Wednesday, August 21, 2013

பிறைக் குழறுபடி: ஜம்இய்யதுல் உலமா சீரமைக்கப்பட வேண்டிய தருணம்!


- லத்தீஃப் பாரூக் -

முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியாக் கிராமம் நாட்டின் வட கிழக்குக் கரையோரமாக அமைந்திருக்கிறது. சுமார் 98 சதவீதமானவர்கள் இங்கு முஸ்லிம்கள். மார்க்க அறிஞர்கள், புலமைத்துவ மட்டத்தைச் சேர்ந்தவர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிற தொழில்களைப் புரிபவர்கள் என சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.

புனித ரமழான் மாதம் வந்தாலேஇ கிராமத்தின் சூழ் நிலை முழுமையாக மாற்றம் அடைகிறது. நோன்பு நோற்பதிலும் இரவுத் தொழுகைகளிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய மாதத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிப்பதற்கான தலைப் பிறை வழமையாகத் தென்படும் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இத்தலைப் பிறையை அடிப்படையாக வைத்தேஇ ரமழான் மாத நோன்பை முஸ்லிம்கள் நோற்க ஆரம்பிக்கவும், நோன்பை நிறைவு செய்து நோன்புப் பெருநாளைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.
   
இவ்வாண்டும் அதற்கு விதி விலக்கல்ல. ஆகஸ்ட் 06இ 2013 அன்று கிண்ணியாவாசிகள் தலைப் பிறையைக் காணும் ஆர்வத்தில் இருந்தார்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாஇ கிண்ணியாக் கிளையின் பிறைக் கமிட்டி அதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தது.
      
கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா என்பது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை உள்ளடக்கிய பாரியதொரு நிறுவனமாகும். பலவேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவ்வமைப்பின்இ பிறைக் குழுத் தலைவராக இருப்பவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள். இவ்வமைப்பே கிண்ணியாப் பிரதேசத்தில் பிறை பார்ப்பதற்குப் பொறுப்பாக இருக்கிறது.
  

கொழும்பில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகமும் மேமன் சமூகத்தைச் சேர்ந்த இருவரைஇ கிண்ணியாப் பிறைக் குழுவுடன் இணைந்து பிறை பார்க்கும் கருமத்தில் ஈடுபடும் படி கிண்ணியாவிற்கு அனுப்பி வைத்திருந்தது. ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை (பெருநாள் தலைப் பிறை) பார்க்குமாறு ஜம் இய்யதுல் உலமாவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
  
பெரியாத்துமுனைஇ பெரிய கிண்ணியாஇ ஜாமிஉல் மஸ்ஜித் பகுதி, காக்காமுனை போன்ற பிரதேசங்களில், புதன் கிழமை மாலை 6.32 இற்கும்,6.35 இற்கும் இடையில் ஒருவர் பின் ஒருவராக இருபத்தைந்து பேர் வரை ஷவ்வால் தலைப் பிறையைக் கண்டிருக்கிறார்கள்.  

பிறை கண்ட ஆறு பேர், போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜாவாப் பள்ளிவாயல் தலைவராக இருக்கும் அஷ்ஷெய்க் ஜாபிர் (நளீமி) அவர்களை சந்தித்திருக்கிருக்கிறார்கள். சகல தகவல்களையும் உறுதி செய்து கொண்ட அவர், ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக் கிளைக்கு இதனைத் தெரியப்படுத்தி உள்ளார். கிண்ணியாக் கிளை இத்தகவல்களை மேலும் ஆராய்ந்தது.        
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் கமிட்டியை கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா அவசரமாகத் தொடர்பு கொண்டது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முடியவில்லை.  
       
எவ்வாறாயினும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஜம்இய்யதுல் உலமாவில் இருந்து கிடைத்த பதில் அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை. கிண்ணியா பிறைக் கமிட்டி உலமாக்கள்இ அறிஞர்கள்இ சமூக மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருந்த போதிலும்இ தாம் பொய் சொல்வதாக உணர்கின்ற வகையில்இ கொழும்பில் இருந்து அநாவசியமான பல கேள்விகள் அதனிடம் கேட்கப்பட்டன.

பிறகு தமது கருத்துக்கள் மறுக்கப்பட்டு, மேமன் குழுவினதும், வானிலை அவதான நிலையத்தினதும் கருத்து ஏற்கப்பட்டு, வியாழக் கிழமை எட்டாம் நாள் நோன்பு நோற்கப்படும் எனவும், வெள்ளிக் கிழமையே பெருள்நாள் கொண்டாடப்படும் எனவும் கூறப்பட்ட போது, கிண்ணியாவாசிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கியஸ்த்தர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிறை கண்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அவசரக் கூட்டம் ஒன்று அன்றிரவு ஒன்பது மணிக்கு கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா காரியாலயத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் மீண்டும் ஆராயப்பட்டு, மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, தலைமையகத்திற்கு எத்தி வைக்கப்பட்டது போது, கொழும்பு பெரிய பள்ளிவாயலில் பிறைக் குழு தமது மாநாட்டை நிறைவு செய்து, கலைந்து சென்று விட்டார்கள் என்ற பதிலே அவர்களுக்குக் கிடைத்தது. வியாழன் நோன்பு நோற்கப்படும் எனவும், வெள்ளிக் கிழமையே பெருநாள் கொண்டாடப்படும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானித்திருப்பதாகவும் வேறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இம்முடிவால் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவும், கிண்ணியாப் பிறைக் குழுவும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
      
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இச்செயற்பாடு காரணமாக வெறுப்புக்குள்ளான கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா, அங்குள்ள மக்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பிற்கு முரணாக, வியாழனன்று பெருநாள் கொண்டாடும் படி அறிவிப்புச் செய்தது.
அடுத்த நாள் ஆகஸ்ட், 08 வியாழக் கிழமை அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆற்றிய உரையைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் மூதூர் மக்களுக்கு தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Sunday, August 18, 2013

நாவூரும்மா!


ஆளுர் ஜலால்

(முஸ்லிம் சமூகப் பின்னணியில் நல்ல சிறுகதைகளைப் படைத்தவர்களில் மர்ஹூம் ஆளுர் ஜலால் முக்கியமானவர். “முஸ்லிம் முரசு“ ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் இளவயதிலேயே இறையடி சேர்ந்து விட்டார். அவருடைய சிறந்த கதைகளில் ஒன்றான இந்தச் சிறுகதையை வாசகர்களுக்குச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.)

காலை நீட்டிக் கொண்டு, மடியில் தூளும் இலைகளும் நிரம்பிள தட்டை வைத்துக் கொண்டு, ஆஸ் வைத்து இலையை வெட்டி, தூளை நிறைத்து, சுக்கானால் மடித்துச் சுருட்டி, சிவப்புத் தாரில் நூலைக் கரந்து கட்டி, பீடிகளை அறுவடை செய்து கொண்டிருந்தாள் நாவூரும்மா!

நைந்து கசிந்த தாவணியின் முக்காட்டு முகட்டில் கருத்த மயிரிழைகள் பாவிரித்திருந்தன. கைகளின் சுருட்டல், மடக்கலில் விழுந்து கொண்டிருந்த பீடிகளைப் போலவே நெஞ்சிலும் சில எண்ணச் சுருட்டல்கள்!

'பிளெ நாவூரு! இந்தக் கஞ்சியெக் குடிச்சிட்டுப் போவன்ப்ளெ!'

'இப்ப பசிக்கலே, கொஞ்சம் கழிச்சுக் குடிக்கிறேன்!'

ம்மாவுக்குப் பதில் சொல்வதற்காக கைகள் வேலையை நிறுத்தவில்லை. உதடுகள் மட்டும் மூடி மூடிப் பிரிந்தன, வார்த்தைகளுக்காக.

'இன்னும் ரெண்டு பலவை போட்டா, ஒரு சாம்பு அறுத்து விடலாம்!' ம்மா பாவிரித்து காக்குழியில் இறங்கி ஓடத்தைச் சுண்டினாள்.

'சல்லக்.... புல்லக்....'

மிதியடிக் கட்டைகளின் இடமாற்றலில் தறியின் சங்கீத நாதம், இனி ம்மா சத்தம் போட்டாலும் தறிச் சத்தத்தில் அது கேட்காது!

நாவூரும்மா காலை லேசாக மடக்கி நீட்டிய போது, ஒரு சொடக்குச் சத்தம். கொஞ:சம் ஆசுவாசமாகத்தான் இருக்கிறது. மீண்டும் மீண்டும் மனத்தில் மட்டும் அந்த எண்ணப் பாரம். நினைவில் கரைக்க எத்தனிக்கிற போதெல்லாம் 'அவ'னுடைய பார்வைதான் தெரிகிறது.

அவன் நேற்று இந்தத் தெருவழியாகத்தான் போனான். பெயர் எதுவென்று தெரியாது. தலையை நெளிவைத்துச் சீவிக்கொண்டு, மடிப்புக் கலையாத ஒரு வெளிநாட்டுச் சட்டையைப் போட்டுக் கொண்டு பெனிடிங் பூப்பொட்ட வெள்ளை லுங்கியைக் கரண்டைக்குக் கீழே கட்டிக் கொண்டு வந்தானே அவன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். அவன் நடந்த இடமெல்லாம் குப்பை ஒதுங்கி விட்டது. தலையில் தொப்பியோ முகத்தில் தாடியோ வைத்திருந்தால் அவனை அடையாளம் கண்டிருக்கலாம். தாடியும் மீசையும் இல்லாத முகத்தில் அவன் பொட்டு வைக்காமலிருந்தானே அது போதும்! அவன் ன் முற்றத்தில் நின்று சிரித்தான்? நாவூரும்மாவின் கைகள் பத்து பீடிகளைச் சுற்றுகிற நேரத்தில் ஒரு பீடியைக் கூட இன்னும் சுற்றி முடிக்கவில்லை.

கட்டம் போட்ட கட்டிச் சாயமுள்ள தறிச் சாம்பை உடுத்துக் கொண்டு - தோளில் வெறும் துவர்த்தைப் Nபுhட்டுக் கொண்டு - திட்டுத்திட்டான அழுக்கில் சட்டையைத் தூக்கிப் Nபுhட்டுக் கொண்டு - பல ரகமான ஆம்பிள்ளைகள். தெருவில் போவதும் வருவதுமாயிருக்கிற அத்தனை பேரிலும் நேற்று வந்தானே.. அவன் மட்டும்தான் பளிச்சென்று தெரிகிறான்.. சீச்சீ....! என்ன நினைப்பு இதெல்லாம்?

நாவூரும்மாவின் விரல் அசைவில் பீடிகள் பயிராகிற போது, பார்வை மீண்டும் தெருவில் மேய்கிறது!

நேற்று ராத்திரி நடந்து முடிந்த ஜொஹரா வீட்டுக் கல்யாணப் பந்தல் ரோஜாப்ப_வும் பிச்சிப்பூவும் கலந்த கட்டிய பெரிய பூமாலையைக் கழுத்தில் சுமந்து கொண்டு, கசவுக்கரை போட்ட எட்டு முழ வேட்டியும் சட்டையுமாய் தெருவில் தெருவில் நடந்து வந்த மாப்பிள்ளை ஜொஹராவை என்ன செய்திருப்பான்?

விட்ட குறை, தொட்ட குறை இல்லாமல் எல்லாக் குடும்பக்காரர்களையும் சேர்த்து வைத்து ஸஹனில் சோறு போட்டு கறியாணம் ஊற்றி, ஐந்தைந்து பேராய்ச் சாப்பிட்டுப் போவதற்குத்தான் கல்யாணமா? படி அரிசி ஏழு ரூபாய். இதற்கெல்லாம் ஜொஹராவின் வாப்பாவிடம் ஏது பணம்? எப்படியோ அவர் வீட்டில் ஒரு குமர் கரையேறிவிட்டது.

கரையேறா மன நினைவுகள் நாவூரும்மாவின் மனக் குளத்தில் நீச்சலடிக்கின்றன.


மர்ஹூம் ஆளுர் ஜலால்
(படம் - நன்றி டாக்டர் ஹிமானா செய்யித்)

'நாவூரும்மா...! நாவூரும்மா...!'

அவள் திரும்பிப் பார்க்காமலே அந்தக் குரலுக்குரியவன் அடுத்த வீட்டு மைதீன் காஜாதான் என்று அடையாளம் கண்டு கொண்டாள். 'அவனுக்கு வேற வேலையில்லை. பொழுது விடிஞ்சு பொழுது போனா... நாவூரும்மா... நாவூரும்மாதான் அவனுக்குப் பழக்கம். பேசுறதுக்கு வேற ஆள்... ' அலுத்துக் கொண்டாள்.

Thursday, August 15, 2013

பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்


சுமார் 2 முழு நாட்களை செலவு செய்து ஏ4  தாளில் 20 பக்கங்கள் எழுதி சமூகத்திற்கு அவசியம் சொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்த விடயங்களை மட்டும் பொறுக்கித் தயார் செய்ததே இந்த ஆக்கம். இதற்கு முன் எழுதிய 'வியாழன் நோன்பா..? பெருநாளா..?' என்ற ஆக்கம் சமூகத்தில் பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டாலும் அது நான் எழுதிய நோக்கத்தை நிறைவேற்றப் போதியதாக இல்லை என்பதே மீண்டும் இவ்வாக்கத்தை எழுதத் தூண்டியது.

எனது முதல் ஆக்கத்தில் மிகவும் அடக்கமாக இரண்டு தவறுகளை மாத்திரம் சுட்டிக்காட்டினேன். சமூகம் சிந்திக்க வேண்டும், படிப்பினை பெறவேண்டும். எமது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய காலத்தில் எமது உள்வீட்டு விஷயங்களையே தீர்த்துக்கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

இந்நிலை தொடரக்கூடாது என்பதை சமூகம் சாடையால் விளங்கிக் கொள்ளட்டும் என்ற நோக்கிலேயே முதல் கட்டுரையை எழுதினேன். எனினும் தற்போது களத்தில் காணுகின்ற கேட்கின்ற செய்திகள் 'எழுதுவதைத் தெளிவாக எழுது! நாசூக்காக சொல்வதை விளங்கும் நிலையில் இன்றையவர்கள் இல்லை' என்ற உண்மையை உணர்த்துவதாக இருந்தன. எனவே வெளிப்படையாக சில விடயங்களை சொல்லும் நோக்கில் இதனை எழுதுகின்றேன்.

ஒரு பிரச்சினைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கங்களையும் எடுத்து ஆராய்கின்ற போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனினும் ஒரு சிலரால் பிரச்சினையின் ஒரு பக்கம் வலுக்கட்டாயமாக மூடிமறைக்கப்படுகின்றது. அதன்மூலம் நடைபெற்ற தவறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது சமூகத்தை பிழையான திசை நோக்கி அழைத்துச்செல்லும் ஒரு முயற்சியாகும்.

உமர் (ரழி) அவர்களிடம் கண்பிதுங்கி இரத்தம் வடிந்த நிலையில் ஒரு மனிதன் வந்தான். தனக்கு இந்த அநியாயத்தைச் செய்தவன் பற்றி முறையிட்டான். அப்போது உமர் (ரழி) அவர்கள், 'உனது காயத்துக்கு மருந்திட்டுக்கொள், நடந்ததை விசாரிப்போம்' என்றார்கள். இதனைக்கேட்ட அந்த மனிதன் கொதிப்படைந்தான். 'விசாரணை செய்ய என்ன இருக்கிறது? என்னைப் பார்த்தால் நடந்தது விளங்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உமர் (ரழி) அவர்கள், 'நீ அவனது இரு கண்களையும் பழுதுபடுத்தி விட்டு வந்திருக்கலாமல்லவா. விசாரணையின்றி எப்படி அதனைத் தெரிந்து கொள்வது?' என்றார்கள்.

பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு தலைவர் ஒரு பக்கத்தை மூடிமறைக்காமல் எப்போதும் இரண்டு பக்கங்களையும் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால் பிறை விடயத்தில் இரண்டு பக்கங்கள் பார்க்கப்படவில்லை. ஒரு பக்கம் தான் பார்க்கப்பட்டது. பார்க்கப்பட்ட ஒரு பக்கம்: 18 வானியல் நிபுணர்களின் கணிப்பு.. இந்தக் கணிப்பின் படி பிறை வெற்றுக் கண்ணுக்கு தென்படாது.

மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அல்லது அலட்சியம் செய்யப்பட்ட பக்கம்: 25இற்கும் அதிகமானவர்கள் பிறையைப் பார்த்தார்கள் என்பதாகும். இவ்வாறு பிறையைப்பார்த்தவர்களுள் ஆலிம்களும் உள்ளடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு முரண்பட்ட விடயங்கள் தானே மொத்த சமூகத்தையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. சாதாரண குழப்பமா? ஓன்றில் நோன்பு நோற்பது ஹராம் அல்லது பெருநாள் எடுப்பது ஹராம். இந்த இரண்டு ஹராம்களுக்கு மத்தியில் சமூகத்தை சிக்கித் தவிக்க வைத்த பிரச்சினையொன்றையே நாம் எதிர்கொண்டோம்.

ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் ஏன் தேவைப்படுகின்றது?இ நெருக்கடி மிக்க அல்லது குழப்பம் நிறைந்த இவ்வாறானதொரு சூழலில் ஷரீஆ நோக்கிலும் அறிவு ரீதியாகவும் பிரச்சினையைத் தீர்த்து சமூகத்தை அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்குத்தானே!

29 நோன்புகள் பூர்த்தியாகிவிட்டன. இனி முப்பதாகலாம் அல்லது பெருநாள் வரலாம். பிறை தென்பட்டிருக்கிறது. உலமாக்கள் உட்பட 25 பேரளவில் பிறை கண்டிருக்கிறார்கள். வானவியல் நிபுணர்கள் பிறை காண முடியாது என்று சொல்கிறார்கள். வானவியல் கூறுவது ஓரு கருதுகோள். முஸ்லிம்கள் பிறை கண்டது ஒரு சாட்சி.

சாட்சியை முற்படுத்துவதா கருதுகோளை முற்படுத்துவதா?

சாட்சி கிடைத்துவிட்டால் கருதுகோள் பலவீனமாகிவிடும். சமூகம் கருதுகோளை சரிகாண மாட்டாது. சாட்சியைத்தான் வலுவானதாகக் கருதும். வானவியல் நிபுணர்கள் பிறை கண்ணுக்குத் தெரிய மாட்டாது என்கிறார்கள். முஸ்லிம்கள் பிறை கண்ணுக்குத் தெரிந்தது என்கிறார்கள்.

விஞ்ஞானத்துக்கு மாற்றமாக உலகில் ஒன்றுமே நடப்பதில்லையா? அல்லாஹ்வின் வல்லமை (குத்ரத்) என்று எடுத்ததற்கெல்லாம் பேசுபவர்கள் இந்த நிகழ்வில் அல்லாஹ்வின் குத்ரத் செயற்பட்டிருக்கலாம் என்பதை உணர மறந்துவிட்டார்களா? அல்லது வானவியல் நிபுணர்கள் பிறை வெற்றுக்கண்ணுக்குத் தென்படாது என்று கூறிய ஜப்பான், மலேஷியா, கேரளா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் பலவற்றில் பெருநாள் கொண்டாடப்பட்டது ஹராமா? அங்கு சிலவேளை பிறை காணாமலேயே பெருநாள் கொண்டாடியிருக்கலாம். இங்கு கண்ட பிறையை நிராகரித்திருப்பது ஒரு பாவமில்லையா? பெருநாள் கொண்டாட வேண்டிய தினத்தில் எண்ணற்றவர்களை நோன்பு நோற்க வைத்து ஹராமைச் செய்வதற்கு முடிவெடுத்தவர்கள் ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்.

சப்தமிட்டுக் கேட்க வேண்டிய கேள்வி இது. பிரச்சினையின் இரண்டு பக்கங்களையும் பார்க்கத் தெரியாததால் வந்த விளைவு, சமூகத்தைத் தீராத குழப்பத்தில் ஆழ்த்திய தீர்மானம் இல்லை சமூகத்தைக் குழப்புவதற்கென்றே எடுத்த சாணக்கியமில்லாத தீர்மானம். சமூகம் ஒன்றாக இருப்பதை விரும்பாத தீய சக்திகளின் சதி இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும் என நினைக்கத் தூண்டும் வகையிலான ஒரு முடிவு இது.

இது பிறை தீர்மானிப்பதில் நடந்த முதல் தவறு. இரண்டாவது தவறு பிறை பார்த்தவர்களையும் பெருநாளை எதிர்பார்த்திருந்தவர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது மட்டுமல்ல, குறிப்பாக பிறை பார்த்தவர்களின் சாட்சியை நிராகரித்ததன் மூலம் சாட்சி அந்தஸ்து மறுக்கப்பட்ட 'ஃபாஸிக்' கள் போன்று அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஒரு முஸ்லிமின் சாட்சி எத்துனை கண்ணியமானது, அந்தஸ்து நிறைந்தது என்பதை இந்தத் தலைவர்கள் அறியவில்லை. ஆலிம்கள் உட்பட சுமார் 25 முஸ்லிம்களது சாட்சி முஸ்லிம்களின் விவகாரமொன்றில் மறுக்கப்படுவதானது என்னைப் பொறுத்தவரை ஒரு பயங்கரமான தீர்மானமாகும்.

இஸ்லாமிய நீதிமன்றம் இருந்தால் இந்தத் தீர்மானத்திற்கெதிராக வழக்குத் தொடரலாம். நட்டஈடும் கோரலாம். தீர்மானம் எடுத்தவர்கள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளிலிருந்து முற்றாக நீக்கப்படவும் கூடும்.

சாட்சி அந்தஸ்த்தை மறுக்குமாறு அல்லாஹ் ஒருசில 'பாஸிக்'கள் விடயத்தில் சட்டம் வகுத்துள்ளான். அவர்கள் தான் கற்புள்ளவர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள், விபசாரம் செய்தார்கள் என்று அவதூறு கூறும் பாவிகள். பிறை கண்டவர்கள் அப்படிப்பட்டவர்களா? பிறை கண்டவர்கள் ஓரிருவராக இருந்தால் சாட்சி இரண்டு பெயருக்கிடையில் முரண்பாடாக இருந்தது என்றொரு காரணத்தைக் கூறலாம். சுமார் 25 பேர் கண்ட பிறையை எந்தக்காரணம் கூறி நிராகரிக்க முடியும். 25 பேரையும் இவர்கள் விசாரித் துத்தான் முடிவுக்கு வந்தார்களா? அல்லது அத்தனை பேரும் சாட்சி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட பாவிகளா?

கிண்ணியாவின் பிறைக்குழுத் தலைவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள் தெளிவான முறையில் பெரிய பள்ளவாசலுக்கு அறிவித்தல் கொடுத்த பின்னரும் அறிவிப்பு ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற போலிக்காரணம் காட்டப்பட்டு பிறைச்செய்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

பிறை விவகாரம் முன் அனுபவமே இல்லாத ஒரு புதிய விவகாரம் போன்று சாணக்கியம் இல்லாமல் அணுகப்பட்டிருப்பதனையே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிறை நிராகரிக்கப்பட்ட பின் பல முஸ்லிம் ஊர்கள் குறிப்பாகக் கிண்ணியா பெருநாள் கொண்டாடும் தீர்மானத்துக்கு வந்தது. இந்தத்தீர்மானத்தை எடுக்க வைத்த காரணம் எது? கட்டுப்பாடின்மையா அல்லது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்இ புறக்கணிக்கப்படுகிறோம், முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாக நாம் கருதப்படவில்லை என்ற ஆதங்கமா?

அஸாத் சாலி அவர்களது விவகாரத்திலும் பொது பல சேனா விவகாரத்திலும் பக்குவமாக, பவ்வியமாக, கட்டுப்பாடாக நடந்து கொண்ட சமூகம் தான் பிறை விவகாரத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. யார் இதற்கு வகைகூறவேண்டும். இந்தப் பிளவுக்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும். சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபடுகின்றோம் என்று பேசிவிட்டால் மாத்திரம் போதாது. ஒரு தாய்க்கோழி கறுப்பாயினும் வெள்ளையாயினும் தனது இறக்கையினுள் தனது குஞ்சுகள் அனைத்தையும் அரவணைப்பது போல தலைவர்கள் இந்த சமூகத்தை அன்போடு அரவணைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனது முன் அனுபவங்கள் படி சொல்கிறேன். அவ்வாறு கறுப்பு, வெள்ளை பார்க்காது அரவணைக்கும் பரந்த மனம், சகோதரத்துவம், அன்பு தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு அரவணைக்கத் தெரியாதவர்கள் சமூகத்தை ஒற்றுமைக் கயிற்றினால் பிணைத்து வழிநடாத்துவது சாத்தியமில்லை.

பிறை விவகாரத்தின் பின்னர் எனது காதில் பட்ட ஒரு செய்தி தான் கிழக்கு மாகாணத்துக்கென ஒரு தனியான பிறைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி. அவ்வாறு அமைக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

Wednesday, August 14, 2013

ஷவ்வால் பிறையில் சறுக்கிய கதை!

இவ்வருட ஷவ்வால் பிறை தொடர்பாக எனதும் ஏனைய சிலரது குறிப்புகளும் சில முக்கிய பின்னூட்டங்களு்ம்கிண்ணியா காக்காமுனைப் பள்ளிவாசல் மற்றும் ஜாவாப் பள்ளிவாசல் பகுதிகளில் மாலை 6.37க்கு ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதாக அங்கிருந்து ஒரு சகோதரர் எனக்குத் தெரிவித்தார். ஜம்இய்யதுல் உலமா சபை சார்ந்தோர் பிறை கண்டவர்களைத் துருவித் துருவி விசாரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நாளை நோன்பு நோற்பது என்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவில் பிறை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை என்றும் இன்று பிறையைக் காணும் சாத்தியம் இல்லை என்று வானியல் துறை முஸ்லிம் அறிஞர்கள் சொல்வதாகவும் பிறை கண்டதாகச் சொன்ன முறை சாட்சியத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு இனிமேல் யாரையும் பிறை பார்க்குமாறு ஊடகங்களில் அறிவித்தல் கொடுக்காமல் தாங்களாகவே பார்த்து முடிவை அறிவித்தால் இப்படியான குழப்பங்கள் ஏற்படாது. இதற்கெனச் சிலரை விசேடமாக நியமித்து உரிய இடங்களையும் தீர்மானித்து முடிவுககு வருவது நல்லது. பிறை பாரு... பிறை பாரு என்று ஊடகங்களில் அறிவித்தல் கொடுத்து விட்டு இன்றைக்கு பிறை தென்பட சான்சே இல்லை என்பதும் தென்னை மர உயரத்தில் பார்த்தாயா, அதற்குக் கீழ் பார்த்தாயா, மேகத்துக்குள் பார்த்தாயா, எந்த சைசில் பிறை இருந்தது என்றெல்லாம் கேட்டு பிறை கண்ட முஸ்லிமைப் பிறாண்டி எடுப்பதும் அதை மறுதலிப்பதும் புத்திக்கு ஒவ்வுகிற செயலாக எனக்குத் தெரியவில்லை! எனவே பிறைக்குழு ஒரு தனி ஆய்வுக் குழுவை இதற்கென நியமித்து எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளைத் தவிர்க்க முடிவு செய்ய வேண்டும்!

தமது சங்க அங்கத்தவர்களான உலமாக்களையே நம்பாத மத்திய குழுவின் முடிவுகளுக்கு ஏற்ப நடக்கும் அவசியம் இல்லை என்பதை கிண்ணியா ஜம்இய்யாவின் முடிவு உணர்த்தியுள்ளது. இன்னும் சில வருடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல காங்கிரஸ்களாகப் பிரிந்தது போல் ஜம்இய்யத்துல் உலமா பிரியும் ஆபத்து உண்டு. அந்த அந்தப் பிரதேச ஜம்இய்யாவின் வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளும் கட்டாயத்தை மத்திய குழு ஏற்படுத்திச் செல்கிறது!நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்லன். கிண்ணியாவில் கண்ட பிறை விடயத்தைச் சில புத்தி ஜீவிகள் கூட தௌஹீத் அமைப்புடன் இணைத்து வெறுப்பை உமிழ்ந்திருந்தார்கள். ஹஸன் மௌலவி போன்றவர்கள் அ.இ.ஜ.உலமாவினரோடு நீண்ட நேரம் விவாதித்ததாக அறியக் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் ஆலிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கண்ணியமும் மரியாதையும் இருக்கிறதுதானே! கொழும்பில் குந்தியிருக்கும் ஆலிம்களுக்கு மட்டும் எப்படி அந்த உலமாக்களை அவமதிக்கும் தைரியம் வந்தது என்று சிந்தித்தால் பல கதைகள் வெளிவரக் கூடும். கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியலும் அவர்களின் தலைவிதியும் கொழும்புத் தலைமைகளால்தான் தீர்மானிக்கப்பட்டு வந்தது. அதைத் தீர்மானித்தவர்கள் சுகபோகங்களில் செழித்துச் செல்வந்தர்களாகவும் பிரமுகர்களாகவும் படாடோபமாகப் பவனி வந்தார்கள். அதே வேளை ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்ந்தார்கள். அரசியல் ரீதியாக எம்.எச்.எம். அஷ்ரஃப் இந்த நிலைமையை மாற்றியமைத்தார். 'உலமாக்கள்இ பேசாதே!' என்று பயங்காட்டும் இந்த அடுத்த முஸ்லிமை அவமானப்படுத்தும் கோஷ்டிகளிலிருந்து முஸ்லிம்களுக்கு எப்போது விமோசனம் ஏற்படும் என்று தெரியவில்லை!

Monday, August 12, 2013

இஸ்லாமியத் தலைமையின் ஈரம் கசியும் இதயம்!


ஹிஷாம் ஹூஸைன்


இது நம்ப முடியாத உண்மைச் சம்பவம். 

இல்ஹாம் அப்துல் ஹாதி அப்துல் பாகி முஹம்மத் எனும் எகிப்திய பெண்ணின் வாழ்வில் நடந்த இச் சம்வத்தை வாசித்து,  ஈரமாகாத கண்கள் இருக்க முடியாது. அது இச் சம்பவத்துடன் தொடர்புபடும் இன்னுமொரு மனிதரினால் இல்லை ஒரு மகானினால்.

இனி இல்ஹாமின் கதையைக் கேளுங்கள்.

'எனக்கு வீடு, கணவன், குழந்தை என எல்லாம் இருந்தது. அழகான சந்தோசமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்தார் மரணித்து, எங்கள் வீடு இடிந்து விழுந்த பின் இந்த உலகில் நான் தனிமைப்பட்ட வயோதிப பெண்ணாக நின்றேன். வீடு வீடாகச் சென்று வேலைகளைச் செய்துகொடுத்தும் சிறிய சில்லரைப் பொருட்களை விற்றும் வறுமையின் அகோரப் பிடியில் நாட்களைத் தள்ளிக்கொண்டும் இருந்தேன்.
தூங்குவதற்குக் கூட சொந்தமாக ஓர் இடமில்லை.

கீஸா சதுக்கத்தில் கைரோ பல்கலைக் கழகத்திற்கு முன்னால் வீதியில் ஒதுக்கமான பகுதி, தெய்வம் தந்த வீடானது. வீதிதான் எனது தங்குமிடமானது. அந்த இடத்தில் ஐந்து வருடங்களாக இரவில் வந்து தூங்குவேன். அங்கிருந்த அனைவரும் என்னை அறிவார்கள்.

அது டிசம்பர் மாதத்தில் ஒரு நாள். எனது முழு உடலையும் மூடிக்கொள்ளும் போர்வைக்குள் தூங்கிக்கொண்டிருந்தேன். வயொதிபப் பெண்ணாக இருந்தாலும் தூங்கும் போது எவரும் என்னைக் கண்டுவிடுவார்களோ என்ற வெட்கம் என்னை வாட்டும்.

அப்போது ஒரு மனிதன் வந்து என்னை தட்டினான்.

நான் அதிர்ந்தவளாக தலையை உயர்த்திப் பார்த்தேன். அவருடைய புகைப் படங்களை சுவர்களில் கண்டுள்ளேன். அவர் தனது காரில் வந்திருந்தார். அவருடன் சாரதியைத் தவிர வெறு யாரும் இல்லை. அவர் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி.

அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கின்றேன், ஜனாதிபதி வாகன ஊர்வலமாக செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் படை சூழ செல்வார். இப்படி தன்னந்தனிமையில் வந்து நிற்பதை என்னால் நம்ப முடியாமல் வியப்பில் திகைத்து நிற்கும் போது அவர் கேட்டார்,

 'உம்மா, இந்த இடத்தில் ஏன் தூங்குறீங்க?'

அப்போது சாமம் 2 மணியிருக்கும். நான் அவரிடம் எனது  கதையைக் கூறினேன்.

 'இந்த இடத்தில் தூங்குறீங்க என்றால்இ உங்கள் தனிப்பட்டத் தேவைகளை (மலசலம் கழித்தல், குளித்தல்) எப்படி செய்துகொள்றீங்க?' என்று கேட்டார். நான் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் அருகில் இருக்கும் இடத்தைக் கூறினேன். அவர் பதிலேதும் சொல்லாமல் காரில் ஏறி சென்று விட்டார்.

மறு நாள் காலை 8 – 9 மணியளவு இருக்கும். நேற்று இரவு வந்த சாரதி அதே காரில் வந்திறங்கினார். அவர் என்னை அழைத்து சொன்னார், 'நீங்கள் தங்குவதற்கு ஓர் இடமும் உங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவும் வழங்குமாறு ஜனாதிபதி கூறினார். நீங்கள் வெளியே சென்று அவதிப்படத் தேவை இல்லை. அல்லாஹ் தனது பொறுப்பில் ஏற்றுக்கொள்ளும் வரை ஜனாதிபதி உங்களுக்கான அனுசரனையை வழங்குவார்'.


எனக்கு வழங்கிய தங்குமிடத்திற்குச் சென்றேன். ஒரு படுக்கை, அதில் புனித குர்ஆனும் தொழுகை விரிப்பும் இருந்தது. தங்குமிடத்திற்கான ஒப்பந்தப் பத்திரத்தையும் மாதக் கொடுப்பனவையும் காகித உறையில் போட்டு தந்தார். ஒவ்வொரு மாதமும் தவறாது தங்குமிடத்தின் வாடகைக்கான பற்றுச் சீட்டையும் மாதக் கொடுப்பனவையும் கையில் கொடுத்துவிட்டுப் போவார்கள்.

நான் இக்வான் கட்சியைச் சேர்ந்தவள் அல்ல. வாழ்க்கையில் தனிமைப்பட்டு விட்ட வயோதிபப் பெண். என்னை தனது தாயைப்போல் பராமரித்த அந்த மனிதன்இ முஹம்மத் முர்ஸி, யார் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும். அன்று, அந்த நடு நிசியில் டிசம்பரின் கடும் குளிரில் என்னைப் போர்த்துவதற்கு மேலதிக போர்வை இருக்குமா என்று தனது காரில் தேடினார்...

 யா அல்லாஹ்'.

இப்பெண் சொல்லும் இத்தகவலை ஒளிப்பதிவில் பார்க்கச் சொடுக்குங்கள்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=LaJ-La1kGa8#at=126

நன்றி - புத்தளம் ஒன்லைன் மற்றும் ஹிஷாம் ஹூஸைன்.

Friday, August 9, 2013

அழகு பிறையும் ஆலிம்ஷாவும்!


ஹஸ்ரத்:- டேய்... இங்க வா!

இளைஞன்: - என்ன ஹஸ்ரத்

ஹஸ்ரத்:- நீ இன்டர் நெற் பாக்குறியா?

இளைஞன்:- ஆமா... இப்ப அதெல்லாம் பார்க்காம யாருதான் இருக்காங்க...!

ஹஸ்ரத்:- நாசமாப் போச்சி! ஷைத்தான்... ஷைத்தான்... அது ஷைத்தான்டா! இரு.. இரு.. ஒங்க வாப்பாக்கிட்டத்தான் செல்லோணும்...

இளைஞன்:- வாப்பாதான் கிழமைக்கு நூறு ரூபாத் தருவாரு... ரீசார்ஜ்ஜூக்கு..

ஹஸரத்:- ஏன்ட அல்லாஹ்வே... சமூகமே ஹறபாய்ப் போய்க்கிட்டிருக்கு... பேஸ் புக்கும் போவியா?

இளைஞன்:- பேஸ் புக் போகாம இப்ப எவனாவது இருக்கானா? எவ்வளவு கெதியான, சுருக்கமான ஊடகம் அது... ஊர் ஒலகத்துல நடக்கிறத்தை ஒரு சிற்றிடிங்லயே பாத்துரலாம்...

ஹஸ்ரத்:- அப்போ இன்னைக்கு என்ன பார்த்தாய்?

இளைஞன்:- பிறைக் குழப்பம் சம்பந்தமா கிண்ணியா நெற்ல அ.இ.ஜ.உக்கு இரண்டு பக்கம் பதில் கொடுத்திருக்காங்க...

ஹஸ்ரத்:- லெட்டர் ஹெட் கலர்ல இல்ல பார்த்தியா?

இளைஞன்:- பார்த்தன். லெட்டர் ஹெட்டை கலர்லதான் அடிக்கோணுமெண்டு சட்டமில்லையே ஹஸரத்!

ஹஸ்ரத்:- ஆனா இரண்டாம் பக்கம் சீல் கலர்ல இருக்கு! பார்த்தியா... அறிக்கை முடியிற இடத்துல யாரும் கையெழுத்துக் கூட வைக்கல்ல... அப்ப இது சத்துராதி வேலதானே.. பொய்தானே.. ஏமாத்துத்தானே!

இளைஞன்:- அது எனக்குத் தெரியாது. கிண்ணியா ஜம்இய்யா தலைவர் பேசுற வீடியோவ வேற போட்டிருக்காங்க....

ஹஸ்ரத்:- அதுவும் ஸ்மூத்தா ஓடுதில்லை பார்த்தியா... என்னமோ ஒரு கேம் உட்டிருக்கானுங்க... இப்பிடி எத்தினை கேமை எத்தினை பேச் செய்திருக்காங்க.. உனக்குத் தெரியாதா?

இளைஞன்:- மொத்தமா எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா நல்லா விளங்குது... துண்டு துண்டாப் பார்த்தாலும் தெளிவா விளங்குது...

ஹஸ்ரத்:- என்னன்னு?

இளைஞன்:- கேம் அடிக்கிறது கிண்ணியாக்காரனுங்க இல்லைன்னு..

ஹஸ்ரத்:- அடேய் எதிர்த்தா பேசுறாய்... பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத ராஸ்கல்ஸ்!

இளைஞன்:- சும்மா போங்க ஹஸ்ரத்... ஒளிவு மறைவா பண்ணினா இப்பிடி நோண்டியாகத்தான் முடியும்!சுத்துமாத்துச் செய்யாதவன் எதையும் மறைச்சுச் செய்ய மாட்டான்.. வார்த்தைக்கு வார்த்தை முரண்பட மாட்டான்... வாய் நிறையப் பொய்யும் புரட்டும். மத்தவங்களுக்கு மட்டும் இஸ்லாமும் சட்டமும் பேசுவீங்க.. பெரிசா சொல்ல வந்துட்டீங்க...!Thursday, August 8, 2013

தனிநாயகம் அடிகளாரும் தமிழ் நேசன் அடிகளாரும்!


மன்னார்த் தமிழ்ச் சங்கம் நடத்திய
தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில்
கௌரவம் பெற்றோர்


'அஷ்ரஃப்... நான் ஃபாதர் தமிழ் நேசன் பேசுகிறேன்...!'

'சொல்லுங்க ஃபாதர்!'

'மன்னார்த் தமிழ்ச் சங்கத்தால தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிறோம். தெரியும்தானே...!'

'தெரியும் ஃபாதர்... அமுதன் முகநூலில் அழைப்பிதழ் போட்டிருக்கிறார்!'

'நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்...!'

'.................'

'4ம் திகதி விழாவின் கடைசி நாள்...! அன்றைக்கு உங்களைக் கௌரவிக்க விரும்புகிறோம்!'

'ம்!'

'.............. ஆகியோர் பங்கு கொள்கிறார்கள். ஒரு நாள் மட்டுமாவது கட்டாயம் வாங்கோ... நீங்கள் ஆம் என்றால்தான் நான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்! என்ன சொல்கிறீர்கள்...?'

மன்னார்த் தமிழ்ச் சங்கத் தலைவராக இயங்கும் அருட்திரு. ஃபாதர் தமிழ் நேசனுக்கும் எனக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் இது.

இந்த உரையாடலுக்கு சில தினங்களுக்கு முன்னர் குறுந்தகவலில் எனது முகவரி கோரிய தம்பி மன்னார் அமுதன் தனது இரண்டாவது குறுந்தகவலில் ஃபாதர் தமிழ் நேசன் உங்களிடம் பேசுவார் என்று மட்டும் சொல்லியிருந்தார். விபரங்கள் எதுவும் இல்லை.ஃபாதர் தமிழ் நேசன் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. 2010ல் மன்னார்த் தமிழ்ச் சங்கம் மூலம் செம்மொழி மாநாடு ஒன்றை வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடத்தியவர். மாநாடு நடைபெற்ற அனைத்துத் தினங்களிலும் விருந்தினர்கள், பேராசிரியர்கள், படைப்பாளிகள் அனைவரையும் தங்கவைத்து நலனோம்பிய மனிதர். 

2011 சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கடைசி வரை பங்கு பற்றியவர். தமிழ்ச் சங்கம் 2012ல் நடத்திய இலக்கிய மாநாட்டில் அவரது உரையைச் செவி மடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இச் சந்தர்ப்பங்களில் அவரைப் பற்றிய நல்லெண்ணம் மனமெங்கும் நிரம்பியிருந்தது.

அருட்திரு தமிழ் நேசன் அவர்கள் என்னை மன்னாருக்கு அழைத்த அந்த நாட்களில் நான் தனிப்பட்ட வேறு ஒரு தூரப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன். 

என்ன சொல்கிறீர்கள்? என்ற அவரது கேள்விக்கு 'ஆம்.. வருகிறேன்' என்பதைத் தவிர வேறு எந்தப் பதிலை என்னால் சொல்ல முடியும். அதையே சொன்னேன். இன்னொரு விடயத்தைத் தாண்டியும் அவருக்கு இந்தப் பதிலைத் தெரிவித்திருந்தேன் என்பது இங்கு குறிப்பிட்டேயாக வேண்டியிருக்கிறது.

அதுதான் விருதும் பொன்னாடையும் பெறுவது!

2000மாம் ஆண்டு எனக்கு முதலாவது பொன்னாடையைப் போர்த்தியவர் மாத்தளை பீர் முகம்மத்!

மாத்தளையில் தனது சொந்தச் செலவில் 'யாத்ரா' சஞ்சிகைக்கான அறிமுக விழாவை ஏற்பாடு செய்து நடத்திய பீர் முகம்மத் எனக்கே தெரியாமல் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருந்தார். பொன்னாடை போர்த்தும் அந்தக் கணத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சகோதரர் ரவூப் ஹக்கீம் 'அஷ்ரஃப்! உங்களுக்குப் பொன்னடை போர்த்தப் போகிறார்கள்!' என்று எனது காதுக்குள் சொல்லும் வரை எனக்கு இவ்விடயம் தெரிந்திருக்கவில்லை. அந்த இடத்தில் நான் அதை ஏற்றுக் கொள்ளாதிருப்பது பொருத்தமாக இருக்கப் போவதில்லை என்பதால் ஏற்றுக் கொண்டேன்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் போது டாக்டர் ஜின்னாங் ஷரிபுத்தீன் சொன்ன வார்த்தைகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது,

'நீங்கள் அதை மறுக்காமல் விட்டவரைக்கும் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் சஞ்சிகைக்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்த மனிதர், உங்களது நட்பையும் எழுத்தையும் கௌரவிக்கும் விதத்தில் ஒரு பொன்னாடையைப் போர்த்துவதில் மகிழ்ச்சியடைகிறார் என்றால் அதைத் தவிர்ப்பது மிகவும் பிழையானது!'

அன்று அப்பொன்னாடையை ஏற்றுக் கொண்ட போதும் பொன்னாடை விடயத்துடன் எனக்கு பெரிய உடன்பாடு எப்போதும் இருந்ததில்லை. 

2002ல் அரச அனுசரணையுடன் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் அம்மாநாட்டை நடத்துவதில் முன்னின்ற எனக்கும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாஸிம் அகமது ஆகியோருக்கும்; பொன்னாடை போர்த்துவதற்காக வர்த்தகப் பிரமுகரும் சஞ்சிகையாளரும் எழுத்தாளருமான ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் மூன்று பொன்னாடைகளை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து கையில் வைத்துக் காத்திருந்தார். நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தோம். 

2011ல் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்திய போது பொன்னடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவுக்கு மாநாட்டுக் குழுவில் இருந்த நாம் அனைவரும் முடிவுக்கு வந்து அப்படியே செய்தும் காட்டினோம். 

அதே வேளை 2007ல் இசைக்கோ நூர்தீன் தலைமையில் இயங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி வழங்கிய 'நவயுக கலைச்சுடர்' விருதையும் பொன்னாடையையும் 2011 நடுப்பகுதியில் காயல்பட்டினத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வழங்கப்பட்ட 'தமிழ்மாமணி' விருதையும் பொன்னாடையையும் ஏற்றுக் கொண்டேன்.

மொத்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் சில கௌரவங்களை மறுப்பதன் மூலம் நல்ல சில உள்ளங்களைக் காயப்படுத்தாமல் தவிர்த்திருக்கிறோம் என்பதையும் சிலவற்றை மறுப்பதன் மூலம் நாம் காயப்படாமல் தப்பியிருக்கிறோம் என்ற முடிவுக்கும்தான் என்னால் வர முடிகிறது! இதுக்குமேல் இது பற்றிப் பேச எதுவுமில்லை.

ஏற்பதும் தவிர்ப்பதும் கலைஞனின் படைப்பாளியின் சுயகௌரவம் சார்ந்த, தீர்மானம் சார்ந்த விடயம்!

மூன்று நாள் நிகழ்வுகளிலும் பல நல்ல அம்சங்கள் நடைபெற்றிருந்தன. தனிநாயகம் அடிகளார் பற்றிய ஆய்வரங்கு, கவியரங்குகள், சுழலும் சொற்போர், பட்டி மண்டபம், வகை வகையான கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள் என்று விழா களைகட்டியிருந்தது. 

மன்னார்த் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் எப்போதும் எல்லாப் பாடசாலைகளையும் கலை நிகழ்வுகளில் ஈடுபடுத்தி வருவதைக் காண்கிறேன். மாணாக்கருக்கான புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பாடசாலைகள் ஈடுபடுகின்றவோ இல்லையோ மன்னார்த் தமிழ்ச் சங்கம் அதைச் செவ்வனே செய்து வருவதை கடந்த 3 வருடங்களில் இரண்டு முறை பார்த்து விட்டேன். ஆக ஏனைய பிரதேசங்களை விட இவ்விடயத்தில் மன்னார்த் தமிழ்ச் சங்கம் ஈடுபடுவதைக் கொண்டு பிரதேசத்தவர்கள் மன்னார்த் தமிழ்ச் சங்கத்துக்குத் தனியே ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும். தவிர, ஏனைய பிரதேச தமிழ்ச் சங்கங்கள், கலை, இலக்கிய அமைப்புகள் தமது செயற்பாடுகளை மன்னார்த் தமிழ்ச் சங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

மன்னார்த் தமிழ்ச் சங்கத்தில் பெரும்பாலும் இளைஞர்களும் யுவதிகளும் இயங்கிக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு. மூத்தோர் முதல் பாடசாலைச் சிறுமியர் வரை இந்நிகழ்வுகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு. இதுவெல்லாவற்றுக்கும் காரணம் அருட்திரு தமிழ்நேசனின் செயற்றிறண் என்;று சொல்வதில் தப்பேதுமில்லை.

நிகழ்வு முடிந்து கவிஞர் அமல்ராஜ் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது அருட்திரு. தமிழ் நேசன் நிகழ்ச்சிகளை மட்டுமன்றி சில முக்கியஸ்தர்களைக் கையாண்ட விதம் குறித்தும் விதந்து பேசிக் கொண்டிருந்த போது அமல்ராஜ் சொன்னார்:-

'அண்ணா, இந்த மனுசனுக்குக் கணக்கு விட ஏலாது. ஒவ்வொருத்தரையும் அவங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களையும் எப்படித்தான் இவர் ஞாபகம் வைத்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஐந்து நிமிசத்துக்குள்ள நாலுபேரை செல்போனில் கூப்பிட்டு அலர்ட் பண்ணிக்கிட்டே இருப்பார்...'

யாரை எப்படிக் கையாள வேண்டும், எதை எப்படி அணுக வேண்டும் என்கிற நுணுக்கமும் அறிவும் அவரிடம் இருப்பதால்தான் சிக்கல்கள் ஏதுமின்றி எப்போதும் மிக லாகவமாக நிகழ்வுகளை அவர் நடத்திச் செல்கிறார்.

அங்கே சென்று மேடைக்கு அழைக்கும் வரை வேறு யார் யார் கௌரவம் பெறுகிறார்கள் என்கிற விசயம் கௌரவம் பெறும் மற்றொருவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இன்னின்னார் கௌரவம் பெறுகிறார்கள் என்பது தெரிய வரும்போது பல சிக்கல்களை விழா நடத்துனர்கள் எதிர்கொள்ளுவார்கள். விருது, பாராட்டு என்றால் இரண்டு கேள்விகள் எழுவது வழக்கம் என்று நண்பர் கலைவாதி கலீல் குறிப்பிடுவது உண்டு. 'நான் ஏன் பட்டியலில் இல்லை? அவர் ஏன் பட்டியலில் இருக்கிறார்?' இதுதான் எழுப்பப்படும் வினா!

நீண்டகாலம் என்னுடன் பழகிய மன்னார்த் தமிழ்ச் சங்க நிர்வாகச் செயலாளராகத் தற்போது இயங்கும் மன்னார் அமுதன் கூட அங்கு செல்லு முன்னரும் சென்ற பின்னரும் கூட இது பற்றி என்னுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. எங்களுடன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட அங்கு என்னுடன் அளவளாவிய நண்பர் நாவலாசிரியர் உதயணன் கூட இது பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. ஊர்வலத்தில் எம்முடன் இணையாமல் ஒதுங்கித் தெருவோரத்தே தம்பி லோசன் நின்றிருந்தார். மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட பிள்ளை அவர். மூத்தோருக்குக் கனம் பண்ணுவது எப்படி என்பதை லோசனிடம் இளையவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுகூட எனக்கு ஓர் ஆச்சரியமாகவே இருந்தது. சங்கத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் யார் யார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் எதுவுமே தெரியாத மாதிரி இயல்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சிகளுக்கு அறிவுப்புகளைச் செய்வது கூட மிக அழகாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. என்னென்ன துறையை யார் யார் செய்வார்கள் என்பதைப் பகிர்ந்து வழங்கியிருந்தமையைத் தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

கௌரவிப்பு நிகழ்வுதான் இறுதியாக நடந்தது. விருது பெறும் ஒவ்வொருவராக அழைத்து அவர்களது செயல்பாடு, சாதனைகளை எந்த அவதியும் இல்லாது அறிவிப்புச் செய்து விருதுகளை வழங்கினார்கள். 

முதலில் அழைக்கப்பட்டவர் வெற்றிச் செல்வி எனப்படும் வேலு சந்திரிகா.