புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர் மறைந்த மஹ்மூத் தர்வேஷ் எழுதிய “அடையாள அட்டை” என்ற கவிதை உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது. இந்தக் கவிதையை பலஸ்தீன பெண் கல்வியியலாளர் படிப்பதை இந்த வீடியோவில் காணலாம். அரபியிலும் ஆங்கிலத்திலும் அக்கவிதை படிக்கப்படுகிறது. அரபியில் படிக்கும் போது அவர் தன் சொந்த நிலம் குறித்துக் கலங்குவதை அவதானிக்கலாம். இது கவிதைக்கும் கவிஞனுக்கும் கிடைத்த வெற்றி.
இக்கவிதையை “வாக்குமூலம்” என்ற தலைப்பில் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பும் இங்கே தரப்படுகிறது. பலஸ்தீனக் கவிதைகள் என்ற எம்.நுஃமானின் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.
வாக்குமூலம்
எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
எனது அட்டையின் இலக்கம் 50,000
எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?
எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
தொழிலாளருடன்
கற்களை உடைக்கிறேன்
கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்கும்
ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திட மாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ்
முழந்தாழ் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?
எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான்
மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்
யுகங்களுக்கப்பால்
காலத்துக்கப்பால்
எனது வேர்கள் ஆழச்செல்வன
உழவர் குலத்தின் எளிய மகன் நான்
வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான்
எனது தலைமுடி மிகவும் கறுப்பு
எனது கண்கள் மண் நிறமானவை
எனது அரபுத் தலைஅணி
ஆக்கிரமிப்பாளரின் கைகளைப் பிறாண்டும்
அனைத்துக்கும் மேலே
தயவு செய்து இதனையும் எழுது
யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்
கவனம்!
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்!
எனது சினத்தை அஞ்சிக்
கவனமாயிருங்கள்!
மஹ்மூத் தர்வேஷ் குரலில் அவரது கவிதை
இக்கவிதை George Qurmuz குரலில் இனிமையான ஒரு பாடலாக...