Monday, November 25, 2013

இளம்பிறை எம்.ஏ.றஹ்மான் இலங்கை வருகை


கடந்த 23.11.2013 அன்று “இளம்பிறை” எம்.ஏ. றஹ்மான் அவர்கள் இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அன்று பிற்பகல் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் சார்பில் அவருக்கு வரவேற்பும் அவரது ஐந்து நூல்கள் வெளியீடும் நடைபெற்றது.


இலங்கையில் அவர் வசித்த காலத்தில் “இளம்பிறை” சஞ்சிகை வெளியிடப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் பெயர் பெற்ற ஓர் இலக்கியச் சஞ்சிகையாக அது விளங்கியது. இதனால் அவருடைய பெயருடன் அச்சஞ்சிகையின் பெயர் இணைந்து கொண்டது.


நூல்களின் முதற் தொகுதியைப் புரவலர் அல்ஹாஜ் பாயிக் மக்கீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அனைவரும் அவருடனான நட்பு குறித்தும் அவரது வெளியீடுகள், மற்றும் சஞ்சிகை குறித்தும் ஞாபகித்துப் பேசினார்கள்.


எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள் “இளம்பிறை”ச் சஞ்சிகையின் அட்டைப் படம் ஒன்றைக் கொண்டு வந்து அனைவருக்கும் காட்டிப் பேசினார். அவ்வட்டையில் வ.மி. சம்சுதீன் அவர்களின் படம் பிரசுரமாகியிருந்தது. வ.மி. சம்சுதீன் இலங்கையில் வாழ்ந்த பெருமகன். இவர் அக்காலத்தில் மற்றொரு தமிழறிஞருடன் சேர்ந்து “ருபாயாத்” தை மொழிபெயர்த்து வெளியிட்டவராவார். 2007ல் சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இந்நூல் மீள் பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.


எம்.ஏ.றஹ்மான் அவர்கள் ஒரு எழுத்தாளராகவும் சஞ்சிகையாளராகவும் மட்டுமன்றி பல நூல்களையும் பதிப்பித்துள்ளார். புலவர் மணி ஆ.மு ஷரிபுத்தீன் அவர்களின் “நபிமொழி நாற்பது”, வ.அ. இராசரத்தினம் அவர்களது “தோணி”, அறுபதுகளில் மருதமுனையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான ”இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள், “அண்ணல் கவிதைகள்”, மகாகவியின் “குறும்பா”, “கண்மணியாள் காதை”, சானாவின் “பரியாரியார் பரமர்”, எஸ்.பொ. வின் “வீ” என்பன உட்படப் பல நூல்களை தனது “அரசு வெளியீடு” மூலம் பதிப்பித்தவர்.


இலங்கையில் அவர் வாழ்ந்த காலத்தில் எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்திருந்தவர். முற்போக்கு அணிக்கு எதிராகச் செயற்பட்ட அணியில் இருந்ததோடு எஸ்பொ.வுடன் இணைபிரியா நண்பராகவும் இருந்தவர்.


அவருடனான நாடக அனுபவங்களை கலைஞர் கலைச் செல்வன் பேசினார். 


தனது தந்தையாரான நீலாவணனுடன் எப்படி றஹ்மான் குடும்ப நண்பராக இருந்தார் என்பதையும் அவரது பதிப்பகத்துள் சென்ற ஞாபகங்களையும் எஸ்எழில் வேந்தன் எடுத்துச் சொன்னார். “வரலாற்றில் வாழ்தல்” என்ற நூலில் நிறையப் பொய்கள் இருப்பதாக மு.பொன்னம்பலம் குறிப்பிட்டார். இதுபற்றிய கவனத்தை அந்தனி ஜீவாவும் தனது உரையில் கவர்ந்தார்.


நான் றஹ்மானை இதற்கு முன்னர் சந்திததில்லை. ஆனால் அக்காலத்திலேயே பிரமாதமாக இருந்த அரசு வெளியீடுகள், இளம்பிறை சஞ்சிகை ஆகியவை என்னைக் கவர்ந்திருந்ததையும் அதற்காகவே அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்ததையும் நான் குறிப்பிட்டேன். இளம்பிறை சஞ்சிகைதான் தன்னை வளர்த்து விட்டது என எழுத்தாளர் மொயீன் சமீன் குறிப்பிட்டார்.


கே.எஸ்.சிவகுமாரன், எஸ்.எச்.எம். ஜமீல், மு.பொன்னம்பலம், ஏ.எம். நஹியா, கலைச்செல்வன், அல்ஹாஜ் பாயிக் மக்கீன், எஸ்.எழில்வேந்தன், கலைவாதி கலீல், யாழ் அஸீம், டாக்டர் தி.ஞானசேகரன், மொயின் சமீன், காத்தான்குடி பௌஸ், மானா மக்கீன், த.மணி, திக்குவல்லை கமால், பொத்துவில் அஸ்மின், குமரன், தில்லை நடராஜா, ஜூனைதீன், திருஞானசுந்தரம், வேலணை வீரசிங்கம், இளநெஞ்சன் முர்ஷிதீன், எம்.ஏ.எம். நிலாம், எஸ்.ஐ.நாகூர்கனி, கே.பொன்னுத்துரை, நியாஸ் ஏ. சமத், கதிர்காமநாதன், மர்ஸூம் மௌலானா, ராமதாஸ், அஷ்ரஃப் சிஹாப்தீன், ஸ்ரீதரசிங், தமிழ்த்தென்றல் அலி அக்பர், நஸ்முல் ஹூஸைன், எம்.எஸ்.எம். ஜின்னாஹ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள்.இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார் இளம்பிறை எம்.ஏ.றஹ்மான்.

வெளியிடப்பட்ட நூல்கள்
------------------------------------
01. இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்
02.காந்தி போதனை
03.மரபு
04.இளமைப் பருவத்திலே
05. சிறுகை நீட்டி

(புகைப்படங்கள் தெளிவின்மைக்கு வருந்துகிறேன்!)


Sunday, November 24, 2013

அண்டர் எஸ்டிமேற்!


'டேவிட் கமரூன் நூறு என்ஜியர்மார இலங்கைக்கு அனுப்பப் போறாராம்' என்றார் எனது நண்பர்.

'இப்பதானே வந்து திரியில நெருப்ப வச்சிட்டுப் போயிருக்காரு.. இனி இன்னம் என்னத்துக்கு என்ஜினியர்மார அனுப்போணும்?'

'அவரோட எத்தனை யாவாரிங்க வந்தாங்கன்னு தெரியாதா உங்களுக்கு?'

'ம் கேள்விப்பட்டேன்... அதுக்கும் என்ஜினியர்மார அனுப்புத்துக்கும் என்ன சம்பந்தம்?'

'நம்ம நாட்டுலமாதிரி றோட்டுத் தோண்டுறது பற்றி ட்ரெயினிங் எடுக்கத்தான்!'

'வெள்ளக்காரனுக்குத் தெரியாத சிஸ்டமா... நமக்கிட்டயா படிக்கோணும்?'

'நீங்க இப்பிடிச் சொல்றீங்க.. விசயம் தெரிஞ்சா ஒபாமாவே 500 என்ஜினியர்மார அனுப்பிடுவாரு!'

'ம்.. தோண்டுறதும் மூடுறதும் மறுவாத் தோண்டுறதும் பள்ளமும் மேடுமா றோட்டுக் கிடக்கிறதையும் அமெரிக்கனும் பிரிட்டிஷ்காரனும் நமக்கிட்டதான் படிக்கணுமாக்கும்!'

'சரியா அதுக்குத்தான் வரப்போறாங்க...!'

'கொஞ்சம் வெளக்கமாச் சொல்லன்டாப்பா!'

'ஒரு கிலோ மீற்றருக்குள்ள 40 இடத்தில தோண்டுறது வேற எந்த நாட்டுல நடக்கும்? இந்த சிஸ்டம் படிக்கிறதுன்னா இலங்கைல மட்டும்தான் படிக்கலாம். மேலதிகமா இருக்கிற பொலிஸ்காரங்களை வாகன நெருக்கடிக்கு உபயோகப்படுத்துறது என்டு ஏகப்பட்ட படிப்பு இருக்கு!'

'கிண்டல் பண்றீங்க... நல்லது நடந்தாலும் நம்ம நாடுன்னா நாம் அண்டர்ஸ்டிமேற் பண்ணிப் பேசிப் பழகிட்டம். நம்மள நாமே தாழ்த்திக்கிறம்!'

'தோண்டுறதுக்கு ஒரு கணக்கு. மூடுறதுக்கு ஒரு கணக்கு. அப்புறம் சரியா மூடல்ல.. சீமெந்து சிலப் போட்டு பேவ்மன்ட செய்றதுக்கு ஒரு கணக்கு... அப்புறம் அதை இடிச்சி சின்னக் கல்லுப் பதிக்கிறதுக்கு ஒரு கணக்கெண்டு கணக்குக் கணக்காவே எழுதலாம்தானே... கொமிசன் வேறயா வரும்!'

'ஓ...!'

'நீங்க சொல்லுறமாதிரி அன்டர்ஸ்டிமேற் இல்ல இது. ஆனால் இதுவும் ஒரு வகையான அண்டர் எஸ்டிமேற்தான். புரிஞ்சுதா?'

Thursday, November 21, 2013

இரண்டாவது வாழ்க்கை!


Dunya Mikhail 
(Iraq)இந்த வாழ்க்கைக்குப் பிறகு
நமக்கு அவசியம் இரண்டாவது வாழ்க்கை
முதல் வாழ்க்கையில் கற்றதை
நடைமுறைப்படுத்த...

ஒன்றுக்குப் பின் இன்னொன்றாக
நாம் பிழைகள் விடுகிறோம்
இரண்டாவது வாழ்க்கை 
நமக்கு அவசியம்
அவற்றை மறப்பதற்கு

நாம் ரங்கராட்டினம் விளையாடுகிறோம்
இரண்டாவது வாழ்க்கை
நமக்கு அவசியம்
அன்புக்காக மட்டும்

எமது சிறைத் தண்டனையை
முடித்துக் கொள்ள
நமக்குக் காலம் தேவைப்படுகிறது
அதற்குப் பிறகு 
இரண்டாவது வாழ்க்கையில்
சுதந்திரமாக வாழ முடியும்

நாம் புதிய மொழியைக் கற்கிறோம்
அதைப் பிரயோகிக்க
இரண்டாம் வாழ்க்கை அவசியம்

எல்லா இடங்களிலும்
முண்டியடிக்கிறோம்
இரண்டாம் வாழ்க்கை அவசியம்
படங்களை எடுப்பதற்கு

நாம் கவிதைகள் எழுதுகிறோம்
இரண்டாம் வாழ்க்கை அவசியம்
அவை குறித்து
விமர்சகர் கருத்தைத் தெரிந்து கொள்ள

துயரமானது காலத்தை எடுத்துக் கொள்கிறது
வீணாக
இரண்டாம் வாழ்க்கை அவசியம்
தெரிந்து கொள்வதற்கு
துயரின்றி வாழ்வது எப்படி என்று!

(அரபுக் கவிதை - ஆங்கில வழித் தமிழாக்கம்)