(“விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதை நூலுக்கு பிரபல சிறுகதை எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் அவர்கள் வழங்கிய மதிப்புரை)
அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை ஒரு கவிஞனாக (காணாமல் போனவர்கள் - 1999, என்னைத் தீயில் எறிந்தவள் - 2009), ஒரு பத்தி எழுத்தாளராக (தீர்க்கவர்ணம் - 2009), ஒரு மொழிபெயர்ப்பாளராக (உன்னை வாசிக்கும் எழுத்து - 2007, ஒரு குடம் கண்ணீர் - 2010, ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் - 2011) ஒரு பயண இலக்கியக்காரராக (ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை - 2009) நான் ஏலவே அறிந்திருக்கிறேன்.
சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், பத்தி எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு, கவிதை என்று அகலக் கால் வைத்தாலும் மிக ஆழமாகவே வைத்திருக்கின்றார் - வைக்கின்றார் என்பதை அவருடைய ஒவ்வொரு நூலும் ஊர்ஜிதம் செய்தே வந்துள்ளது.
'ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை' என்னும் பயண அனுபவ நூல் - எழுபது பக்கங்களே கொண்ட அந்தச் சின்ன நூல் இவருடைய பயண அனுபவங்களை எவ்வளவு அற்புதமாகப் பதிவு செய்கின்றது!
அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் பயண நூல்கள் பற்றிப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'குறிப்பிட்ட பயண அனுபவங்களையும் பார்த்த, கேட்ட விடயங்களையும் கொண்டு சுவாரஸ்யமாகவும் அறிவுபூர்வமாகவும் எழுதும் சிறு பிரிவினருக்கான சிறந்த உதாரணம் அஸீஸ்' என்னும் குறிப்பே என் நிலைவிலோடியது, இந்தச் சின்ன நூலை வாசித்த போது.
நம்மை மறந்து வாசிக்கச் செய்யும் சுகானுபவம் எல்லா எழுத்துக்களிலுமா கிடைக்கிறது!
'விரல்களற்றவனின் பிரார்த்தனை' எனும் இந்தத் தொகுதி மூலம் தன்னை ஒரு பேசப்படவேண்டிய - விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டிய சிறுகதையாளனாகவும் நிரூபித்துக் கொள்கின்றார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.
'எல்குறொஸ்' செயற்கைக் கோளிலிருந்து பிரியவிருக்கும் ஒரு ஏவுகணை சந்திரனில் செய்யப்போகும் வித்தைகள் பற்றிப் பேசும் 'அவ்வெண்ணிலவில்' கதையில் நாஸா விண்ணாய்வுக் கூடம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் அஷ்ரஃப்:-
'நாஸா விண்ணாய்வுக் கூடத்தில் கால் இடறினால் ஒரு விஞ்ஞானி மேல்தான் விழ வேண்டும். விழுபவனும்கூட ஒரு விஞ்ஞானியாகத்தான் இருப்பான்...'
நமது இலக்கிய உலகும் அப்படித்தான் இருக்கிறது. தங்களுக்குத் தாங்களே பட்டங்கள் சூட்டிப் பறக்க விட்டுக் கொண்டும் பறந்து கொண்டும் கால் இடறினால் இன்னொரு பட்டத்தில் விழுந்து கொண்டும்...
கதை, கதையாகத்தான் வந்து குவிகின்றது. இலங்கையில் ஒரு மாதத்துக்குச் சுமார் 150 லிருந்து 200 வரை கதைகள் எழுதப்படுகின்றன. ஒரு வருடத்துக்கு எத்தனை என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தச் சின்ன இலங்கையிலேயே இப்படியென்றால் தமிழ் நாட்டில்...? ஆண்டுக்கு 5000 கதைகள் போல் எழுதப்படலாம். ஒரு பக்கக் கதைகள் உட்பட.
வருடத்தின் சிறந்த கதைகள் என்று ஒரு 12 சிறுகதைகளைத் தெரிவு செய்து நூலாக்கும் இலக்கியச் சிந்தனை அமைப்பு நல்ல கதைகள் கிடைக்காத சிரமத்தால் தங்கள் பணியினைக் கைவிட்டு விடும் உத்தேசத்தில் இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
அங்கே இலக்கியச் சிந்தனையும் இங்கே தகவமும் திணறித்தான் போகின்றன, நல்ல சிறுகதைத் தேடலில்.
நம்மில் நிறையப்பேருக்குச் சிறுகதை எழுதுவது என்பது ஒரு லேசான விளையாட்டான விசயமாகப் போய்விட்டது.
'இந்தக் கதை வேண்டாம். வேறொன்று தருகின்றீர்களா?' என்று கேட்பார் பத்திரிகையாசிரியர்.
'நாளைக்குக் கொண்டு வர்ரேன் சார்! எப்பிடியும் அடுத்த வாரம் வந்துடணும்!' என்று கூறிச் செல்பவர்களை நான் நிறையவே அறிந்திருக்கிறேன்.
அவசரமாகக் கற்பனை பண்ணி, அவசர அவசரமாக எழுதி, அவசரமாகப் பேப்பரில் போட்டுக் கொள்வதால்தான் இந்தக் கீழ் நிலை.
ஒரு இரண்டு நாள் குப்பைக்காரர் வராவிட்டால் பார்க்க வேண்டுமே எங்கள் ஒழுங்கையை - அத்தனையத்தனை வீடுகளிலும் வீட்டுக்கு இரண்டு மூன்று என்று கலர் கலராய்ச் சிலு சிலுப் பைகள் தோரணமிட்டுத் தொங்கும் அழகை!
உதாரணம் சரியில்லையோ என்னும் நினைவு வருகின்றது. கூடவே அஷ்ரஃபின் துணையும் கிடைக்கிறது.
முதல் கதை 'நாய்ப்பாசம்'.
அந்த நாயின் நடை... அது நடந்து செல்லும் விதம். 'எனது அந்த நாளைய ஆசிரியர் ஒருவரை ஞாபகப்படுத்தியது. வாத்தியாரை நாயுடன் ஒப்பிடுவதாக நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது...' என்றெழுதிச் செல்கிறார்.
கிணற்றில் நீர் ஊறுவது போல் அது மனதில் கிடந்து ஊறவேண்டும் என்கிறார் ஒரு பழைய மேநாட்டுக் கதையாசிரியப் பெண். இந்த அமெரிக்க எழுத்துச் சிற்பியின் (குநசடிநச நுனயெ) கூற்றுப்படி, 'ஒரு சிறுகதை பேப்பரில் அல்லாமல் மனதில் வளர வேண்டும். எழுத்தாளன் மாதக்கணக்கில் அதை மனதில் சுமந்து திரிய வேண்டும்.'
ஒரு சிறுகதையின் பிறப்பைப் பிரசவத்தின் பாடுகளுடன் ஒப்பிடுகின்றனர் அனுபவஸ்தர்கள். சுமந்து திரிதல், வெளிவரத் துடிக்கும் அதன் படபடப்பு, பிறக்கும்போது அது தரும் வேதனை, பிறந்தபின் கிடைக்கும் சுகமான மகிழ்வு... என்று அத்தனையும் அந்த வாசகத்துக்குள் இரண்டையும் இணைக்கின்ற விதம் உயிர்ப்பானது.
சிறுகதை எழுதுவது அப்படி ஒன்றும் லேசான விசயமில்லை எனத் தெரிந்து கொண்டேதான் இந்தத் தீக்குள் விரலை வைக்கும் செயற்பாட்டில் இறங்கியிருக்கிறார் அஷ்ரஃப்.
அவருடைய 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்க'ளும் 'ஒரு குடம் கண்ணீ'ரும் அதை அவருக்கு உணர்த்தியிருக்கும். உபதேசித்திருக்கும்.