Tuesday, April 18, 2017

அனல் ஹக்!புதிய தலைமுறையில் அநேகருக்கு அறிமுகமற்ற, பழைய தலைமுறையில் பெரும்பகுதியினர் தெரிந்து வைத்திருந்த, ஆனால் பேச விரும்பாத விடயத்தோடு சம்பந்தப்பட்ட பெயர்தான் மன்ஸூர் அல் ஹல்லாஜ்.

இறைவிசுவாசம் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு வார்த்தையை அவர் மொழிந்தார் என்பதே அதற்கான காரணம். அவர் சொன்னார்...

 'அனல் ஹக்! - நானே இறைவன்!'

'அனல் ஹக்' என்ற தலைப்பில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய சிறுகதையை அண்மையில் படித்தேன். அதாவது மன்ஸூர் அல் ஹல்லாஜ் பற்றியும் அவர மொழிந்த வார்த்தையால் ஏற்பட்ட குழப்பங்களையும் அவருக்கு நேர்ந்த அவலத்தையும் கதையாக எழுதியிருக்கிறார் பஷீர்.

'ஹிஜ்ராவுக்குப் பிந்தைய நான்காம் நூற்றாண்டின் தொடக்கம். ஞானிகளும் கவிஞர்களும் கலைஞர்களும் சர்வாதிகாரிகளின் முன் தலைகுனிந்து நின்றிருந்தனர், வெறும் ஸ்துதிப் பாடகர்களாக! பாரசீக தேசம் திராட்சை மதுவின் இனிமையிலும் பன்னீர்ப் பூக்களின் அழகிலும் அழகிகளின் ஆலிங்கனத்திலும் மூழ்கிக் கிடந்தது. அப்போதுதான் மன்ஸூர் ஹல்லாஜ் வருகிறார். ................ அண்மை நகரமான துஷ்தாரின் பெரிய பாடசாலையில் சேர்ந்தார். ஆன்மீகம், சமூகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற புலமை பெற்றார். பண்டிதராக வெளிவந்த மன்ஸூருக்குள் போதாமைகள் இருந்தன. ...........அவர் இருளில் தவிப்பதாக உணர்ந்தார். .....ஃபக்கீராக அலைந்தார். இறுதியில் உமர் இப்னு உஸ்மானைச் சந்தித்தார். ...சற்கரு ஒரு புதிய பாதையைக் காட்டினார். சூபிஸம்!'

'ஆன்மீக அறிவின் ஒளி மிகுந்த மேன்மை. அதில் அவர் ஆழ்ந்து இறங்கினார். யுகங்களின் ஆர்வத்துடனும் கொடுங்காற்றின் வேகத்துடனும் பௌதீக எல்லையைக் கடந்தார். அழிவற்றதும் நிரந்தரமானதுமான பேரொளியில் சிறு மேகப்படலம் போல் மயக்கத்தில் ஆழ்ந்தார். தியான வயப்பட்ட நிலையில் மன்ஸூர் அறிவித்தார்... 'அனல் ஹக்!''

மன்ஸூரின் வார்த்தையில் அங்கிருந்த குருவும் சீடர்களும் அதிர்ந்து போயினர். குரு உபதேசித்தார்:- 'மன்ஸூர் சிருஷ்டித்தவனையும் சிருஷ்டியையும் ஒன்றாகப் பார்ப்பது மாபெரும் தவறு. இது சமூகச் சட்டங்களுக்கு எதிரான பார்வை. 'ஷரீஅத்'தை மீறினால் மரண தண்டனை கிடைக்கும் என்பதை அறிவீர்கள்தானே?'

ஆனால் மன்ஸூர் அடங்க மறுத்தார். அந்த நிலையத்தை விட்டு வெளியேறினார். மக்கள் அவரை ஒரு பைத்தியக்காரன் என்றனர். கல்லெடுத்து எறிந்தனர். மீண்டும் இருக்க இடம் தேடி அலைய ஆரம்பித்தார். எங்கும் இடம் கிடைக்காத நிலையில் பக்தாதை வந்தடைந்தார். புகழ்பெற்ற சூபி ஞானி ஹஸ்ரத் ஜூனைத் நிபந்தனையுடன் அவருக்கு அபயமளித்தார். எனினும் அது நீடிக்கவில்லை. அங்கிருந்த மாணவர்களுடன் மன்ஸூர் விவாதிக்கவும் ஆவேசப்படவும் செய்தார். முடியாத நிலையில் ஹஸ்ரத் ஜூனைத் அவருக்கு எச்சரிக்கை செய்தார்.

'மன்ஸூர், கவனம் தேவை. ஆபத்தான நாளொன்று உம்மை அண்மித்துக் கொண்டிருக்கிறது. சூடான உமது நிணநீர் யூப்ரதீஸ் நதிக்கரையின் வெண்மணலைச் சிவப்பாக்கும். அந்தத் தினத்தின் மீதும் உமது கவனம் பதியட்டும்!'

ஹஸ்ரத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்த மன்ஸூர் அங்கிருந்து வெளியேறினார். பொது இடங்களில் ஆவேசமாக முழங்கினார். அறிஞர் பெருமக்கள் அவரது உரைகளால் பதட்டமடைந்தனர். அரசின் வலை அவருக்கு நெருக்கமாகிக் கொண்டே வந்தது. அடுத்த ஐந்து வருட காலத்தில் அவர் 47 நூல்களை எழுதித் தள்ளினார். அரசு அவற்றைத் தடைசெய்து அவரது பெயரைப் பரவலாக்கிற்று. மன்ஸூரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டது. அறிஞர்கள் அவரோடு சமரசஞ்செய்து அவரை ஆற்றுப் படுத்த நாடினர். அவரோ விவாதத்துக்கு வருமாறு கொக்கரித்தார். அவ்வாறான ஒரு வாத சபையில், 'என்னுடைய சிந்தனைகள் யாருடைய கட்டளைக்கும் அடிபணியாது' என்று முழங்கினார்.

பத்வா தயாரானது. மரண தண்டனைக்குரிய குற்றவாளிக்கான தீர்ப்பு எழுதப்பட்டது. ஆயிரக் கணக்கான ஆலிம்கள் அதில் கையெழுத்திட்டனர். ஆனால் சுல்தான் முக்ததிர் பில்லா கையெழுத்து வைக்க மறுத்தார். ஹஸ்ரத் ஜூனைத்தின் கையெழுத்துக்காக அவரது இருப்பிடத்துக்கு அறிஞர் கூட்டம் ஆறுமுறை சென்று திரும்பியது. கடைசியில் சூபி ஞானியின் ஆடை அணிகலன்களைக் களைந்து விட்டு நீதிவான் ஆடையுடன் கையெழுத்திட்ட போதும் தனது முத்திரையைப் பதிக்க மறுத்தார்.

1946ம் ஆண்டு இந்தச் சரிதத்தை வைக்கம் முகம்மது பஷீர் கதையாக எழுதியிருந்தார். 'அனல் ஹக்' என்றும் 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' என்றும் இறைவனின் அநேக படைப்புக்களில் ஒன்றான மனிதன் சொல்வது தவறு என்பது எனது கருத்தாகும் என்று கதையின் பின் குறிப்பில் பஷீர் தெரிவித்திருக்கிறார். மன்ஸூரின் வரலாறாக ஒரு கதையை எழுதியிருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்த போதும் தகவல்களைக் கொண்டே இக்கதையைப் பின்னியிருக்கிறார்.

கதையின் இறுதிப் பகுதி பயங்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது.  அவர் தூக்கிலிடப்பட்டடபின் என்ன நடந்தது என்பதை ஐதீகம் சொல்கிறது என்று பின்வருமாறு பஷீர் எழுதிச் செல்கிறார்:-

'அவர்கள் ஆயிரமாயிரம் துண்டங்களாக மன்ஸூரை வெட்டினார்கள். ஒரு பெரிய சிதை மூட்டி, துண்டுகளைக் கூட்டி அதிலிட்டு தீ மூட்டினார்கள். தீயின் ஜூவாலையைப் பார்த்து அவர்கள் அட்டகாசமாகக் குரலெழுப்பினார்கள். இறுதியில் அந்தச் சாம்பலை நதியில் கரைத்தார்கள். இப்படியாக அவர்களது பெருங்கோபம் அடங்கியது.

ஆனால்..

அதுவரை அமைதியாகத் தவழ்ந்து கொண்டிருந்த யூப்பிரதீஸ் நதி திடீரெனக் கலங்கிப் புரண்டு இரத்த நிறமானது. இயற்கை நிச்சலனமானது. அப்போது ஹூங்காரத்துடன் மலைபோல் உயர்ந்த நதியலைகள் ஆர்ப்பரித்தன. கோபத்தில் கொந்தளித்த மகா சமுத்திரமாக, அண்ட சராசரங்களையும் நடுங்க வைப்பது போல்  உக்கிரத்துடன் கன கம்பீரமாக இரைந்தது யூப்பிதீஸ் நதி...

'அனல் ஹக்!............ அனல் ஹக்!!'

மன்ஸூர் அல் ஹல்லாஜ் தன்னை இறைவன் என்று பகிரங்கமாகச் சொல்லிச் சென்று விட்டார். அதற்குரிய தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டாயிற்று.

ஆனால் அல்லாஹ்வின் இடத்தில் நின்று 'அனல் ஹக்' என்ற எண்ணத்துடன் தீர்ப்பு வழங்கும் மன்ஸூர்களின் மறு பதிப்புக்கள் இன்னும் என் கண்கள் முன்னால் இருப்பதை நான் கண்டு கொண்டிருப்பதும் அவர்கள் பேசுவதை எனது காதுகளால் நான் கேட்டுக் கொண்டிருப்பதும் பிரமையா உண்மையா என்று பிரித்தறிய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

Sunday, April 2, 2017

“தீராநதி” சஞ்சிகையில் எனது நேர்காணல்!(மார்ச் 2017 - தீராநதி சஞ்சிகையில் வெளிவந்த  நேர்காணல். நேர்கண்டவர் பவுத்த ஐயனார்)

** எழுத்துலகிற்கு வரக் கூடிய சூழல் உங்களுக்கு எப்படி உருவானது? உங்களின் குடும்பப் பின்னணி பற்றியும் சொல்லுங்கள்.

என்னுடைய தாய்வழிப் பாட்டனார் ஒரு புலவர். அவரது பெயர் அப்துஸ்ஸமது ஆலிம். அவர் சில குறுங்காவியங்களைப் பாடியிருக்கிறார். தவிர புத்தக வியாபாரியாகவும் இருந்துள்ளார். பெரும்பாலும் அவை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள். சிறுவனாக இருந்த போதே இவற்றைச் சத்தமாக வாசிக்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையும் பாட்டனார் தரும் நூலைச் சத்தமாக வாசிப்பேன். அவர் இரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் எனக்கு 25 சதம் அன்பளிப்பாகத் தருவார். அன்றைய நிலையில் ஒரு இறாத்தல் சீனியின் விலை 18 சதங்கள். எனக்குத் தரப்பட்ட பணத்தை நான் ஓர் உண்டியலில் சேமித்து வந்தேன்.

அதேவேளை எனது தாய்மாமன்கள் இருவர் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களும் நல்ல வாசகர்கள்.  அவர்கள் வாசிக்கும் எல்லா நூல்களையும் நானும் வாசிக்கத் தொடங்கினேன். இப்படியே ஆரம்பித்து ஊர் நூலகத்துள் நுழைந்தேன். அங்கே சமது என்ற சகோதரர் நூலகராயிருந்தார். அவர் நல்ல நூல்களைத் தெரிந்து எனக்கு வாசிக்கத் தருவார். இப்படி வளர்ந்த வாசிப்புத் தாகம் என்னை முதலில் கவிதையின்பால் உந்தியது.

**  நீங்கள் வானொலி, தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோது அங்கு இலக்கிய ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட முடிந்ததா?

அரச வானொலிதான் அந்நாட்களில் தனித்துவ ஊடகமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பகுதிநேர அறிவிப்பாளனாக 1986 இறுதிப் பிரிவில் நான் இணைந்தேன். 1986க்கு முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சேவை - 1 அறிவூட்டல், கலை, இலக்கியம், வாழ்வியல், தொழிலியல் பற்றிய விடயங்களை உள்ளடக்கியும் சேவை - 2 சினிமாப் பாடல்களை மையப்படுத்திய விளம்பர சேவையாகவும் செயற்பட்டன. ஆயினும் கூட வர்த்தக சேவையில் பல்வேறு தமிழ்க் கலை, இலக்கியம் சார் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகியே வந்திருக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு நேயர் படையே இருந்து வந்திருக்கிறது. இலங்கை வானொலி தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியிருந்த பணி மகத்தானது. இருந்த போதும் இது குறித்த ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.

இது தவிர தினமும் ஒரு மணி நேரம் முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இதற்கென தனிச் சேவை ஒன்று இயங்கி வருகிறது. தமிழ்ச் சேவையில் தெரிவாகும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள் இந்த ஒரு மணி நேரத்தையும் இன்று வரை அலைவரிசையில் வழங்கி வருகிறார்கள். அதே போல கல்விச் சேவை என்றும் ஒரு சேவை உண்டு. இதில் ஒரு வருடம் நான் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமையாற்றியிருக்கிறேன்.

எல்லா சேவைகளிலும் பல்வேறு வகையான இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்திருக்கின்றன, வருகின்றன. அந்த நிகழ்ச்சிகள் சிலவற்றை தொகுத்தும் தயாரித்தும் அவற்றில் அதிகம் பங்கு கொண்டும் வந்திருக்கிறேன்.

வானொலி, தொலைக் காட்சிச் செய்தி வாசிப்பாளராக மட்டுமன்றி வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தும் வந்திருக்கிறேன்.

ளு இலங்கையின் இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதில் மூத்த படைப்பாளிகளில் பேராசிரியர். நுஃமான், சோலைக்கிளி அளவிற்குப் பரவலாக யாரும் தமிழகத்தில் தெரியவில்லையே?

அதற்குக் காரணம் நாங்கள் இல்லை. பேராசிரியர் நுஃமான், நோலைக்கிளி ஆகியோரின் நூல்கள் தமிழகத்தில்தாம் முதலில் வெளியாகின. பேராசிரியர் நுஃமான் அறியப்படுவதற்கு மற்றொரு காரணம் அவர் இலங்கையின் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் என்பதும் கூட. உங்களுக்கு இவர்கள் இருவரையும் தெரிகிறது. இன்னும் சிலருக்கு இவர்களைத் தெரியாமல் வேறு இருவரைத் தெரிந்திருக்கிறது. இன்னும் சிலர் பேஸ் புக் வந்த பிறகு அதில் கவிதை எழுதும் தமது நட்பு வட்டத்துள் இருக்கும் இலங்கை நபர்களை மாத்திரம் தெரிந்திருக்கிறது. பெண்கள் வட்டத்தில் முகநூல், இணையத் தளங்கள், தொலைபேசி ஆகியவற்றினூடாகச் சிலரைத் தெரிகிறது. இதில் துயரம் என்னவெனில் தமக்குத் தெரிந்தவர்கள் மாத்திரம்தான் இலங்கைக் கவிஞர்கள், இலங்கைத் தமிழ்க் கவிதையை வளர்த்தவர்கள் என்று அவரவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதுதான்.

இந்த நிலை தமிழ் முஸ்லிம் கவிஞர்களுக்கு மாத்திரம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. பொதுவாகத் தமிழ் மொழியில் எழுதும் பல நூறு படைப்பாளிகளுக்கும் தமிழகத்தைப் பொறுத்த வரை இந்தக் கதிதான். அவரலர் அறிமுக வட்டத்துக்குள் மாத்திரம் அவரவர் அறியப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இலங்கைப் படைப்பாளிகளுக்குள் தமிழக, இந்தியப் படைப்பாளிகளின் அறிமுக விகிதம் அதிகம். நானறிந்த காலத்திலிருந்து இந்திய எழுத்தாளர்களைத்தான் நாங்கள் அதிகம் படித்து வருகிறோம். அவர்களது நூல்களை இறக்குமதி செய்கிறோம், வாங்கிப் படிக்கிறோம். ஆனால் எங்களது நூல்களை நாங்களே கொண்டு வந்து உங்களைப் படிக்கச் சொல்ல வேண்டும் அல்லது அங்குள்ள ஒரு வெளியீட்டாளரிடம் கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும். இறக்குமதி செய்வதற்கும் அனுமதி இல்லை என்று அறிகிறேன்.

** அரபு இலக்கியங்கள மொழிபெயர்க்கும் ஆர்வம் எப்படி வந்தது?

அறபு இலக்கியம் என்றைக்குமே உயர்ந்த இலக்கியமாக இருந்து வந்திருக்கிறது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. முதன் முதலில் ஆங்கிலத்தில் ஈராக்கிய எழுத்தாளரான மஹ்மூத் சயீத் எழுதிய 'புகையிரதம்' என்ற கதையைப் படிக்கக் கிடைத்தது. அந்தக் கதை என்னைப் படாத பாடு படுத்தி விட்டது. ஆர்வம் மிகுதியால் அதை மொழிபெயர்ப்புச் செய்து சென்னையிலிருந்து வெளிவந்த 'சமநிலைச் சமுதாயம்' இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் கதை பிரசுரமாகியதும் யாரோ ஒரு நண்பர் அதை ஒரு குறும்படமாக எடுக்க அனுமதி கேட்டதாக சஞ்சிகை ஆசிரியர் ஜாபர் சாதிக் என்னிடம் தெரிவித்தார்.

அந்தக் கதையின் வீரியமும், கலை நயமும் என்னை வெகுவாகக் கவரவே மஹ்மூத் சயீத் பற்றித் தேடத் தொடங்கினேன். மேலும் அவரது மூன்று கதைகள் கிடைத்தன. அவற்றையும் மொழிபெயர்த்தேன். தொடர்தேடலில் கஸ்ஸான் கனபானியின் 'காஸாவிலிருந்து ஒரு கடிதம்', சூடானிய எழுத்தாளர் தையிப் ஸாலிஹ் அவர்களின் 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' ஆகிய முத்தான கதைகள் கிடைத்தன. மேலும் ஒமர் அல்கித்தி எழுதிய - லிபியத் தலைவர் கேர்ணல் கடாபியின் மறுபக்கத்தைக் காட்டும் 'நெடுநாள் சிறைவாசி என்கிற கதை.. இப்படியே எனது மொழிபெயர்ப்புத் தொடர்ந்த போது இவற்றை ஒரு தொகுதியாகப் போட்டு விடலாமே என்கிற எண்ணம் வந்தது.  எனவே பத்துக் கதைகளைத் தொகுத்து 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' எனும் தலைப்பில் 2011ம் ஆண்டு வெளிக் கொணர்ந்தேன்.

2011ல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுதிக்கான தேசிய சாஹித்திய விருது இந்த நூலுக்கு 2012ல் வழங்கப்பட்டது.