Tuesday, September 23, 2014

மன்னரே முதல்வர்!


அங்கம் - 3

அண்மையில் எனது கலாசாலைத் தோழர் ஒருவரைச் சந்தித்த போது ஒரு சிங்கள நாவல் பற்றி விதந்தோதினார். நாட்டுக் கோழிகளை வைத்துத்தான் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது பேசுவது பக்கா அரசியல்.

நாட்டுக் கோழிகளூடாக இலங்கை அரசியலைப் பேசும் அந்த நாவலைத் தான் தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆவலில் இருப்பதாகச் சொன்னார். நாவலாசிரியர் மறைந்து விட்ட போதும் கதை இன்னும் வாழுகிறது. மொழி தாண்டிப் பறக்கும் வல்லமை கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்களும் கவிஞர்களும் குறியீடுகளாலும் உருவகங்களாலும் பேசுவது ஒன்றும் புதிய விடயமல்ல.  மக்கள் முன் வைத்தாக வேண்டிய தனது சிந்தனையை, தனக்கேற்பட்ட தெளிவை நேரடியாகச் சொல்லாமல் குறியீடுகள் மூலமும் உருவகங்கள் மூலமும் சொல்வது ஒன்றும் அதிசயமான விடயமில்லைத்தான். ஆனால் பயன்படுத்தப்படும் உத்திகள் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமையுமிடத்து அது உரிய காலத்தின் நிலையை எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ளக் கூடிய வரலாற்று ஆவணமாக மாற்றம் பெற்று விடுகிறது. மட்டுமன்றி ஆதாரமாகவும் நல்லது அல்லதுகளையும், நல்லவர் அல்லவர்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் தந்து விடுகிறது.

1945ம் ஆண்டு ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை' இத்தகைய ஒரு நாவல். மேற்கத்தேய உலகின் அதிசிறந்த நாவல்களில் ஒன்றாகவும் 1923 முதல் 2005 வரையான காலப் பகுதியின் 100 சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் இந்நாவல் கருதப்படுகிறது. பன்றிகளை வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மக்கள் புரட்சி என்பது அதன் தலைவர்களாலேயே சிதைக்கப்படுவதை எடுத்துச் சொல்கிறது. ஜோஸப் ஸ்டாலினின் காலம் குறித்துக் கதை பேசுகிறது.

உலகின் எல்லா மொழிகளிலும் குறியீடுகளாலும் உருவகங்களாலும் ஏராளமான சிறு கதைகளும் எழுதப்படுகின்றன. நேரடியாகப் பேச முடியாதவற்றை மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்தி மிக அழகாகச் சொல்லப்படும் இக்கதைகளை மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு குவைத்திய சிறுகதை எழுத்தாளரான யூஸூஃப் கலீபா எழுதிய சின்னஞ் சிறு கதைகள் சிலவற்றைப் படிக்க முடிந்தது. அரேபிய அரசியல், அரேபியர் வாழக்கை போன்றவற்றையும் பொதுவான மனித இயல்புகள் ஆகியவற்றையும் குறித்து ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளுக்குள் அவரது கதைகள் பேசுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையும் நமது சிந்தனையை விரிவாக்கிக் உள்ளார்ந்த காட்சிப் புலனை விரித்துச் செல்லும் சக்தி மிக்கவையாக விளங்குகின்றன.

அறபியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதை (இதைக் கதை என்று சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்) ஓர் உரையாடல். மகன் ஒரு வார்த்தை பேசுகிறான், தந்தை ஒரு வார்த்தை பேசுகிறார். கதை முடிந்து விடுகிறது.

'தந்தையே, நான் வாங்கிய ஓவியத்தில் நபிகளின் திருமுகத் தோற்றம் தெரிவதாக அவர்கள் சொல்கிறார்கள்!'

'இறைவன் உனக்கு அருள்பாலிக்கட்டும் மகனே, அதை கவர்னரின் படத்துக்கு இடது புறம் கொளுவி விடு!'

'ஓர் அராபியச் சட்டம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த இரண்டு வசனங்களும் பேசும் விடயம் மிகவும் ஆழமானது. அறேபிய அரசியலையும் அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் மார்க்கத்தையும் சுருக்கமாகவும் இறுக்கமாகவும் தெளிவாகவும் இதைவிட அழகாகச் சித்தரிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இன்னும் இதை விளக்கமாகச் சொல்வதானால் இறை தூதரும் இஸ்லாமும் மன்னர்களின் ஆட்சிக்கு முன்னால் இரண்டாம் தரத்திலேயே பார்க்கப்படுகின்றன என்பதை மாற்று வார்த்தைகளில் இந்த உரையாடல் அல்லது கதை பேசுகிறது. இங்கு மன்னர் என்று சொல்லாமல் ஆளுனர் என்றும் நபிகளாராகவே இருந்தாலும் கவர்னர் இருக்கும் இடத்திலல்லாமல் கவர்னருக்கு வலப்புறத்தில் கூட இல்லாமல் இடப்புறத்துக்குத் தள்ளப்படுவதன் மூலம் எல்லாமே மன்னர்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது இக்கதை.

அறபிகளின் அரசியலை மட்டுமல்ல, உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பதைச் சற்று ஆழச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

இப்படி ஒரு கதை தமிழ் மொழியிலோ அல்லது அறபு அல்லாத வேறொரு மொழியிலோ வந்திருந்தால் இந்நேரம் எழுதியவரின் கதை கந்தலாகி இருக்கும். கதை என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக கதையில் பயன்படுத்தப்பட்ட வாக்கியங்களில் சர்ச்சனையும் அர்ச்சனையும் தொடங்கி ஒரு யுத்தமே ஆரம்பமாகியிருக்கும். நல்ல காலம், ஓர் அறபியே எழுதியிருக்கிறார்.

இல்லையென்றால் எழுதியவனை ஊர்விலக்குச் செய்வதற்கும் மார்க்கத்திலிருந்த விலக்கி வைப்பதற்கும் நிறையப் பேர் பத்வாப் பைகளைத் திறந்திருப்பார்கள்!

இதை முன் வைத்து எழுதியது கூட அமெரிக்கச் சதி என்று சொல்லாமல் இருந்தாலே உத்தமம்!

(மீள்பார்வை பத்திரிகைப் பத்தி)

Sunday, September 14, 2014

நூர்தீன் என்றொரு இசைக் காற்று!


(“இசைக்கோ” அல்ஹாஜ் என்.எம். நூர்தீன் அவர்கள் நேற்று இரவு 9.00 மணியளவில் இவ்வுலகைப் பிரிந்தார். ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.
2008ம் ஆண்டு அன்னாரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை இது. அன்னாரைப் பற்றிப் பலரால் எழுதித் தொகுப்பட்ட நூலில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அன்னாரது இழப்பு மிகவும் மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல கலைஞனாக, ஒரு சிறந்த மனிதாபிமானியாக வாழ்ந்து மறைந்து விட்டார் அல்ஹாஜ் நூர்தீன் அவர்கள்.)

அல்ஹாஜ் நூர்தீனுடனான எனது முதல் சந்திப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நிகழ்ந்தது. எண்பதுகளின் நடுப் பகுதியாக அது இருக்கும். அப்போது அங்கு அறிவிப்பாளனாக நான் இருக்கவில்லை. அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் பங்கு கொள்வதற்கும் சென்று வந்த காலப் பகுதி அது. அவ்வாறான வேளைகளில் கலைஞர்ளைச் சந்திப்பது கூட மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தது.

இசைக் கலைஞராக மாத்திரமே நான் அறிந்திருந்த நூர்தீன் ஹாஜியாரை உழைத்து முன்னேறி ஓர் ஆல விருட்சமாக இருப்பவர் என்று பின்னாளில் எனக்குச் சொன்னவர் என் மனைவியின் தந்தையார்.   எனக்கு அவர் அறிமுகமான காலப் பகுதிக்கும் என் மாமனார் தந்த தகவலுக்குமிடையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இடை வெளி இருந்தது. இந்த நீண்ட காலப் பகுதிக்குள் ஒரு சந்தர்ப்பத்திலேனும் செல்வப் பகட்டையோ அதற்கேயுரிய அலட்சியத்தையோ அவரிடம் நான் கண்டதில்லை. ஒரு மெல்லிய காற்றுப் போல வந்து வெளியேறிப் போகும் மனிதராக அவரை நான் அப்போது அடையாளம் கண்டிருந்தேன். ஆனால் அவசியமாயின் அவர் சூறாவளியாகவும் இருப்பார் என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் அறிந்து கொண்டேன். அது பற்றிப் பின்னால் சொல்கிறேன்.

நூர்தீன் ஹாஜியுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தை சென்னையில் 1999ல் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஏற்படுத்தித் தந்தது. அங்குதான் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தோற்றுவிக்கப்பட்டது. நிதிச் செயலாளராக அவரை ஏகமனதாக நாம் தேர்ந்தெடுத்தோம். இலங்கை திரும்பியதும் வரலாற்றுப் புகழ் மிக்க (எங்களைப் பொறுத்தவரை) அதன் முதலாவது கூட்டத்தை அவருக்குச் சொந்தமான மருதானை - பவுன்டைன் ஹவுஸ் வீதியில் உள்ள அவரது வீட்டில் நடத்தினோம். 2002ல் கொழும்பில் நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய மாநாட்டுக்கான முதலாவது திட்டமிடல் கூட்டம் அதுவாக இருந்தது. ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த முகவரியே ஆய்வகத்தின் அலுவலக முகவரியாகவும் இருந்தது.

கொழும்பில் நடைபெற்ற மாநாடு அவருடனான நெருக்கத்தை அதிகரித்தது, எங்கள் அனைவரிலும் மூத்தவராக அவர் இருந்தார். அவரை சிரமப்படுத்தக் கூடாது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தோம். ஆனால் ஓர் இளைஞனின் உற்சாகத்தோடு அவர் தோள் கொடுத்து நின்றார். இம்மாநாட்டில் முக்கியமான சில பணிகளை அவர் ஆற்றினார்.

மாநாட்டில் கலைஞர்களுக்கு வழங்குவதற்கான விருதுச் சின்னங்களை வடிவமைத்துத் தருவதற்கு கொழும்புக் கோட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தோம். கோட்டையில் சில பாதைகளில் எவ்வித வாகனமும் செல்ல முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அப்படியான ஓரிடத்தில்தான் அந்த நிறுவனம் அமைந்திருந்தது. பொதுவாக எந்தவொரு விடயத்துக்குச் செல்வதாக இருந்தாலும் எந்தத் தீர்மானத்தை எடுப்பதானாலும் அமைப்புக் குழு அங்கத்தவர்களில் நால்வருக்குக் குறையாமல் பங்கு கொள்வது வழக்கம். சில வேளைகளில் தனித்தனியே வௌ;வேறு விடயங்களுக்கு ஓடித்திரிய வேண்டிய கட்டாயங்களும் ஏற்பட்டதுண்டு. விருதுகளின் மாதிரி வடிவங்களை எடுத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சென்று திரும்பி காரியாலய அறைக்குள் நுழைந்த நூர்தீன் ஹாஜியைக் கண்டு அதிர்ந்து விட்டேன். திடீர் மழைக்குள் அகப்பட்டு நனைந்து கொடுகியபடி பொதியைச் சுமந்து வந்து அவர் நின்றிருந்ததைக் கண்டதும் என் மனம் மிகுந்த சஞ்சலத்துக்குள்ளானது. அந்தக் காட்சி இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. மாநாடு சம்பந்தமாக யாத்ரா 18ல் நான் எழுதிய கட்டுரையிலும் இந்த விடயத்தை நான் பதிவு செய்திருக்கிறேன்.

இம்மாநாட்டில் அத்தனை கலைஞர்களுக்கும் கௌரவம் செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கிருந்தது. ஆனால் இலக்கியவாதிகளின் பட்டியல் மிக நீண்டதாக இருந்ததாலும்  வரையறுக்கப் பட்ட பணத் தொகைக்குள் யாவற்றையும் செய்ய வேண்டியிருந்ததாலும் இசைக் கலைஞர்களையும் நாடகக் கலைஞர்களையும் தவிர்ப்பது என்று முடிவெடுத்தோம். இசைக் கலைஞர்களுக்காக நூர்தீன் ஹாஜி போர்க் கொடி தூக்கினார். சாதக பாதகங்களை அவருடன் அலசி அசாத்தியம் பற்றிய புரிதல் ஏற்பட்ட போது இசையரங்கை தன்னிடம் ஒப்படைத்து விடும்படி வேண்டுகோள் விடுத்தார். நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். அதன் விளைவாக எங்களுக்கு வேறு காரியங்களில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இதை விட முக்கியமான விடயம் நூர்தீன் ஹாஜி தனது சொந்தச் செலவில் இசைக் கலைஞர்களுக்கு ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவித்தார் என்பதுதான். இதனை அந்த அரங்குக்குள்ளேயே அவர் நிறைவேற்றித் தந்தார். இசைத் துறையோடு ஈடுபாடு கொண்ட நூர்தீன் ஹாஜி போல நாடகத்துறைக்கு ஒருவர் இருந்திருந்தால் நாடகக் கலைஞர்களையும் கௌரவித்திருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. அது ஒரு கவலையாக இன்றும் மனதுக்குள் உட்கார்ந்திருக்கிறது.

Thursday, September 11, 2014

எழுத்துச் சேவை


அங்கம் - 2

ஓர் எழுத்தாளராக இருப்பதில் பல அசௌகரியங்கள் உள்ளன.

விடிந்தால் இன்ன இன்ன வேலைகளை முடித்தாக வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளை இரவு எட்டு மணிக்குப்பிறகு ஓர் அழைப்பு வரும். நண்பரோ உறவினரோ ஆரம்ப வகுப்புகளில் கற்கும் தமது பிள்ளைகளுக்கு நாளையன்று நடக்கும் பேச்சுப் போட்டிக்கு ஒரு மூன்று நிமிடப் பேச்சு எழுதித் தர வேண்டும் என்ற வேண்டு கோள் அதிலிருக்கும். பெரியவர்களுக்குக் காரணம் சொல்லி மளுப்பி விடுவோம் என்பதால் அநேகமாகப் பிள்ளைகளே அழைப்பை எடுத்து 'அங்கள்....!' என்று ஆரம்பிக்கும். நாம் மடிந்து விடுவோம்.

நேர்த்தியாக விடயத்தைக் கோத்து எழுதுவதற்கு ஓர் எழுத்தாளராலோ ஊடகத்துறை சார்ந்த ஒருவராலோதான் முடியும் என்பதைச் சமூகம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. இதனால் பொதுநலக் கோரிக்கைகள், தன்னிலை விளக்கம் போன்றவற்றை எழுதுவதற்கு எழுத்தார்களை மக்கள் நாடுகிறார்கள். ஒரு விடயத்தை எழுத்தாளன் உரிய வார்த்தையில் சரியாகச் சொல்லுவான் என்பதைச் சமூகம் தெரிந்து வைத்திருந்தாலும் அவனைப் பயன்படுத்துவது அநேகமாகவும் நான் மேற்சொன்னவை போன்ற விடயங்களுக்கு மாத்திரம்தான். கிட்டத்தட்ட பார்த்துக் குரைக்கும் ஒரு நாய்க்கு எறிவதற்கு தெருவில் சட்டென ஒரு கல்லைத் தேடுவோமே.. அந்தக் கல்லின் கதிதான் எழுத்தாளரின் கதி!

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு முதியவர் வந்தார். காதி நீதிமன்றுக்கு தனது பேரன் சார்பில் ஒரு முறைப்பாடு எழுதித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான்கைந்து ஆவணங்கள், சில வெள்ளைத் தாள்கள் கையில் இருந்தன. அவரை அதற்கு முன்னர் நான் கண்டதே கிடையாது.

அவரை அமர வைத்து விட்டு, 'என்னை உங்களுக்கு எப்டித் தெரியும்? என்று கேட்டேன். அவர் வேறு ஒரு நபரிடம் சென்றதாகவும் அவர் இன்னொரு நபரிடம் செல்லக் கேட்டதாகவும் அந்த நபர் தன்னால் சிங்களத்திலேயே எழுத முடியும் என்று சொல்லித் தமிழில் எழுதுவதானால் இன்னாரைச் சந்தியுங்கள் என்று என்னைச் சொல்லியிருக்கிறார்.

விபரத்தைக் கேட்கப் பெரியவர் சொல்லத் தொடங்கினார். நான் குறிப்பெடுத்துக் கொண்டேன். அடுத்த தினம் பிற்பகல் பெரியவருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதால் காலையில் அமர்ந்து எழுதத் தொடங்கினேன்.

' .............................. என்ற முகவரியில் வசிக்கும் ஜோன் ஆசீர்வாதம் என்ற முகம்மது ஷாமில் (அ.அட் இல.....) ஆகிய நானும் ....................... என்ற முகவரியில் வசித்த பாத்திமா ருக்ஷானா (அ.அட்டை இல ........) என்பவரும் ஒருவரை ஒருவர் விரும்பியிருந்த காரணத்தால் பெரியோர் முன்னிலையில் நான் புனித இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி எனது பெயரை முகம்மது ஷாமில் என்று மாற்றிக் கொண்டேன். இரண்டு குடும்பத்தினரதும் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி ..........ம் திகதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் .......... என்ற மணப்பெண் வசித்த முகவரியில் வாழ்ந்து வந்தோம்.

மூன்று வருடங்கள் எவ்வித பிரச்சினையுமின்றி என்னுடன் வாழ்ந்து வந்த எனது மனைவி திடீரென ........ம் திகதியிலிருந்து காணாமல் போய்விட்டார். அவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவருடன் சென்று வாழ்வதாகப் பின்னர் தெரிய வந்ததையடுத்து ................ம் திகதி .......... பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கிறேன். முறைப்பாட்டு இல.....................

கடந்த மூன்று வருடங்களான எனது மனைவி வேறு ஒருவருடன் சென்று வாழ்தனால் இனிமேல் அவருடன் எனது வாழ்க்கை இல்லை என்பதாலும் எனது எதிர்காலம் பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் எனது மனைவியிடமிருந்து விவாக ரத்துப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.'

இந்தமாதிரியான காரணம் பற்றியோ வேறு காரணங்களை வைத்தோ விவாக ரத்துப் பெற்றுத் தரக் கோரும் கடிதம் எழுத என்னிடம் யாரும் வரவேண்டாம் என்று இத்தால் கேட்டுக் கொள்கிறேன்.