியங்களே அதிகம் புரிகிறது.அதிகம் பிடிக்கிறது.பின்நவீனம், அதிபின்நவீனம் என்று வலுக்கட்டாயமாகப் படைக்கப்படுகிற  இலக்கியங்கள் எடுபடாமல் போவதற்கு இதுவே காரணம்.

கவியரசர் கண்ணதாசனின் வெற்றிக்கு “எளிய” என்கிற உத்தியே மூலகாரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று கண்ணதாசன் எழுதுகிறபோது அது எல்லோரது இதயங்களை இலகுவாக சென்றடைகிறது.

இத்தகைய எளிய என்கிற உத்தி அஷ்ரப் சிஹாப்டீனுக்கும் கைவந்த கலையாகிப்போயிருக்கிறது. “பயமாயிருக்கிறது ஏனெனில்” என்கிற கானா நாட்டுக்கவிஞ்சரின் கவிதையை இப்படி மொழிபெயர்க்கிறார்..
உன்னை முதன்முதலாகப் பார்த்தபோது
உனது பெயரைக்கேட்கப் பயமாயிருந்தது
மனதைக்கவரும் பெண்களைக் காண்கிறபோது எல்லோருக்கும் இயல்பாகவே எழக்கூடிய உணர்வினை உயிருக்கு நெருக்கமான சொற்களால் உரசிச்செல்கிறார்.

அதுபோலவே லஜ்வா கோலூவி என்கிற நமீபிய நாட்டுக் கவிஞரின் அழுகுரல் என்கிற கவிதையில்..
அது ஓர் அழுகுரல்..
ஆம் அழுகுரல்
தெருவில் நிற்கும் பெண்ணின் அழுகுரல்
யாராவது அதைச் செவிமடுப்பார்களா?
யாராவது சென்று பார்ப்பார்களா??
என்று தொடங்கி
எனக்கருகே நிற்கும் பெண்ணின் அழுகுரல்
எனது நெருங்கிய நண்பியின் அழுகுரல்
எனது பெண் குழந்தையின் அழுகுரல்
எனது சொந்த அழுகுரல்
என்று கவிதை விரவி முடிகிறபோது நம் செவிட்டில் யாரோ அறையும் உணர்வு இயல்பாகவே நமக்குள் எழுகிறது.இதுமொழிபெயர்ப்பாளரின் வெற்றி.அவரது மொழிபெயர்ப்பு நுட்பத்தின் வெற்றியேயன்றிவேறில்லை.

இந்த நூலின் கவிதைத்தேர்வின்வகைகளாக நான் ஏலவே குறிப்பிட்ட பல பிரிவுகளில் தனி மனித உணர்வுகள், காதல், யுத்தம் குறித்த கவிதைகள் ஆகிய மூன்று பெரும்பகுதிகளை மட்டும் ஆய்வு செய்வதாகவே எனது விமர்சனம் அமைகிறது.நீங்கள் இந்த நூலை வாசிக்கிறபோதுஇதன் மற்றைய பரிமாணங்களை மிக இலகுவாக உங்களால் கண்டடைய முடியும்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் காணக்கூடிய மிகப்பெரிய அபாயம் மூலக்கவிதைகளின் உணர்வுகளை அவர்களது கலை, கலாசார வடிவங்கள் தாண்டி தமிழ் மொழிக்கு ஊடுகடத்துவது. மூலக்கவிதையின் உள்ளுணர்வை சிதைக்காமல் அப்படியே தமிழுக்கு மொழிபெயர்ப்பது சுலபமான விடயம் என்று யாரேனும் நினைத்தால் அவர்களது இலக்கிய அறிவுக்கு எனது இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.
இந்த நூலில் வெவ்வேறு நாடுகளின், வெவ்வேறு கவிஞர்களின், வெவ்வேறு பிரச்சினைகளை, வெவ்வேறு நுண்ணிய உணர்வுகளை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒளிந்திருக்கும் எனது உணர்வுகள் என்கிற நபீமிய நாட்டுக் கவிஞர்  எவலைன் ஹைஹம்போ வின் கவிதையின் சில வரிகள் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதைப்பாருங்கள்.
உண்மையாக நான் யார் என்று பாருங்கள்..
எனது வாயால் சொற்களை வெளிப்படுத்த முடியவில்லை
உண்மையை என் இதயம் அறியும்
ஆனால்,
என்னிடமிருந்து அதை வெளியே கொண்டு செல்வது
எப்படியென்று அதற்குத் தெரியாது
என்று விரியும் கவிதை
எனது காதுகளால் கேட்கமுடியவில்லை
எனக்காகக் கேளுங்கள்’
எனது தோலினால் உணர முடியவில்லை
எனக்காக உணருங்கள்
எனது கண்களால் பார்க்கமுடியவில்லை
எனக்காகப் பாருங்கள்
எனது வாயினால் பேச முடியவில்லை
எனக்காகச் சொற்களைப் பேசுங்கள்
எனது ஆத்மாவினால் அறியமுடியவில்லை
நான் அறியத் தவறிய உலகத்தை
நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
அல்லது நான் மறைந்து விடுவேன்..!!

அதேபோலமனிதர்களின்உள்ளுணர்வுகளைப்பேசும் இன்னொரு கவிதை“எனது தாயார் மரணித்த போது” என்கிற நைஜீரிய நாட்டுக் கவிஞர் லேம்பொன் சலிபு முகம்மத்எழுதியகவிதையின் மொழிபெயர்ப்பு. இந்தக்கவிதை கிட்டத்தட்ட எனது நிலையினைப்பேசும் ஒரு கவிதையாக என் உயிருக்குள் ஒட்டிக்கொண்டுவிட்டது.சில ஆண்டுகளுக்குமுதல் விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் எனது தகப்பன் எனக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து “உம்மா மௌத்து” என்று சடுதியாக் கூறியபோது எனக்குள்என்னவெல்லாம் ஊசலாடித்திரிந்தனவோ அதே உணர்வுகளை இக்கவிதையில் உணர்கிறேன்.

அதேபோல“முஹம்மத் றஊப் பஷீர்” எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய“நானும் ஓர் அகதி” என்கிற கவிதை ஒரு அகதியின் உள்ளுணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது.
ஓர் அகதியாக உங்களிடம்
உங்களிடம்வந்தமைக்காக
நீங்கள்என்னை மன்னிக்க வேண்டும் அய்யா..
ஓர் அடிமையாக அல்லாமல்
என்னை ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
என்று உயிரைப்பிழிந்து நம்மை உலுக்கி எடுக்கும் கவிதை இப்படித் தொடர்கிறது
உங்களில் ஒருவனாக
ஓர் அகதியாகத்தானும்
என்னை ஏற்றுக்கொள்வீர்களா?
நான் யார்? நான் என்ன>
என்று நீங்கள் கேட்கிறீர்கள்
நான் கடந்த காலமற்றவன்
நிகழ்காலமுமற்றவன்
முகமுமற்றவன்
நான் ஒரு மனிதனின் எச்சம்
உங்களில் ஒருவனாக
ஓர் அகதியாகத்தானும்
என்னை ஏற்றுக்கொள்வீர்களா?

இந்தக்கவிதைஎப்படி அழகாக மொழிபெயர்க்கப்பட்டு, ஒரு அகதியின் வாழ்க்கை வலிகளைஒரு ஊசிமுனை வழியாக நமக்குள் அஷ்ரப் சிஹாப்தீன் ஊடுகடத்துகிறார் என்று பாருங்கள்.
அதேபோல இந்த நூலில் காதல் கவிதைகள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்” என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகள் சொல்வது போல அந்தந்த நாடுகளின் காதல் பற்றிய பார்வையும் இந்தக்கவிதைகள் மூலம் நம்மால் உணரமுடிகிறது.
பயமாயிருக்கிறது ஏனெனில்என்கிற கானா நாட்டுக் காதல் கவிதை “காதலியை இழந்துவிடுவேனோ என்கிற” அச்சதைப்பேசுகிறது
அதேபோல அழகு என்கிற ஆப்கானிஸ்தான் நாட்டுக்காதல்
அவள் மலைகளில் உள்ள
பைன் மரங்களும், அறிந்த உயரமும்,
உடல்நேர்த்தியும் கொண்டவள்
அந்திக்கருக்கலில்நிலவின்
சிறு குடையின் கீழ் சுவர்க்கத்தில் குளித்த
பெண்ணைப் போன்றது உனது குரல்
அவள் அதிகாலையில்
வீட்டின் சுத்தமான
ஓர் ஒலிக்குடுவையை ஒத்தவள்
அவள் மழையின் கிசிகிசுப்பைக் கொண்டு
உருவாக்கப்பட்ட காதணி அணிந்தவள்
அதேபோல அமெரிக்க கவிஞர் சாம் ஹமூத் எழுதிய கவிதை “அவளும் அவனும்” என்கிற தலைப்பில் காதல் உணர்வுகளை மிக இயல்பாக பேசிச்செல்கிறது..

இந்த நூலின் முக்கிய கவிதைகள் என்று பார்க்கிறபோது  “யுத்தம், அதுபரிசளித்தவாழ்வியல் போராட்டங்கள், அரசியல், புரட்சி” என்பனசார்ந்தகவிதைகளுக்கே நூலாசிரியர் முக்கியத்துவம் அளித்துள்ளார்.ஒவ்வொரு கவிதையும்இதயத்தை கீறிக்கிழித்து நம்மை கண்ணீர் மழையில் நனைய வைக்கின்றன.இலங்கை கூட இத்தகைய யுத்த வடுக்களைச் சுமந்திருக்கும் பூமிதான். அதனால்தானோ என்னவோ இந்தக் கவிதைகள் பேசும் போர் குறித்த ரணங்கள் நம்மை மிகக்கடுமையாகப் பாதிக்கின்றன.

எல்லாவற்றுக்கும் பிறகு என்கிற பொஸ்னிய நாட்டுக்கவிஞர் கோரன் சிமிக் கின் கவிதை யுத்தம் முடிந்தபின்னரான வாழ்க்கை முறையை சாடிச்செல்கிறது..
அவ்வாறே நிசார்கப்பாணி எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய ஜெருசலமே என்கிற கவிதை ஜெருசலம் மண்ணின் வலிகளைப்பேசிவிட்டு..
நாளை
நமது எலுமிச்சைகள் பூக்கும்
நமது எல்லா ஒலிவ் செடிகளும்
கொண்டாட்டத்தில் திளைக்கும்
உனது விழிகள் நடனமிடும்
உனது குழந்தைகள் யாவும்
மீண்டும் விளையாட ஆரம்பிக்கும்
பிள்ளைகளும் பெற்றோரும்
மீண்டும் உனது அழகிய மலைகளில் சந்தித்துக்கொள்வார்கள்..
என்றுவலிகளைக்கடந்த நம்பிக்கையை பேசிச்செல்கிறது..

அவ்வாறே.. கேரி கோர்சன் எழுதிய“நாங்கள் பாலஸ்தீனியர்கள்” என்கிற கவிதை
உலக சபைக்கு
மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி,
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம்
முறையீடு செய்தோம்.
சிலபோது அவர்கள் அமைதியாகச்
செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோதுஎங்கள் காயங்களைப் பார்த்து கொட்டாவி விட்டார்கள்
என்று நீளும் கவிதை இப்படி முடிகிறது
நாங்கள் மக்கள்
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம் பெரிய மீனைக்கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப்புழு எத்தகையது?
நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப்பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்..
என்று முடியும்போது இதைவிட இந்த வலிகளை வேறெப்படி மொழிபெயர்ப்பது?

அதுபோலவே அந்தனி ஜே.மெர்சலா எழுதிய யுத்தம் என்கிற கவிதையில்..
எவ்வளவோ எழுதப்பட்டும்
எவ்வளவோ பேசப்பட்டும்
எவ்வளவோ செதுக்கப்பட்டும்
யுத்தத்தின் பாடங்கள்
தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும்
தொடர்ந்து மறுக்கப்படுவதும்
தொடர்ந்து திரிதுக்கூறப்படுவதும் ஏன்?
இதோ..இன்று சிரியா..
என்று முடிகிற கவிதை மிகப்பெரும் பாறாங்கல்லை எம் நெஞ்சின் மீது உருட்டிவிடுகிறது.

அதேபோன்றுதான்  நாசர் பர்கூதி எழுதிய சிரியாவின் சிறுவர்கள் என்ற கவிதை கரையோரத்தில் கவிழ்ந்து கிடந்த ஐலான் குர்தி என்கிற அழகிய சிறுவனதும், அதற்குப்பின்னர்நம்மைரத்த கண்ணீர் வடிக்க வைத்த யுத்தத்தால்சிதைந்துபோன சிறுவர்களின் புகைப்படங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இப்படிஎளிய சொற்கள் மூலம் அந்த அந்த நாட்டின் மொழியையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை நுணுக்கங்களையும், தமிழ் மொழிக்கு மிக நேர்த்தியாக மொழிபெயர்த்து இலங்கையில்மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதியதொரு ராஜபாட்டையை அஷ்ரப் சிஹாப்தீன் திறந்துவிட்டிருக்கிறார்.
ஒருவிதமான தேக்க நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கியத்துறைக்கு இவரது இந்த முயற்சி தாராளமாகவே நீர் பாய்ச்சுகிறது.
இந்த நூலை எதிர்விமர்சனம் செய்யக்காத்திருக்கும் சிலருக்கு சில வார்த்தைகள்.இப்போதெல்லாம் விமர்சனம் என்பது படைப்பை பார்க்காமலே, வாசிக்காமலே, அது என்னவென்றே தெரியாமலே விமர்சிக்கும் ஒரு நிலை நம் மத்தியில் தோன்றியிருக்கிறது.மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது தமிழுக்கு இன்று நேற்று, தோன்றிய ஒன்று அல்ல.
மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்து “தொல்காப்பியத்தில்”
“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே”
இங்கு“மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு” என்பது பொதுவான மொழிபெயர்ப்பையே சுட்டுகின்றது. கி. பி.14 ஆம் நூற்றாண்டு முதல்   19 ஆம் நூற்றாண்டு வரை, மொழிபெயர்ப்புத் துறையில் புராணங்களே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. கி.பி.19 ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர்தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்றலாயிற்று. இதன்விளைவாக மொழிபெயர்ப்பு இலக்கியம் முக்கிய ஒன்றாக விளங்கத் தொடங்கிற்று.

இலங்கையை பொறுத்தவரை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நூல் மேகதூதம் - மகாகவி காளிதாசர் வடமொழி மூலம் எழுதிய நூலை சோ.நடராசன் தமிழாக்கம் செய்தார். இது 1954ஆம் ஆண்டு வெளியானது. இதன்பின்னர்கிராமப் பிறழ்வு என்ற மொழிபெயர்ப்பு நாவல்  மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'கம்பரெலிய' சிங்கள நாவலின் அடிப்படையாக்கொண்டு 1964 இல் வெளியானது. அதன்பின்னர் தொண்ணூறுகளுக்குப்பின்னரே பல மொழிபெயர்ப்பு நூலுருவாக்க முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.அவ்வாறு மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் இலங்கையில் ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களாக எஸ். பொன்னுதுரை, சோ. பத்மநாதன்,வி.பி. ஜோசப், சி. சிவசேகரம்,ரூபராஜ் தேவதாசன், அருட்திரு நீ.மரியசேவியர், த.தர்மகுலசிங்கம், கெக்கிராவ சுலைஹா, எம்.எச். முஹம்மது யாக்கூத் என்கிற வரிசையில் நமது நூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர்களின் பெயர்களை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. இதில் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை இப்பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு மொழியில், குறிப்பிட்ட ஒரு வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.’ என்பதிலிருந்து ஒரு மொழி சார்ந்த பண்பாட்டு கலாச்சாரப் பின்புலங்களை அறிந்துவைத்திருத்தல் வரை மொழிபெயர்ப்பாளன் கடந்து வர வேண்டிய தடைகள் பல. பழமொழிகள், மரபுத் தொடர்களை மொழிபெயர்க்கையில் கவனம் தேவை. வாக்கிய அமைப்பு, இடம் சார்ந்த பொருள் இவற்றையும் கவனித்து மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. விடாமுயற்சி, கவனம், மொழியறிவு, மொழிசார் பண்பாடு குறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல், அடர்த்தி ஆகியவற்றை உள்வாங்கும் திறன் ஆகியவை ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளனின் அடையாளங்களாக அமையக்கூடும். ‘எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் ஒருவர் அகராதியைப் புரட்டத் தயங்கக் கூடாது’ என்கிற தியோடர் ஸேவரியின் கூற்றையும் நாம் மறந்துவிட முடியாது.
மொழிபெயர்ப்புகள் வழியே மொழிபெயர்ப்பாளர்கள் உலகை இணைக்கிறார்கள் என்கிற கூற்று உண்மையானதே.இந்த நூலின் மூலம் அஷ்ரப் சிஹாப்தீன் நமக்கு முப்பது நாடுகளின் இலக்கிய வாசனையை நுகரச்செய்கிறார், நாற்பது ஒன்பது கவிஞர்களோடு கைகுலுக்க வைக்கிறார்.ஐம்பது கவிதைகளோடு நம்மை பிணைத்துவிடுகிறார். இந்தமூலக்கவிஞர்கள் யார்? அவர்களது பிற  கவிதைகள் என்னென்ன? என்கிற ஆய்வையும், தேடலையும் இன்றைய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஏற்படுத்திவிடுவதில் நூலாசிரியர் வெற்றி காண்கிறார். அதேபோல மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதிய கதவொன்றையும் நூலாசிரியர் திறந்துவிட்டிருக்கிறார்.

அந்தவகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் மிக முக்கியமான நூலாக இது விளங்கும் என்பதோடு மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் நூலாசிரியர் இன்னும் பல சிகரங்களை அடையவும், அவரது இலக்கியப் பணிகள் மென்மேலும் சிறந்தோங்கவும் அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(22.09.2017ல் கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)

Monday, September 25, 2017

பேசியதும் பேச மறந்ததும் - யாரும் மற்றொருவர்போல் இல்லை!


- அமல்ராஜ் பிரான்ஸிஸ் -

முதலில் 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்கின்றதொரு நீண்ட பயணத்தை முடித்து அதை இன்று நம் கைகளில் சேர்ப்பித்திருக்கின்ற அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில் விமர்சனம் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தைகள். அது அதீத புலமையையும் ஆழ்ந்த வாசிப்பையும் தேர்ந்த அனுபவத்தையும் கோரி நிற்பது. ஆதலால் இங்கு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த வேலையை என்னால் சரிவரச் செய்ய முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால் அதைக் கண்ணியத்தோடு செய்யவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன். இங்கு கண்ணியம் என்பது இதைப் படித்தபோது எனக்கு தோன்றியதையும் பெற்றுக்கொண்டதையும் ஒளிவு தயக்கம் முகதாட்சண்யம் இன்றி வெளிப்படையாகப் பேசிவைப்பது. இங்கு அதற்கான இடத்தை திரு. அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்றே நம்புகிறேன்.

இந்த நூலிலே இருக்கின்ற ஒவ்வொரு கவிதைகளைப் பற்றியும் நீளமான ஆழமான முறைப்படியான விமர்சனத்தையோ அல்லது ஆய்வையோ இந்த மேடையில் நடாத்திவிட்டுப் போவது என்னுடைய நோக்கமல்ல. அதை இங்கு வந்திருக்கும் திரு. ஷிப்லி அவர்கள் என்னைவிடத் திறமையாகச் செய்யக்கூடியவர். அப்படியெனின் நான் எதைப்பற்றிப் பேசப்போகிறேன்.

இந்த 'யாரும் மற்றொருவர் போல் இல்லை' என்கின்ற மொழிபெயர்ப்பைப் படித்தபோது எனக்குள் உண்டான உணர்வுகள் அகத்தடுமாற்றங்கள் எல்லாவற்றையும் விட அந்த உன்னதமான ஒட்டுமொத்த வாசிப்பு அனுபவம்... இவற்றை மட்டுமே உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என வந்திருக்கிறேன்.

எனக்கு கவிதையில் நீண்டகாலமாகவே ஆர்வம் உண்டு. அதிலும் என்னை 'கவிஞன்' என்று சொல்வதைவிட 'வாசகன்' என்று சொல்வதில்தான் எனக்கு பெருமையும் ஆத்மதிருப்தியும் கிடைத்திருக்கிறது. அந்தவகையில் 'கண்ணீர்ப்புக்கள்' 'திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்' 'இரத்ததானம்' என ஆரம்பித்து மேத்தா வைரமுத்து புதுவை இரத்தினதுரை ஞானக்கூத்தன் காசி ஆனந்தன் எனச் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு முதல் முறையாக 'என்னைத் தீயில் எறிந்தவள்' என்கின்ற கவிதைப் புத்தகத்தோடு அதன் கவிஞர் அஷ்ரப் ஷிகாப்தீனை அறிமுகப்படுத்தியவர் மன்னாரைச் சேர்ந்த கவிஞர் மன்னார் அமுதன் அவர்கள். இன்று கவிதைகளிடமிருந்து கொஞ்சம் தூரமாய் போய் தி.ஜானகிராமன் சுந்தர ராமசாமி அ.முத்துலிங்கம் வண்ணதாசன் தஸ்தயேவ்ஸ்கி அ.சோ சுஜாதா ஜேமோ சாரு என என் பிரியத்திற்குரிய இன்னுமோர் உலகத்தை உருவாக்கிக்கொண்ட பிறகும்கூட அந்த http://ashroffshihabdeen.blogspot.com என்கின்ற 'நாட்டவிழி நெய்தல்' இன்னும் என்னுடைய Bookmark list இல் முதலில்தான்  இருக்கிறது.

அவ்வாறாக நாம் யாருக்கு தீவிர வாசகனாக இருக்கிறோமோ அவருடைய புத்தகத்தைப் பற்றி பேசுவதற்கே நம்மை அழைத்து வந்து ஒலிவாங்கிக்கு முன்னால் நிறுத்திவைத்தால் எப்படியிருக்கும்? ஒரு வாசகனுக்கு இதைவிடவும் மிகப்பெரியதொரு கௌரவம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. அதற்காக அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த 21ஆம் நூற்றாண்டுக் காலத்திலே அதுவும் முகப்புத்தகம் ட்விட்டர் எனப் பல சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டப் பிறகு இந்த 'கவிதை' என்கின்ற வஸ்து ஓர் irritation ஆகவே மாறிப்போய்விட்டது. திரும்பும் இடங்களிலெல்லாம் கவிதைகளிலேயே தடக்கிவிழவேண்டும் என்பது எப்படியான வாழ்க்கை. முகப்புத்தகத்தைத் திறந்தால் கவிதை. ட்விட்டருக்குப் போனால் கவிதை. இணையத்தளங்களைத் திறந்தால் கவிதை. இப்படி திரும்புமிடமெல்லாம் கவிதை கவிதை என்றால் அது irritationஇல்லாமல் என்னவாக இருக்கமுடியும்? இதனால் நம்முடைய கவிதை வாசகர்களுக்கெல்லாம் இன்று ஏற்பட்டிருக்கும் மாபெரும் அவலம் என்னவென்றால் அது நல்ல கவிதைகளை எங்கு எப்படி தேடிப்படிப்பது என்பதுதான். இந்த தேடலுக்காக மட்டுமே அந்த வாசகன் ஏராளாமான மணித்தியாலங்களைச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. இந்தக் களேபரங்களுக்குள் ஓர் நல்ல கவிதையைக் கண்டடைதல் என்பது ஒரு 'ஜக்பொட்' மனநிலையாகவே மாறிப்போய்விட்டது. இப்பொழுதெல்லாம் முதல் நாள் யாருக்கும் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவ்வாறான நல்ல கவிதைகள் கண்களில் மாட்டுகின்றன. ஆனால் இந்தக் கலவரச் சூழலில் அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய கவிதைகள் எனக்கு எப்பொழுதுமே ஒரு நீண்ட ஓட்டத்தின் இறுதியில் கிடைக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் போலவே இருக்கிறது.

இலங்கையில் இப்பொழுது வருடத்திற்கு 20 தொடக்கம் 30 வரையிலான கவிதைப் புத்தகங்கள் வெளிவருகின்றன எனச்சொல்கிறார்கள். கவிதைப் புத்தக வெளியீடுகள் வெங்காயம் உரிப்பதைவிட லேசான காரியமாய்ப் போய்விட்டது. இப்பொழுது எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள். எல்லோரும் கவிதைப் புத்தகம் போடக்கூடிய அருகதையை அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் வாசகனைத்தான் இப்பொழுதெல்லாம் காணக்கிடைப்பதில்லை. அப்படியொரு ஜந்து அழிந்துகொண்டுவருகிறது என்பதும் அந்த 'ஓவர் நைட்' கவிஞர்களுக்குப் புரிவதில்லை. ஆதலினால் அந்த அபாயகரமான வெற்றிடத்தை இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களே வில்லங்கத்திற்கு நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு முறை சுந்தர ராமசாமி சொன்னார். 'தமிழ் எழுத்தாளனல்லாத ஒரு வாசகனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு வாசகனைச் சந்தித்து குதூகலிக்கும் போதே சடாரென தன் சட்டைப் பைக்குள்ளிருந்து தன்னுடைய கவிதை என ஒரு கவிதையை எடுத்துக்கொடுத்து எப்படி இருக்கிறது என்கிறான்'. இதுதான் இப்போதைய இலக்கிய நிஜம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னுடைய கையில் கிடைத்த இந்த 'யா.ம.போ.இ'  என்கின்ற நூலைத் தட்டிக்கொண்டு போனபோது எனக்கு சில திடீர் ஆச்சரியங்கள் பிடிபட்டன. எதிர்பார்ப்பு சேமித்து வைத்திருந்த குதூகலத்தை இந்த ஆச்சரியம் நொடியில் இரட்டிப்பாக்கிப்போட்டது. அது நான் ஏலவே ஆங்கிலத்தில் படித்த மூன்று கவிஞர்களை இந்நூலில் அஷ்ரஃப் சிஹாப்தீன் தெரிவு செய்திருக்கிறார். அதுவும் நான் படித்த அதே கவிதைகள். பலஸ்தீனத்தைச் சேர்ந்த Nasser Barghouty ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த Reza Mohammadi மற்றும் துருக்கியைச் சேர்ந்த Nasim Hikmat.

இவற்றில் Nasser உடைய  “To the children of Palastine'என்கின்ற கவிதை அட்டகாசமானது. Reza உடைய கவிதை நுட்பங்களை படித்து முடிக்கவேண்டும். Reza என் இதயத்திற்கு மிகவும் பிரியமானவர். சுநணய பற்றிய ஓர் சுவாரஷ்யமான அனுபவத்தை என்னால் மறக்கமுடியாது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது அந்நாட்டின் தென் நகரமான கந்தகாரிற்கு அடிக்கடி போய்வருவது வழக்கம். முதல்முறை அங்கிருந்த எங்களுடைய அலுவலகத்திற்குச் சென்று என்னோடு பணியாற்றும் ஒரு நண்பனுடைய அறைக்குள் போனபோது வலப்பக்க மூலையில் தனியனாய் நின்றுகொண்டிருந்த ஒரு புத்தக அலுமாரியைக் கண்டேன். போகும் நாடுகளிலெல்லாம் அந்நாட்டு இலக்கியங்களைச் சேகரித்து படித்துப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய இலட்சியம். இலட்சியத்தில் அந்தச் 'சேகரிப்பு' நடந்துகொண்டிருக்கிறது ஆனால் 'படிப்பு'தான் இன்னும் கைகூடவில்லை.

அப்படி நண்பனுடைய அந்தப் புத்தக அலுமாரியைக் கிண்டியதில் கிடைத்த அத்தனை புத்தகங்களிலும் அந்நிய பாஷைகள். பஷ்ருன் டாரி பேர்ஷியன் மொழிகளில் ஏராளமான புத்தகங்கள். இடைக்குள் மொத்தமாயிருந்த ஒரு புத்தகத்தை 'அல்லாஹ்வை' மனதில் நிறுத்திக்கொண்டு இழுத்து வெளியில் போட்டபோதுதான் தெரிந்தது.  அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் Reza Mohammadi இன் ஓர் கவிதைப் புத்தகம். 'அல்ஹம்துலில்லா!!'. எடுத்து அறைக்குக் கொண்டுபோய் நான்கு நாட்களில் அதைக் காலி பண்ணி முடித்தேன். பிரமாதமான கவிதைகள். ரூமியை நோக்கித் தாவிக்கொண்டிருக்கும் எழுத்து.

ஆனால் அதை என்கூடவே இலங்கைக்குக் கொண்டுவரவேண்டும் என்கின்ற ஆசை இறுதிவரை நிறைவேறவேயில்லை. காரணம் அது ஆப்கான் அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகம். காரணம் சுநணய தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர். அவர் 2014 ஆல் லண்டனில் வெளியிட்ட “Taliban's Poetry”' என்கின்ற நூல் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி ஓய்ந்தது. அவருடைய புகழ்பெற்ற 'Friendship'' மற்றும் 'Illegal Immigration', 'You crossed the border'  ஆகிய கவிதைகள் உலகத்தரமிக்கவை. தரமான கவிதைகளின் உச்சக்கட்ட உதாரணங்கள் இவருடைய கவிதைகள் எனச்சொல்ல முடியும். அவற்றில் “You crossed the border” என்கின்ற கவிதையை அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் அதே உணர்வியலோடும் emotional aliveness ஓடும் இந்த நூலில் மொழிபெயர்த்திருப்பது பேரானந்தத்தைக் கொடுக்கிறது.

இப்படி மேற்சொன்ன மூன்று கவிஞர்களினுடைய கவிதைகளின் ஆங்கில மூலப் பிரதிகளைப் படித்தவன் என்கின்ற முறையில் இப்பொழுது அவற்றை அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய  தமிழில் படிக்கும் போது தேகம் சிலிர்க்கிறது. அவற்றை அதே அடிப்படை நுட்பங்களோடு மொழிபெயர்த்திருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனை மெச்சாமல் கடந்துபோக முடியாது. அஷ்ரப் ஷிகாப்தீன் போன்றவர்களின் இருத்தல் இத்தலைமுறையின் நல்லூழ் என்றே  சொல்லவேண்டியிருக்கிறது.

Thursday, August 31, 2017


நான் ரோஹிங்யா

அலி ஜொஹார் (புதுடில்லி)

ஆம்! நான் ரோஹிங்யா
நான் மியன்மார் தேசத்தான்
ஆயினும்
நானும் ஒரு மனிதன்!

எங்கேனும் நான் கொடுமைக்குள்ளானவன்
எங்கேனும் நான் சித்திரவதைக்குள்ளானவன்
எங்கேனும் நான் கொல்லப்பட்டவன்
எங்கேனும் நான் கடத்தப்பட்டவன்

ஆம்! நான் ரோஹிங்யா
எங்கேனும் நான் கட்டுப்படுத்தப்பட்டவன்
எங்கேனும் எனது உரிமைகள் மறுக்கப்பட்டவன்
எங்கேனும் நான் அவமரியாதைக்குள்ளானவன்
எங்கேனும் எனக்கான நியாயங்கள்
தாமதப்படுத்தப்பட்டவன்

எங்கேனும் நான் எல்லை கடக்கிறேன்
எங்கேனும் நான் பின்னுக்குத் தள்ளப்படுகிறேன்
எங்கேனும் நான் கடலுக்கு இரையாகிறேன்
எங்கேனும் நான் களவாகக் கடத்தப்படுகிறேன்

எங்கேனும் நான் முகாமொன்றுள் அடைக்கப்படுகிறேன்
எங்கேனும் நான் தின உணவு கிடைக்கப்பெறாதவன்
எங்கேனும் நான் தங்க ஓரிடமிருக்கலாம்
எங்கேனும் நான் இடமற்றவனாகிவிடுகிறேன்

எங்கேனும் நான் தடுக்கப்பட்டு வாடுகிறேன்
எங்கேனும் நான் வரையறைக்குள் வளர்ந்து வந்தேன்
எங்கேனும் நான் பாடசாலை மறுக்கப்பட்டேன்
எங்கேனும் நான் காரணமின்றி சிறை வைக்கப்பட்டேன்

எங்கேனும் நான் குப்பை பொறுக்குகிறேன்
எங்கேனும் நான் பட்டினியில் இருக்கிறேன்
எங்கேனும் நான் குழந்தைத் தொழிலாளியாகிறேன்
எங்கேனும் நான் வேலைசெய்ய வற்புறுத்தப்படுகிறேன்

எங்கேனும் எனக்குக் கூரை இல்லை
எங்கேனும் எனக்குக் கட்டில் இல்லை
எங்கேனும் எனது குழந்தைகள் நிர்வாணிகள்
எங்கேனும் நான் ஒரு போர்வையின்றி உறங்குகிறேன்

எங்கேனும் நான் வன்புணர்வுக்குள்ளாகிறேன்
எங்கேனும் நான் பாலியல் அடிமையாயிருக்கிறேன்
எங்கேனும் நான் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறேன்
எங்கேனும் நான் வாழ்வதற்காகப் பாலியலில் ஈடுபடுகிறேன்

எங்கேனும் நான் மனைவியைத் தொலைத்தேன்
எங்கேனும் நான் ஒரு தனித் தாயாகவுள்ளேன்
எங்கேனும் நான் குடும்பத்தைத் தொலைத்து விட்டேன்
எங்கேனும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்

ஆம்! நான் ரோஹிங்யா
சிலர் நான் நாடற்றவன் என்று எண்ணுகின்றனர்
சிலர் நான் அகதி என்கிறார்கள்
சிலர் நான் வேற்று நாட்டவன் என்கிறார்கள்
சிலர் மாத்திரமே என்னை உண்மையாக அறிவர்

எங்கேனும் என்னை 'கலார்' என்கிறார்கள்
எங்கேனும் என்னை 'பங்காளி' என்கிறார்கள்
சிலர் என்னை 'அறபி' என்கிறார்கள்
ஆனால் நானோ அவர்களைச் சேர்ந்தவனல்லன்

எங்கேனும் எனக்கான ஒரு தொழில் இல்லை
எங்கேனும் எனக்கான கல்லூரி தடைசெய்யப்பட்டுள்ளது
எங்கேனும் நான் ஒரு கூட்டில் அடைபட்டுள்ளேன்
எங்கேனும் நான் எந்த உதவியுமற்றவன்

ஆம்! நான் ரோஹிங்யா
நான் மியன்மார் தேசத்தான்
ஆயினும்
நானும் ஒரு மனிதன்
நானும் இவ்வுலகின் ஓர் அங்கத்தவன்
எனக்கும் உங்களைப் போல
ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்
எங்களை இனச்சுத்திகரிப்பு மூலம்
அழித்து விடாதீர்கள்!


Tuesday, July 18, 2017

'அப்பாவின் துப்பாக்கி!'


இலக்கியம் உண்மையான வரலாற்றை எடுத்துச் சொல்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாகக் குறிப்பிடப்படக் கூடிய அண்மையில் வெளியான நூல்களில் ஒன்று 'அப்பாவின் துப்பாக்கி!'

1964ல் ஈராக்கிய குர்திஸ்தான் நிலப்பரப்பில் பிறந்த ஆசாத் ஷெரோ செலீம் என்ற இயற்பெயர் கொண்ட ஹினெர் சலீம் எழுதிய இந்தப் படைப்பு ஒரு நாவலாகவும் சுய சரிதையாகவும் வரலாற்று உண்மைகளைக் கொண்ட ஆவணமாகவும் அமைந்திருக்கிறது.

சத்தாம் உப ஜனாதிபதியாக இருக்கும் போது ஆரம்பிக்கும் கதை சத்தாம் ஜனாதிபதியாகியதுடன் முடிவுக்கு வருகிறது. சத்தாமின் அகண்ட அறபு தேசக் கனவு, அவராலும் அமெரிக்கா, ஐ.நா. ஆகியவற்றாலும் ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் ஆயுத மோதலுக்குள் வாழ்ந்த ஒரு சிறுவன்;, முன் கட்டிளமைப் பருவத்தை அடைவது வரை இக்கதையை இரத்தமும் சதையுமாகச் சொல்லிச் செல்கிறான்.

இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் பிறந்த சலீம் இனப் போராட்டதில் தந்தை முதல் சகோதரர்கள் உட்பட அனைத்து ஆண்களும் தமக்கான சுதந்திரத்துக்காப் போராடியதை இக்கதையூடே சொல்லிச் செல்கிறார். பலாத்காரமான இடப்பெயர்வு, குர்திஸ் மலைப்பாங்கான நிலத்தின் எழில், இனப்போராட்டத்தின் ஆதரவாளர்கள், காட்டிக் கொடு;ப்பவர்கள், அறபு இராணுவம், அதன் அட்டூழியம், கிராமத்தின் வறுமை, பெண்களில் அழகு, ஒரு கோலா பானத்துக்கான ஏக்கம், வறுமை, இடத்துக்கு இடம் மாறி வாழ்தல், கைதிகளாதல், ஏமாற்றப்படுதல் என்று ஏகப்பட்ட விடயங்களை இந்தத் தன் கதை சித்தரிக்கிறது.

கதையில் வரும் முக்கிய பாத்திரங்களில் முதன்மை இடத்தைப் பெறுபது சலீமின் தந்தையாவார். அவர் குர்திஸ்தான் போராட்டக் குழுத் தலைவரின் முக்கிய தகவலாளியும் நம்பிக்கைக்குரியவருமாக இருந்ததுடன் அவர் வைத்திருந்த பழைய, மிகப் பழைய துப்பாக்கியும் கதையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டொரு நாட்கள் வீட்டில் இருப்பதும் மாதக் கணக்கில் போராட்ட அணியுடன் இணையவும் சென்று விடும் சகோதரர்கள், எந்நேரமும் இருந்த இடத்திலிருந்து கிளம்பத் தயாராக இருக்கும் தந்தை, பாசம் மிகுந்த ஆனால் எல்லாவற்றையும் புரிந்து அமைதியும் பொறுமையுமாக இருக்கும் தாய், வயது முறுக்காலும் இனப் பற்றினாலும் தானும் தன் நண்பரும் போராட்டக் குழுவில் சேரச் சென்று திரும்பும் அபாயம் மிக்க பயணம், ஓவியம், பாடல் ஆகியவற்றில் சலீமுக்கு இருந்த ஆர்வம், நிறைவேறாத அற்பக் காதல் என்று பல விடயங்களை இக்கதை நமக்கு எடுத்துச் சொல்வதோடு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஈராக் குர்திஸ்தானில் மக்கள் பட்ட அவதியையும் துன்பத்தையும் மனதில் பதித்து விட்டு நகர்கிறது.

அவர் கதையைச் சொல்லிச் செல்லும் போது ஒரு புன்னகையை வாசகனின் முகத்தில் தோன்றச் செய்யும் வகையிலான வசனங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தாலும் கதையைப் படித்து முடிக்கின்ற போது வாழ்வில் சுதந்திரத்தை மட்டுமல்ல மகிழ்ச்சி என்ற ஒன்றை அனுபவித்திராமல் வாழ்நாள் பூராகவுமே கலக்கத்தோடும் நிம்மதியின்றியும் வாழ்ந்த மக்களின் துயர் ஒரு பாறாங் கல்லாய் மனதை அழுத்துகிறது.

அறபி - குர்திஸ் என்ற பாகுபாடு காரணமாகவும் அறபியரோடு இணைந்து ஒரு சமூகத் துரோகியாக மாறி வாய்ப்புக்களைப் பெற்றுக் கற்று உயராமல் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் சலீமின் சிறு வயது ஆசையான சினிமா தயாரிக்கும் கனவு நிஜத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அது அவரது கதையில் இல்லை.

இத்தாலியில் தஞ்சம் புகுந்த சலீம் அங்கு குர்தியருக்கு பிரசாவுரிமை வழங்கப்படாத காரணத்தால் பிரான்ஸில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.

சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் தமிழ் மொழிபெயர்ப்பு இடறல் இல்லாதது. இந்நூல் காலச் சுவடு வெளியீடு - 2013

(16.07.2017 தினகரன் பிரதிபிம்பம் பகுதியில் பிரசுரமானது)