"இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெற வேண்டாமா? இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !" சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.
ஊடக அறிக்கை:
இலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால் முதலில் தமிழ்நாட்டிலிருந்தே எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.
2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது. எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில சிற்றிதழ் ஆசிரியர்களுமாக சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து சிறப்பித்தனர். குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
இதேவிதமாகவே தற்போதும் நாளை ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஆரம்பமாகவுள்ள பாரதி விழா, மற்றும் இலக்கிய மாநாட்டிற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. பல மாதகாலமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆலோசித்து நடைபெறுவதே நாளை ஆரம்பமாகும் நிகழ்ச்சி.
தமிழ்ச்சங்கத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதன் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டே பாரதிவிழாவும் இலக்கிய மாநாடும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது என்று இதுவரையில் வெளியான அனைத்து செய்திகளும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வை.கோபாலசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புலவர் புலமைப்பித்தன் உட்பட சுமார் 50 படைப்பாளிகள், கலைஞர்கள். வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தமிழ்ச்சங்க மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாகச்சொல்கின்றன.
இதில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு தெரிவித்த எதிர்ப்பு அலைதான் மீண்டும் எழுந்திருக்கிறது.
கொழும்பு தமிழ்ச்சங்கம் கடந்த 70 வருட காலத்துள் எத்தனையோ தமிழ் விழாக்களை, மாநாடுகளை, இலக்கிய சந்திப்புகளை, நூல் வெளியீடுகளை நடத்தியிருக்கிறது. அவற்றில் தமிழக அறிஞர்கள், படைப்பாளிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சங்கத்தில் நீண்டகாலமாக இயங்கும் பெறுமதி மிக்க நூல் நிலையத்திற்கு திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழக அரசும் பெருமளவு நூல்களை ஏற்கனவே வழங்கியிருக்கிறது. தற்போது படைப்பாளிகள் சார்பில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் தமிழ்ச்சங்க நிகழ்வில் 2010 ஆம் ஆண்டு கலந்துகொண்டவர்தான்.