நடிப்புச் சிறப்பில் நகைச்சுவை நடிகர்களுக்கு அடுத்ததாகப் பிடித்த நடிகர்களுள் கமல்ஹாஸனும் ஒருவர். “உன்னைப்போல் ஒருவன்” பார்த்த பிறகு அவரைப் பற்றியிருந்த எல்லா மதிப்பீடுகளும் கரைந்து போயின. எல்லாக் கதாநாகர்களும் தீவிரவாதிகளை இறுதியில் தாங்களே முடித்து விடுவார்கள். அதையே அவரும் அப்படத்தில் செய்தார். அப்படத்தை வைத்துச் செய்யப்பட்ட விளம்பரங்களும் அலட்டல்களும் ஓர் ஒப்பற்ற காவியம் போன்ற மனப்பதிவை உண்டாக்கியிருந்தது. படத்தைப் பார்த்த பிறகுதான் இது ஓர் அப்பட்டமான மோசடி என்பது புரிந்தது. கிட்டத்தட்ட புஸ் என்று காத்துக் கூட வராத ஒரு வெடி. நினைத்துச் சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
இன்றைக்கு அவர்தான் மீடியாவி்ல் பேசு பொருள். அவரது படங்கள் வித்தியாசமானவைதாம். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவையும் கூட. ஒரு சிறுபான்மைச் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துப் படம் எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பது அவரது திறமைகளை மழுங்கடிக்கிறது. அர்ஜூனைப்போல, விஜயகாந்தைப்போல, விஜய் போல ஒரு வெத்து வேட்டு நிலைக்குத் தன்னை நகர்த்தி அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
இனி-
அவரது படங்கள் பற்றிய ஒரு இணையப் பதிவை இங்கு தருகிறேன்.
---------------------------------------------------------
நிகழ மறுத்த அற்புதம்
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான்.
தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில படங்களின் ஊடாகவே அறிந்து கொள்ள முடிகிற ஒரு அவதானிப்பு என்னவெனில், கமல்ஹாஸனின் படங்களைத் தவிர்க்கவே முடியாது என்பதைத்தான். பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களைக் கவனிக்கும் யாராகினும், தமிழ்ப்படங்களில், கமலின் படங்கள் மிகவும் வித்யாசமானவை என்றும், தமிழ்ப் படங்களை, கமல்ஹாஸனின் படங்கள் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன என்றும் ஒரு முடிவுக்கு வருவதை வெகு எளிதாகக் காண முடியும். கமல்ஹாஸனுமே, தனது படங்கள் அப்படிப்பட்ட நோக்கில் எடுக்கப்படுபவைதான் என்று பல பேட்டிகளில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.
ரசிகர்களாகிய நாமுமே, கமல்ஹாஸனின் படங்களை ஒரு கலை நோக்குடனே பாவித்து வந்திருக்கிறோம். கமல் படங்கள் என்றால், அவை முற்றிலும் வணிக நோக்குடன் எடுக்கப்படாமல், ஓரளவுக்கேனும் மாற்று சினிமாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்னும் ஒரு தகவல், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் சினிமா ரசிகர்களிடையே பரப்பப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது. மீடியாவுமே இப்படித்தான் கமலின் படங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது.
ஆனால்….. (இது ஒரு பெரிய ‘ஆனால்’)…
இவை அத்தனைக்கும் கமல் தகுதியுடையவரா?
சுற்றி வளைக்காமல், நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டுவரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்.
இருங்கள். . . கமல் ரசிகர்கள் பொங்கியெழுமுன், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். எனது நோக்கம், கமலைப் பழிப்பதோ அல்லது அவர் மீது அவதூறு சுமத்துவதோ இல்லை. அதற்கு எனக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், சிலகாலமாகவே, தமிழ்த் திரையுலகில் காப்பி அடிப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், அதை முதன்முதலில் பெருவாரியாக ஆரம்பித்து வைத்த நபரைப் பற்றி எழுதினால்தான் பொருத்தம் என்பதால், இக்கட்டுரையை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் மூல காரணம்.
இன்னொரு காரணம் – சில வாரங்கள் முன், ராவணன் வெளிவந்த சமயம், மணிரத்னத்தைத் தமிழ் வலையுலகம் போட்டுத் தாளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் – மணிரத்னம் உலகப் படங்களைச் சுடுகிறார் என்பது. அது உண்மைதான். ஆனால், கமல் அளவு காப்பியடித்தது யாரும் இல்லை என்பதே உண்மை. ஆகவேதான் இக்கட்டுரை.
நான் அவசரப்பட்டு இதைக் கூறவில்லை. இதோ கட்டுரையின் முக்கிய பாகத்தில் அந்த ஆதாரங்களைப் பார்க்கலாம்.
ராஜபார்வை – கமலின் முக்கியப் படமாகக் கருதப்படுகிறது. அவரது நூறாவது படமும் கூட. கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, தரமான படங்களைக் கமல் கொடுக்க ஆரம்பித்ததற்கு இது ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது. படத்தின் கதை, ஒரு குருட்டு வயலினிஸ்ட் பற்றியது. அவனுக்கு அறிமுகமாகும் ஒரு துடிப்பான பெண், அவனது வாழ்க்கையில் கொண்டுவரும் மகிழ்ச்சி.. இப்படிச் செல்கிறது கதை. மிகப்பலரால் பாராட்டப்பெற்ற ஒரு படம் இது.
சரி. இப்பொழுது, Butterflies are Free (1972) என்ற படத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். டான் பேக்கர் என்பவன், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் வாழும், பிறவியிலேயே பார்வையிழந்த நபர். அவனது வீட்டு ஓனரின் மகள், அவனது வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஊட்டி, அதன்பின் அவனைப் பிரிந்து சென்றுவிடுகிறாள். அதன்பின், அவனுக்கு அறிமுகமாகும் மற்றொரு பெண், அவன் குருடன் என்றே அறிந்துகொள்ளாமல், அவனுடன் பழகுகிறாள். தனது சிகரெட்டின் சாம்பலை மேஜை மீது அவன் உதிர்க்கும் ஒரு தருணத்தில் தான் அவன் குருடன் என்று அறிந்துகொள்கிறாள். அதன்பின் இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த டான் பேக்கர், ஒரு இசைக்கலைஞனாக ஆக முயற்சிப்பதுதான்.
இரண்டு படங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் கூட, ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டதுதான் ராஜபார்வை என்று புரிந்துகொள்ள முடியும். இதில் வேறு, ராஜபார்வையின் ‘கதை’ என்று கமலின் பெயர் இருக்கும்.