‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக அங்கத்தவர்கள் நடத்திய பாராட்டு நிகழ்வின் போது அல் அஸ_மத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மருதூர் ஏ மஜீத், தாஸிம் அகமது. கலைவாதி கலீல் எம்.ஏ.எம்.நிலாம், அஸீஸ் நிஸாருத்தீன், நியாஸ் ஏ சமத், மர்ஸ_ம் மௌலானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், எம்.சி. ரஸ்மின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Friday, November 13, 2009
பாராட்டு நிகழ்வு
‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக அங்கத்தவர்கள் நடத்திய பாராட்டு நிகழ்வின் போது அல் அஸ_மத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மருதூர் ஏ மஜீத், தாஸிம் அகமது. கலைவாதி கலீல் எம்.ஏ.எம்.நிலாம், அஸீஸ் நிஸாருத்தீன், நியாஸ் ஏ சமத், மர்ஸ_ம் மௌலானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், எம்.சி. ரஸ்மின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Sunday, November 8, 2009
புதிய இரு நூல்கள்
Thursday, September 17, 2009
தப்பித்து வாழ்தல்
பயங்கரத்தை எனக்கு உணர்த்திய முதலாவது குண்டு 1983ம் ஆண்டு வெடித்தது. அப்போது யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி மாணவனாக இருந்தேன். தின்னவேலி என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற திருநெல்வேலிச் சந்தியில் அந்தக் குண்டு வெடித்தது. 13 இலங்கை இராணுவத்தினரைப் பலி கொண்ட அக்குண்டு வெடிப்புத்தான் கறுப்பு ஜூலை என அறியப்பட்ட தமிழர்களுக்கெதிரான பெரும்பான்மையின் வெறியாட்டத்துக்குக் காரணமாயமைந்தது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நடந்த தாக்குதல் அது என்று பிற்காலத்தில் சிலர் சொல்லக் கேட்டும் எழுதப் படித்தும் இருக்கிறேன். கலாசாலையில் அக்குண்டு வெடிப்புப் பற்றி வௌ;வேறு விதமான கருத்துக்களையும் கதைகளையும் அங்கு கற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நண்பர்கள் சொன்னார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட இட்டுக் கட்டப்பட்ட பெரும் பொய் என்னவெனில் அந்தச் சம்பவத்தில் படுகொலையான பதின்மூன்று இராணுவச் சிப்பாய்களும் ஒரு தமிழ் யுவதியைக் கற்பழித்தவர்கள் என்பதுதான். ஒவ்வொருவரும் இஷ்டத்துக்குச் சார்பாகவும் எதிராகவும் கருத்துக்களையும் கதைகளையும் பேசினார்கள் என்பதற்கு இந்தக் கற்பழிப்புக் கதை உதாரணம்.
இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் முழு நாடும் ஸ்தம்பித்தது. நானும் எனது ஊர் நண்பரும் இரண்டாவது தினம் மன்னாருக்குச் சென்று அங்கிருந்து அடுத்த தினம் அனுராதபுரம் வந்து பொலன்னறுவை வந்தடைந்தோம். அச்சத்துடன் நாம் மேற்கொண்ட இந்தப் பயணம் வாழ்நாளில் மறக்க முடியாதது. பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள அடுத்த ஊரான மன்னம்பிட்டிக்கு வந்தவுடன் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் பயணம் தடைப்பட்டது. இப்போது நகரமாகி வரும் மன்னம்பிட்டி அந்நாளில் வெறும் காடு. அந்த ஊரில் உள்ள சின்னஞ்சிறிய பள்ளிவாசலுக்குள் இரண்டு இரவுகளை நாம் கழிக்கவேண்டியிருந்தது. பகல் பெழுதுகளைக் காட்டில் மேய்ந்து திரிந்தோம். மூன்றாவது நாளே ஊருக்குச் செல்ல முடிந்தது.
1984ம் ஆண்டு துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் மாட்டிக் கொண்ட மற்றொரு அனுபவம் கிடைத்தது. அவ்வாண்டின் விளையாட்டு விழாவில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்களை அச்சிடுவதற்கு யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஓர் அச்சகத்தில் கொடுத்திருந்தோம். பிற்பகல் 2.00 மணிக்கு விழா ஆரம்பமாகவிருந்த நிலையில் காலையில் அவற்றை எடுத்து வரும் பொறுப்பு விளையாட்டு நிகழ்வுகளின் செயலாளர் என்ற வகையில் எனக்கிருந்தது. சரியாகப் பத்து முப்பதுக்குச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு பஸ்ஸை நோக்கி நடந்த போது துப்பாக்கிச் சன்னங்கள் பறந்தன. இராணுவத்தினரையோ போராட்டக் குழுக்களையோ அந்த இடத்தில் நான் காணாத போதும் எனக்கு முன்னால் ஒரு சுற்றுச் சன்னங்கள் தெறித்தன. அவ்விடத்தில் நின்ற தனியார் பஸ் ஒன்று பின்பக்கமாக வேகமாக நகர, அதிலிருந்த பையன் “அண்ணே ஓடி வாருங்கோ” என்று என்னைப் பார்த்துக் கத்தினான். ரிவர்சிலேயே ஓடிய பஸ்ஸில் தாவி ஏறித் தப்பிக் கொண்டேன்.
அதற்குப் பிறகு நடந்தது காத்தான்குடிப் பள்ளிவாசல்களின் படுகொலை. எனது இரண்டாவது தாய்மாமாவின் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளியிருந்தது ஹ_ஸைனியா பள்ளிவாசல். படிக்கும் வயதில் விடுமுறை காலத்தில் மாமா வீட்டில் தங்கியிருக்கும் போது இந்தப் பள்ளிவாசலில் மஃரிபுக்கும் இஷாவுக்கம் நான்தான் பாங்கு சொல்லுவேன். 1990ம் ஆண்டு மார்ச் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு நாள் மஃரிபுத் தொழுகைக்கு வந்த 98வீதமானவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. அந்தப் பிரதேசத்தைச் சூழ மாமாவின் மனைவி குடும்பத்தினர்தான் வசித்தார்கள். பாங்கு ஒலித்தால் எட்டி நடைபோட்டுப் பள்ளிக்குள் வந்து விடுவார்கள். முஸ்லிம்களைப் போல் தொப்பி அணிந்து வந்த விடுதலைப் புலிகள் மின்சாரத்தைத் துண்டித்து விட்டு கைக்குண்டை வீசி வெடிக்கச் செய்து விட்டு தொழுதுகொண்டிருந்தோர் மீது யன்னலுக்குள்ளால் துப்பாக்கி நீட்டிச் சுட்டுத் தள்ளினார்கள். மாமாவுக்கு ஒரு கை வழங்காது. தனது மற்றக் கையினால் தனது ஆறு வயது மகனை அணைத்தபடி கிடந்த மையித்துக்களின் புகைப்படத்தை நான் பார்த்தேன். அந்தக் கால கட்டத்தில் எந்த ஒரு முஸ்லிமாலும் தமிழ்ப் பிரதேசத்தை ஊடறுத்துப் பயணிக்க முடியாது. சம்பவம் நடந்து அடுத்த தினம் கொழும்பில் தரித்திருந்த மாமாவின் மூத்த மகன் நல்மனமுள்ள அரசியல்வாதிகளின் உதவியுடன் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் அங்கு போய்ச் சேர்ந்தான். மையித்துக்களையும் அவற்றைப் பள்ளிவரை கொண்டு அடக்கம் செய்ததையும் ஒளிப்பதிவு செய்திருந்ததை அவன்தான் எனக்குக் கொழும்புக்குக் கொண்டு வந்து காட்டினான். நல்லடக்கத்தின் போது மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த ஜனாஸாக்களின் கபன் புடவைகளைத் தாண்டி இரத்தம் வழிந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். மையித்துக்களைத் தூக்கிய அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.
பிறகு 1992ம் ஆண்டு டிஸம்பரில் எமது பிரதேசமே கலங்கிய சம்பவம் நடந்தது. கொழும்பில் வசித்த நான்; குடும்பத்தோடு கதிர்காமம் சென்று அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் (சனக் கூட்டம்) அன்றிரவே திரும்பியிருந்தோம். வீட்டுக்கு வந்து வாகனத்தை நிறுத்தும் போது எனது நண்பர் ஒருவர் நின்றிருந்தார். எனது கடைசித் தாய்மாமன் மற்றொரு தாக்குதலில் அன்று காலை அதே இடத்திலேயே மரணமடைந்த செய்தியை எனக்குச் சொன்னார். எமது பிரதேசத்தின் மீது அச்சத்தையும் உச்சகட்ட அடக்கு முறையையும் ஏற்படுத்துவதற்காக தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப் புறப்பட்டவர்கள் செய்த நிகழ்வு அது.
அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஆறுபேர். மேலதிக அரச அதிபர் (இந்தியாவில் கலெக்டர்) வை.அகமது (இவர் ஓர் பிரபல்யம் பெற்ற எழுத்தாளரும்கூட), அரசாங்க அதிபர் உதுமான், சட்டத்தரணி முஹைதீன் (எனது சகோதரனின் மனைவியின் சாச்சா), பாடசாலை அதிபர் மகுமூது (எனது கடைசித் தாய்மாமன்), சாரதி மகேந்திரன், கொலைகளைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தமைக்காகக் கொல்லப்பட்ட மற்றொருவர் சாஹ_ல் ஹமீத்(விறகு சேகரித்து வாழ்க்கை நடத்துபவர்) ஆகியோர். இவர்களில் கடைசி நபர் தவிர்ந்த ஏனையோர் மாருதி ஜிப்ஸியில் சென்று கொண்டிருந்த போது மீயான்குளச் சந்தியில் கண்ணிவெடி மூலம் ஜீப்பைப் புரட்டி கீழே விழுந்தவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர்.
நான் அடுத்த நாள் மதியம் ஊர் போய்ச் சேருவதற்குள் மையித்துக்களை அடக்கியிருந்தார்கள். மாமாவின் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்ததாகவும் ஒரு கால் உடைக்கப்பட்டிருந்ததாகவும் எனது மச்சான் சொன்னார். மேலதிக அரச அதிபராக, அரச அதிபராகவெல்லாம் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்ற விடுதலை வீரர்களின் தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்தக் கொலைகள் நடைபெற்றதாகப் பேசப்பட்டது. இதற்கு முன்னரும் இப்றாஹீம், ஹபீப் முகம்மத் ஆகிய அரச அதிபர்கள் காரணமின்றிக் கொலை செய்யப்பட்டதன் அடிப்படையில்தான் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நான் கொழும்பில் கற்பித்துக் கொண்டிருந்த காலப்பிரிவில் என்னுடன் ஒரே பாடசாலையில் கற்பித்த இரண்டு ஆசிரிய நண்பர்களும் குண்டுகளில் அகப்பட்டிருக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிவிட்டார்கள். கொழும்பு புறக் கோட்டையில் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் வெடித்துப் பெரும் இழப்பை ஏற்படுத்திய குண்டில் அகப்பட்டவர் மாவனல்லையைச் சேர்ந்த காமில். முகத்தில் ஆங்காங்கு ஏற்பட்டிருந்த பள்ளங்களில் பிளாஸ்ரிக் ஸர்ஜரி செய்து சதைத் துண்டங்கள் பொருத்தப்பட்டிருந்ததை கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சென்று பார்த்தேன். மற்றையவர் கொழும்பில் என்னுடன் கற்பித்த, என்னுடன் ஒரே போர்டிங் ஹவுஸில் (லாட்ஜ்) தங்கியிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஹகீம். அரசியல் கூட்டம் பார்க்க என்னையும்தான் அழைத்தார். எனக்கு சனக் கூட்டமென்றாலே அலர்ஜி. தவிர அவர் போகும் போது கூட எச்சரித்தே அனுப்பினேன். கூட்டம் பார்;க்கப் போனவர் திரும்பி வரவில்லை. தேடினால் முதுகில் காயமேற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதுகுப் பக்கமாகத் துளைத்த வெடிகுண்டின் ஒரு துண்டுத்தகடு இதயத்துக்கு அருகில் உள்ள எலும்பில் தடையாகி நின்றிருந்ததை மருத்துவர்கள் சொன்னார்கள். பிறகு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சத்திர சிக்கிச்சை செய்து அதனை வெளியே எடுத்து அவரைக் காப்பாற்றினார்கள்.
இவ்வாறு உள்நாட்டு யுத்த காலத்தில் இழப்புக்களைச் சந்தித்த பலர் இந்நாட்டில் இருக்கிறார்கள். தமிழர் விடுதலைக்குப் புறப்பட்ட ஆயுதமேந்திய இளைஞர்கள் பெரும்பான்மை சிங்கள அரசுடன் ‘அடக்குமுறையிலிருந்து விடுதலை’ என்ற கோஷத்துடன் போராடிய அதே சமயம் ‘சிறுபான்மை முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி வைப்பது’ என்ற ரகசியக் கோஷத்துடனும்தான் இயங்கினார்கள். பெரும்பான்மைச் சிங்களவரால் முஸ்லிம் சமூகத்துக்கு ஒருவீத பாதிப்பு என்றால் மீதி முழுவதையும் நிரப்பிப் புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் தமிழர் விடுதலை இயக்கங்களில் இருந்தவர்களே. சிங்களப் பிரதேசத்துக்குள் நாளின் எந்த வேளையிலும் போய் வர முடிந்த முஸ்லிம் ஒருவரால் ஒரு தமிழ் ஊருக்குள் பகலில் கூட சென்று திரும்ப முடியாத நிலை நீண்ட காலம் இருந்திருக்கிறது என்றால் அது எவ்வாறான அடக்குமுறை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சில காலங்களுக்கு முன்னர் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த தமிழரான சக மூத்த ஒலிபரப்பாளர் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தை நினைவு கூர்ந்தார். யாழ்ப்பாணத்தில் தனக்கு நீள் காற்சட்டை (பேண்ட்) தைத்துத் தரும் டைலரான முஸ்லிம் நண்பரைத் தற்செயலாகக் கண்ட போது தனக்;குக் கண்ணீர் வந்து விட்டது என்று சொன்னார். காரணம் அவரது டைலர் நண்பர் 24 மணிநேர அவகாசத்தில் புலிகளால் துரத்தப்பட்டவர் என்பதுதான். நான் நண்பரை எதிர்கொள்ள மிகவும் சங்கடப்பட்டேன் என்று சொன்னார். இவ்வாறான நல்ல உள்ளங்களும் தமிழர்களில் இருக்கவே செய்கின்றனர். அதே Nவைளை புரிய முடிந்த அநியாயங்களையெல்லாம் புரிந்து விட்டு ஐரோப்பாவில் அகதியாகப் போயிருந்து கொண்டு சமூக நீதியும் விளிம்பு நிலை மக்கள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்போரும் உள்ளனர். அதற்கு அவர்களது எழுத்துக்களே சாட்சி. குண்டு வெடிப்புப் பற்றிப் பேச ஆரம்பித்த நான் வேறு எங்கோ போய் விட்டேன் போலத் தெரிகிறது. 10.03.09 அன்று தென்னிலங்கையில் கொடப்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் தேசிய மீலாத் விழா நிகழ்வுகளை ஆரம்பிக்கும் போது வெடித்த குண்டுதான் கடைசியாக இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடைசிக் குண்டு. இந்தக் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய எனது சகோதரரும் ஏனைய அமைச்சர்களும் தங்களை சுதாகரித்துக் கொண்டு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சென்றார்கள். அங்கும் ஒரு தற்கொலைதாரி நின்றிருந்தார் என்பது இவர்களுக்குத் தெரியாது. முதலாவது குண்டில் அமைச்சர்கள் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது அவர்களைப் பார்ப்பதற்காக ஜனாதிபதி அங்கு வருகை தருவார். அவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக மற்றொரு தற்கொலைதாரியைப் பயன்படுத்துவது விடுதலைப் புலிகளின் திட்டமாக இருந்தது. அமைச்சர்களில் ஒருவர் தவிர வேறுயாரும் காயமடையவில்லை என்பதாலும் இரண்டாவது குண்டுதாரி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாலும் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதுவே இறுதித் தற்கொலைக் குண்டாகவும் இருந்தது. இரண்டாவது தற்கொலைதாரி கைது செய்யப்பட்ட விடயம் சம்பவம் நிகழ்ந்து சிலவாரங்களுக்குப் பின்னரே ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இங்கே நான் குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளும் தாக்குதல்களும் எனக்கும் எனது உறவினர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் தொடர்பானது. என்னைப் போல அனுபவங்களைப் பெற்றவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். இந்தக் கால் நூற்றாண்டுக்குள் வெடித்த துப்பாக்கிக் குண்டுகளிலும் துப்பாக்கி ரவைகளிலும் தமிழ் விடுதலை இயக்கங்களின் கடத்தல்களிலும் தப்பி இன்னும் உயிர் வாழ்வது கூட ஒரு கொடுப்பினை என்றே கருதுகிறேன்.
18.08.2009
அரச சாஹித்திய தேசிய விருது
Monday, August 24, 2009
Sunday, August 16, 2009
டல் கோப்பி
கஞ்சாக் கோப்பிக்கு ‘டல் கோப்பி’ என்றும் ஒரு பெயர் உண்டு.
Tuesday, July 21, 2009
மருதமுனையின் வரலாறு
திறனாய்வு அல்லது விமர்சனம் என்ற பெயரால் நூலாசிரியனை மனச்சிதைவுக்கு உட்படுத்துகிற அல்லது எழுத்தையும் எழுத்துலகத்தையும் விட்டு அவனை ஒழித்துக் கட்டச் செய்கிற எழுத்துலகப் பயங்கரவாதம் நீண்ட காலங்களாக நிலவி வந்திருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள். அப்பயங்கரவாதம் வேறு வேறு கோணங்களில் இன்றும் நிலவியபடியிருப்பதால் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் சம்பந்தப்பட்ட எங்களது நூல் வெளியீடுகளிலும் எம்முடன் இயைந்து செயல்படும் அன்பர்களின் நூல் வெளியீடுகளிலும் நூல் நயவுரை என்ற பதத்தை மாத்திரமே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
மருதமுனையின் வரலாறு என்ற நூலை எழுதியவர் ஒரு வரலாற்றாசிரியர் அல்லர். அவர் ஒரு மகாகவி. தமிழைத் துறைபோகக் கற்றவர். மொழிக்கு அவரும் அவருக்கு மொழியும் சேவகம் செய்யும் படி வாழ்ந்து மறைந்த மேதை. ஆகவே நயமில்லாத நூலாக இந்நூல் இருக்கப் போவதில்லை.
“மருதமுனைக் கிராமத்தின் வரலாறு இன்றுள்ள எவருக்கும் நன்கு தெரிந்திருப்பதாகத் தெரியவில்லை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் வாழ்ந்திருந்த பெரியார்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டனவும் எனது ஆய்வின் முடிவும் எனது சீவிய கால அனுபவமுமே இந்நூலில் இடம் பெற்றுள்ளன” என்று கூறும் நூலாசிரியர் ஆதிக்குடியேற்றம், தொழில் முயற்சிகள், உடை, ஊர்ப்பரிபாலனம், விழாக்கள், இயற்கையின் சீற்றம், கல்வி (மார்க்கக் கல்வி), கலைகள், விளையாட்டுக்கள், வைத்தியம், இலக்கிய முயற்சிகள், வர்த்தகம், போக்குவரவு, தேர்தற் தொகுதி, அலியார்ப்போடி குடியின் வரலாறு ஆகிய பிரதான பதினைந்து தலைப்புகளில் எளிய தமிழ் நடையில் மருதமுனையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
புலவர்மணி அவர்கள் இதில் சொல்லியிருக்கும் அநேக விடயங்களில் 50 சதவீதமானவை இன்று 35வயதில் வாழ்பவர்களுக்கும் 70 சதவீதமானவை 40க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களுக்கும் 80 சதவீதமானவை 60 வயது தாண்டியவர்களுக்கும் தெரிந்தவையே. ஏனைய இருபது வீதமானவற்றை நாம் புலவர்மணியிடமிருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. முப்பத்தைந்து வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் இந்நூலை வாசித்தால் அவர்களில் பலர் வியப்படைவார்கள். இந்நூலில் குறிப்பிடப்படும் சில அம்சங்கள் தமது பால்யத்தின் ஏதோ ஓர் இடத்தில் தேய்ந்தழியும் ஞாபகங்களைக் கிளறுவதுடன் சில காரண காரிங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்.
மருதமுனை மக்களைப் பொறுத்தவரை இந்த நூல் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது என்று அறுதியிட்டு உறுதியாக என்னால் கூற முடியும். மருதமுனையின் பிரதான குடிகள் மற்றும் அவர்களின் வழித் தோன்றல்களில் ஆகக் குறைந்தது ஒருவரது பெயராகிலும் இந்நூலில் எதாவது ஓரிடத்தில் இடம்பெற்றிருக்கும் என்று கருதுகிறேன். மருதமுனைக்கு அப்பால் இந்நூலை வாசிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாவண்ணம் புலவர்மணி ஆங்காங்கே பழமொழிகளையும் விடயங்களோடு சம்பந்தப்பட்ட பாடல்கள் சிலவற்றையும் தந்திருக்கிறார். நூலில் ஆங்காங்கே பழமொழி மற்றும் பாடல்களுடன் தரப்பட்டவற்றை முதலில் எடுத்துக் காட்டலாம் என எண்ணுகிறேன்.
01. மஸ்ஜிதுந்நூர் என்ற அவக்கலியப்பா பள்ளிவாசலையடுத்து பெரிய ஆலமரம் ஒன்றிருந்திருக்கிறது. ‘கடலுக்கிணக்கம் கப்பலும் பாய்மரமும் ஊருக்கிணக்கம் உயர்ந்த பள்ளிஆலமரம் என்று பாடல் பெற்ற ஆலமரம் அது.
02. வாழ்மனைகள் என்ற உப தலைப்பின் கீழ் வீடுகள் அந்தக்காலத்தில் கட்டப்படுவது குறித்து விளக்கம் தருகிறார் புலவர் மணி. நாள்பார்த்து நிலமெடுத்துக் கால் நாட்டுதல், வளையேற்றுதல், நிலை நாட்டுதல் எல்லாச் சடங்குகளும் வீட்டின் சரித்திரத்தில் நிகழும். சுவருக்கு நிலைக் கட்டையடித்து வரிச்சி பிடித்து, களிமண்ணைத் துவைத்துக் கட்டி நிரப்பி ஓட்டு மண் கொடுத்துப் பூசி மினுக்கிப் புற்று மண் கொண்டு மெழுகித் தீற்றி அழகு படுத்துவார்கள். பொன்னிடப் பொன்னிடப் பொண்ணுமிலங்கும் மண்ணிட மண்ணிட மாடமிலங்கும் என்ற கவிதைத் தொடர் இதற்காகத்தான் சொல்லப்பட்டது போலும்.
03. கதவெல்லாம் ஒற்றைக் கதவுதான். சில கதவுகள் குறுக்கே அரிந்து மேற்கதவு கீழ்க்கதவாகச் செய்திருந்தனர். அதற்குப் போர்க்கதவு என்றனர். ‘வாள்பூட்டிக் கதவறுத்து வாஞ்சையுடன் வீடுகட்டிப் போர்க்கதவும் போட்டுத்தாறேன் பொறுத்திடுகா மாமி மகன்’ என்பது சொந்தமாக வீடு கேட்டு மறுகும் மாப்பிள்ளைக்குத் தந்தையைக் கொண்டு செய்வித்துத் தர உறுதி கூறும் புதுப் பெண்ணின் சமாதானக் கவிதை.
04. பெரிய மரத்தை ஆறடித்துண்டுகளாகத் தறித்து அத்துண்டுகளைக் கவிந்த கொட்டுளியால் தோண்டிக் குழாய் ஆக்கிக் கொள்வர். மூன்று நான்கு குழாய்களைச் செய்து அவற்றை ஒன்றன் மேலொன்றாய் இணையச் சமைத்துக் கொள்வர். வீட்டு முற்றத்தில் நிலமெடுத்து நீர் காணும்வரை துரவு தோண்டி அடிக்கொட்டை நீருள் நிறுத்துவர். அது முற்றிலும் நீருள் அமிழும்படி இறக்குவர். அதை நீருள் இறக்கும் விதம் அலாதியானது. நீண்ட தடியொன்றில் மரத்தாலான குவிந்த பட்டையொன்றை ஏற்றி (திருப்பிப் பிடித்தாற் குடை போன்றிருக்கும்) ஆள் இறங்கி மண் எடுக்க ஒண்ணாத ஒன்றரை அடி விட்டமுள்ள அந்தக் குழாயுள் நிறுத்தி இடிக்க இடிக்க மண் பட்டையுள் ஏறும். ‘மரத்தைத் துளைத்து தண்ணீர் எடுப்பவன் மட்டக்களப்பான’; என அந்தக் காலத்தில் மரக் கொட்டுக் கிணறுகளைக் கண்ட யாழ்ப்பாணத்தார் சொல்லுவார்களாம்.
05. சீமெந்தினால் கிணறு கட்டத் தொடங்கியதும் சங்குவடம் நிறுத்தப்பட்டது. பீப்பாக்களில் வந்த வெளிநாட்டுச் சீமெந்தினால்தான் கிணறு கட்டப்பட்டது. ஒரு கிணற்றுக்கு ஒரு பீப்பா சீமெந்து போதும். காலைப் பசி தீர்த்தவரும் கன்னிகாதானம் முடித்தவரும் ஆழக்கிணறு போட்டவரும் அரிய சுவர்க்கம் புகுவரே என்பது பாட்டு.
06. அவரவர் வேலிப் பரண் கட்டி இரவு முழுவதும் விழித்திருந்து வயலைக் காவல் காக்க வேண்டும். இர வெல்லாம் விழித்திருந்த காவல்காரன் பகலில்தான் கண்ணயர்வான். அப்படிக் கண்ணுறங்கியவன் கண்ட ஒரு கனவைக் கேளுங்கள். காவற்பரனிலே கண்ணுறங்கும் வேளையிலே கண்ணான மச்சி வந்து காலூன்றக் கனவு கண்டேன்.
07. தாவளத்தில் ஏற்றிக் கொண்டு வந்த தானிய வகைகளை அடுத்துள்ள கிராமத்தவர்களும் வந்து வாங்கிக் கொண்டு போய் உபயோகித்திருக்கின்றனர். சோளம் வாங்க வந்த துறைநீலாவணைப் பெண்ணொருத்தி விலையைக் கேட்டு விட்டு தனது வயிற்றை நோக்கி சோளம் ஆறுபணம் சோனகத்தி விற்கும் விலை காந்தாதே என்வயிறே கண்ணாணை ஒன்றுமில்லை என்று பாடியிருக்கிறாள்.
08. சாதுரியம் உள்ளவர்கள் கவிமூலமும் செய்திகள் அனுப்பியிருக்கிறார்கள். தபால் தந்திப் போக்குவரவு இல்லாத காலமது. ஒரு பெண் தன் கணவருக்கு தனது மகள் பெரியவளான நற்செய்தியை அவர் இருக்குமிடத்துக்குப் போன காக்கா ஆதம் என்பவரிடம் ஆதங்காக்கா ஆதங்காக்கா அவரைக் கண்டால் சொல்லிடுகா மாதுவிளங்கன்னி மடல் விரிஞ்சி போச்சிதென்று... என்று கவிமூலம் சொல்லி அனுப்புகிறாள்.
2
ஆத்திமேடும் அதனைச் சூழவுள்ள நிலப்பரப்புமே மருதமுனையின் ஆதிக் குடியிருப்பு என்பதற்கு பத்து ஆதாரங்களைத் தந்து நிறுவுகிறார் புலவர்மணி. நெசவுத் தொழில் தெரிந்திருந்த முஸ்லிம்களுக்கு தாம் வாழ்ந்த துறை நீலாவணை கட்டாந் தரையாக இருப்பது ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. அதே போல வாவியருகில் குடியிருப்பதன் மூலம் தமது மீனவத் தொழிலுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகின்றனர் மருதமுனையிலிருந்த தமிழ் மக்கள். எனவே இருசாராரும் ஒப்பந்தமொன்றைச் செய்து முஸ்லிம்கள் மருதமுனையிலும் தமிழர்கள் துறைநீலாவணையிலும் தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொள்கின்றனர். விலைக்கு நிலம் வாங்குவதோ உறுதிகள் எழுதுவதோ நடைமுறையிலில்லாத காலம் அது. இடமாற்றம் செய்வது இலகுவானதாக இருந்தது. இப்படித்தான் மருதமுனைக்கு முஸ்லிம்கள் வந்தார்கள் என்கிறார் நூலாசிரியர்.
01. ஆங்கிலேயர் காலத்தில் 1830ம் ஆண்டுக்குப் பின்னர்தான் உப்புத் தண்ணீர்க்கட்டு எனப்படும் வரம்பு செய்யப்பட்டு வாவி நீரை உட்புகாமல் தடுத்து வயல் நிலமாக்கினர்.02. பழைய உறுதி சாசனங்களில் மதுரமுனை என்றே இவ்வூர் அழைக்கப்பட்டது. 1911ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் மருதமுனையென எழுதத் தொடங்கினர்.03. கல்லோயாப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டத்தில் 1952ம் ஆண்டு 4ம் 5ம் வட்டாரங்களில் மருதமுனை மக்கள் குடியேற்றப்பட்டனர். ஆனால் அநேகர் அதைக் கைவிட்டுத் திரும்பினர்.04. 1922ல் அரசாங்கத்தினால் யூ..சாலிகு லெவ்வையென்பவருக்கு இனாமாகக் கொடுக்கப்பட்ட தறியே மருதமுனை கண்ட முதல் விசைத்தறி ஆகும்.05. 1940ல் அரசு மருதமுனையில் நெசவுப் பாடசாலையொன்றை நடத்தியது.06. 1908ம் ஆண்டு முதல் தையல் இயந்திரம் கல்முனைக்குக் கொண்டுவரப்பட்டது.07. 1936ம் ஆண்டு வரை குத்பா அறிபியிலேயே ஓதப்பட்டது.08. 1937ம் ஆண்டு ஜனவரியில்தான் அரசு விவாகப் பதிவாளரை நியமித்தது. 09. 1952ல் புலவர்மணி பெரிய நீலாவணையில் குடியேறினார்10. 1815 வரை சிங்கள ஆட்சியாளர்களின் கீழேயே இப்பகுதி இருந்து வந்தது.11. 1927ல்தான் விதானைமாருக்கு சகாயப்பணம் வழங்கப்பட்டது.12. 1952ல் சனசமூக நிலையமொன்று புலவர்மணி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.13. 1927ம் ஆண்டுவரை வெள்ளிக் கிழமைகளில் ஜூம்ஆவுக்குப் போகும் வாய்ப்பு ஆசிரியருக்கோ மாணவருக்கோ இருக்கவில்லை.14. 1941ல் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது.15. 1925க்குப் பின்னரே உள்வீதிகள் அமைக்கப்பட்டன.16. 1948ல் மருதமுனை உபதபாற்காரியாலயம் அமைக்கப்பட்டது.
மருதமுனை மக்களைப் பற்றி அவர் சில இடங்களில் மனதைத் தொடக் கூடியவாறு குறிப்பிட்டிருப்பதைக் கட்டாயம் சொல்லியாக வேண்டும். இது மிகைப்படுத்தலல்ல என்பதையும் வேறு ஒரு இடத்தில் அவர் சொல்லியிருப்பதைக் கொண்டு தீர்மானித்துக் கொள்ள முடிகிறது.
01. மருதமுனையில் கிரிமினல் குற்றங்கள் நிகழ்வதில்லை. நயத்தாலும் பயத்தாலும் பிணக்குகளைச் சமரசஞ் செய்து வைப்பதே பொலிஸ் தலைமைக்காரரின் பணியாயிருந்தது. அதனால் வழக்குகள் கோர்ட்டுக்குப் போவதில்லை. மக்கள் அடக்கமுள்ளவராதலால் தத்தம் சுய தொழில்களைச் செய்வதில் உத்தியோகம் தடையாயிருக்கவில்லை.02. சமயப் பற்றும் சமூகப் பழக்கவழக்கங்களும் மருதமுனை மக்களோடு இரண்டறக் கலந்த பண்புகளாகும். அந்நியர் அச்சமின்றி நடமாடக்கூடிய ஒரு கிராமம் மருதமுனையெனப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.03. மருதமுனை மக்களின் நடை, உடை, பாவனைகளெல்லாம் இவர்கள் தனியொரு வகுப்பார் என மற்றவர் களிடமிருந்து பிரித்துணரக்கூடியனவாகவேயிருந்தன. ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது சலாம் சொல்லும் வழக்கம் நிறைய இருந்தது. அப்படிச் சொல்லாதிருப்பது அநாகரிகமாகக் கருதப்பட்டது. இரவு வேளைகளில் எல்லா வீடுகளிலும் குர்ஆன் ஓதும் சத்தம் கேட்கும். 04. கடின உழைப்பும் சொற்ப ஊதியமும் பெற்று வாழ்ந்து வந்த மருதமுனை மக்கள் கஷ்ட ஜீவிகளாகவே சந்ததி சந்ததியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.05. நான் உயர்கல்வி கற்க முனைந்த போது தமிழைப் படிக்க வேண்டாம் எனத் தடையுத்தரவு போட்ட நம்மூர்ப் பெரியார்கள் பலர் என்னைத் தொடர்ந்து தமது பிள்ளைகளையும் தமிழில் உயர் கல்வி பெற அனுப்பி வைத்தனர்.
3
சில நூல்களை வேறு வழியின்றியும் சில நூல்களை அவசியம் கருதியும் நாம் படிப்பதுண்டு. படிக்க விரித்தோமானால் கீழே வைக்க முடியாமல் நம்மை ஆட்கொண்டு விடும் நூற்களும் உள்ளன. எழுத்தாளனின் மொழியாளுமை, சுவைபடச் சொல்லல், கிண்டல், அங்கதம், ஆர்வத்தைத் தூண்டுதல் ஆதியாம் காரணிகளால் சில நூல்கள் அவற்றைக் கீழே வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நம்மை அனுமதிப்பதில்லை. மருதமுனை மக்களைப் பொறுத்தவரை இந்நூல் அவ்வாறான ஒரு நூலாக அமைந்திருக்கிறது. மருதமுனைக்கு அப்பால் உள்ளவர்கள் அவசியங்கருதிப் படிக்க வேண்டிய நூலாகவும் இருக்கிறது. புலவர்மணியின் தகுதிக்கு அவர் நேரடிக் கிண்டலில் ஈடுபட முடியாது. அங்கதத்தையும் கூட அவர் அடக்கியே வாசித்தாக வேண்டும். ஆனால் அவரது மொழியாளுமையானது ஐந்தாம் வகுப்பு மாணாக்கர் முதல் அதி சிரேஷ்ட ஆய்வாளர் வரை - தெருவில் உள்ள தேனீர்க்கடை பெஞ்சில் அமர்ந்து மித்திரன் பத்திரிகையில் வரும் பூரம் கேள்வி பதில்கள் வாசித்து ரசிப்பவர் முதற் கொண்டு வீடுகளில் சின்னத்திரைச் சீரியல்களின் கண்ணீர் வெள்ளத்துக்குள் கரைந்து போகும் அம்மணிகள் வரை புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அலுப்பின்றிப் படிக்கும் படியாகவும் அமைந்துள்ளது. அதேவேளை அங்கதத்தையும் கிண்டலையும் அவர் தவிர்த்தார் என்று அர்த்தமல்ல. அவற்றை நாசூக்காக அவர் சொல்லும் அழகைக் காட்ட இண்டு உதாரணங்களை நான் தர விரும்புகிறேன்.
01. மந்திரங்கால் மதி முக்கால் என்பார்கள். மந்திரம் என்றதும் அதை பாமர மக்கள் நம்பிப் பயந்து மாந்திரீகர் சொல்வதற்கெல்லாம் கட்டுப்பட்டார்கள். மதியூகம் படைத்த மந்திரவாதிகள் பொது மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வாழ்ந்திருக்கின்றனர்.... எந்த நோய் வந்தாலும் மந்திரம்தான் முந்தும். அது பலிக்காத போது பேய்விலகிற்று. இனி நோய்க்குப் பாருங்கள் என்பார்கள். ஐயோ பாவம் இந்த வேடதாரிகள்! இனியும் இந்தப் பேயர்களின் பொய்க் கூற்றுப் பலிக்குமா? இந்த விஞ்ஞான உலகத்தில் வைத்தியத் துறை விரிவடைந்திருக்கும் இந்தக்காலத்தில் இவர்களின் பாச்சா பலிக்காது.
02. தலைப்பிள்ளைத்தாச்சிக்கு எட்டாம் மாதத்தில் அவளின் தாய் கொழுக்கட்டை சுட்டு அடுத்தவர்களை அழைத்து குரவை வெடியுடன் கர்ப்பிணியின் முந்தானையுட் கொட்டுவாள். தலைப்பிள்ளை பிறந்ததும் குரவையிடும் வழக்கமும் இருந்தது. குழந்தைக்குப் பல்முளைத்தால் பல்லுக் கொழுக்கட்டை சுட்டுச் சொரிவதும் ஒரு விழா. தென்னம்பிள்ளை, கமுகம்பிள்ளை பாளை யோட்டால் அதற்கும் ஒரு விழா. தம்பி குர்ஆன் ஓதி முடித்து மௌலீது, கத்தம், பாத்திஹாவும் பாடம் பண்ணிவிட்டானென்றால், அவனுக்கு பட்டுக் கல்யாணம் பண்ணுவதும் ஒரு விழா.... தொழிலொன்று பழகி விட்டால் அதற்கும் ஒரு விழா!
கிழக்கில் உள்ள பிரதேசங்களில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் பேச்சு வழக்கு ஒன்றுக் கொன்று வித்தியாசமாயிருப்பதை நாம் அவதானிக்கிறோம். அநேமாக ஊருக்கு ஊர் இந்த வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. மருதமுனை வாழும் நண்பர்கள் பலருடன் எனக்கு மிக நல்ல நீண்ட கால உறவு இருந்து வருகிறது. எனவே மருதமுனைப் பேச்சு குறித்தும் ஓர் அவதானம் இருக்கிறது. அவர்களது சொல் உச்சரிப்புக் குறித்த விளக்கத்தை புலவர்மணியின் இந்த நூலில் படிக்கக் கிடைத்தது. புலவர்மணி பின்வருமாறு சொல்கிறார்.
தாவளமேற்றிய வியாபாரிகள் சிங்களவரோடு உரையாடிச் சிங்களம் பேசக் கற்றுக் கொண்டனர். இவர்கள் இந்தத் தொழிலைச் செய்தமையை அடுத்துள்ள வேறெந்த முஸ்லிம் கிராமத்தவரின் பேச்சு மொழியிலும் காணப்பெறாத ஒரு புதுமையை இவ்வூரின் பேச்சு மொழி நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மொழியைப் பேசக் கற்றுக் கொண்டவர்கள் சிங்களத்தில் வினாவெல்லாம் ‘த’ என்ற ஈற்றினைக் கொண்டு ‘ஹொந்தத’, ‘ஆவாத’ என்பன போன்றிருப்பதனால் தமிழ் வினாச் சொற்களையும் ‘வந்நத’ ‘இருந்தத’ என ஈற்றைக் குறுக்கி உச்சரித்தனர். காலக்கிரமத்தில் வினாச் சொற்களில் ஆகார ஈறுகள் அகர ஈறுகளாகக் குறுகின.
சிறு வயதில் மூத்தம்மாவுக்கும் உம்மாவுக்கும் பருத்தி மணையில் புல் அரைத்துக் கொடுத்திருக்கிறேன். எனது இந்த அனுபவம் இங்கிருக்கும் பலருக்கும் கிடைத்திருக்கும். ஆனால் புலவர்மணியின் இந்த நூலில்தான் பருத்திமணை என்ற பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதைத் தெரிந்து கொண்டேன். அந்த மரத்தாலான இயந்திரம் உண்மையில் பருத்தி அரைப்பதற்கென்றுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பெயர் அதற்குச் சூட்டப்பட்டுள்ளது. நாட்டு வழக்குச் சொற்றொடர்களைப் பயன்படுத்திக் கவிதைகள் பல இன்று எழுதப்படுகின்றன. அவற்றின் ரசனை வெகுவாகப் போற்றப்பட்டு வருகிறது. உண்மையில் அந்தப் பெருமையெல்லாம் நம்மூதாதையருக்குரியது. இந்த நூல் முழுக்க நம்முன்னோரின் பேச்சு வழக்கும், அந்தக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களும் விரவிக் கிடக்கின்றன. எனவே இவற்றை ஒரு பொக்கிஷமாகவே புலவர்மணி நமக்கு வழங்கியிருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த நூலுக்குள் கிடக்கும் முன்னோர் வார்த்தைகளைச் சிறகுகளாக வரித்துக் கொண்டு கவிதைக் குஞ்சுகள் சில புதிதாகத் தோற்றம் பெறவும் கூடும்.
ஒரு திறமை வாய்ந்த எழுத்தாளனின் நூல் ஒரு நூலகத்துக்கு ஒப்பானது. அதை இந்த நூலில் நான் காண்கிறேன். மருதமுனையின் வேர்களும் விழுதுகளும் பற்றிப் பேசும் இந்த நூல் மருதமுனையின் வரலாறுஎன்ற தலைப்பில் வெளிவந்த போதும் மருதமுனைக்கு அப்பாலும் பிரயோசனம் தரக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. வரலாறுகள் எழுதப்படாத பிரதேசங்களில் வாழ்வோருக்குத் தமது பிரதேசங்களின் வரலாற்றை எழுதுவதற்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் ஊக்கியாகவும் மாதிரியாகவும் இது அமையக் கூடியது.
புலவர்மணி இந்த நூலில் தனது பாடல்கள் சிலவற்றையும் சேர்த்திருக்கிறார். அந்தப் பாடல்களும் கூட வரலாற்றையே நமக்குச் சொல்கின்றன. அந்த நாட்களில் தான் குர்ஆன் ஓதப் போனதையும் அதன் வரை முறைகளையும் சொல்கிறது ஒரு பாடல். புகையிலைச் செய்கைக்காக இங்கிருந்து சென்று அடிமை வாழ்க்கையில் அகப்பட்டு இன்னல்படும் சிறுவர்களதும் இளையவர்களதும் சோகங்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களையும் சொல்கிறது மற்றொன்று. இந்தக் கிராமத்தில் மாட்டுப் பட்டி வைத்திருந்தவர்கள், மீன்பிடியில் பெயர் பெற்றவர்கள், தையல் வேலை முன்னோடிகள், தச்சுத் தொழில் செய்தவர்கள், முக்கிய பள்ளிவாசல்களின் மரைக்கார்மார் பட்டியல், கதீப்மார் பட்டியல், ஹஜ்ஜூக்குச் சென்றோர் பட்டியல், உலமாக்களின் பட்டியல், உயர்கல்வி பெற்றோர் பட்டியல், அதிபர், ஆசிரியர் பட்டியல், சமாதன நீதவான்களின் பட்டியல், மருத்துவம் படித்தவர்கள், எழுதுவினைஞர்கள், மருத்துவர்கள் என்று தமது அந்திம காலத்துக்கு முற்பட்ட ஊரை அப்படியே வடித்துத் தந்திருக்கிறார் புலவர்மணி. மருதமுனையின் ஆரம்ப காலந்தொட்டு பல்வேறு துறைகளில் திறமையுள்ளவர்களும் பெரும் வணிகர்களும் குடும்பப் பாரம்பரியம் மிக்கவர்களும் வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள். ஆனால் தனது மண்ணின் மக்களையும் அதன் வரலாற்றையும் அடுத்த சந்தததி அறிந்து கொள்வதற்காக எழுதி வைப்பதற்கு ஒரு இலக்கியவாதியான கல்விமானால்தான் முடிந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எழுத்தாளுமை உள்ளவர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கான நியாயமான காரணமும் அதுவே. ஒரு படைப்பாளி தனது சமூகக் குழுமத்தின் வரலாற்றை வரலாறாக மட்டுமல்ல கவிதையாகவும், கதையாகவும் கூட எழுதுகிறான். இதனால்தான் இன்று புலவர்மணியின் நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடுகிறோம். இந்த உரைக்காக இரண்டாவது முறையாகவும் மருதமுனையின் வரலாற்றை நான் வாசித்து முடித்த போது பழங்காலக் கிராமம் ஒன்றின் பல தகவல்களைச் சொல்லும் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பார்ப்பது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. இங்குள்ள எனது வயதொத்தவர்களுக்கும் மூத்தவர்களுக்கும் தங்களது இனிய கிராமத்து இளமை நினைவுகளை மீட்டி மகிழ்வதற்கு இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பைத் தரும். தங்களது கிராமம் எத்தகையதொரு சிறப்பு வாய்ந்த அமைதிப் ப+ங்காவாக விளங்கியிருக்கிறது என்பதையறியவும் இப்படியெல்லாம் இருந்ததா என்று ஆச்சரியப்படவும் சில வேளை கற்பனை பண்ணி மகிழவும் கூட இக்கிராமத்தின் இளையவர்களுக்கு இந்நூல் துணைபுரியும். மருதமுனையின் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம், மிகக் கட்டாயம் இருக்கவேண்டிய உங்களைப்பற்றிய உங்களது நூல் இது என்பதை எவ்விதச் சந்தேகங்களுமின்றி உங்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
இன்றைய நிகழ்ச்சிகளில் பல முடிவடைந்து விட்டன. எனது உரை இன்னும் சில வினாடிகளில் முடிந்து விடும். இதைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள கவியரங்கும் ஓரிரு மணித்துளிகளில் முடிந்த விடும். நான் ஒரு வரலாற்று மாணவனோ அரசியல் மாணவனோ அல்லன். ஆனால் அரசியல் மாணவர்களையும், சமூகவியல், அரசியல் மற்றும் வரலாறு தொடர்பான ஆய்வுக்குரிய பலர் இந்த மண்ணில் இருக்கிறார்கள். நிகழ்ச்சிகள் யாவும் முடிந்ததும் கவியரங்கு நன்றாக நடந்ததா அஷ்ரஃப் சிஹாப்தீன் சரியாகப் பேசினானா என்பதல்ல பேச்சாக இருக்க வேண்டியது. சமூகத்தின் மீதும் இக்கிராமத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் அக்கறை கொண்டு எழுதப்பட்ட வரலாற்றின் இந்த முதற் கல்லைத் தொட்டு அடுத்த கட்டத்தை நகர்த்திச் செல்வது யார் என்பதே கேள்வியாகவும் பேச்சாகவும் இருக்கவேண்டும் என்பதே எனது ஆவாவாகும்.
எனது மருதமுனை நண்பர்கள் இனியவர்கள். எனவே மருதமுனை மக்களும் இனிவர்களே. சகோதரன் பஷீர் அப்துல் கையூமுடன் ஆரம்பித்த மருதமுனை உறவு இன்று புலவர்மணியின் புதல்வன் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரை தொடர்ந்து எனது இரண்டாவது தாயகம் மருதமுனை என்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு விட்டது. அதற்காகவே நான் இங்கு மருதமுனையைப் போற்றியும் புகழ்ந்தும் பேசவில்லை. நான் அவ்வாறு புகழ்ந்து பேசாவிட்டாலும் கூட - கொஞ்சம் டூமச் ஆகத் தோன்றினாலும் கூட - மருதமுனைக்கு ஒரு சிறப்புப் பெயர் உண்டு. அதுதான் மக்கம் தப்பினால் மருதமுனை!
Friday, June 19, 2009
சிறீலங்காவிலிருந்து சிறீரங்கப்பட்டணம் வரை - 2
சிறீலங்காவிலிருந்து சிறீரங்கப்பட்டணம் வரை - 1
என்னுயிர்க் கண்ணம்மா
24.02.2008
Sunday, May 17, 2009
19.08.2007