Friday, September 30, 2011

இலக்கியச் சந்திப்பும் “கல்வெட்டு“ சஞ்சிகையும்


இடமிருந்து வலமாக கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தீன், யுனுஸ் கே. றஹ்மான், அல் அஸூமத், நான், இவள் பாரதி, நடிகர் வெற்றி


கடந்த 15.07.2011 அன்று சென்னை வியாசர்பாடியில் கவிஞர் ஜலாலுத்தீன் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். காயல்பட்டினம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு முடிந்ததும் சென்னையில் தங்கியிருந்த தமக்கு அறிமுகமான இலங்கைப் படைப்பாளிகளையும் சென்னை சார்ந்த சில படைப்பாளிகளையும் ஒருங்கிணைப்பதும் கருத்துப் பரிமாறுவதும் இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது.


வியாசர்பாடியில் உள்ள தமது சகோதரிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார் கவிஞர் ஜலாலுத்தீன். கவிஞர் அல் அஸ_மத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாசிம் அகமது, நான், யூனுஸ் கே. ரஹ்மான், பதுருஸ்ஸமான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டோம்.


சென்னை புத்தகக் கடையொன்றில் தமக்கு நேர்ந்த அனுபவத்தை விளக்கினார் தாசிம் அகமது. இலங்கை முஸ்லிம்களால் தமிழ் பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு அப்புத்தகக் கடைப் பெண் கேட்டதாகச் சொல்லிக் கவலைப்பட்டார் தாசிம் அகமது.


கவிஞர் சொர்ணபாரதி, நடிகர் வெற்றி, இவள் பாரதி மற்றும் நமக்கு ஏற்கனவே அறிமுகமாயிராத சில இலக்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். மாலை 6.00 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் முதலில் அறிமுகம் இடம் பெற்றது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும் தமது இலக்கியச் செய்பாடுகள் பற்றியும் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் பொதுவான கலை, இலக்கியக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இது அமைந்தது.

Tuesday, September 27, 2011

கலங்கரை போலொரு கைக்கடிகாரம்


ஜேக் இரண்டு பெரிய சூட்கேஸ் பெட்டிகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு பஸ் நிலையத்துக்கு வந்தான். அவற்றைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்த போது அவனருகே வந்த நபர் “நேரம் என்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

அவன் அலாக்காகக் கையை உயர்த்திக் கைக்டிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு “ஆறு மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன” என்றான்.

அவனிடம் நேரம் கேட்ட நபர், “அட... மிக அழகான கைக்கடிகாரமாக இருக்கிறதே!” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் ஜேக்கின் முகம் மலர்ந்தது.

“ம்... இது எனது கண்டு பிடிப்பு.... தெரியுமா.... இதற்காக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்... பார்க்கிறீர்களா....?” என்றவாறு கையை உயர்த்திக் கைக்கடிகாரத்தைக் காட்டியபடி “உலகத்தின் எல்லா நேரங்களையும் இதில் பார்க்கலாம். வெறும் கண்டங்கள் அல்ல... உலகத்தின் 86 பிராந்தியங்களின் சரியான நேரத்தை இதில் பார்க்க முடியும்” என்றான்.

பிறகு ஒரு பட்டனைத் தட்டினான்.... “த டைம் இஸ் எய்ட்டீன் டுவெல்வ்” என்றது கைக்கடிகாரம். மற்றொரு பட்டனைத் தட்டினான். அது ஜப்பான் பாஷையில் அப்போதய நேரத்தைச் சொன்னது. மிகத் தெளிவான டிஜிட்டல் நேரத்தையும் தெளிவான குரலையும் அக் கைக்கடிகாரம் வெளிப்படுத்திற்று. “எண்பத்தாறு மொழிகளில் இந்தக் கடிகாரம் நேரத்தைச் சொல்லும்” என்றான் ஜேக்.

Thursday, September 22, 2011

இரத்தத்தால் பதியப்பட்ட கதைகள்


ஒரு குடம் கண்ணீர்
அஷ்ரப் சிஹாப்தீன் எழுதிய உண்மைக் கதைகள்

பஸ்லி ஹமீட்

இந்த வினாடியில் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு அகப்பட்டுக் கொண்டிருக்கலாம், ஒரு சிறுவன் அநியாயமாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் கொண்டிருக்கலாம், ஒரு அப்பாவி இளைஞன் எந்தக் காரணமுமின்றி கைது செய்யப்பட்டு கொண்டிருக்கலாம், ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அச்சத்துடன் ஏதோ ஒரு படுகுழிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கலாம், துப்பாக்கி ரவைகளும் வெடிகுண்டுகளும் ஒரு தேசத்தையே அழித்துக் கொண்டிருக்கலாம்.

கொலை, கற்பழிப்பு, சித்திரவதை என்பன இந்த யுகத்தில் சர்வ சாதாரணமாகிப் போய்விட்டதனால் இது போன்ற ஒரு செய்தி எமது செவிகளுக்கு எட்டுகின்ற போது உள்ளம் உருகாமல் இறுகி இருப்பது வேதைனைக்குரிய விடயமாகும். கரும்பாறைகளே கசியும் போது உணர்வுகளினால் பிசையப்பட்ட உள்ளம் ஈரத்தை இழந்து உலர்ந்து போயிருப்பதுதான் ஆச்சரியம். இரக்கம் அல்லது கருணையை மனிதன் தனது இதயத்திலிருந்து அப்புறப்படுத்தி வைத்திருப்பதையே அனேகமான சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சன நெரிசல்மிக்க ஒரு பஸ் வண்டியில் வயதான பெண்ணொருத்தி தள்ளாடியபடி பயணிக்கும் போது அதனைக் கண்டு கொள்ளாது இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் திடகாத்திரமான தேகமுள்ளோரை சமகாலத்தில் சர்வ சாதாரணமாகக் காணலாம். இந்த மிகக் குறைந்த மனிதாபிமானத் தன்மையையே சமூகத்தில் காணமுடியாத நிலைமை இன்று தோன்றியுள்ளது. இப்படிப்பட்டி இரும்பு உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் வாழக்கூடிய இன்றைய யுகத்தில் காலத்தின் தேவையை உணர்ந்தாற்போல் வெளிவந்துள்ளது 'ஒரு குடம் கண்ணீர்' உண்மைக் கதைகள் அடங்கிய நூல்.


எமது நாட்டின் மூத்த கலைஞரும், கவிஞருமாகிய அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் உலகின் பல பகுதிகளிலும் அநியாயமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள் வடித்த கண்ணீர் வெள்ளத்திலிருந்து ஒரு குடத்தை அள்ளி எம் கரங்களில் தந்துள்ளார். குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ அல்ல உலர்ந்து போயிருக்கும் எமது உள்ளங்களை சற்று ஈரப்படுத்திக் கொள்வதற்கு.

Tuesday, September 20, 2011

பட்டாக்கத்தி மனிதர்கள்



ஜூவான் கொரோனா தீர்ப்புக்காகக் காத்திருந்தான்.

முதல் விசாரணையின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்திருந்தான் கொரோனா. ஆறு வருடங்கள் கழிந்த பிறகு விசாரணை ஆரம்பமாகி மற்றுமொரு தீர்ப்பு வழங்கப்படுவதற்கிடையில் ஒன்பது வருடங்கள் சென்றிருந்தன.

அடிக்கடி மனோநிலை பாதிக்கப்பட்ட மனிதன் என்ற அடிப்படையிலும் இது வரை சிறையில் கழித்த காலத்தையும் கருத்திற் கொண்டு தான் விடுதலை செய்யப்படலாம் என்று ஒரு நம்பிக்கை அவனிடம் இருந்தது.

அவன் சுதந்திர உலகில் வாழ்வதா இல்லை சிறையிலேயே செத்து மடிவதா என்பதை நீதிபதி தீர்மானிக்கப் போகின்ற கட்டம் அது.
 
000
 
மெக்ஸிகோவில் பிறந்தவன் கொரோனா. 16 வயதிலே அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்குள் சட்ட விரோதமாக வந்து சேர்ந்தான். பண்ணைகளின் மரக்கறி மற்றும் பழ வகைகளை இடத்துக்கு இடம் கொண்டு சென்று ஒப்படைத்துப் பிழைப்பு நடத்தி வந்தான்.

சில காலத்தின் பின்னர் வடக்கு கலிபோர்னியாவின் யூபா பிரதேசத்துக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள பண்ணைகளில் தொழில் புரிந்தான். எதிர்பாராமல் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் சிக்குண்டு தெய்வாதீனமாக உயிர் தப்பினான். அதற்குப் பின் அவனது மனோநிலை பாதிக்கப்பட்டது.

Sunday, September 18, 2011

அப்சல் குருவும் ஊடகங்களின் ஊத்தை ஆட்டமும்


ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள மூவர் நிரபராதிகள் என்று இன்று உரத்த குரல் எழுப்பப்பட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டும் வருகின்றன.

இந்த வேளை ஏற்கனவே தூககுத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கும் அப்ஸல் குரு பற்றியும் அவருக்கு எந்த அடிப்படையில் தூக்குத் தீர்க்கப்பட்டது என்பதையும் பற்றி யாரும் பேசுவதாக இல்லை.

அப்ஸல் குரு பற்றிய தகவல் வினவு இணையத் தளத்தில் வெளியாகியிருக்கிறது. மூன்று சிறு பகுதிகளாக அமைந்த அந்தத் தகவலில் முதலாவது பகுதியை மட்டும் இங்கு தருகிறேன்.

ஆனால் முழுத் தகவலையும் படிப்பதன் மூலம் இவரது பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும். மீதிப் பகுதியைப் படிக்கக் கூடியவாறு வினவு இணையத் தளத்தின் தொடுப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
----------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே,


திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்

வினவு
--------------------------------------------------------------------------------------------------
மீதியையும் படிப்பதன் மூலமே முழுத் தகவலையும் புரிந்து கொள்ள முடியும். அதற்கான தொடுப்பு இதோ
http://www.vinavu.com/2011/09/17/afzal-statement/
--------------------------------------------------------------------------------------------------
நன்றி - வினவு இணையத்தளம்


Friday, September 16, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 2


இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 2

காயல்பட்டின மாநாட்டுக்கான இலங்கைச் செயற்பாடுகளை டாக்டர் ஜின்னாஹ்வும் மானா மக்கீனும் முன்னெடுத்தார்கள். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நான் ஒத்துழைத்தேன். மானா மக்கீனுக்கு ஹாஜி பாயிக் மக்கீனும் தோள் கொடுத்தார். கவிஞர் யாழ். அஸீமும் உதவி செய்தார்.

மாநாடு நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குக் கப்பல் பயணமும் ஆரம்பமாகி விட்டது. தூத்துக்குடிக்கும் காயல் பட்டணத்துக்கும் இடையே குறுகிய பயணத்தூரமே இருப்பதாலும் ஒரு தொகையினர் கப்பலில் பயணம் செய்ய விரும்பக் கூடும் என்பதால் கப்பலில் செல்ல விரும்பும் குழுவினரை மானா மக்கீன் பொறுப்பெடுப்பதாகவும் விமான மார்க்கமாக சென்னை சென்று அங்கிருந்து பஸ் மூலம் காயல்படடினம் செல்ல விரும்புவோரை டாக்டர் ஜின்னாஹ் பொறுப்பெடுப்பதாகவும் முடிவெடுத்தார்கள்.


இந்தியா வீசா நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள்தாம் பலரது பயணத்துக்கு இடையூறாக இருந்தன. ஒன் லைனில் வீசா விண்ணப்பம் பெறுவது, அதில் ஒரு எழுத்தேனும் பிசகாமல் இருப்பது, இறங்கும் இடம் ஆகியன பலரைக் குழப்பத்தில் தள்ளின. அடையும் இடம் சென்னை என்று குறிப்பிட்டால் வீசாவிலும் அதைக் குறிப்பிடுவார்கள். அவ்வாறு வீசா பெற்றவர்கள் கப்பலில் பயணம் செய்ய முடியாது. ஆனால் வீசாவுக்கான படிவத்தை நிரப்பும் போது விரிவாகச் சொடுக்கிப் பார்த்தால் All ports என்று ஒன்று இருக்கிறது. அவ்வாறு நிரப்பினால் கப்பலிலும் போகலாம், விமானத்திலும் செல்லலாம். இந்த விடயத்தை சென்று வந்த பிறகுதான் நான் அறிய வந்தேன்.


நான் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். குழுவினர் பயணப் படுவதற்கு இரண்டு தினம் முன்னரே நானும் அல் அஸ_மத்தும் சென்னை சென்று விட்டோம். எனது நூல் வெளியீட்டை சென்னையில் நடத்தவிருந்தமையால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் காயல்பட்டினம் செல்வதற்கான பஸ் ஏற்பாடுகளைச் செய்வதும் எங்கள் நோக்கமாக இருந்தது.

காயல் பட்டினம் செல்வதற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உப செயலாளர் பேராசிரியர் அகமது மரைக்காயர் தனது வேலைப் பளுவுக்கு மத்தியில் சொகுசு பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். நான் அவரை இரவு 10.30 அளவில் ஒரு கணினி மையத்தில் சந்தித்த போது மாநாட்டு ஆய்வுக் கட்டுரை நூலுக்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

Wednesday, September 14, 2011

கிறீஸ் மேன் - 3


திடுக்கிட்டு எழுந்த போதுதான் தான் கண்டது கனவு என்பது உறைத்தது அவனுக்கு. ஆனால் அவன் சிந்தை பெருங் குழப்பத்தில் இருந்தது.

ஒன்றும் தோன்றாத நிலையில் எழுந்து அமர்ந்திருந்த நிலையில் கைகளைக் கூப்பி மெதுவாகத் தனக்குள் பாடத் தொடங்கினான்...


பொன்னார் மேனியனே... புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொண்டையணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே...

மனசு லேசானது போல் இருக்க மெல்லச் சாய்ந்து உறங்கிப் போனான்.

கடந்த சில வாரங்களாக கிறீஸ் மேன் பற்றிய செய்திகளை அவன் ஆர்வத்துடன் படித்து வந்தான். இதற்குள் இருக்கும் சூட்சுமம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவனது பேராவலாக இருந்தது. எல்லாப் பத்திரிகைகளிலும் கிறீஸ்மேன் பற்றிய செய்திகள் இடம் பிடித்திருந்தன.

எதற்காக இந்தச் செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்பது பற்றிய வாய்வழிக் கதைகள் பத்திரிகைச் செய்தி களை விட முக்கியமாக இருந்தது அவனுக்கு. அவற்றை மனதுக்குள் பட்டியல் போட்டபடி அவன் உறங்கிய போதுதான் அந்தக் கனவை அவன் கண்டான்.

அவன் கண்ட கனவாவது -

சித்திரவதை... சித்திரவதை...!


ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள் நூலுக்கான எனது பார்வை

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

சித்திரவதைகள் என்ற வார்த்தை இக்காலத்தில் யாவருக்கும் பொதுவாக தெரிந்திருக்கும் விடயமாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்துக்கு முதலாளி வர்க்கம் கொடுக்கும் சித்திரவதைகள், நலிவுற்ற நாடுகளுக்கு வல்லரசுகள் கொடுக்கும் சித்திரவகைள், அப்பாவி பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் பாலியல் சித்திரவதைகள் என்று பல்வேறு கோணங்களில் அதன் தாக்கத்தை வரையறுத்துக்கொண்டு போகலாம். சொந்த தகப்பனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படும் அப்பாவி பெண்களின் கதைகைளை தினசரிகளுக்கூடாக தினமும் அறிந்து வருகிறோம்.


இவ்வாறான சில யதார்த்த பூர்வமான விடயங்களை உள்ளடக்கி சர்வதேச ரீதியில் இடம்பெற்ற சித்திரவதைகள் சார் நிகழ்வுகளை ஆவணப்படுத்து கின்றதொரு பொக்கிஷமாக வெளிவந்திருக்கிறது அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் ஒரு குடம் கண்ணீர் என்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு.

தனது தாய்மாமன் செய்யது ஷரிபுத்தீன் மற்றும் அவரது புதல்வன் அஜ்மல் ஷரிபுத்தீன் ஆகிய இருவருக்குமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் யாத்ரா வெளியீடாக 250 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

கற்பனை சேர்க்கையும் அலங்காரங்களும் இல்லாது யதார்த்தத்தை அதன் உள்ளமை குன்றாது முன்வைக்கும் நூலாசிரியரின் எழுத்துப்பாணி ஒரு பரிசோதனை முயற்சிக்கு ஒப்பானதாகும். மனதை நெகிழ வைக்கும் வேதனைகளும், அவலங்களும் இங்கு பதிவாகியுள்ளன. துயரத்தையும், உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் அவை. செய்திகளின் சம்பவங்களின் வெறும் பதிவுகள் என்ற வரட்சியை இந்நூல் வெல்ல முயன்றுள்ளது. ஆவண பதிவுகளுக்கு அப்பால் சம்பவங்களின் சோகங்களையும், நிகழ்ந்துள்ள அநீதிகளையும் மீளாக்கம் செய்து உலகின் கவனத்திற்கு இது கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது என்கிறார் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள்.

தனது நூல் பற்றி உண்மையைத் தவிர வேறில்லை என்ற பதிவினூடாக நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மனிதன் இயல்பாகவே மற்றொருவனை அல்லது மற்றொன்றை அடக்கியாளவும், ஆதிக்கம் செய்யவும் விரும்பியவனாக இருக்கிறான். அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் முதல் ஒரு சில்லறைக் கடை உரிமையாளர் வரை இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் கூட ஒருநாளில் நமக்குக் கீழேயுள்ள யாரையாவது அதட்டிப் பார்க்கிறோம் அல்லது அதற்கு முற்படுகின்றோம். அதற்கு வாய்ப்பற்றவர்கள் கால்நடைகளையாவது அதட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்பு அவரவர் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப மனித ரத்தத்தில் கலந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

உலக மகா யுத்தம் தொடக்கம் இன்று வரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்தும், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களை அழித்தும் பொது ஜனங்களுக்கு செய்யப்படுகின்ற சித்திரவதைளை தினமும் நாம் கேள்விப்படுகிறோம். நம் நாட்டிலல்லாது பிற நாடுகளில் நடக்கும் இவ்வாறான பயங்கர சம்பவங்களை எம்மில் பலர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனினும் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மனிதத்துவப் பண்புடன் அயல்நாட்டு பிரச்சனைகளை தமது எழுத்தினூடாக எமக்கெல்லாம் அறியத் தந்திருக்கின்றார்.

Monday, September 12, 2011

ஊடகமாவது தமிழாவது....





இவ்வருடம் வெளிவந்துள்ள சட்டக் கல்லூியின் நீதி முரசு மலருக்கு நான் எழுதிய ஊடகமும் தமிழும் என்ற கட்டுரையை “தானாய் அழியும் தமிழ்“ என்ற தலைப்பில் எனது வலைத் தளத்தில் இட்டிருந்தேன்.

ஒலிபரப்புத் துறை சார்ந்தவர்கள் இக்கட்டுரை குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். பொதுவாகவே பின்னூட்டங்கள் பத்து வரிகளுககு மேற்படுவதில்லை. ஆனால் இங்கு சற்று விரிவாகவே பேசியுள்ளார்கள்.

சகோதரர் ரஸ்மின் மேலும் இது குறித்து எழுதுமாறு தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பாக ஒலிபரப்பாளர்களும் நேயர்களும் அவதானத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது என்னை மகிழ்ச்சிப் படுத்தியது.

அவர்களது கருத்துக்களை ஒரு பதிவாக இங்கு இட்டிருக்கிறேன். இது குறித்து மேலும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

இக்கட்டுரைக்குத் தலைப்புத் தந்து என்னை எழுதத் தூண்டிய நீதி முரசு இதழாசிரியர் மேனகா கந்தசாமிக்கு எனது நன்றிகள்.
--------------------------------------------------------------------------------------

மொழிதான் ஊடகங்களின் உயிர். எனவே ஊடகங்கள் மொழியைச் சரியாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சரியாக அல்லாமலும் கவனக் குறைவாகவும் அவைதான் கையாளுகின்றன. இது உங்களுடைய விமர்சனம்.. அதேபோல் நீங்கள் உங்களின் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் ஒரு சில வாக்கியங்களின் இலக்கணம் சரியா என்பதை எனக்கு விளக்கி வைப்பீர்களா? ....தொலைக் காட்சி அலைவரிசையொன்றில் செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது .......மொழிப் பாவனை ஆகியன கடந்த காலங்களில் பலராலும் விமர்சனத்துக்குள்ளாகிருக்கிறது இவ்வாறு சுட்டிக்காட்டுவது என் அறியாமைக்காக... குறை பிடிப்பதற்காக அல்ல...


By Junaid M Haris - SLBC on தானாய் அழியும் தமிழ் on 9/3/11
...................................................................................................................................................

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்கிடையில் “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்” என்று அறிவிப்பாளர்கள் காலாதிபாலமாகச் சொல்லி வருகிறார்கள். இலக்கணப்படி “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பவை” என்று வர வேண்டும். இதை மறைந்த மூத்த செய்தியறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான ஜோர்ஜ் சந்திரசேகரிடம் ஒரு முறை கேட்டேன். “செய்திகள்“ ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையிலேயே இவ்வாறு சொல்லப்படுகிறது என்று விளக்கம் தந்தார். அந்த அடிப்படையிலேயே “செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது“ என்று நான் இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். நன்றி.


By ASHROFF SHIHABDEEN on தானாய் அழியும் தமிழ் on 9/4/11
...............................................................................................................................................
 

Thursday, September 8, 2011

அடங்கும் பெண்டிரும் அடங்கா ஆடவரும்



          நெருக்கமுள்ள நண்பர்களான ஸைதும் அகமதும் ஒரே காலப் பிரிவில் திருமணம் செய்து கொண்டவர்கள். சில காலங்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்ட போது ஆர்வத்துடன் சுக நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அகமட், திருமண வாழ்க்கை எப்படிப் போகிறது என்று ஸைதிடம் கேட்டான்.

“எனது மனைவி மிகவும் கீழ்ப்படிவுள்ளவள். அவள் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள்” என்று ஸைத் பதில் சொன்னான்.

“அப்படியானால் அவளை நீ அடித்ததே இல்லையா... ஒரு முறையாவது?”

“எதற்காக அவளை நான் அடிக்க வேண்டும். எனது எல்லாத் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றுகிறாள். அவளை நான் மிகவும் நான் விரும்புகிறேன்” என்றான்.

பதிலைக் கேட்ட அகமட் சொன்னான்:-

“நான் என்றால் வாரத்துக்கு ஒரு முறை மனைவியை அடித்து விடுவேன்!”

“ஏன் அப்படி அடிக்க வேண்டும்?” - ஸைத் கேட்டான்.

“வீட்டின் ஆண்பிள்ளை யார் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா... அதற்காகத்தான்!” என்றான்.

அத்துடன் அவர்களது சந்திப்பு முடிந்தது.

அந்தச் சந்திப்புக்குப் பின் இரண்டு வருடங்கள் கழிந்து மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள்.

“ஸைத்... இப்போ மனைவியை அடிக்கிற அளவுக்கு நீ முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்...” என்றான் அகமட்.

Tuesday, September 6, 2011

அடையாத தாள்


எவ்வளவு திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்கிய போதும் சிறு பிள்ளைகள் நிறைந்த அந்த மிஷனரிப் பாடசாலையிலும் சில மோட்டார்க் குண்டுகள் விழுந்து வெடித்தன என்கிறார் கேர்ணல் ஜோன் மன்ஸர். அமெரிக்க ராணுவத்தில் வியட்னாமில் கடமை புரிந்த போது நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூருகையில் இவ்வாறுதான் அவர் ஆரம்பிக்கிறார்.


சம்பவத்தில் போதகர்களும் இரண்டொரு சிறார்களும் உயிரிழந்தனர். காயமடைந்த ஏராளமான பிள்ளைகளுள் ஓர் எட்டு வயதுச் சிறுமி ஆபத்தான நிலையில் இருந்தாள். அதுவோர் மருத்துவ வசதிகளற்ற சின்னஞ் சிறிய கிராமம். அமெரிக்க ராணுவத்தின் ரேடியோத் தொலைத் தொடர்பின் மூலம் அக்கிராம மக்கள் அண்மித்த நகரத்திடம் மருத்துவ உதவிக்காக மன்றாடினார்கள். அமெரிக்கக் கடற் படை வைத்தியர் ஒருவரும் ஒரு தாதியும் ராணுவ ஜீப் ஒன்றில் ஒரு வைத்தியருக்குத் தேவையான அளவு மருத்துவ வசதிகளுடன் அவ் விடத்தை வந்தடைந்தனர்.

மிக மோசமாகக் காயமடைந்திருந்த அச்சிறுமி மீது அவர்களது கவனம் சென்றது. அவசர மருத்துவக் கவனிப்புக் குள்ளாகவில்லை என்றால் அதிக இரத்த இழப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கும் அவள் இறந்து விடுவாள் என்பது புரிந்தது. அச்சிறுமியின் இரத்த வகை கிடைக்க வேண்டும் என்பது வைத்தியர் எதிர் கொண்ட முதற் சவால். அவர்கள் மிகத் துரிதமாகச் செயற் பட்டார்கள். எந்தவொரு அமெரிக்கரிடமும் அவ்வகை இரத்தம் இருக்கவில்லை. ஆனால் அப்பாடசாலையைச் சேர்ந்த காயமடையாத அனாதைச் சிறார்களிடம் அவ்வகை இரத்தம் இருந்தது.

Saturday, September 3, 2011

தானாய் அழியும் தமிழ்


ஊடகமும் தமிழும்

01

பட்டென்று திரை இருண்டு போன எனது மடிக் கணினியை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார் நண்பர். அவர் ஒரு கணினித் தொழிநுட்பவியலாளர். வீட்டில் தமிழ் மொழி பேசுபவர். தமிழ் மொழி மூலமாகவே கற்றவர். அவரது பிள்ளைகளும் தமிழ் மொழியிலேயே கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வேளை தொலைக் காட்சி அலைவரிசையொன்றில் செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. சோமாலியக் கடற் கொள்ளையர்கள் மற்றொரு கப்பலைக் கைப்பற்றிய விடயம் தலைப்புச் செய்திகளில் ஒன்று. செய்தி படித்த அம்மணி கப்பலையும் ஊழியர்களையும் கடற் கொள்ளையர்கள் “பயணக் கைதிகளாக”ப் பிடித்து வைத்துள்ளதாகச் சொன்ன போது நான் சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

என்னையறியாமலே “இங்கே பாருங்கள்.... பணயக் கைதிகளுக்கு பயணக் கைதிகளாம்!” என்ற வார்த்தை என்னிடமிருந்து வெளியாயிற்று. என்னைப் பொறுத்த வரை அது ஒரு பாரதூரமான பிழை. கணினி அங்கங்களைக் குடைந்து கொண்டிருந்த எனது நண்பரோ வெகு சாதாரணமாக, “நமக்கு விசயம் என்னவென்று விளங்குதுதானே! எப்பிடிச் சொன்னால்தான் என்ன?” என்றார். நான் ஆடிப்போனேன். அது எனக்கு ஒரு நிமிடத்துக்குள் நேர்ந்த இரண்டாவது அதிர்ச்சியாக இருந்தது.

02

மொழி என்பதே ஊடகம்தான். தமிழும் ஒரு மொழிதான். அப்படியாயின் கட்டுரைத் தலைப்பு ஊடகமும் ஊடகமும் என்று அல்லவா பொருளாகிறது என்று யாராவது வினாத் தொடுப்பதைத் தவிர்ப்பது மட்டுமன்றி இக்கட்டுரை எதைக் குறித்துப் பேசப் போகிறது என்பதையும் தமிழ் மொழி இன்று பயன்படுத்தப்படும் முறை பற்றியும் எடுத்துக் காட்டுவதற்காகவே நான் மேற் சொன்ன சம்பவத்தை எடுத்தாண்டேன்.

எல்லா மொழிகளுமே ஊடகம்தான் என்பதில் யாரும் கருத்து வேற்றுமைப் படுவதில்லை. ஆனால் ஒரு மொழியைப் பேசும் மக்கள் குழாத்துக்கு அம்மொழியே அடையாளமாகவும் ஆத்மாவாகவும் இருக்கிறது என்பதைப் பலர் இலகுவாக மறந்து போய்விடுகிறார்கள். ஒரு மொழி - அதைப் பேசும் மக்களின் கலாசாரச் சிறப்புகளால், இலக்கியத்தால் செழுமையும் சிறப்பும் பெறுகிறது. அதற்காக ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று சும்மா ‘பீலா’ விடுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. யாரும் உயிரை விடுவதால் எந்த ஒரு ஒரு மொழியும் சிறப்புப் பெற்று விடுவதில்லை.

தனது மொழி தனது அடையாளம் என்கிற நிலையில் ஒவ்வொரு மனிதனும் தனது மொழியில் வளம் சேர்க்கவும் அதனைப் பேணவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்தான். மொழி சிதைவடைந்து வேறொன்றுக்குள் அடக்கமாகி அடையாளம் சிதைந்து அழிந்து போகுமானால் அந்த மொழியைப் பேசிய மக்கள் குழாமும் அழிந்து விட்டது என்று அர்த்தமாகும். பல நூற்றுக் கணக்கான மொழிகள் அழிந்து போனமையைக் கடந்த காலச் சரித்திரங்கள் நமக்குச் சொல்கின்றன.