Saturday, June 18, 2016

பட்டாம் பூச்சிக் கனவுகள் - ஒரு வாசகனின் பார்வை!


பட்டாம் பூச்சிக் கனவுகள் 
************************** 
றிஜான் முஹம்மது


பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி. வாசிப்புக் காலம் : 05-04-2016 – 07-04-2016 (அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்துக் காலங்கள்) ^_^

வாசித்த ஏனைய நூல்களைவிட “பட்டாம் பூச்சிக் கனவுகள்” தொகுதி தனித்தன்மை வாய்ந்திருக்கிறது. நூல் வெளியீட்டில் அடியேன் பங்கேற்ற நிகழ்வையும் எண்ணி இன்புறக் கூடிய சுவையை வாழ்வில் புகைப்படங்கள் மூலமாக ஊட்டிக் கொண்டே இருக்கிறதை நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.

பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் எனும் ஆளுமை, எனக்கு காலம் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னிலையில் வகிப்பவர், என் பேரன்புக்கும், தனி மதிப்புக்கும் பொருத்தமானவர். நூலானது கையில் தவண்ட பொழுதினில் உச்சி நுகராமல் விட்டேனே என சிறு வருத்தம் இருந்ததை தற்போது மறைக்க மனம் இடம் விடுவதாயில்லை. வாசகனுக்கு அதிருப்தியற்ற மனநிலை, அமைதியற்ற சூழல் இவ்விரண்டுமே திறந்துவிட்டிருக்க வேண்டும் என கருதும் நிலைப்பாட்டிலே இருந்தேன்.

 அலுவலகத்தில் இன்டெர்னல் ஒடிட்டினால் ஹெட் லொக்ட் ஆகியிருந்த சமயம் எனக்கு டிராபிக் சிவப்புச் சமிக்ஞையைப் போல் என் உளஅலைவுகளை குறுகிய விட்டத்துக்குள் நிறுத்தி நூலின் எட்டுச் சிறுகதைகளின் சொல்லலங்காரங்கள், சீன் செட்டிங்க்ஸ் எனும் தகைமைகளால் தளர்ந்த மனத் தெவிட்டலின் சீரமைப்புக் காரணிகளாக திகழ்ந்தது மட்டுமில்லாமல் என் நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்ய நேர்ந்தது.

பெரும்பாலும் உள்ளடங்கிய எட்டுச் சிறுகதைகளும் குத்துச்சண்டை பிடித்துப் பிறகே நூலினுள் ஏறி சாவகாசமாக நிமிர்ந்திருக்க வேண்டும். காரணம் ஏராளமான போற்றத்தக்க சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல இலக்கியப் பிரசவம் நாளுக்குநாள் எம்மை நெருங்கிக்கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை, தாய்த் தமிழிலும் சரி ஏனைய நம் புழக்கத்தில் உள்ள மொழிகளிலும் சரி. ஏதோ லாபாயில் கிடைத்தது போலில்லாமல், போலி இல்லாமல், (இப்படியானவைகள்தான் குறுகிய காலத்துக்குள் செம்மை இழந்துவிடுவது) மனக்கோட்பாடுகளுடன் ஊன்றி தெரிவுக்குழு நியமித்தே எட்டுத் தரமான சிறுகதைகள் மூலமாக எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் பட்டாம் பூச்சிக் கனவுகள் தொகுதியை நிலை நிறுத்தியிருக்கிறார்.

 றிஜான் முஹம்மது

மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பற்றி ஓய்வுபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழக உப பதிவாளர்-மன்சூர் ஏ. காதர் அவர்களின் முன்னுரையில் கூறி இருப்பார்: “இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேகமான மண்வளத்தையும் காலநிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண்வளத்தையும் வேறொரு காலநிலையையும் கொண்ட இன்னொரு சுற்றாடலுக்கு கொண்டு போய் மீள்நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும்.”

இதனைக்கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக சிந்திக்கும் போது வெற்றிகரமான ஓர் இலக்கிய ஆக்கம் பொழிபெயர்க்கப்படுமாயின் பரவலான சிந்தனைத் திறன் அனுபவத்தோடு குழாமிட்டிருக்க வேண்டும், சர்வதேச நடப்புகளில் ஒத்துப்போகும் வண்ணம் வார்த்தையை முன்நிறுத்த வேண்டும். கதைத் தெரிவைப் போலவே நேருக்கு நேரான காட்சிப் பிணைப்புகளும் மிகைப்படுத்தலில்லாத பாத்திரக் கையாளல்களும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இவைகளை என் கணிப்பில் கனகச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது “பட்டாம் பூச்சிக் கனவுகள்”.

“மரணம் பிறக்கும், மற்றதில் இறக்கும் மீண்டும் மிரட்டும்” போன்றதொரு அலைவரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போதும் ஒன்றோடு ஒன்று கைலாகு ஆகும் சம்பவமும் இதில் இல்லை என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன். சொற்றொடரின் உச்சரிப்பில் பிரதிபலிக்கும் காட்சி பிம்பங்கள் குறித்த நேர வரையரையைத் தாண்டி மற்றதையும் வாசித்து விட்டு ஆடிட்டிக்கு திட்டமிடுவோம் எனும் மனப்பாங்கை இத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் தந்திருந்தது. அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்து நேரங்களில் என்னைச்சுற்றி இருப்பவர்கள் ஏதோவொரு (உறுதியான உண்மை முகநூல்) சொடுக்குகளை இயக்கிக்கொண்டிருக்கும் சமவெளியிலேயே “பட்டாம் பூச்சிக் கனவுகள்” நூலைப் படிக்கக் கிடைத்தது.

- எ கோண்ஸா புக் ஹே ரெஜான் பாய்..?

- பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர், பச்சோந்திக் குடியிருப்பு எனும் சிறைச்சாலை, நிலப்பகுதி முழுவதும் முதுகுகளில் பல் வர்ணம் காட்டும் பச்சைப்புள்ளிகளுடனான பச்சோந்திக் கூட்டங்கள். இதனை ஸெய்னப் கடப்பதைப் பற்றி யூகிக்கும் வேளையிலேயே எங்கள் டிரைவரின் வினவுதல் காதில் விழுந்தது.

ஒரு சிறு புன்னகைத்ததும்பலுடன், அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் பொறுக்கிய ஹிந்தியில் ஓரிரு சொல்லில் பதில். மீண்டும் முந்தி முறைத்தோடும் வேக வரையறையை மீறிய வாகனங்களின் போக்குவரத்து சப்தத்தில் நிசப்தம் என நகர்கிறது.

Friday, June 10, 2016

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா - 2016


ஆய்வுக் கட்டுரைகள்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள்'தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா' வை நடத்துவதென்று தீர்மானித்துள்ளது. இது பற்றிய தகவல் கடந்த மாதம் பத்திரிகை, இணையத் தளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விழாவை முன்னிட்டு ஆறு  ஆய்வரங்குகள் நடத்தப்படவிருக்கின்றன. அரங்கு 5 ஐத் தவிர ஏனைய அரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து கட்டுரைகளை எழுதலாம். 5ம் அரங்கைப் பொறுத்தவரை அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தலைப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆய்வு அமைதல் வேண்டும்.

கட்டுரைகளை முஸ்லிம் அல்லாதோரும் எழுதலாம்.

பின்வரும் கட்டுரைத் தலைப்புக்களுக்கான கட்டுரைகளை எதிர்வரும் ஜூலை 15ம் திகதிக்குள் கிடைக்கக் கூடியவாறு Dr, Jinnah Sherifudeen, 16A, School Avenue, Off Station Road, Dehiwala என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்பி வைக்கவும். கட்டுரைகளை அனுப்புவோர் தமது முகவரி மற்றும் தொடர்பு இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட மறக்க வேண்டாம். கட்டுரைகள் ஒரு குழுவினரால் பரிசீலிக்கப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.

01. தற்கால இலக்கியம்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. முஸ்லிம் படைப்பாளிகளின் வலைத்தளப் பதிவுகள்
02. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைச் செல்நெறி
03. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைச் செல்நெறி
04. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் நாவல்களும் பேசுபொருளும்
05. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் இலக்கியக் கட்டுரைகளும் பேசுபொருளும்

02. இஸ்லாமும் கலைகளும்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. இலங்கை முஸ்லிம்களின் இசையும் கலைப் பாரம்பரியமும்
02. இலங்கையில் அருகி வரும் முஸ்லிம் பாரம்பரியக் கலை வடிவங்கள்
03. இறைதூதர் காலத்தில் இசையும் கலையும்
04. அடிப்படைவாதச் சிந்தனையும் இஸ்லாமிய இசையும்
05. கஸீதா, புர்தா, தலைப் பாத்திஹா ஆகியவற்றில் இலக்கிய நயம்
06. இஸ்லாமியர் மத்தியில் இசை பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள்

03. சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்
 கட்டுரைத் தலைப்புக்கள்.
01.) சினிமா ரசனை பற்றிய எண்ணக் கரு
02) இஸ்லாமியக் கருத்தியலை முன்கொண்டு செல்ல சினிமா ஊடகத்தின் பங்களிப்பு
03) சினிமா தொடர்பில் இலங்கையில் ஒரு படைப்பாளி எதிர் கொள்ளும் கருத்தியல்சார் பிரச்சினைகள்
04) சினிமா மூலம் இஸ்லாமிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தல்
05) சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை
06.) மாற்றுச் சினிமாவுக்கான தேவைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதைப் பயன்படுத்தலும்

04. எதிரெழுத்து
கட்டுரைத் தலைப்புக்கள்.
01) முஸ்லிம் படைப்பாளிகளின் எதிரெழுத்தில் தொனிக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்
02) முஸ்லிம்களின் எதிர்க்குரல் சர்வதேசத்துக்கு எட்டாமைக்கான காரணிகள்
03) மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் - சமூக அரசியல் பரிமாணம்
04) சியோனிஸ சக்திகளுக்கெதிரான இஸ்லாமிய எதிர்ப்பிலக்கியம்
05. இஸ்லாமிய தீவிரவாதம் - ஓர் ஆய்வு

05. வாழும் ஆளுமைகள்
கவனத்தைக் கவர்ந்த தற்கால முஸ்லிம் படைப்பாளிகள்
(ஓர் ஆளுமை மேற்குறித்த 5 சிறு தலைப்புக்களின் கீழும் ஆய்வுக்குட்படல் வேண்டும்)
01) அவர்களது ஆளுமையும் தனித்துவமும்
02) அவர்களது சமூகவியற் பார்வை
03) அவர்களது எழுத்துக்களில் இலக்கிய நயம்
04) அவர்களது எழுத்துக்களில் சமூக, இன நல்லுறவு
05) மக்களின் வாழ்வியலை அவர்கள் பேசும் விதம்

06. சமூக நல்லிணக்கம்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01) சமய இலக்கியங்களில் சமூக நல்லிணக்கம்
02) இன உறவைக் கட்டியெழுப்புவதில் இலக்கியத்தின் பங்களிப்பு
03) தமிழ் பேசும் மக்கள் - ஓர் இலக்கியப் பார்வை
04) மலையக இலக்கியப் பரப்பில் முஸ்லிம் படைப்பாளிகளுக்கான அங்கீகாரம்
05) இஸ்லாமும் இலக்கியமும் - இளந்தலைமுறைப் படைப்பாளிகளின் புரிதலும்.

தொடர்புகள்-
Dr. Jinnah Sherifudeen - 077 272 1244
Ashroff Shihabdeen     - 0777 303 818
Dr. Thassim Ahamed   - 077 966 4063