பிரதம ஆசிரியர்
நவமணி
தெஹிவளை
அன்புடையீர்
ஆகஸ்ட் 3ம் திகதிய தங்களது 'நவமணி' பத்திரிகையின் கலைவாதி கலீல் தொகுத்து வழங்கும் 'ஜலதரங்கம்' என்ற 6ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள சர்தார் என்பவர் எழுதிய 'இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் - இனியாவது திருந்துவார்களா?' என்ற கட்டுரையின் பால் உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன்.
காயல்பட்டினத்தில் நடந்த ஒரு இலக்கிய மாநாட்டின் இலங்கை இணைப்பாளர்களுக்கு உதவியாக இருந்தவன் என்ற வகையிலும் அதில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் சென்னையில் நடைபெற்ற இரண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் அதில் ஒன்றில் இலங்கை இணைப்பாளனாக இருந்தவன் என்ற வகையிலும் - 2002ல் இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளர் என்ற வகையிலும் தற்போது நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய இஸ்லாமிய இலக்கிய விழாவை நடத்தும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் என்ற வகையிலும் மேற்குறித்த கட்டுரைக்குச் சில விளக்கங்களை வழங்க வேண்டியவனாக இருக்கிறேன்.
சர்தார் என்பவர் எழுதிய கட்டுரையானது நான் மேற்குறித்த மாநாடுகள், இலங்கையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விழா குறித்த ஐயங்கள் குறித்துப் பேசுவதால் அக்கட்டுரையில் நான் விடையிறுக்கத் தகுந்த அம்சங்கள் பற்றி மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
சர்தார் என்பவர் எழுதிய இக்கட்டுரையின் கடைசிப் பந்திக்கு முன் பந்தியில் 'பேராசிரியர் அல்லாமா உவைஸ் இலங்கையில் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிலும் கடுமையாக உழைத்தவன் என்ற வகையிலும் குழுவிலிருந்த வடபுலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும்' என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு சர்தார் என்ற நபர் இப்பக்குத் தொகுப்பாளரான கலைவாதி கலீல்தான் என்று விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்த போதும் - ஒரு வசதிக்காக அதை சர்தார்தான் எழுதினார் என்று கொண்டு சில விடயங்களுக்குப் பதில்தர நாடுகிறேன்.
கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களில் என்னை மிகவும் உறுத்தியது பிரதேச ரீதியாக இலக்கியவாதிகளைப் பிரித்துப் பேசியமையாகும். இதைக் குறித்த நபர் பேசுவதற்கான காரணம் என்ன என்பதைச் சொல்வதற்கு முன்னர் அவரது குற்றச் சாட்டுக் குறித்துப் பேச விரும்புகிறேன்.
காயல்பட்டின மாநாட்டில் நான்கு கிழக்குக் கவிஞர்கள் கவிதை படித்தது சர்தாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு அந்த எரிச்சல் வந்ததற்குக் காரணம் அவர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்ததுதான். உண்மையில் காயல்பட்டின மாநாட்டில் கவிதை படிப்பதற்கு இலங்கை இணைப்பாளர்கள் கவிஞர்களைச் சிபார்சு செய்யவில்லை. கவிதை படிக்க விரும்புவோர் கவிதைகளை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கு நேரடியாகவே அனுப்பியிருந்தார்கள். கவிஞர் தெரிவை மாநாட்டுக் குழு தீர்மானித்தது. சர்தாரும் ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தால் சில வேளை அவருக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கலாம், அது கவிதையாக இருந்தால்!
இன்னொரு இடத்தில் 'இதுதான் எனது ஆதங்கம்... இத்தகைய இலக்கிய விழாக்கள், சர்வதேச மாநாடுகள் நடைபெறும் வேளைகளில் அறிஞர்களாக, ஆய்வாளர்களாக அழைத்துச் செல்லப்படுபவர்களெல்லாம் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தவர்களே!' என்று சொல்கிறார். இது எத்தகையதொரு அடிமுட்டாள்தனமான கருத்து. மாநாடு ஒன்று நடைபெறுதாக இருந்தால் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியோரை ஆய்வரங்கில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்புவார்கள். ஆய்வரங்கில் கலந்து கொள்ளாத இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் கூட அங்கு பேராளராகச் செல்லலாம். அதில் இதுவரை எந்தத் தடையும் இருந்ததில்லை. நான் இலங்கைக்கு வெளியில் கலந்து கொண்ட எந்த மாநாட்டிலும் கட்டுரை படித்ததில்லை. ஆனால் சென்று இலக்கியச் சுவையுண்டு வந்திருக்கிறேன். என்னைப் போல பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்பவர்களது நலன் கருதியே ஒரு குழுவாக அவர்கள் இணைப்பாளர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அக்குழுவோடு செல்ல விரும்பாதவர்கள் தனித்தும் சென்றிருக்கிறார்கள். வேறு குழுவாகவும் சென்றிருக்கிறார்கள். ஆனால் எப்படிச் சென்றாலும் மாநாடு நடத்தும் நிர்வாகத்தோடு முதலில் தொடர்பு கொள்ள வேண்டும்.
சர்தார் விரும்பியிருந்தால் அங்கு சென்றிருக்கலாம். அப்படி சர்தார் முயன்று அவர் மறுக்கப்பட்ட பொழுதுகள் உண்டா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கலந்து கொள்ள விரும்பியவர்கள் செல்கிறார்கள்.. அவர்கள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தால் யாருக்கு என்ன பிரச்சனை? சர்தாருக்கு ஏன் எரிச்சல் வரவேண்டும்?
'ஏற்பாட்டுக் குழுவினர் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்கிறார்கள்' என்றும் ஒரு குற்றச் சாட்டை முன் வைக்கிறார் சர்தார். மாநாட்டை நடத்துபவர்கள் யார், யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்புதல் பெற்ற பின் உத்தியோகக் கடிதம் மூலம் அறிவிக்கிறார்கள். அவர்கள் யார் பொருத்தம் என்று கருதுகிறார்களோ அவர்களை நியமிக்கிறார்கள். அவர்களுடன் ஒத்துழைக்கக் கூடியவர்களை நியமிக்கிறார்கள். அது எப்படித் தன்னைத் தானே நியமிப்பது ஆகும்.
அவரது அடுத்த குற்றச் சாட்டானது என்னவெனில் 'தற்போது நடைபெறவுள்ள இலக்கிய விழாவிலும் முழுக்க முழுக்கக் கிழக்கு மாகாணத்தவர்தான் இடம்பெற்றுள்ளார்கள்' என்பதாகும்.
2002 ம் ஆண்டு இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய மாநாட்டை நடத்திய அமைப்பு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமாகும். இந்த அமைப்பு 1999ல் சென்னை மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு குழுவினரால் அங்கேயே தோற்றுவிக்கப்பட்டது. இதில் அல்ஹாஜ் நூர்தீனைத் தவிர ஏனைய அனைவரும் கிழக்கின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதில் யாருக்கு என்ன பிரச்சனை? ஒரு குழுவினர் சேர்ந்து ஒரு மாநாட்டை நடத்துவதால் ஏன் இன்னொருவருக்கு அரிப்பு வரவேண்டும்?
2002ல் நடந்த கொழும்பு மாநாட்டுக் குழுவில் அங்கத்துவம் வகித்த 15 பேரில் 7 பேர் கிழக்கைச் சேர்ந்தவர்கள். 7 பேர் கிழக்குக்கு வெளியில் உள்ளவர்கள். ஒருவர் பொது. அரச அதிகாரி. நான் சொல்வது பொய்யில்லை என்பதற்கு மாநாட்டு மலரின் முற்பக்கத்தைப் புகைப்படமாகத் தந்துள்ளேன்.
நான் சொல்வது உண்மை என்பதனை 'ஜலதரங்கம்' பக்கத்தைத் தொகுக்கும் கலைவாதி கலீலிடம் கேட்கலாம். ஏனெனில் அவரும் அந்தக் குழுவில் ஓர் அங்கத்தவராவார். அது மட்டுமன்றி அம்மாநாட்டில் பொன் முடிப்பு வழங்கப்பட்ட எழுவரில் கலைவாதி கலீலும் ஒருவராவார். (படம் இணைக்கப்பட்டுள்ளது) பண முடிப்பு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட எழுவரில் ஒருவர் தவிர ஏனைய அனைவரும் கிழக்குக்கு அப்பால் வாழ்பவர்களாவர்.
இக்கட்டுரையில் பின்னணியில் நான் புரிந்து கொண்ட விடயங்கள் சில உள்ளன.
வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்குச் செல்வோருக்கு இலவசமாக விமானச் சீட்டுக் கிடைக்கிறது அல்லது குறைந்தது ஏற்பாட்டாளர்களுக்கு இலவச விமானச் சீட்டுக் கிடைக்கிறது என்று சர்தார் அப்பாவித் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி எதுவும் கிடையாது. நாம்தான் தமிழகத்தவரை விமானச் சீட்டுக் கொடுத்து அழைக்கிறோமே தவிர அவர்கள் ஒரு போதும் தந்ததாக எனக்குத் தெரியாது.
கிழக்கு வாழ் படைப்பாளிகளைப் பிரதேச ரீதியாகப் பார்த்துப் பிரிக்கும் சர்தார் வடபுலத்தைச் சேர்ந்தவர் என்று உணர்கிறேன். அங்கு விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே படைப்பாளிகள். அதற்குள் மூத்த படைப்பாளி வகைக்குள் தான் வரவேண்டும், எல்லா இடத்திலும் புலம் பிரித்;துப் பேசினால்தான் தனக்கு எல்லா இடத்திலும் ஒரு இடம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார் போல் தெரிகிறது.
இப்போது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விழாவுக்கு இதுவரை மாநாட்டுக் குழு நியமிக்கப்படவில்லை. நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்விழா நடைபெறுவதற்கு முன்னால் 'கிழக்குப் பிரதேசவாதத்தைத் தூண்டினால் ஓர் இடம் கிடைத்து விடும் என்று சர்தார் எதிர்பார்க்கிறார். அதை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சி வெகுளித் தனமானது!
இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற இயக்கம் முன்னின்று செய்யும் இந்த விழாவில் அது விரும்பினால் யாரையும் சேர்க்கலாம். யாரையும் தவிர்க்கலாம். அதற்கு அவ்வியக்கத்துக்குப் பூரண சுதந்திரம் உண்டு. யாரும் அதைக் கேள்விக்குட்படுத்த முடியாது. விரும்பியவர் இணையலாம், விரும்பாதவர் விலகி நிற்கலாம். பதவி, பட்டம், முன்னிலை ஆகியவற்றை எதிர்பார்த்துப் பிரதேசவாதம் பேசும் யாருக்கும் இங்கு இடங்கிடையாது!
அஷ்ரஃப் சிஹாப்தீன்
பொதுச் செயலாளர்
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்
03.08.2016
குறிப்ப - வடக்கு இலக்கியவாதிகள் புண்ணாக்கு மடையர்களா? என்று சர்தார் தனது கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்வியைத் தலைப்பாக்கியுள்ளேன்.