Friday, June 28, 2013

முஸ்லிம் கட்சிகளிடம் ஒரு விண்ணப்பம்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்ட பின்னர் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து அவை அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றன.

இக்கட்சிகளில் உள்ள நமது சகோதரர்கள் சகோதர முஸ்லிம் கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகளுடன், பிறநாட்டுத் தூதுவர்களுடன், பிற அரசியல்வாதிகளுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னளவிலான முயற்சி என்பதை இந்நடவடிக்கை கள் காட்டுகின்றனவே தவிர, அனைவரதும் நோக்கு சமூக நன்மை சார்ந்ததாகவே இருக்கிறது.

இன்று சமூகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை மனதில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன ஒரு பொதுச் சந்திப்பை நடாத்த வேண்டுமென மேற்படி கட்சிகளின் தலைவர்களிடம் ஒரு  விண்ணப்பம் வைக்கிறேன்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து பெரும்பான்மை முஸ்லிம்  பொதுஜனம் மிக அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது. இதை நமது அரசியல் தலைவர்கள் எந்த அளவில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கட்சி அல்லது அரசியல்வாதியின் அரசியல் செயற்பாடுகளை அக்கட்சி
அல்லது அரசியல்வாதி எதை எப்படிச் செய்தாலும் ஆதரிப்பவர்கள் வெகுசிலரேயாவார்.  கட்சி அல்லது அரசியல்வாதி கூட்டம் போட்டால் முன்னணியில் நிற்போரும் அவர்களேயாவர். ஆனால் அவர்களது வாக்குகள் மட்டும் கட்சிக்கும் அரசியல்வாதிக்கும் போதுமானவையல்ல.

எப்போதும் நிதானமாகச் சிந்திக்கும் பொது ஜனம் தூரத்தில் நின்று அல்லது விலகி நின்று இவற்றை அவதானித்து விட்டு ஒரு முடிவுக்கு வரும். அந்தப் பொது ஜனத்தின் வாக்குகளே வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன.

ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் வெவ்வேறு கட்சிகளைச் சோர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளாள் மீது வசை பாடுவதை, குற்றம் சுமத்துவதை நான் குறிப்பிடும் இந்தப் பொது ஜனம் விரும்புவதேயில்லை. அடிப்படையில் “நாம் முஸ்லிம்கள். நமது தனிப்பட்ட அரசியல் நலன்களை முன்னிட்டு சமூகத்தின் பெயரால் பொதுத் தளத்தில் மோதிக் கொள்ளக் கூடாது” என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.

இந்தப் பொதுஜனம் இன்றைய சூழ்நிலையில் தன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இன்னமும் புரியாமல் நமது அரசியல் தலைமைகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனவோ என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.

அடுத்த தேர்தலில் அதன் விளைவுகள் என்ன என்பதை நாம் மிகத் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும்.

அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் முஸ்லிம் பொது ஜனத்தின் மனக்குமுறலைத் தணிக்கும் வகையில் நமது முஸ்லிம் கட்சிகள் ஒரு மேசையில் அமர்ந்து பேச வேண்டும். கட்சிகள் தனியே இருக்கட்டும். ஆனால் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைப் பொறுத்த வரை எல்லோரும் ஒரே கருத்துடன்தான் இருக்கிறோம் என்பதும் உண்மை.

ஒரு தாய்க் கட்சியிலிருந்து நீங்கள் பிரிந்து சென்றிருந்தீர்கள். பிரிந்தபடியே இருங்கள். ஆனால் அரசியலை இப்போதைக்கு ஒன்று சேர்ந்து நடத்துங்கள். அதைத்தான் இன்று முஸ்லிம் பொது ஜனம் விரும்புகிறது. இந்தச் சந்திப்பை ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது நடத்துங்கள்.

சமூகத்தின் பெயரால் நீங்கள் ஒன்று சேரவில்லை என்றால் வழமையாகத் தேர்தல் காலங்களில்  பயன்படுத்தப்படும் எல்லாச் சூக்குமங்களும் பலற்றுப் போகும் நிலையையே நான் பார்க்கிறேன்.

மற்றைய கட்சிகளுடன் பிரச்சிகைளைக் கலந்துரையாடும் உங்களுக்கு ஒரே தாயின் பிள்ளைகளான உங்கள் சகோதரர்களுடன் உட்கார்ந்து பேசுவதில் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

மாறாக அது நன்மையையே கொண்டு வந்து தரும்

சகோதரர்கள் தனித்தனி வீடுகளில் வாழலாம். ஆனால் “உம்மா”வைக் கைவிடலாமா?

Tuesday, June 18, 2013

பலசேனாக்களுக்கு நான் சொல்ல விரும்புவது!


இலங்கையில் பௌத்தர்கள் குறைந்து வருகிறார்கள்,பௌத்தம் அழிந்து வருகிறது என்பதுதான் பொதுபலசேனாவின் கவலையாக இருக்கிறது என்று அது சொல்லிக் கொள்கிறது. இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்தவே அவ்வமைப்பு போராடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக எல்லாச் சிறுபான்மை இனத்தோரையும் பௌத்தம் அல்லாத மதத்தோரையும் கொலை வெறியுடன் எதிர் கொள்ள முயற்சிக்கிறது.

பல் இனம் வாழும் ஒரு தேசத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் வளர்ச்சி கண்டு வருகிறது என்றால் அதற்குக் காரணம் அச்சமூகங்கள் பின்பற்றும் மதங்களின் வெற்றி மட்டுமல்ல, பெரும்பான்மையோர் பின் பற்றும மதத்தி்ன் காவலர்களது இயலாமையும் ஆகும். சிறுபான்மை மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு உள்ள வசதி வாய்ப்புகளை விட பெரும்பான்மை மதத்துக்கும்
அதைப் பின்பற்றுவோருக்கும் இருக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகமாகும்.

அகிம்சையை, அமைதியைப் போதித்த புத்தபெருமானின் வழிகளைப் பின்பற்றுவதாகக் கூறுவோர் ஞர்னத்தின் வழியில் தங்களது கவலைக்குப் பொருள் தேடாமல் வழி காணாமல் புத்த பெருமானின் கொள்கைகளுக்கு மாற்றமாகச் சிறுபான்மைகள் மீது கொலை வெறி கொள்வதும் அதற்காகக
வன்முறை வழிகளைத் தேர்வதும் சுட பௌத்தத்தின் தோல்வியாகும். இந்த விடயத்தில் பல பௌத்த பிக்குகள் மிகத் தெளிவாக இருந்த போதும் பொதுபலசேனா, சிஹல ராவய போன்ற அமைப்புகளுக்கும் அவ்வியக்கங்கள் சார்ந்த பிக்குகளுக்குப் புரியாமல் இருப்பதும் பௌத்தம் செல்லும் வரலாற்று வழியில் கருப்புக் கோடுகளாகவே அமைந்து விடப் போகின்றன.

இவ்விடயம் சம்பந்தமாக புரிந்து கொள்ளும் பௌத்த பிக்குகளும் கூட மாற்று வழிகள் பற்றி எதுவும் பேசாமல் இவ்வமைப்புகள் தடம் புரண்டு செல்கின்றன என்ற விமர்சனத்தோடு மாத்திரம் நின்று கொள்கிறார்கள்.

பெரும்பான்மை அரசியல்வாதிகளில் பலர் நிலைமை புரிந்திருந்தும் கூட தமது இன வாக்குகள்
பற்றிய கணக்கெடுப்புத் தளர்ந்து விடும் என்ற பயத்தில் இருக்கிறார்களே தவிர நாட்டுக்கும்
தமது மதத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்ற விடயத்தைக் கண்டு கொள்ளாமலேயே
இருந்து வருகின்றனர்.

பல்லினம் வாழும் ஒரு தேசத்தில் வாழும் சிறுபான்மையினர் வர்த்தகம், கல்வி, தொழில்துறையென்று எல்லாவற்றிலுமே பெரும்பான்மையினரோடு, அதன் அரசோடு முட்டி மோதி, போராடி, சிரம்ங்களை எதிர்நோக்கியே வாழ்ந்து எதிர் நீச்சல் போட்டு முன்னேறுகின்றனர். இன்னும் தெளிவாகச் சொல்லப்
போனால் - தனது வாழ்க்கைக்காக ஒரு பெரும்பான்மை இனத்தான் சிந்தும் வியர்வையை விட சிறுபான்மை இனத்தான் சிந்தும் வியர்வை அதிகமாகும்.

பிக்குகள் உழைப்பதில்லை. அவர்களுக்குப் பொதுமகன் படும் சிரமங்கள் எதுவும் கிடையாது. பௌத்தம் என்ற ஒன்றுக்காக அவர்கள் வாழ்கிறார்கள் என்றால் அம்மதம் பின்னடைவு காண்கிறது என்றால் அதற்குத் தாமும் முக்கிய காரணகர்த்தாக்கள் என்பது புரியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய வெட்கக் கேடு.

எனவே இந்த அமைப்புகள் சார்ந்த பிக்குகள் நாட்டு முன்னேற்றம் கருதியும், தங்களது மத முன்னேற்றம் கருதியும் சிறுபான்மை இனங்களின் மேல் பாய்வதைத் தவிர்த்து விட்டுச் சில நல்ல காரியங்களைச் செய்ய முடியும்.

01. பன்றிகள் கொல்லப்படும் இடங்களில் கொல்லப்படும் பன்றிகள் நோயற்றவை என்பதை உறுதிப்படுத்துதல்.

02. பல்பொருள் அங்காடிகளில் அரை நிர்வாணமாக வரும் யுவதிகளுக்கு அறிவு புகட்டல்.

03. கசினோ போன்ற சூதாட்டக் கழகங்களுக்கும் சாராயக் கடைகளுக்கும் வருகை தரும்  பெரும்பான்மை இன மக்களுக்குப் போதனை புரிதல்.

04. தங்களது பிரதேச பன்சலைகளை மையப்படுத்தி இளைஞர், யுவதிகளைத் திரட்டி பொது நிறுவனங்கள், பாடசாலைகள், பிரதேச பாதைகள் போன்றவற்றில் சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தல்.

05. முடியுமானால் அரச நிறுவனங்களில் கூட (உ-ம்) தபாலகளில் தபால்தலை வி்ற்றல்) போன்ற தொழில்களில் ஈடுபடல்.

06. சட்ட விரோத கசிப்பு, போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராகச் செயற்படல்.

07. போதைப் பொருள் பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வளிப்பதிலும் அவர்களுக்குப் போதனை செய்வதிலும் ஈடுபடல்.

08. பிரதேசங்களில் சிறு சிறு சச்சரவுகளைத் தீர்த்து வைத்தல்.

09. வைத்தியசாலைகளில் நோய்களால் பாதிப்புற்றவர்களைச் சந்தித்து ஆறுதல் தருதல். முடியுமானால் நிறுவன ரீதியாகச் செயற்பட்டு அவர்களுக்கு உதவுதல்.

10. சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்குப் போதனை செய்தல்.

Saturday, June 8, 2013

எயார் இந்தியா!படிக்கு முன் படிக்க வேண்டிய குறிப்புகள்

01. குறிப்புகளை வாசிக்காமல் சம்பவத்தைப் படிக்க வேண்டாம். அப்படிப் படித்துப் புரியவ்லலை என்றால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.

02. இச்சம்பவம் எயர் இண்டியா என்ற தலைப்பில் அமைந்திருந்த போதும் நாடுகளின் பெயர்களில் நடத்தப்படும் எல்லா விமான சேவைகளுககும் பொருந்தும்.

03. இது இணையத்தில் கிடைத்த சம்பவம். சுட்டுத் தமிழுக்கு மாற்றம் செய்துள்ளேன். தமிழுக்கு மாற்றும் போது பொருத்தமான வாக்கிய அமைப்பைத் தர முயள்றிருக்கிறேன். சம்பவம் அப்படியே தரப்படுகிறது.

இனிக் கதைக்கு வாருங்கள்.........

சுரிந்தர் சிங் மாமா பொம்பே செல்வதற்கு விமானத்தில் ஏறினார். அவரது வாழ்வில் அவர் மேற்கொள்ளும் முதலாவது விமானப் பயணம் அது.

விமானப் பணிப்பெண் பயணிகளுக்கு என்ன உணவு தேவை என்று கேட்டுக் குறிப்பெடுத்தபடி வந்து கொண்டிருந்தாள். அந்த விமானத்தில் பயணிக்களுக்கு வழங்கப்படும் நீராக இருந்தாலும் அதற்குரிய பணத்தை விமானத்திலேயே செலுத்த வேண்டும்.

சுரிந்தர் மாமாவிடம் வந்த பணிப்பெண் 'உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டாள்.

'இதோ பார் பெண்ணே... நான் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். எனது பெயரில் உணவுக்கோ நீர் ஆகாரத்துக்கோ நீ  பற்றுச் சீட்டு எழுதி விடக் கூடாது' என்று பதில் சொன்னார்.

பணிப் பெண் பதிலைக் கேட்டுச் சற்று அதிர்ந்து பின் சமாளித்துப் புன்னகைத்தபடி அகன்றாள்.

சற்று நேரத்தில் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. சாப்பிட ஆயத்தமானார்கள்.

சுரீந்தர் மாமா தனது உணவுப் பொதியை எடுத்துப் பிரிக்க ஆரம்பித்தார்.

சுரீந்தர் மாமாவுக்குப் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருந்தவர் ஓர் nஅமரிக்க வரலாற்றுப் பேராசிரியர். எல்லோரும் விமானத்தில் வழங்கும் உணவை உண்ணுகையில் தமது அயல் பயணி வீட்டுச் சாப்பாட்டுப் பொதியைப் பிரித்தது அவருக்கு ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அவர் சுரீந்தர் மாமாவிடம் கேட்டார்:-

'மன்னிக்கணும்... அது என்ன?'

சுரீந்தர் மாமா 'லஸ்ஸி' யை ஒரு பிளாஸ்டிக் போத்தலில் கொண்டு வந்திருந்தார்.

'மில்க் ஒஃப் இண்டியா!'

- மாமா பதில் சொன்னார்.

அவர் கொண்டு வந்திருந்த சப்பாத்தியை உண்ண ஆரம்பித்தார் சுரீந்தர் மாமா!

'இதற்கு என்ன பெயர்?'

-அமெரிக்கர் கேட்டார்!

'இதுதான் வீற் (Wheat) ஒப் இனண்டியா!'

சுரீந்தர் மாமா பெருமை பொங்கச் சொன்னார்.

அதை உண்டு முடிந்ததும் உருண்டையாகவும், சதுரமாகவும் அவர் கொண்டு வந்திருந்த இனிப்புப் பதார்தத்தை எடுத்து அதில் சிலதை அமெரிக்கருக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டார்.

'அட நன்றாக இருக்கிறதே... இது என்ன?'

'இதுதான் ஸ்வீற் ஒப் இண்டியா...'

- சொல்லி விட்டு அமெரிக்கரைப் பார்த்துப் புன்னகைத்தார் மாமா!

பயணிகள் உண்டு முடித்து ஆசவாசத்துடன் இருக்கைகளில் சாய்ந்தார்கள். அப்போது சுரீந்தர் மாமாவிடமிருந்து,

'ப்பூ.....................ர்ர்ர்ர்ர்..........ப்..' என்று ஒரு சத்தம் வந்தது.

அதிர்ந்த அமெரிக்கர் சுரீந்தர் மாமாவைப் பார்த்து அது என்ன சத்தம் என்று கேட்டார்!

மாமா சிரித்துக் கொண்டே செர்ன்னார்...

'எயர் இண்டியா....!'