Tuesday, June 26, 2012

சந்தோஷச் சனி!



“ஹலோ... தல... எப்பிடி....?”


“ஆ... ஆ... நல்லலாயிருக்கோம்... பாத்தா தெரியல்லியா...?”


“சூடாக வேணாம்... தல... சும்மா ஒரு பாசத்துல சுகம் விசாரிகிகறதில்லையா... அதுதான்!”


“என்ன தீடீர்னு தல... மூக்குன்னுட்டுக்கிட்டு...?”


“சனிக்கிழமை காலையில எங்கேயிருப்பீங்க தல...?”


“நாங்க எங்க போறது... ஏதோ கிடச்சதத் தின்னுக்கிட்டு இங்கேதானே கிடக்கப்போறம்...!”


“அது இல்ல... சனிக்கிழமை காலைல வீட்டுல இருப்பீங்களா?”


“வீட்டுலதான் இருப்பேன்.... காலைல மார்க்கட் போயிட்டு வீட்டுலதான் இருப்பேன்... என்ன விசயம்....?”


“வீட்டுல டீவியெல்லாம் வேல செய்யுதுதானே...?”


“வீட்டுல இருந்தா டீவி பாக்கிறதுதானே நம்ம தொழில்... சனிக்கிழமை ஏதாச்சும் விசேசமா...?”


“வசந்தம் டீவி ... பார்ப்பீங்களா.....?”


“ஓ.. அதுக்கென்ன... படமெல்லாம் போடுவாங்க... தமிழ்ச் சனல்தானே... வேற என்னத்தைப் பார்க்கிறது?”


“சரியா... பத்துமணிக்கு ‘தூவானம்” என்டு ஒரு நிகழ்ச்சி போகுது... ”


“தெரியுமே... அப்பப்போ பாத்திருக்கேன்...”


“அதுல பாருங்க... நாம பேசுறம்....!”


“நாம எண்டா...?”


“நான் பேசுறன்.”


“ஓஹோ... அதுக்குத்தான் இப்பிடிப் பீடிகையா... ரொம்பக் காலமா ரூபவாஹினியில நீங்க பேசினத்தக் கேட்டுக்கிட்டுத்தானே இருந்தோம்... வசந்தத்துலயுமா...?”


“கோவிச்சுக்காதீங்க... தல... அது வேற... இது வேற.....”


“இது வேறன்னா... என்னா அது?”


“இந்த நிகழ்ச்சியில நம்மளப் பேட்டி எடுத்திருக்காங்க....!”


“.............................................?”


“அப்புடிப் பாக்காதீங்க... ஒரு அரை மணித்தியாலம்தான்... அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க...”


“சரி... எங்க தலை விதி......”


“அப்புடியே மத்தியானம் சாப்பிட்டுட்டு ஒரு நல்ல தூக்கம் போட்டுடுங்க...”


“ஓ.. இதெல்லாம் நீங்க சொல்லித்தான் நாங்க செய்யணுமாக்கும்! மத்தவன் என்ன என்ன செய்யணும்னுதான் ஒவ்வொருத்தனும் இப்போ உபதேசம் பண்ணுறானுங்க...”


“கோவிச்சுக்காதீங்க.. தல...!”


“சரி... ஆளை விடுங்க.... எனக்கு வேலையிருக்கு...”


“கொஞ்சம் இருங்க.... தல...!”


“சொல்லித் தொலையுமய்யா... கெதியாய்...”


“அப்புடியே ஒரு நாலரை போல கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு வந்திடுங்க....”


“ஏன்....?”


“கடுப்பாகாதீங்க... தல...!”


“எந்தநேரமும் ஓடிக்கிட்டேதான் இருக்கோம். ஒரு இடத்தில் ஆறுதலா உக்காந்து நாலு பேர் பேசுறதைக் கேட்டு அனுபவிக்கிறது நாலு பேரைச் சந்தி்ககிறது உடம்புக்கும் மனசுக்கும் நல்லது...! நாம இதைப் பற்றி யோசிக்கிறதே இல்லை....!”


“பிரசங்கத்தை நிப்பாட்டிட்டு விசயத்துக்கு வாங்க... தமிழ்ச் சங்கத்துல என்ன நடக்குது அன்னிக்கு?”


”நம்ம புத்தகம் வெளியாகுதுல்ல... ‘ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழம்....!”


“.......................”


“அது என்ன பல்லுக் கடிக்கிற சத்தமா... வாய்க்குள்ள ஆட்டா ஓடுறமாதிரிக் கேட்குது,,”


“...................................”


“என்ன அப்புடி மொறைக்கிறீங்க...... ஏன் கல்லெடுக்கிறீங்க.... ஐயோ!”

Tuesday, June 19, 2012

யாத்ரா - 21



யாத்ரா - 21 
ஆசிரியர் தலையங்கம்

தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம் ஆறப் போடப்பட்ட போதும் இன்னும் இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயத்தின் மனங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது.

தேசத்தின் சட்டம் பெரும்பான்மைக்கு ஒரு விதமாகவும் சிறுபான்மையின ருக்கு ஒரு விதமாகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சிந்திப்பவர்களும் அமைதியான வாழ்வை விரும்புபவர் களுமான பெரும்பான்மையினரே ஏற்றுக் கொள்கிறார்கள்.

சிறுபான்மைச் சமூகமொன்றின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை அல்லது அலட்சியம் போன்ற காரணிகளால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கை இரத்தத்தில் குளித்து எழுந்திருக்கிறது.

ஒரு சிறுபான்மையின் போராட்டம் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு, மற்றொரு சிறுபான்மையின் மத உணர்வை உரசிப்பார்ப்பதானது வெற்றியாளர் ஒரு போராட்டத்தின் தோல்வியின் மீது எழுந்து நின்று எக்காளமிட்டுச் சிரித்து அவமதிப்பதற்கு ஒப்பானது.

இரண்டு சிறுபான்மைச் சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் ஒரு சமூகம் தனது போராட்டத் தோல்வியில் துவண்டு போய்க் கிடக்க, மற்றொரு சிறுபான்மை சீண்டப்படுவதானது இரண்டு சிறுபான்மைச் சமூகங்களுக்கும் ’அடங்கியிருக்க’ விடுக்கப்படும் பெரும்பான்மையினரின் செய்தியாகவும் கொள்ளப்படலாம்.

பெரும்பான்மையின் வல்லமையைப் பறைŒõற்றுவதற்கும் பெருமையை எடுத்துக் கூறுவதற்குமாகச் சொல்லப்படும் இந்தச் செய்தி இரண்டு சிறுபான்மைச் சமூகங்களையும் ஒரே புள்ளியில் என்றாவது ஒருநாள் கொண்டு வந்து சேர்த்து விடும் என்பதைப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் அவதானிக்க வேண்டும்.

அதன் விளைவுகள் சுபீட்சம் நிறைந்த, ஆசியாவின் அதிசயம் என்ற அழகிய கனவைப் பகற்கனவாகவே மாற்றிவிடலாம்.

இன்னொரு கால் நூற்றாண்டு இலங்கை இரத்தம் சிந்துமாக இருந்தால் நமது அடுத்த பரம்பரை இலங்கையை ஒரு சோமாலியாவாகவே தரிசிக்கும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்து விடக்கூடும்.
------------------------------------------------------------------------------------------------------------


இதழில் இடம்பெற்றுள்ளவை

கவிதை
கிளர்வாதை ..............................................  ஆதித்தன்

என் மனக் குருவிகள் ............................. எஸ்.நளீம்

வென்று வருவோம் விரை ................. லுணுகல ஸ்ரீ

விடை காற்றினில் வீசிடுதே ............. பொப் டிலான் - தமிழில் - மணி

குறுங்கவிதைகள் ...................................

மனசு பற்றிய இரண்டு கவிதைகள் . கிண்ணியா நஸ்புல்லாஹ்

விடையில்லா வினாக்கள் ................  கவிமணி எம்.எச்.எம்.புகாரி

ஜமீல் கவிதைகள் ..................................

கட்டுரை
இணையத்தளங்களில் நிரம்பி வழியும் கவிதைகள் ............ நிந்தவூர் ஷிப்லி
பெண் பற்றிய புனைவு ...............................  லரீனா அப்துல் ஹக்

சிறுகதை
அணில் ......................................................   ஆர்.எம்.நௌஷாத்

சேட்டைக்காரக் கறுப்புப் பெண் .....   அனுஷ்க திலகரட்ண - தமிழில் - ரிஷான் ஷெரீப்

பத்தி
வள்ப்புப் பிள்ளைகள் .................... ............ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

பனிக்கட்டியாறு ..........................................  ராஜாமகள்

புள்ளி
யாழ் அஸீம்; ................... ...........................   அஷ்ரஃப் சிஹாப்தீன்

நெடுங்கதை
ஆசிரியம் ................................... ...............  மருதமுனை மஜீத்

நாடகம் 
பறக்கும் சிறகுகள் .................................. சில்மியா ஹாதி

அரசியல்
எதிர்கால அரசியலில் சிறுபான்மைக் கட்சிகள் -கருத்துக்கள்

இணையம்
பின்நவீனத்துவம் ....................................... ஈகரை

செய்தி 
இலங்கையராதல் ......................................

அஞ்சலி
மருதமுனை மஜீத்
ஷேக்கோ
ராஜேஸ்வரி சண்முகம், நூறானியா ஹஸன்,
சண்முகம் சிவலிங்கம், ஏ.ஆர்.ஏ.அஸீஸ்

Saturday, June 16, 2012

அழகு தமிழில் அறபுக் கதைகள்


(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை)

அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் ‘யாத்ரா’ என்ற பிரசித்தி பெற்ற கவிதை இதழின் ஆசிரியர். கவிதை, சிறுகதை, வானொலி நாடகம், பத்தியெழுத்து, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம் என்று பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த இவர், தம்மை ஒரு சிறந்த மொழி பெயர்ப் பாளர் என்ற வரிசையிலும் பெயர் பதித்துள்ளார் என்பதை, ஈராக்கியக் கவிஞர் ஜமால் ஜூமாவின் “உன்னை வாசிக்கும் எழுத்து” (2007) எனும் நெடுங் கவிதையை மொழிபெயர்த்து அளித்ததன் மூலம் நிரூபித் துள்ளார்.

இது தவிர, “காணாமல் போனவர்கள்” (1999), “என்னைத் தீயில் எறிந்தவள்” (2008) என்பன இவரது கவிதைத் தொகுதிகள். “புள்ளி” (2007), “கறுக்கு-மொறுக்கு - முறுக்கு” (2009), “புல்லுக்கு அலைந்த மில்லா” (2009) என்பன இவர் படைத்த சிறுவர் கதைகள். பல்சுவைப் பத்திகளின் தொகுப்பான “தீர்க்க வர்ணம்” (2009), பயண அனுபவங்களைச் சுவைபடக் கூறும் “ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை” (2009) என்பன இவரது குறிப்பிடத்தக்க பிற படைப்புக்களாகும்.

அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்து தமிழ்ச் சேவை, முஸ்லிம் சேவை, கல்விச் சேவை போன்றவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்தும், தொகுத்து வழங்கியும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றிருந்தார். முஸ்லிம் சேவையில் இவர் நடத்திய “அறிவுக் களஞ்சியம்” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்துடன், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தில் சுமார் 10 வருட காலத்துக்கும் மேலாகச் செய்தி அறிவிப் பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். “நாட்டவிழி நெய்தல்” (http://ashroffshihabdeen.blogspot.com/ ) என்ற வலைப் பூவுக்குச் சொந்தக்காரரான இவர், அதில் சுவாரசியமான பல பதிவுகளைத் தொடர்ச்சியாகத் தருவதன் மூலம் இணைய உலகிலும் உற்சாகமாக வலம் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்க இலங்கைக் கிளையின் உபதலைவராகப் பணியாற்றி வரும் இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்திலும் உப தலைவராகச் செயற்பட்டுள்ளார். அஷ்ரஃப் சிஹாப் தீன், 2002 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியதோடு, 2011 ஆம் ஆண்டில் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக் குழுச் செயலாளராகவும் இருந்து காத்திரமான பங்காற்றியுள்ளார். இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இயங்கி வருகின்றார்.

ஓர் ஆசிரியராகப் பணிதொடங்கி இலங்கை குடிவரவுத் திணைக்கள அதிகாரியாய் முன்னேறிய அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள், எத்தனையோ ஆற்றல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு மூத்த படைப்பாளியாகத் தமிழ்கூறும் நல்லுலகில் தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றிருந்தும் பழகுதற்கு எளியவராய், இளந் தலைமுறையினரின் திறமைகளுக்கு எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பவராய் இருப்பது விதந்துரைக்கத் தக்கதாகும்.

இவருடைய படைப்புக்கள் பல்வேறு தரப்பட்டவர்களையும் உள்வாங்கி, தமக்கெனத் தனியானதொரு வாசகர் வட்டத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவரது படைப்புக்களில் “ஸைத்தூன்” என்ற கவிதை 1985 ஆம் ஆண்டுகளில் நாட்டில் நிலைகொண்டிருந்த நெருக்கடியான அரசியல் சூழலை அடியொட்டியதாய் அமைந்திருந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பத்திரிகை, சஞ்சிகைகளில் பலமுறை மீள் பதிப்புச் செய்யப்பட்டுத் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பெரும் புகழை ஈட்டித்தந்த இந்தக் கவிதையும், “என்னைத் தீயில் எறிந்தவள்” என்ற அற்புதமான கவிதையும் “மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” (2002) தொகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் அந்த நூலின் பிரதான தொகுப்பாளரும்கூட.

அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் “என்னைத் தீயில் எறிந்த வள்” கவிதைத் தொகுதிக்கு 2009 ஆம் ஆண்டு அரச சாகித்திய விருது கிடைத்தது. அண்மையில் காயல்பட்டினத்தில் இடம்பெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இவர், ‘தமிழ்மாமணி’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இவரது படைப்புக்களில் என்னை மிகவும் கவர்ந்தது, கலாநிதி எம். எஸ்.எம். அனஸ் அவர்களின் கனதியான அணிந்துரையோடு உண்மைக் கதைகளின் தொகுப்பாக வெளிவந்த “ஒரு குடம் கண்ணீர்” (2010) நூல்தான். அதிகார மமதையாலும் அரச யந்திரத்தின் எதேச்சதிகாரச் செயற்பாடுகளாலும், பகைமையின் குரோதத்தாலும் ஆறறிவு படைத்த மனிதர்கள் மிருகங்களைவிட நிலை தாழ்ந்து போன மானுட அவலங்களை நெஞ்சை உலுக்கும் அதியற்புதமான நடையில் இந்த நூல் பேசி இருக்கிறது. எடுத்ததும் படித்து முடிக்காமல் கீழே வைக்க விடாமல் கட்டிப் போடும் அப்படியோர் ஆற்றொழுக்கான தமிழ்நடை. பொதுவாக இஸ்லாமிய மார்க்க நூல்களையே படிக்கும் வழக்கமுடைய 60 வயதான என்னுடைய மாமியார் தற்செயலாகத் தான் இந்த நூலைக் கையில் எடுத்தார். படிக்கத் தொடங்கியவர் இரண்டு நாட்களுக்குள் படித்து முடித்துவிட்டுச் சொன்னார், “இப்படியான கொடுமைகளும் உலகத்துல நடக்குதா மகளே? மனசெல்லாம் பாரமாப் போச்சு.” வயது வித்தியாசமின்றிப் படிப்பவரை ஈர்த்துக் கொள்ளும் அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர் இவர் என்பதை உணர்த்தும் ஒரு சின்னச் சம்பவம் இது.

இவருடைய “ஒரு குடம் கண்ணீர்” நூலுக்குச் சாகித்திய விருது கிடைக்கும் என்ற பரவலான எதிர்பார்ப்புக்கு மாற்றமாக தேசிய சாகித்திய விழாவில் (2011) வெறுமனே ஒரு சான்றிதழ் மட்டுமே வழங் கப்பட்டமையானது இலக்கிய உலகில், குறிப்பாக இணையத்தில் பலத்த சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருப்பதை நாமறிவோம். இந்த நூலைப் பற்றி 2011 ஆகஸ்ட் 17 ஆம் திகதி ‘இந்தியா டுடே’ சஞ்சிகையில் வெளிவந்த குறிப்பில், “ஒரு மரத்தையும்கூட மனித உரிமைப் போராளியாக ஆக்கி விடும் எழுத்து அஷ்ரஃபுடையது” என்று இடம் பெற்றிருந்தமை இங்கு நினைவு கூறத்தக்கது.

Wednesday, June 13, 2012

நீதியரசர் அப்துல் வஹாப் சாஹிப் மறைந்தார்!




பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் சிறந்த பன்னூலாசியரியரும் தேர்ந்த திறனாய் வாளரும் தெளிந்த கட்டுரையாசிரியரும் நிறைந்த கல்வியாளரும், சீரிய எழுத்தாளரும் அரிய பணிகள் ஆற்றிய சமுதாயச் சேவையாளருமாகிய நீதியரசர் மாண்பமை அல்ஹாஜ் எம். அப்துல் வஹாப் இன்று (13.06.2012) புதன் கிழமை) காலை மாரடைப்பால் வபாத்தானார்.


மேற்குறித்த தகவல் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் பேரா. சே.மு.மு. முகமதலி அவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். அப்துல் வஹாப்சாஹிப் அவர்களது மறைவுச் செய்தி முதலில் எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் மலேஷியாவிலிருந்து சகோதரர் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அவர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

(எனது நூல் வெளியீட்டின்போது - பேரா. சேமுமு.முகமதலி, பெரியார்தாசன் அப்துல்லாஹ், அப்துல் வஹாப் சாஹிப், பேரா. அப்துல் ரஸாக், கலைமாமணி உமர், அஷ்ரஃப் சிஹாப்தீன், ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன், அப்துல் அஸீஸ் பாக்கவி - இடமிருந்து வலமாக)

கடந்த வருடம் சென்னையில் நடந்த எனது “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு விழாவுக்கு அப்துல் வஹாப் சாஹிப் அவர்கள் தலைமை வகித்தது நூலையும் வெளியிட்டு வைத்ததை மறக்க முடியாது. இஸ்லாமிய இலக்கியம் சார் விடயங்களில் அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இயங்குவோரிடமிருந்து தன்னைத் தவிர்த்துக் கொண்டு அவர் சமுதாய நலன்கருதி உழைத்தோருடன் இணைந்திருந்தார்.

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்துடன் இணைந்த சகோதர இலங்கை அமைப்பான இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் என்ற வகையிலும் தனிப்பட்ட வகையிலும் அன்னாரின் மறைவால் கவலையுற்றிருக்கும் அன்னாரின் குடம்பத்தினருக்கும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு சுவர்க்கத்தை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.

Friday, June 8, 2012

பதறிச் சிதறுதல்




நண்பர்களான இரண்டு இமாம்கள் (வழிகாட்டத்தக்க அறிஞர்கள்) ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் அரசினால் நியமிக்கப்பட்ட நீதிபதியாவார்.

அப்போது தனது கண்ணொன்றைப் பொத்திப் பிடித்தபடி அவ்விடத் துக்கு ஒரு குடியானவன் வேகமாக வந்து சேர்ந்தான். கை விரல்களு டாக இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிபதியைப் பார்த்து ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு அவன்; தனது கண்களில் ஒன்றைக் குத்திக் குருடாக்கி விட்டதாக முறைப்பாடு செய்தான். நீதிபதி முறைப் பாடு செய்தவனை விசாரிக்கத் தொடங்கினார். விசாரணை முடிந்த பின் நீதிபதி நிமிர்ந்து உட்கார்ந்தார். தீர்ப்பை வழங்கி விடுவாரோ என்ற எண்ணத்தில் நண்பரான இமாம், நீதிபதியைச் சைகையால் அமைதிப் படுத்தினார்.

பின்னர் ‘நீங்கள் இவனுடைய கண்ணைக் குத்தியவனை உங்கள் கண்களால் காணாமல் தீர்ப்பை வழங்கி விட வேண்டாம். ஏனெனில் ஒரு வேளை அவனுடைய இரண்டு கண்களையும் இவன் குருடாக்கியிருக்கவும் கூடுமல்லவா’ என்று சொன்னார்.

ஒருவர் பற்றி இன்னொருவர் சொல்ல அதைக் கொண்டு ஒரு தலைப்பட்சமாகக் குற்றப் பத்திரிகை வாசிக்கும் சந்தர்ப்பங்களில் நினைவை விட்டு அகலாத இந்த இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவத்தை நான் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஒருவர் சம்பந்த மாக மற்றொரு நபர் சொல்லும் விதத்தை நம்பி சில வேளைகளில் அவசரமான முடிவுகளை நாம் எடுத்து விடுகிறோம். அது பின்னர் தவறான முடிவு என்பது தெரிய வரும்போது மனது குமைந்து போகிறது.

உண்மைக்குண்மையான நிலைமை என்ன என்பது சிலவேளை ஒரு சில மணித்துளிகளிலோ சில நாட்களிலோ மாதங்களிலோ ஏன் வருடங்கள் கழித்தோதான் தெரிய வருகிறது. நிகழ்வுகளும் சம்பவங்களும் சாதரணமானவையாக அல்லது பாரதூரமானவையாக இருக்கலாம். ஆனால் நியாயம் புரியவருகிற போது மன உறுத்தல் ஆரம்பமாகி விடுகிறது. அப்போது உறுத்தும் மனச்சாட்சியை அமைதிப்படுத்த நம்மை நாமே திட்டிக் கொள்கிறோம். நாம் பெருந்தன்மை உள்ளவர்களாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறான அனுபவம் நம்மில் அநேகமாக எல்லோ ருக்கும் ஆகக் குறைந்தது ஒரு முறையாவது நிகழ்ந்திருக்கும்.  பின்வரும் சம்பவத் தைப் படியுங்கள்.

Monday, June 4, 2012

‘யாத்ரா’ கவிதை இதழோடு ஒரு யாத்திரை!


இணைத் தலைமை வகித்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் கவிஞர் சோ.பத்மநாதன்

2000 ம் ஆண்டு ஜனவரியில் ‘யாத்ரா’ முதலாவது இதழ் வெளிவந்தது. கவிதைகளுக்கான இதழாகப் புத்தாயிரத்தில் வெளிவந்த தமிழ்ச் சஞ்சிகை இது. கவிதை இதழாக இதுவரை 19 இதழ்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவ்வாண்டு அதாவது 2012 ஜனவரியிலிருந்து அது கலை, இலக்கிய இதழாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

இலங்கையில் தமிழில் வெளிவந்த கவிதைச் சஞ்சிகைகளின் ஆயுட்காலம் மிக மிகக் குறைவானது என்பதை நமது தமிழ் இலக்கியப் பரப்பு நன்கறியும். நான் அறிந்த வரை கவிதைக் கையேடாகச் சாய்ந்தருதிலிருந்து என்.ஏ. தீரன் - ஆர;.எம். நௌஷாத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘தூது’ - 16 இதழ்கள் வெளிவந்தன. தற்போது கவிதைக் கையேடாகத் திருகோணமலையிலிருந்து  எஸ்.ஆர். தனபாலசிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு ‘நீங்களும் எழுதலாம்’, 22 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு சஞ்சிகை என்ற அளவில் ‘யாத்ரா’ மாத்திரமே 19 இதழ்களைத் தொட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.

‘யாத்ரா’, ஒரு கால ஒழுங்கில் வெளிவந்ததில்லை. தைப்பூசம், பொங்கல், சித்திரைத் திருநாள், நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள், நபிகளார் பிறந்த தினம், கிறிஸ்மஸ், மற்றும் சர்வதேச விசேட தினங்கள் பற்றி வெளிவரும் கலண்டர் கவிதைகளை ஏற்றுக் கொள்ளும் சஞ்சிகையால் வேண்டுமானால்  கால ஒழுங்கில் வெளிவர முடியுமே தவிர, நல்ல கவிதைகளைக் கொண்டு ஒரு கவிதைச் சஞ்சிகை கால ஒழுங்கில் வெளிவர முடியாது என்பது எனது முடிபு.

கவிதையானது தனக்குரிய மொழியையும் கவிஞனையும் தேடிக் கொண்டு எப்போது வெளிக் கிளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்காக ‘யாத்ரா’ சுமந்து வந்த கவிதைகள் யாவும் மிகவும் அற்புதமானவை என்று நான் மறுவார்த்தையில் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

வசன கவிதை தோற்றம் பெற்ற பிறகு கவிதை எது, கவிதை அல்லாதது எது என்ற சிக்கலும் தோன்றி விட்டது. எனவே இந்த இடத்தில் - அற்புதமான கவிதை, அழகானய கவிதை, நல்ல கவிதை, கவிதை, சாதாரண கவிதை, பரவாயில்லைக் கவிதை என்று ரகம் பிரிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. ‘யாத்ரா’ சுமந்து வந்த கவிதைகளில் எழுபது வீதமானவை வாசகர்களினால் ‘நல்ல கவிதைகள்தாம்’ என்று ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக அமைந்திருந்தன என்பதில் நமக்கும் ஒரு திருப்தியும் ஆறுதலும் இருக்கிறது.

‘யாத்ரா’ தனது முதலாவது இதழிலிருந்தே மொழி பெயர்ப்புக் கவிதைகளைச் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறது. அவற்றில் அநேகமானவை சிங்களக் கவிதைகள். அனுர கே. எதிரிசூரிய, அய்வோ விராந்த பெர;னாண்டோ, சந்தியா குமாரி லியனகே, விஜயரத்ன தேனுவர, என்.எம். நாளக்க இந்திக்க, செனிவிரத்ன கே. பண்டார, :தம்பகொட ஜினதாச, மஞ்சுள வெடிவர்த்தன, அனோமா ராஜகருண, தர்சினி ஜெயசேகர, என்.டீ. விதான ஆரச்சி, ஜகத் சந்தன அதிகாரி, சரத் விஜேசுந்தர, சமந்த பிரதீப், திலின வீரசிங்க, ஜயந்த தெனிபிட்டிய, தரங்க சம்பத் ஹேவகே, பியன்காரகே பந்துல ஜெயவீர, தனிகா அத்துக்கோறள, சமந்த இலேபெரும, ஜகத் சந்தன அதிகாரி, ஆரியபால ஆரச்சி. தர்மசிரி பெனடிக்ட், பிரகீத் குணதிலக்க, செனரத் கொண்ஸால் கோரள, விகும் ஜினேந்திர, குமார ஹெட்டியாரச்சி ஆகியோரது சிங்களக் கவிதைகளைக் கவிஞர் இப்னு அஸூமத் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.

இவர்களில்; அனுர கே எதிரிசூரிய, அய்வோ விராந்த பெர்னாண்டோ ஆகியோர் தவிர வேறு யாருக்கும் ‘யாத்ரா’வில் தமது கவிதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த தகவல் தெரியாது. சஞ்சிகையின் ஆசிரியரான எனக்கும் அவர்களைத் தெரியாது. பொதுவாக சிங்கள இலக்கியப் பரப்பில் அறியப்பட்ட ஒரு சிலரைத் தவிர, அநேகர் புதியவர்கள். இப்னு அஸூமத், கவிதை எழுதியவர் புதியவரா பழையவரா பெயர் பெற்றவரா இல்லையா என்ற வேலிகளைச் சட்டை பண்ணாமல் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவரும் நல்ல சிங்களக் கவிதைகளைத் தேர்ந்து மொழிபெயர்த்துத் தந்துள்ளார். ‘யாத்ரா’ முதலாவது இதழில் வெளிவந்த கவிதையை யார் எழுதினார்கள் என்ற விபரம் இல்லை. முல்லைத்தீவுச் சமரில் இறந்து கிடந்த ஒரு பெண் போராளியின் உடலைக் கண்டு அரச படை வீரன் ஒருவனுக்கு எழுந்த உணர்வே கவிதையாகியிருக்கிறது.

:கோமோ ஜோ - சீனா, குளோர்டியா லார்ஸ் - எல்சல்வடோர், ஸீரா அன்டெஸ் - கியூபா, ஹாரிஸ் ஹாலிக் - பாக்கிஸ்தான், ஜோஸே உடோவிச் - சுலோவேனியா, கிறிகோர் விட்டெஸ் - குரோஷியா, லால்சிங்டில் - பஞ்சாபி, ம்தேஜ் ;போர் - சுலேவேனியா, யொவான் டுசிச் - சேர;பியா, மிலாயே கொனஸ்கி - மஸிடோனியா, கூரீதத்தா மற்றும் மஹ்மூது தர்வேஸ், நிஸார் கப்பானி ஆகியோரின் கவிதைகளைப் பேராசிரியர் சி. சிவசேகரம் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இவை தவிர தனது கவிதைகள் மூலமும் அவர் பெரிதும் பங்களித்துமுள்ளார்.

அத்னான் அலி ரிழா, ஹாமித் அப்துர் ரஹ்மான், அப்துர்ரஹ்மான் பர்ஹானா, அப்துர் ரஸ்ஸாக் ஹூஸைன் ஆகியோரது கவிதைகள் அறபு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமானவை. ஏ.சி,ஏ. மஸாஹிர் இவற்றை மொழிபெயர்த்து வழங்கினார;. ஃபைஸ் அகமட் ஃபைஸ், ஆகா ஷாஹித் அலி, அலி சர்தார் ஜஃப்ரி மற்றும் பாரசீகக் கவிஞர்களான நிமாயூஷிஜ், மெஹ்தி அஹ்வான் சேல்ஸ், லீஸா ஸூஹைர் ஆகியோரது கவிதைகளைப் பண்ணாமத்துக் கவிராயரும் பென் ஒக்ரி, ஸைத் ஷாகிர் அல் ஜிஸி, கே.எம். ஸைதா ஆகியோரது கவிதைகளை எம்.கே.எம். ஷகீபும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். றீஸன் றோல் என்ற தமது நண்பரான ஸ்பானியக் கவிஞரின் கவிதைகள் சிலவற்றை கவிஞர் ஏ. இக்பால் அவர்களும் அம்ரிதா ப்ரீதம் எழுதிய கவிதையொன்றை கெக்கிராவ ஸூலைஹாவும் மொழிபெயர்த்துள்ளனர்.

இவற்றுடன் யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்த்த பாக்கிஸ்தான் பெண் கவிஞர் கிஷ்வர; நஹீத், இன்குலாப் மொழிபெயர்த்த சுபாஷ் முக்யோபாத்தியாய், ஜலீஸ் மொழிபெயர்த்த இஸ்ரேலியக் கவிஞர் ஏலி ரெண்டான் ஆகியோரது கவிதைகளும் ‘யாத்ரா’வில் இடம் பெற்றுள்ளன.

‘யாத்ரா’ வில் இடம் பெற்று வந்த மற்றொரு முக்கிய அம்சம் படைப்பாளிகள் அறிமுகம். அவரவர் ஈடுபாட்டுக்கும் நமக்குக் கிடைத்த தகவல்களுக்கும் இயைபாக கவிஞர்கள் பற்றிய தகவல்கள் கட்டுரைகளாகவும் குறிப்புகளாகவும் இடம்பெற்று வந்துள்ளன. புரட்சிக் கமால் சாலிஹ், அண்ணல், எம்.சி.எம். சுபைர், அப்துல் காதர் லெப்பை, அலி சர்தார் ஜப்ரி, ஆ.மு ஷரிபுத்தீன் புலவர், முகம்மது காஸிம் புலவர், பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றிய கவிஞர் ஆறுமுகம், ஆகா ஷாஹித் அலி, ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இப்னு அஸூமத், என்.ஏ.தீரன், என். நஜ்முல் ஹூஸைன், அக்கரை மாணிக்கம், ஏ.எம்.எம். அலி, வி.ஏ.ஜூனைத், மஹ்மூது தர;வேஷ், மெஹ்தி அஹ்வான் சேல்ஸ், கவிஞர் அபூபக்கர், கலையன்பன் ரபீக், தவ்பீக் ரபாத், காத்தான்குடி பௌஸ், ஷார்ல் போதலயர், நற்பிட்டிமுளை பளீல், இர்ஷாத் கமால்தீன், கிண்ணியா அமீர் அலி, சு.வில்வரத்தினம், கைஃபி அஸ்மி, மருதூர் ஏ மஜீத் ஆகியோர் 19 இதழ்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அன்பு ஜவஹர்ஷா, பாவலர் பஸீல் காரியப்பர், பண்ணாமத்துக் கவிராயர், அல் அஸூமத், மு. சடாட்சரன், திக்குவல்லைக் கமால், அன்பு முகையதீன், மருதமைந்தன், தாஸிம் அகமது, அனுர கே. எதிரிசூரிய, மருதூர;க் கனி, ஜவாத் மரைக்கார், இந்திய சாஹித்ய அகடமியின் செயலாளராகவிருந்த மலையாளக் கவிஞர் பேரா. கே. சச்சிதானந்தன் ஆகியோரின் செவ்விகளும் இடம்பெற்றுள்ளன.

கவிதை இலக்கியம் தொடர்பான கட்டுரைகளும் ‘யாத்ரா’வில் இடம்பெற்று வந்துள்ளன. ‘ஹைக்கூ கவிதை’ - இந்திரா பார;த்தசாரதி, ‘தமிழ்க் கவிதை - நேற்றும் இன்றும் இனியும்’ - செ. யோகநாதன், ‘பங்கரிலிருந்து பல்கலைக் கழகம் வரை’ - சமுத்ர வெத்தசிங்க (தமிழில் - இப்னு அஸூமத்), ‘கவிதை’ - ஏ. இக்பால், ‘குறும்பா’ - அல் அஸூமத், ‘புதுக்கவிதையில் இஸ்லாமிய புராணவியல் படிமங்கள்’ - எம்.எச்.எம். ஷம்ஸ், ‘ஒலிநயமும் திறனாய்வுக் கொள்கைகளும்’ - கே.எஸ். சிவகுமாரன், ‘சுபத்திரன் கவிதைகள் - ஓர் அறிமுகக் குறிப்பு’ - லெனின் மதிவானம், ‘குறிஞ்சித் தென்னவன் - ஓர் அறிமுகக் குறிப்பு’ - அந்தனி ஜீவா, ‘கவிதைத் திறனாய்வு’ - கே.எஸ். சிவகுமாரன், ‘சாதாரண பொதுமகனைப் பொருட்படுத்தாத போக்கால் கவிதை உலகம் இருண்டு வருகிறது’ - க. இரகுபரன், ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய்’ - மருதமுளை ஹஸன் மௌலானா, ‘சின்னச் சின்னச் சிங்களக் கவிதைகள்’ - இப்னு அஸூமத், ‘காசி ஆனந்தன் ஆக்கங்கள் ஒரு நோக்கு’ - (சுடர் சஞ்சிகை), ‘மறக்க முடியாத மக்கள் பாடகன் கோவிந்தசாமித் தேவர் - அந்தனி ஜீவா, ‘புவலர் மணி பெரியதம்பிப் பிள்ளையின் கவிதையியல் நோக்கு’ - ஹஸன் மௌலானா, ‘துரத்தப்பட்ட கவிஞன் அப்தாப் ஹூஸைன’; - (தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்), ‘சிறைப்பட்ட கவிதைகள் - பிரசன்ன அதிகாரி (தமிழில் - இப்னு அஸூமத்), ‘நிமாயூஷிஜூம் பாரசீகக் கவிதையும்’ - (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்), ‘மக்கள் கவிதைகளும் அவர் தம் வாழ்வும்’ - கொங்கிதொட்ட பிரேமரட்ன (தமிழில் - கவிஞர் ஆறுமுகம்), ‘பொரஸ்ட் - தோமஸ் இரட்டையர்கள்’ - எம்.பி. மத்மலுவ் (தமிழில் - மாஞ்சோலை ஏ.கே. ரஹ்மான்) ‘கவிதை மதிப்பீடு’ - நபீலா முக்தார் (தமிழில் - மாஞ்சோலை ஏ.கே. ரஹ்மான்) ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ - சிதம்பரப்பிள்ளை சிவகுமார், ‘கவிதைகள் , தீர்க்கதரிசிகள், அரசியல் - ரேச்சல் கல்வின் (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்) ‘தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் தூதுக் கவிகளில் காகம்’ - மருதூர் ஏ மஜீத், ‘இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ - ஏ.எம். சமீம், ‘எம்.ஏ. நுஃமானின் நிலம் எனும் நல்லாள்’ - றமீஸ் அப்துல்லாஹ், ‘அறபுக் கவிதை - ஆன்மாவினுள் ஒரு துரிதப் பார்வை’ - காஸி அல்குஸைபி (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்). இவற்றுள் ஒரு சில கட்டுரைகள் இணையம் மற்றும் சஞ்சிகைகளிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை.

வ.அ.இராசரத்தினம் தமிழாக்கிய தூர்சீனாவின் பூவரசம்பூ, தீன் குறள், மைலாஞ்சி, எழுதாத உன் கவிதை, உயிர்த்தெழல், இருத்தலுக்கான அழைப்பு, நீ வரும் காலைப் பொழுது, வேட்டைக்குப் பின், அழகான இருட்டு, பண்டாரவன்னியன், தூண்டில் இரைகள், பூமிக்கடியில் வானம், ஆயிரத்தோராவது வேதனையின் காலை, எலும்புக்கூட்டின் வாக்குமூலம், திருநபி காவியம், ஓவியம் வரையாத தூரிகை, மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் ஆகிய கவிதை நூல்கள் பற்றிய விமர்சனங்களும் நயக்குறிப்புகளும் இடம்பெற்றிருக்கிறன.

மேலே சொல்லப்பட்ட தகவல்களில் அதிக அளவில் முஸ்லிம் நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். எனது நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்தாளரான ஒரு தமிழ் நண்பர் இது பற்றி ஒரு முறை என்னிடம் வினாத் தொடுத்தார். “நீங்கள் ஒரு பங்களிப்பை யாத்ராவுக்கு வழங்காமல் இந்த வினாவைத் தொடுப்பது நியாயமற்றது” என்று அவருக்கு நான் பதில் சொன்னேன்.

Friday, June 1, 2012

பவள விழாக் காணும் பன்னூலாசிரியர்




தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த பன்னூலாசிரியரும் பத்திரிகையாளரும் நாடகத் துறை விற்பன்னருமான மானா என அழைக்கப்படும் மானா எம். மக்கீன் அவர்களுக்கு கடந்த 29.05.2012ல் 75 வயது நிறைவடைகிறது.

என்னை முதன் முதலில் மேடை நாடக நடிகனாக்கியவர்.

மானாவின் 75வயது நிறைவு குறித்து பத்திகைகளில் தகவல்களும் செய்திகளும் வாழ்த்துக் கவிதைகளுமாகத் தூள் கிளம்புகிறது. தொலைக் காட்சிகள் அவரை அழைத்துப் பேட்டி எடுத்து கௌரவித்திருக்கின்றன.

சொல்லப்போனால் ஓர் அரசியல்வாதியின் பிறந்த நாளுக்கும் மேலான கௌரவம் மானாவுக்குக் கிடைத்திருப்பதானது படைப்பாளிகளுக்குக் கிடைத்த கௌரவம் அல்லவா?

மூத்த எழுத்தாளர்களைச் சந்தித்துக் கதைத்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. அப்படி அடிக்கடி சந்தித்துக் கதைத்துக் கொண்டிருப்பவர்களில் மானாவும் ஒருவர்.

வாழ்த்துத் தெரிவிப்பதற்காக நேற்று அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தேன். இன்னும் ஒரு 18 வயது இளைஞனின் உற்சாகத்தோடு பேசினார்.

இம்முறை அவர் பிறந்த நாளைக் கொண்டாடிய விதம் நெஞ்சைத் தொடுவது.

மாக்கொளை முதியோர; இல்லத்துக்குச் சென்று அங்கிருந்த முதியோருக்கு ‘நாலடி சீர்’ உணவு வழங்கித் தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார;. ‘நாலடி சீர்’ உணவு என்பது இலங்கை முஸ்லிம்களின் பாரம்பிய விசேட உணவு.


கடந்த வருடம் காயல் பட்டின உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் “சேவைச் செம்மல்” விருது பெற்ற மானாவுடன் கவிஞர் அல் அஸூமத், நான், என்.எம். அமீன், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன்

இந்த ஐடியாவை மானாவுக்குக் கொடுத்தவர் அவரது நிழல் என்று அவர் அடிக்கடி குறிப்பிடும் அவரது மனைவி. மலேசியாவில் வைத்திய மேற்படிப்பில் ஈடுபட்டிருக்கும் அவரது புதல்வி டாக்டர் அஞ்சானா மக்கீன் பிரதீம், சிங்கப்பூரில் இருக்கும் அவரது புதல்வன் அஸீம் அகமது ஆகிய இருவரும் தந்தையாரின் முதியோர் இல்லப் பிறந்த நாள் மகிழ்வுப் பகிர்வில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

“முடியுமானவர்கள் தமது பிறந்த நாளைப் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லங்களில் வாழும் முதியோருடன் இணைந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுவும் தமது பிள்ளைகளையும் அவ்வேளை கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று உணர்ச்சி வசப்பட்டார் மானா.

மானா ஒரு நல்ல முன்னுதாரணம்.

அவர் நூறாண்டு வாழ்ந்து தமிழ்ப் பணி செய்ய எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!